புதன், 10 அக்டோபர், 2012

காத்திருக்கிறேன்..

நான் காத்திருக்கிறேன்
என்பது தெரிந்தும்
உணராமலே வீடு சேர்கிறாய்
ஒவ்வொரு நாளும்.

உன் கைபிடித்துக்
கடைவீதி செல்லக் காத்திருக்கிறேன்.
தனியறையில் துய்க்காமல்
தேனிலவென்று சென்று
சுற்ற காத்திருக்கிறேன்.


வரவேற்பில் நாணிக்குனியும்
என்முகம் நோக்கி நீளும்
உன் பார்வைக்காய்க்
காத்திருக்கிறேன்.

உன்னோடு சேர்ந்து
இரவு உணவு உண்ண
வாசனை மெழுகுகளோடு
மேசையில் உறைந்தபடி
காத்திருக்கிறேன்.

உறவினர் சூழும் வேளை
ஆசையாய் என்னைப் பார்ப்பாய் என
ரகசியமாய் நான் பார்க்க
எங்கோ பார்க்கும் உன்னைக் கண்டு
வியர்த்தும் வருந்தியும் காத்திருக்கிறேன்.

சிறந்த துணிகளை அணியும்போதும்,
சிறந்த உணவுகளை உனக்காய் செய்யும்போதும்
உனக்குப்பிடிக்குமென நினைத்து
எதையாவது செய்யும்போதும்
உன் அங்கீகாரத்துக்காய் காத்திருக்கிறேன்.

உன் பார்வைச் சிம்மாசனத்துக்காய்
காத்திருக்கிறேன்.
என் பார்வையை , விழிகளை
நீ சந்திக்கவே விரும்புவதில்லை
என்ற உண்மையை நான்
ஒருபோதும் புரிந்துகொண்டதேயில்லை.

கூட்டத்துக்குள் இருக்கும்போதும்
ஒரு சமரசத்துக்காய் புன்னகைப்பாய்,
நீ சிலரிடம் பேசும்போது மட்டும்
அடிக்கடி புன்னகைப்பாய் ,
அழகாய்ப் புன்னகைப்பாய் என்பதை
ரசிக்கும் நான் என்னிடமும்
அதே புன்னகையோடு பேசுவாய்
என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்.

மனைவிகள் ஒருபோதும்
காதலிகள் ஆகமுடியாது
என்று புரிந்தபின்பும்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட
நம் திருமண வாழ்வின்
வெற்றிக்காய்க் காத்திருக்கிறேன்.

டிஸ்கி :- இந்தக் கவிதை 2011 லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில்  வெளியானது.


11 கருத்துகள்:

  1. மனைவியிடம் காதல் இல்லை என்றால் இவ்வாறு காத்திருக்க வேண்டியது தான்.....என்பதை உணர்த்தும் வரிகள்...

    பதிலளிநீக்கு
  2. அசத்தலான கவிதை தேனக்கா.. இதழிலும் வாசிச்சேன்.

    பதிலளிநீக்கு
  3. காதலிகளை மனைவியாக்கும் பலரும் மனைவிகளைக் காதலிப்பதில்லை. என்ன செய்ய... மனைவியாய் அடைந்தவளை காதலிக்கப் பழகி விட்டால் இதுபோன்ற ஆதங்கக் கவிதைகள் ஏது? ஒரு மனைவியின் கோணத்தில் வந்த பா வெகு அழகு. மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. எதற்காக வேண்டுமானாலும் காத்திருக்கலாம் அன்பிற்காக காத்திருந்தால் இப்படித்தானோ ?

    பதிலளிநீக்கு
  5. katthirutthal sugamthaan varugai nichayam entral!

    பதிலளிநீக்கு
  6. நன்றி தனபால்

    நன்றி சாரல்

    நன்றி கணேஷ்

    நன்றி சசிகலா

    நன்றி ரூஃபினா

    நன்றி ONEY

    நன்றி கமேலா

    நன்றி பெயரில்லா

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. சிறந்த துணிகளை அணியும்போதும்,
    சிறந்த உணவுகளை உனக்காய் செய்யும்போதும்
    உனக்குப்பிடிக்குமென நினைத்து
    எதையாவது செய்யும்போதும்
    உன் அங்கீகாரத்துக்காய் காத்திருக்கிறேன்.
    - Arumai. Ithu veetil ulla pengalukku mattume porunthum. Velaikku sellum pengalin udai mattrum unavugali aluvalaggil ullavargal angikarippathu than intru athigam.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)