சனி, 22 செப்டம்பர், 2012

இணையத் தமிழால் இணைவோம்.. இனிய செயலால் வெல்வோம்..(ஃபெட்னாவுக்காக எழுதியது)

இயற்றமிழ், இசைத்தமிழ் நாடகத்தமிழ் இவை அறிவோம். இணையத்தமிழும் இனிமையாக இருக்கிறது.முத்தமிழும் முக்கலையும் மூவேந்தர் காத்த நாட்டில் இணையத்தில் தமிழ் வளர்க்கும் இனிய தமிழர் நாம். உலகம் யாவையும் தாமுள வாக்கலும் இயல்பாய் ஆக்கியுள்ளது இணையத்தமிழ் மற்றும் வலைப்பூக்கள் என்றால் மிகையாகாது. இணையத்தமிழர்கள் பெருகி வருகிறார்கள். அவர்கேற்றாற்போல இணையத்தமிழ்ப் பகிர்வுகளும் படைப்புக்களும் ஆக்கங்களும் மெருகேற வருகின்றன.

தமிழ் கூறும் நல்லுலகில் பத்ரிக்கைகளால் அறியப்பட்டவர்கள் மட்டுமே படைப்பாளிகளாகக் கருதப்பட்ட காலத்தில் இணையம் ஒவ்வொரு தனிமனிதனின் எண்ணங்களையும் பதிவு செய்ய தளம் அமைத்துக் கொடுத்துள்ளது. தமக்கு தாமே ஆசிரியர்கள், தம்முடைய கருத்துக்களைத் தங்கள் வலைத்தளம், வலைப்பூ ஆகியவற்றில் முழுமையாக பகிர்வு செய்து உடனடியாக விமர்சனங்கள் பெற முடிகிறது. தங்கள் கருத்தை ஒட்டிய கருத்தோ அல்லது மறுப்புக் கருத்துக்களோ உடனேயே அறிய முடிகிறது.


இணையங்களில் தமிழ்ப் படைப்புக்கள் படைக்கப்பட்டவுடன் அவை முக நூல், ஆர்குட், ட்விட்டர், கூகுள் ப்ளஸ் போன்ற சமூக தளங்களிலும் பகிரப் படுகின்றன. இந்த சூழ் நிலையில் தமிழ்ப் படைப்பாளிகள், வலைத்தள வாசிகளுக்கு சில பொறுப்புக்கள் இருப்பதாக கருதுகிறேன்.ஒரு வலைத்தள வாசியாக அதில் முக்கியமான சிலவற்றை இங்கே பகிர விழைகிறேன்.

தமிழால் இணைந்து செயலாற்றும் நாம் சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து என்ற வாக்கியத்தைப் பொய்ப்பிக்க வேண்டும். இதற்கு நாம் ஒரு விஷயத்தை இணையத்தில் பகிரும் முன் அதாவது அது கல்வி, காதல், அரசியல், வாழ்வியல் நெறிமுறைகள் , பாலியல் கல்வி , சூழலியல், தனிமனித குண நலன்,தனி மனித காழ்ப்பு, சட்டம், சாதி மத ரீதியான விஷயங்கள், பொது மக்கள் நலன், நுகர்வோர் பாதுகாப்பு, விவசாயம், வியாபாரம், உத்யோகம், எல்லைத்தகராறு, தனி மனித ப்ரச்சனைகள், பெண்ணியம், தலித்தியம், பெரியாரியம், ஈழமக்கள் வாழ்வு, புலம் பெயர் மக்கள் துயரம் , யுத்தம், பெண்களுக்கெதிரான கொடுமைகள் என பல உணர்வுரீதியான பாதிப்புக்களை உண்டு செய்யும் நிகழ்வுகளை நம்முடைய வலைத்தளத்தில் பகிருமுன் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்தபின் வெளியிட வேண்டும்.

நாம் சொல்லும் விஷயத்தின் வீரியம் தகுந்த சொற்களால் தரமான மொழியில் குறிப்பிடப்படவேண்டுமேயன்றி காழ்ப்புணர்வோடு அடுத்தவரைப் புண்படுத்தும் அளவு அல்ல. அந்த விஷயத்தின் தேவை பொறுத்தும் அவசியம் பொறுத்தும். அதன் பயனீட்டாளர், எதிர்ப்பாளர் குறித்தும் நமக்கு தகுந்த புரிதலும் வெளிப்படுத்தும் தைரியமும் அவசியம். அந்த விஷயத்தினை முழுமையாக அறிந்தபின் அதற்கு மறு கருத்து சொல்லுதலும் தேவை.

உணர்வை தூண்டும் விஷ வித்துக்களை அடுத்தவர் நெஞ்சில் விதைக்காமல் இருத்தல் முக்கியம். எந்த செயலின் விளைவையும் நாமும் சேர்ந்துதான் அனுபவிக்க வேண்டும். ஒரு தவறான கருத்து அல்லது புரிந்து கொள்ளல் மிகப் பெரும் பிளவை ஏற்படுத்தி விடும் . அது தனி நபர்கள் நட்பிலும் சரி. ஒரு பொதுப்படையான பிரச்சனையிலும் சரி. நமக்கு நியாயம் என்று தோன்றுவதையும் தேவை ஏற்படும் காலகட்டத்தில் வெளிப்படுத்துதலே நலம்.

வலைத்தளத்தின் இன்று நாம் பதிபவை இன்னும் பல ஆண்டுகாலம் நாம் இல்லாவிட்டாலும் உலவவே செய்யும். ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு பிரம்மனுக்கு சமம். நாம் என்னவாக இருக்கிறோம். யாராக இருக்கிறோம் என்பது நம் கருத்துப் பகிர்வில் புலப்படும். நம் எதிர்கால சந்ததியர் மட்டுமின்றி நம் பகிர்வின் முக்கியத்துவம் பொறுத்து நம் வலைப்பதிவுகள் கல்லூரி , பள்ளிகளில் பாடமும் ஆக்கப் படலாம். இன்னும் பல படைப்பாளிகளுக்கு அது ஊக்க மூட்டும் களமாக அமையலாம்.

நம் வலைப்பதிவுகளில் தமிழ் இலக்கியம் விஞ்ஞானம். வானவியல், சமூக அறிவியல், இயற்கை, சுற்றுச் சூழல், கணிதம் , புவியியல், ஜோதிடம், சமையல் கலை , தையல்கலை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு , அரசியல் ,மருத்துவம். ஓவியம், இன்னும் பல கலைகள் பகிரப்படுகின்றன அவை பலருக்கும் உபயோகமாகவும் உள்ளன. கதை, கவிதை. கட்டுரை எல்லாமும் மிகத் தரத்தோடு கொண்டுவரவேண்டும் என்பதே நம் விழைவாய் இருக்க வேண்டும்.

ஒரு புத்தகம் அல்லது சினிமா வந்தவுடன் நாம் எழுதும் விமர்சனம் அந்தப் புத்தகத்தின் அல்லது சினிமாவின் விதியை நிர்ணயிக்கிறது. இது போல எல்லா விஷயங்களும் வலைத்தளத்தில் காணக் கிடைக்கிறது. நம் கண்ணோட்டம் கொண்டு எழுதும் போது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களையும் காழ்ப்புணர்வையும் தவிர்ப்பது இலக்கியவாதிகளின் குறிக்கோளாய் இருக்க வேண்டும்.

நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர் என வலைத்தளம் மூலம் நிரூபித்து பத்ரிக்கைக்களிலும் செயலாற்றி வரும் பதிவர்கள் அநேகம்.புத்தகங்கள் வெளியிட்ட பதிவர்களும் அநேகம். நம் வலைப்பதிவு நமக்கு ஒரு அறிமுகக் கடிதமாக இருக்கிறது . நம் தன்னம்பிக்கையைத் தூண்டுகிறது. நம்மையும் படைப்பாளிகளாக வெளிக் கொணருகிறது. இன்னும் ஆக்கபூர்வமான படைப்புக்கள் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. மாதாந்திரிகள், வாரப்பத்ரிக்கைகள் கூட நம் எழுத்துக்களையும் பகிர்வுகளையும் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கின்றன.

பெண்களுக்கு இணையம் ஒரு வரப்ரசாதமாக இருப்பதை மறுக்க முடியாது. ஒரு படைப்பை எழுதினால் அதை அனுப்ப அஞ்சலம் அல்லது கூரியர் அலுவலகம் செல்ல வேண்டும். அது அந்த மாதாந்திரி , வாராந்திரியில் பிரசுரமாகுமோ , மறுக்கப்படுமோ தெரியாது. ஆனால் தாங்கள் விரும்பிய துறை அல்லது விஷயம் அல்லது கருத்தைப் பகிர இணையம் ஒரு பாலம் அமைத்துக் கொடுக்கிறது. ஒருவர் எழுதியதை அந்தக் கணமே வலைப்பூக்களில் வெளிவந்ததும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் படிக்க இயலுகிறது. ஒரு சினிமா விமர்சனம் ஆகட்டும் அல்லது நூல் விமர்சனமாகட்டும். இணையத்தில் ஏற்றி வைக்கப்பட்டால் அது ஒளிர்வதும் கருத்துக் கணிப்பில் பின் தங்கினால் தோல்வியுறுவதும் நடக்கிறது. நாம் இணையத்தில் நம்முடைய படைப்புக்களைப் பகிர்வதன் மூலம் ஒரு வலிமையான தனிமனித சக்தியாக உருவாகி வருகிறோம். பத்ரிகைகளுக்கும் சவால் விடுமளவு இணையத்தில் அருமையான படைப்புக்கள் வருகின்றன.

முன்பு எல்லாம் தமிழ்ப் பத்ரிக்கைகள் சீக்கிரம் கிடைக்க இயலாத வெளிநாடுகளில் இணையத்தில் ,வலைப்பூவில் பகிரப்படும் செய்திகளை எதிர்நோக்கி வாசகர்கள் உருவாக ஆரம்பித்தார்கள். இன்றைய காலகட்டத்தில் அது இன்னும் பெருகிப் போயுள்ளது. தமிழ் படிக்கும் ஆவலில் கதை , கவிதை, கட்டுரைகள் , விமர்சனங்கள் எல்லாம் இந்த மாதிரி இணைய வாசகர்கள் படித்து ஊக்குவித்துப் பின்னூட்டமிட்டதாலேயே நிறைய இணையப் படைப்பாளிகளும் பெருகி இருக்கிறார்கள். தொழில் உத்யோகம் நிமித்தம் ஆண்களும், குழந்தைப்பேறு, குடும்பக்கடமைகள் நிமித்தம் பெண்களும் அவ்வப்போது எழுத இயலாமல் போனாலும். எல்லாரையும் மீண்டும் மீண்டும் இணைக்கும் பாலமாகத் தமிழ் இருந்துள்ளது.

இப்போது எல்லாப் பத்ரிக்கைகளும் இணையத்தில் தங்கள் காலடி எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்து இருக்கின்றன. அதற்கு எல்லாம் முன்பே தனிப் பத்ரிக்கையாளர்களாக வலைப்பதிவர்களாகிய நாம் இருந்திருக்கிறோம். எல்லாரின் வரவிலும் நமக்கு இன்னும் பொறுப்புக்களும் , பங்களிப்புக்களும் கூடி இருக்கின்றன. ஏனோ தானோ என்று ஒரு விஷயத்தைப் பகிர முடியாது. எல்லாரும் நம்மின் எழுத்துக்களையும் வாசிக்கிறார்கள்.

நிறைய மகளிர் கூட்டங்கள் பத்ரிக்கை., வானொலி , தொலைக்காட்சிக்காக நடத்திய அனுபவத்தில் தூயதமிழை நேசிக்கும் மக்களை அதிகம் சந்தித்துள்ளேன். மெல்லத் தமிழ் இனி வாழும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது. எந்த மொழிக் கலப்பு நடந்தாலும் தமிழ் தனக்கென ஒரு தப்பித்து வாழும் முறையைக் கொண்டிருக்கிறது. மாற்றம் என்பது நம் வாழ்வில், உடையில் உணவில் இருக்கும் போது தமிழிலும் அவ்வப்போது சில மாறுதல்கள் தவிர்க்க இயலாதது.

இன்னும் கணினி சார்ந்த தொழில் நுட்பங்கள் பொறியியல், விஞ்ஞானம், சமூகம், ஆன்மீகம், வாழ்வியல் , போன்ற தலைப்புக்களில் ஆக்கப்பூர்வமான ஆக்கங்கள் உருவாக வேண்டும். தமிழ் விக்கிபீடியா போன்ற தளங்களின் சேவை அளவிடற்கரியது. இன்னும் கலைக் களஞ்சியங்கள் உருவாக்கப்பட வேண்டும். அனைத்துத் தமிழ்ப் படைப்பாளிகளின் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் தொகுக்கப்பட்டு மனித வாழ்வியலின்பால் மொழி எவ்வாறு வெவ்வேறு உருக் கொண்டு மனிதரோடு வாழ்ந்து வருகிறது என்பது கூர் நோக்கப்பட வேண்டும். இதில் பெண்கள் வாழ்க்கையும் அடங்கும். போன நூற்றாண்டிலிருந்து பெண்களுக்கும் அவர்கள் உரிமைகளுக்கும் இது போல கீழ்நிலை, விளிம்பு நிலை மனிதர்க்காகவும் அவர்கள் முன்னேற்றத்துக்காகவும் மொழி எவ்வளவு தொண்டாற்றி உள்ளது எனவும் கணிக்கப்பட வேண்டும். மிகச் சிறந்த ஆராய்ச்சியாக அது அமையும். மொழி நமக்காற்றிய சேவையும் விளங்கும்.

இன்றும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தோரும் சரி , நம் முன்னோர்களாக தென்னாப்பிரிக்கா, மலேசியா போன்ற நாடுகளுக்கு பிழைப்புக்காக சென்ற மூதாதையரின் வம்சாவளியினரும் சரி. தமிழுக்காக ஆற்றி வரும் தொண்டு அளவிடற்கரியது. அதுவே நம் அனைவரையும் அரவணைக்கும் கரமாக இருக்கிறது. எந்த ஊரில் எந்த நாட்டில் இருந்தாலும் தமிழை வாழவைக்கும் அரும்பணியில் இவர்கள் கரும்புக் கரங்களின் பங்கும் இனிக்கிறது. இவர்கள் அனைவரும் இன்னும் இணைந்து நம் நாட்டில் கலாசாரத்தையும், வழிபாட்டு முறைகளையும், வாழ்க்கைப் பண்பாடுகளையும் விடாமல் பின்பற்றிக் காப்பாற்றி வருகிறார்கள். இவர்கள்தான் தூய தமிழையும் வாழ வைக்கிறார்கள்.

இந்த சூழலில் வலையுலக முன்னோடிகளாக நாம் இன்னும் பல அழகிய அருமையான தமிழ் படைப்புக்கள் கொடுக்க வேண்டும். நம்மைப் போல இன்னும் பல படைப்பாளிகளை உருவாக்க வேண்டும். பயிற்சிப் பட்டறைகள் மூலமும் சொல்லிக் கொடுக்கலாம். கல்லூரிகளில் பயிலகம் நடத்தலாம். நம் இளைய தலைமுறைக்கும் முறையான தமிழைக் கற்பித்தல் அவசியம். தமிழால் தான் நாம் அனைவரும் இணைந்தோம்.

இணையத்தமிழ்.. இனிய தமிழ்.. வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் தமிழ்ப் படைப்பாளிகளிடமும், வலைப்பதிவர்களாகிய நம்மிடமும் படைப்புக்கள் கேட்கும் அளவு இணைந்துள்ளோம் , உயர்ந்துள்ளோம் இணையத் தமிழால். வெல்வோம்  இனிய செயலால்..!!!

6 கருத்துகள்:

  1. I certainly believe that I my writings are having ethical value!

    நான் எழுதும் எழுத்துக்களுக்கு நான் பொறுப்பேற்பது என்பது எனது எழுத்துக்களுக்கு

    நான் கொடுக்கும் மரியாதையன்றி வேறல்ல !!

    பதிலளிநீக்கு
  2. அருமையான கட்டுரை தேனக்கா..


    //உணர்வை தூண்டும் விஷ வித்துக்களை அடுத்தவர் நெஞ்சில் விதைக்காமல் இருத்தல் முக்கியம். எந்த செயலின் விளைவையும் நாமும் சேர்ந்துதான் அனுபவிக்க வேண்டும். ஒரு தவறான கருத்து அல்லது புரிந்து கொள்ளல் மிகப் பெரும் பிளவை ஏற்படுத்தி விடும் . அது தனி நபர்கள் நட்பிலும் சரி. ஒரு பொதுப்படையான பிரச்சனையிலும் சரி. நமக்கு நியாயம் என்று தோன்றுவதையும் தேவை ஏற்படும் காலகட்டத்தில் வெளிப்படுத்துதலே நலம்.//

    ரொம்பச் சரியாச் சொன்னீங்க.

    பதிலளிநீக்கு
  3. முதலில் நம் பதிவுகள் நம்மை மாற்ற, சிந்திக்க, ஊக்கப்படுத்த, ..., ..., இருந்தாலே போதும்...

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஆர் ஆர் ஆர்

    நன்றி சாரல்

    நன்றி தனபால்

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. Dear Admin,
    You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

    To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல...
    நம் குரல்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)