செவ்வாய், 3 ஜூலை, 2012

எல்லாம் வெற்றியே..

ஒரு வல்லரசுக்கான எல்லா சக்திகளும் இந்தியாவிடம் பெருகி வருகிறது. இந்த சூழலில் எல்லா திசைகளிலிருந்தும் வரும் நெருக்கடிகளில் இருந்து அது தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. இறையாண்மையோடு கூடிய அரசியலைத் தக்க வைக்க அது பெரும் ப்ரயத்தனம்தான் செய்கிறது. அரசியல் தலைவர்களே தீர்வுகள் எடுக்கமுடியாமல் திணறும் போது தன் அன்றாட வாழ்க்கைக்கே போராடும் பொது ஜனம் என்ன மாறுதல்களை நிகழ்த்தி விட முடியும்..

நாம் மார்க் எடுக்கும் ப்ராடக்டுகளை உருவாக்குகிறோமே தவிர மாரல் நாலெட்ஜ் உள்ள குழந்தைகளை அல்ல. மனிதாபிமானம் மரித்து சுயநலம் ஓங்கி வருகிறது. எதிலும் நான்.. நான் .. நான் மட்டுமே. பொது நலம் என்பது பிள்ளைகளுக்கும் புகட்டப்பட வேண்டும். பள்ளிகளில் எல்லாவற்றுக்கும் பயிற்சிகள் இருப்பது போல மனவளக்கலையும் ஒரு வகுப்பாக நடத்தப்பட வேண்டும்.

ஆன்லைன் என்றொரு ராட்சசக் கரம் நம் அனைவரையும் இணைக்கிறது. தேவையற்றவற்றிலும் பிணைக்கிறது. செல்ஃபோன், ஐ பேட், லாப்டாப் என நாமும் பிள்ளைகளும் உலகம் முழுமைக்கும் ஊருடுவுகிறோம்.
நம் வீட்டுக்குள்ளும் அனைத்து நல்லது கெட்டதும் ஊருடுவுகிறது. சூப்பர் ஹூயூமன் சாமுராய் போல எல்லா கெடுதல் வைரஸ்களிடம் இருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்ளப் பிள்ளைகளையும் பயிற்றுவித்து நாமும் நம் நிலை உணர்ந்து நடக்க வேண்டும்.

மேக்கப்புக்கு மிகுந்த அக்கறை செலுத்தும் பெண்கள் உடல்நலத்துக்குக் கொடுப்பதில்லை. சுமார் 10 லிருந்து 45 வயது வரையான பெண்களுக்கு கர்ப்பப்பை புற்று பாதிக்காமலிருக்க தடுப்பு ஊசி போடப்படுகிறது. அதை அவரவர்களின் டாக்டர்களின் ஆலோசனைகளுடன் போட்டுக் கொள்ளவும். ஆண்களுக்கும் மார்பகப் புற்று, காரணமில்லாமல் வரும் புற்று எல்லாம் அச்சுறுத்துகிறது அணு ஆயுத சேமிப்பு போல்.எல்லா நாடுகளும் வகை தொகையற்று இந்தப் புற்றைச் சேமித்துள்ளன.

பெண்கள் தினம் ஒரு நூற்றாண்டாய் கொண்டாடி விட்டோம். நினைத்ததை எல்லாம் அடைந்து விட்டோம். இன்னும் பாரபட்சமான பெண் நீதிதான் கிராமப்புறங்களில் நிலவுகிறது. பெண் சிசுக் கொலை, பெண் கருக்கொலை, பெண் குழந்தைத் தொழிலாளி, பெண் பாலியல் தொழிலாளி, பெண் கொத்தடிமைகள் என்ற கொடுமை எல்லாம் போக ஒரு பெண்ணுக்கு தனக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றன எனத் தெரிந்து கொள்ள வேண்டும். அதுவே தெரியாமல் குடும்பத்தில் தங்களைத் தாங்களே சங்கிலிகளால் பிணைத்துக் கொண்டவர்கள் உலகத்தைக் கற்க வேண்டும்.

மணமான தம்பதியினருக்கு தங்கள் வரவு செலவு, இருப்பு நடவடிக்கை இவற்றில் எல்லாம் புரிதல், தெளிவு படுத்துதல் இருக்க வேண்டும். இருவருக்கும் பொதுப்படையான வங்கி அக்கவுண்ட் இருக்க வேண்டும். மாற்றங்களை நம் குடும்பங்களில் இருந்து ஆரம்பிப்போம். கணவன், மனைவி , குழந்தைகள் அனைவரும் தங்களை, தங்கள் எண்ணங்களை குடும்பத்தில் சுதந்திரமாகத் தெரிவித்து கலந்துரையாடி முடிவுகள் எடுத்தால் எல்லாம் வெற்றியே..

டிஸ்கி:- அதீதம் மார்ச் 1, 2012 இணைய இதழுக்கான சிறப்பாசிரியராகப் பங்களிப்பு செய்த போது எழுதிய தலையங்கம்.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)