திங்கள், 2 ஜூலை, 2012

தன்னை எண்ணுதல்..

ஒரு வாரம் நட்சத்திரப் பதிவராக அறிமுகப்படுத்தி முன்னிலையில் என்னை வைத்த தமிழ்மணத்துக்கு மனமார்ந்த நன்றிகள். (கிட்டத்தட்ட  1000  விசிட்டர்கள், 3 பின்பற்றுபவர்கள், 106 ஆவதாக ஒரு நாட்டில் இருந்து ஒரு பார்வையாளர் என இந்த  ஒரு வாரம் மகிழ்வாகச் சென்றது. நேரப்பற்றாக்குறையினால் நான் பலரின் ப்லாகுக்கு விசிட் செய்யாவிட்டாலும் வழக்கம்போல என்னைப்படித்து ஊக்கமூட்டிய சக வலைப்பதிவத் தோழமைகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் . வாழ்க வளமுடன். வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !! )

தன்னை எண்ணுதல்.
******************************

தரையில் இருக்கும்
கட்டங்களை, வட்டங்களை,
கோடுகளை எண்ணத்
துவங்குகிறாள் ஒருத்தி.


சுவற்றில் பதிந்து இருக்கும்
சுவிச்சுகளையும்
ஜன்னல் கம்பிகளையும் கூட

மொட்டை மாடிக்குச் சென்றால்
பறவைகளையும்
படுத்தி்ருக்கும்போது
மின்விசிறி ப்ளேடுகளையும்.

சிறைக்குள் சிக்கியவள் போல
திரும்பத் திரும்ப
ஒன்று, இரண்டு., மூன்று என.

குழந்தமை., கன்னிமை.,
இளம்மனைவி., இளம்தாய்.,
பேரிளம்பெண் என
கட்டங்கள் வட்டங்கள் இடுகின்றன.

காசியின் அறுபத்துநான்கு கட்டங்களில்
தசாசுவமேத யாகக் கட்டம்
ஒன்றே கண்டிருந்தாள்.
கடந்திருந்தாள்.

பரமபதக்கட்டங்களில்
நீளும் பாம்புக் கட்டங்களைத்
தாண்டிக் கடக்க யத்தனிக்கிறாள்.

மாமியாராவதும், பாட்டியாவதும்
குறிக்கப்பட்டிருந்த கட்டங்கள் குறித்த
பயம் இருந்தது அவளுக்கு,

எல்லாக் கட்டங்களையும்
எளிமையாய் எளிதாய்க்கடக்க
ஆசைப்பட்டாள்.

தினமும் நட்சத்திரங்களை
எண்ணியவள் அன்று மட்டும்
புதிதாய் நிலவை எண்ணத்
துவங்கி இருந்தாள்..
ஒன்று..ஒன்று..ஒன்று என.


டிஸ்கி 2 :-  பெண் வலைப்பதிவர்கள் சந்திப்பு

1. இவள் புதியவள் சார்பாக - வலைப்பூக்களில் கலக்கி வரும் புயல் பூக்கள்

2. லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக - மெரீனாவில் ஒரு மாலை

3. எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் சமுதாய வானொலிக்காக மகளிர் தினக் கலந்துரையாடல். தொகுத்து வழங்கியது.


25 பெண் பதிவர்கள்.  5 ஆண் பதிவர்களை பத்ரிக்கைகளில் அறிமுகப்படுத்தியது.

பத்ரிக்கைகளில் 20 போராடி ஜெயித்த பெண்களின் கதைகள், 7 மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள், 15 சிறுகதைகள், பல கவிதைகள், பல கட்டுரைகள், பிரபலங்களின் பேட்டிகள், நேர்காணல்கள், பெண் மொழிக் கட்டுரைகள் மற்றும் பல விழிப்புணர்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

டிஸ்கி 3.:- நேற்று என் அம்மாவிடம் இருந்து ஃபோன்.. என்னடி தினம் தினம் நன்றி அறிவுப்பு போடுறே.. எழுதுறத நிறுத்தப் போறியா என்ன.. என்று.. ஹாஹாஹா எனக்கு சிரிப்புத் தாங்கவில்லை. இல்லம்மா.. என்னை தமிழ் மணத்தில் இந்த வாரம் நட்சத்திரப் பதிவரா தேர்ந்தெடுத்தமைக்காக, ஒரு வலைப்பதிவரா இருந்து பத்ரிக்கை எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், சிறப்பு விருந்தினராகவும், இரண்டு புத்தகங்களின் ஆசிரியராகவும் என்னால் மேலெழுந்து வர இயன்றதைப் பகிரவே இதை எல்லாம் போடுறேன்மா. என்றேன். எப்போதும் எனக்கு நானே தன்னம்பிக்கை ஊட்டிக் கொள்ளவும் உங்களாலும் முடியும் என என் வலைப்பதிவ சகோதரிகளை ஊக்கமூட்டவுமே இதை எல்லாம் அனைவரோடும் பகிர்ந்து கொள்கின்றேன் என்றேன்.. என்ன செய்திருக்கிறோம் என்ற திரும்பிப் பார்த்தல் எல்லாருக்கும் தேவை என நினைக்கிறேன். உண்மைதானே..

எனது புத்தகங்கள் "சாதனை அரசிகள்" மற்றும் "ங்கா" கிடைக்குமிடங்கள்.

டிஸ்கவரி புக் பேலஸ். சென்னை

விஜயா பதிப்பகம் , கோவை.

ஸ்ரீ மீனாக்ஷி புக் ஸ்டால் மதுரை.


5 கருத்துகள்:

  1. வெற்றிகரமான நட்சத்திரப் பதிவர் ஒரு வார நிறைவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான பதிவுகளுடன் நிறைவாக அமைந்திருந்தது நட்சத்திர வாரம். பாராட்டுகளும் வாழ்த்துகளும் தேனம்மை.

    ‘தன்னை எண்ணுதல்’ மிக அருமை.

    பதிலளிநீக்கு
  3. அருமை கவிதாயினி
    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் எழுத்து பயணம்

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஸ்ரீராம்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி செய்தாலி

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)