சனி, 23 ஏப்ரல், 2011

அதில் எனக்கு வருத்தமுண்டு.. பாரதி மணியின் பேட்டி சூரியக்கதிரில்..




பாரதி மணி சாருடன் ஒரு பேட்டி!

தேனம்மை லெக்ஷ்மணன்

விருதுபெற்ற எழுத்தாளர்களிலிருந்து விருது பெறத்துடிக்கும் நாடக நடிகர்கள் வரை இவர்களிடம் வெகு பிரபலமானவர் பாரதி மணி. எஸ். கே. எஸ் மணி சார் என்றாலோ., எழுத்தாளர் க. நா.சு வின் மாப்பிள்ளை என்றாலோ
உங்களுக்கு தெரிந்ததை விட.. பாரதி படத்தில் பாரதியாரின் தந்தை சின்ன சாமி ஐயராக நடித்தவர் என்றாலும்., பாபாவில் ரஜனியுடனும் ., குருக்ஷேத்திரத்தில் சத்யராஜுடன் நடித்திருக்கிறாரென்பதும் தெரிந்திருக்கலாம்.. அவர்தான் பாரதிமணி ஐயா.
பலருக்குத்தெரியாத இன்னொரு விபரம் பேரறிஞர் அண்ணா., மற்றும் மக்கள் திலகம் எம் ஜி ஆர் ஆகியோருடன் தில்லியில் நெருங்கிய நட்புடன் இருந்தார் என்பது. இரண்டு முதல்வர்களுடன் அவர்கள் முதல்வராகுமுன்னே நெருங்கிப் பழகும் வாய்ப்புப்பெற்றவர். அவர்கள் முதல்வரானதும் ஒருமுறை கூட போய்ப்பார்க்காதவர்!

அறிஞர் அண்ணாதுரை அவர்களின் எளிமையையும்., டெல்லிக்கு வந்த அவருடன் பார்த்த ஆங்கிலத் திரைப்படங்களையும் மற்றும் எம் ஜி ஆர் அவர்களுடன் ஜெய்ப்பூர் போனதையும் அவரின் ஈகைக் குணத்தையும் தன்னுடைய ” பல நேரங்களில் பல மனிதர்கள் ” என்ற ஒரே புத்தகத்தில்
அற்புதமாக பகிர்ந்திருக்கிறார். இவர். இரண்டாவது புத்தகம் எழுதி, தனக்கு தமிழ் வாசகர்களை துன்புறுத்தும் எண்ணமில்லையென்று வேடிக்கையாக சொல்பவர்!

இவரது கட்டுரைகளை இணையத்தில் படிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட
சுட்டியில் படிக்கலாம்: http://balhanuman.wordpress.com/category/bharati-mani/

ஐம்பது வருடம் தில்லியில் இருந்த இவர். நேரு., இந்திரா காந்தி., ராஜீவ் காந்தி., மொரார்ஜி தேசாய்., காந்திபாய் தேசாய், மது தண்டவதே, ஷேக் ஹஸீனா (பங்களாதேஷின் தற்போதைய அதிபர்), , அன்னை தெரசா., சுஜாதா., பூர்ணம் விசுவநாதன் போன்றோருடன் நெருங்கிப்பழகும் சந்தர்ப்பம் பெற்றவர். இவரது திரைப்பட அனுபவமே BBC சானல் தயாரித்த ஆங்கிலப்படத்தில் துவக்கம். இவர் நடித்த 13 திரைப்படங்கள் தேசிய விருது வாங்கி இருக்கின்றன. இலக்கியம்., நாடகம்., கர்நாடக இசை அறிவு., திரைப்படம்., பல அரசியல் தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு என பரந்துபட்ட அனுபவங்களுக்குச் சொந்தக்காரர். இவ்வருடம் தில்லி டைரக்டரேட் ஆப் ஃபிலிம் ஃபெஸ்டிவல் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுத்த ஜூரியாக தில்லி போய் 210 படங்களைப்பார்த்து, அதில் 26 சிறந்த படங்களை கோவாவில் நடந்த இந்தியன் பனோரமாவுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பெற்றவர். பிரபல இயக்குனரின் புது திரைப்படத்துக்காக ஸ்டில்ஸ் போட்டோ செஷனுக்கு சென்று வந்த இவரிடம் நம் சூரியக்கதிர் பத்திரிகைக்காக பேட்டி எடுத்தோம் .

1. பாரதி மணி ஐயா! உங்களைப் பற்றி நமது சூரியக்கதிர் வாசகர்களுக்குச் சொல்லுங்கள்..
நாகர்கோவில் பக்கத்திலுள்ள பார்வதிபுரம் என் சொந்த ஊர். 1937-ம் வருடம் பிறந்தவன். திருவனந்தபுரத்தில் என் தந்தை சுப்பிரமணியம் வேலை செய்ததால் அங்கே சாலை ஸ்கூலில் படிப்பு. அங்கே எழுத்தாளர் நீல. பத்மநாபன் என் வகுப்புத் தோழர். அதன் பின் நாகர்கோவில் எஸ் எல் பி ஸ்கூலில் 11-வது வரை படித்தேன். எஸ் எஸ் எல் சி. முடித்த பின் டெல்லி சென்று அங்கே தமக்கை பகவதி வீட்டில் தங்கி பி. காம் ., எம் பி ஏ. என்று
தொடர்ந்தேன். நான் இன்று வளர்ந்திருப்பதற்கு என் அக்காவும் அத்தானுமே
பக்கபலம்!

முதன்முதலில் தில்லி பாரத் எலக்ட்ரானிக்ஸில் வேலை. 1955 இல் என் முதல் சம்பளம் 136 ரூபாய் எட்டணா. பின்பு ஸ்டேட் ட்ரேடிங் கார்ப்பரேஷனில் பணி செய்தேன். பின்னர் பிர்லாவில் வேலை. அதன் பின் இண்டர்னேஷனல் ட்ரேடிங்கில் பணி. லைசன்ஸ் பர்மிட் கோட்டா ராஜ் இருந்ததால் பேப்பர்., சிமெண்ட், சீனி., பாமோலின், கோதுமை, பத்திரிகைக்காகிதம், யூரியா, சல்ஃபர் போன்ற பொருட்களை இறக்குமதி செய்தோம் பலநாடுகளிலிருந்து. அங்கெல்லாம் அடிக்கடி போகும் வாய்ப்பிருந்ததால், நான் அப்போது உலகம்
சுற்றும் நாற்பது வயது வாலிபனாக இருந்தேன்!. நான் போன நாடுகளைப் பட்டியலிடுவதை விட நான் போகாத நாடுகள் தான் குறைவு. !

2. நாடகத்துறை ., திரைப்படத்துறை ., இலக்கியத்துறையில் நீங்கள் வந்தது எப்படி..?சின்ன வயதில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என் தந்தையைப் பார்க்க எங்கள் வீட்டுக்கு வருவார். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது தான் முதன்முதலாக சங்கரதாஸ் ஸ்வாமிகள், யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார், F.G. நடேசய்யர் போன்ற பெயர்களைக் கேட்டிருக்கிறேன். என் தந்தை ஹேம்லெட் நாடகத்தை ஆங்கிலத்தில் உணர்வு பூர்வமாக குரல் ஏற்ற இறக்கத்துடன் வாசிக்க, ஒரு வார்த்தை
ஆங்கிலம் தெரியாத நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார்.

அப்போது அவர்களுக்காக உணவு எடுத்து மாடிக்கு கொண்டு செல்லும் என்னைப் பார்த்து ஒரு நாள் ராஜமாணிக்கம் பிள்ளை சொன்னார், ’ அய்யர்வாள்! இவனை இரண்டுமாத பள்ளிக்கூட லீவில் என்னிடம் அனுப்பிவையுங்கள்.....ட்ராமாவில் நடிக்க வைக்கிறேன். அனுமதி கொடுங்கள்’ என்று. என் தந்தை அனுமதித்ததும் எனக்கு இரண்டு மாதங்கள் தான்
பள்ளி விடுமுறை என்பதால் சிறு சிறு வேடங்களில் நடிக்க வைத்தார். கிருஷ்ண லீலாவில் கிருஷ்ணரின் நண்பனாய்., நல்லதங்காளில் கிணற்றில் குதிக்கும் 2 வது 3 வது பிள்ளையாய் வேஷம் கொடுத்து நடிக்க வைத்தார். இதன் மூலம் எனக்கு நடிப்பு வந்ததோ இல்லையோ, கொஞ்சம் டிசிப்ளின் வந்தது. ஆரோக்கியம் வந்தது. பிராணாயாமம், ஆசனம் எல்லாம் கற்றுக் கொண்டது அங்கே தான்!

பெருமைக்குரிய விஷயம். இந்த வருடம் மார்ச் மாதம் தியேட்டர் லாப்
தயாரித்து, ஜெயராவ் இயக்கிய பஷீரின் சப்தங்கள் நாடகத்தில் நான் எழுத்தாளர் பஷீராக நடித்தது இன்னும் பல காலம் நினைவில் இருக்கும்.

3.நீங்க நடிக்கிற படம் எல்லாம் விருது வாங்கிடுதே.. ?1991 இல் என் முதல் படம் பி பி சி எடுத்த ஆங்கிலப்படம் எலக்ட்ரிக் மூன். முதல் படமே விருது வாங்கிய படம். இதில் கதை வசனம் எழுதியவர் அருந்ததி ராய்.. அதன் பின் இயக்குனர் லெனின்.,ஜெயபாரதி., அம்ஷன் குமார், ஞான. ராஜசேகரன் ஆகியோர் இயக்கிய படங்களில் நடித்திருக்கிறேன். நான் நடித்த 40 படங்களில் 13 படங்கள் தேசிய விருது பெற்றவை.. அவற்றில்
சில எலக்ட்ரிக் மூன்., பாரதி., ஊருக்கு நூறு பேர்., மொட்டுக்கா., றெக்கை., ஒருத்தி., நண்பா நண்பா., ஆட்டோகிராஃப்., அந்நியன். எடிட்டர் லெனின் விளையாட்டாக சொல்வார்: ‘மணி சார் ஒரு ஃப்ரேமில் வந்தாலும், அந்தப்படம் விருது வாங்கிவிடும்!’ என்று! பல படங்களில் கதாநாயக/நாயகிகளின் தாத்தா வேடத்தில் தலையைக்காட்டியது தான் எனக்கு அசட்டுத்தனமான சோகம்! இப்போது அதையெல்லாம் தவிர்த்துவருகிறேன். மூன்றே படங்களில் முதலமைச்சராக நடித்திருந்தாலும், எல்லா படங்களிலும் நான் முதலமைச்சராக வருவதாக ஜெயமோகன் என்னை கேலி செய்வார்! 2010-ல் நூற்றாண்டுவிழா கொண்டாடிய திரு கக்கன் அவர்கள் நினைவாக தயாரிக்கப்பட்ட ஒரு முழுநீள ஆவணப்படத்தில் நான் கக்கனாக நடித்திருக்கிறேன்......ஆம்.... அவரைப்போல வாழமுடியாது........நடிக்கத்தான் முடியும்!

4. இசை விமர்சகர் சுப்புடுவே உங்களைப் பாராட்டி இருக்கிறாராமே..?
தில்லியில் என்னைவிட வயதான கர்நாடக சங்கீத சபாவின் செயலராக இருந்தபோது தமிழகத்திலிருந்து வரும் அனைத்து பிரபல சங்கீத வித்வான்களும் டெல்லி வந்தால் என் வீட்டில்தான் தங்குவார்கள்.என் தந்தையாரின் உந்துதலால் கர்நாடக இசையை சிறுவயதிலேயே கேட்டு வளர்ந்ததினால் ஆரோகணம் அவரோகணம் தெரியாமலே 100 ராகங்களுக்கு மேல் கண்டுபிடித்துவிடுவேன். இசை விமர்சகர் சுப்புடுவே, ‘எப்படீடா டக்குனு சொல்றே?’ என்று ஆச்சர்யம் அடைவார்.என்னுடைய கர்நாடக இசை சம்பந்தமான நட்புகளையும் தொடர்புகளையும் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். அந்தக்காலத்திலிருந்தே தில்லி வரும் மதுரை மணி, அரியக்குடி, மகாராஜபுரம், செம்பை, செம்மங்குடி, பழனி, லால்குடி, காருகுறிச்சி, உமையாள்புரம், எம்.எல்.வி., எம்.எஸ். போன்றவர்களுக்கு அங்கு
தேவையான உதவிகளைச்செய்ய தயங்கமாட்டேன்.

5. நீங்கள் எழுதிய பல நேரங்களில் மனிதர்களில் பலரும் உங்களைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்களே..?என்னை யாராவது எழுத்தாளன் என்று சொன்னால், உடம்பு கொஞ்சம் கூசுகிறது. இலக்கியத்துக்கும் எனக்கும் வெகுதூரம். I am a One Book Wonder! நான் எழுதிய ஒரே புத்தகமான உயிர்மை வெளியிட்ட பல நேரங்களில் பல
மனிதர்களில் நாஞ்சில் நாடன், இ.பா., வெ.சா., ஜெயமோகன், அ. முத்துலிங்கம்,
அசோகமித்திரன், வாஸந்தி, பாவண்ணன், ஆ. மாதவன், லெனின், சத்யராஜ்
போன்ற 28 பிரபலங்கள் என்னைப்பற்றி நிறைய ’பொய்’ சொல்லியிருக்கிறார்கள்!

என்னையெல்லாம் ஓர் எழுத்தாளன் என்று சொல்வது எழுத்துக்கும் அதை
வேள்வியாக கொண்டாடுபவர்களுக்கும் பெருமை சேர்க்காது!! ஆனால் நான்
ஒரு நல்ல வாசகன். தேடித்தேடி வாசிப்பவன். எனக்கு கிடைத்த ஒரு பாக்கியம் – நூறுக்கும் மேற்பட்ட பெரிய எழுத்தாளர்களுக்கு .......– அது ஒரு பெரிய லிஸ்ட்....... மெளனி, சி.சு.செல்லப்பா, தி.ஜ.ர., தி. ஜானகிராமன், நகுலன், தி.க.சி., கி.ரா., ஆதவன், கிருஷ்ணன் நம்பி, சு.ரா., ஆ. மாதவன், நீல. பத்மநாபனில்
தொடங்கி இப்போது எழுதும் அம்பை, பாவண்ணன், வண்ணதாசன்,
எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு, யுவன் சந்திரசேகர், சுகா, விஜய்
மகேந்திரன், மதுமிதா, தேனம்மை வரை நண்பனாக இருக்கிறேன். அப்ப்பா! நாலு தலைமுறை எழுத்தாளர்கள்!! இந்த கொடுப்பினை வேறு எத்தனை பேருக்கு கிடைக்கும்? மெளனியும், சி.சு. செல்லப்பாவும் என்னை ‘மாப்பிளே....மாப்பிளே என்று தான் வாய் நிறைய கூப்பிடுவார்கள். மாறாக க.நா.சு. என்னை ஒரு தடவை கூட மாப்பிள்ளே என்று அழைத்ததில்லை!
மணி தான்! அதில் எனக்கு வருத்தமுமுண்டு! நான் மட்டும் கொஞ்சம் முந்திப் பிறந்திருந்தால், புதுமைப்பித்தன், வ.ரா., கு.ப.ரா., அழகிரிசாமி, பிச்சமூர்த்தி
இவர்களுடனும் அதற்குத்தான் கொடுத்து வைக்கவில்லை! போகட்டும்!
அவருக்கு நான் என்றும் நட்பாக பழகியிருப்பேன்! என்ன பேராசை பாருங்களேன்! ஆண்டவன் எனக்கு எல்லா செல்வங்களையும் என் தகுதிக்கு மீறியே அள்ளித்தந்திருக்கிறான். இப்போது நல்ல நண்பர்களின் தேடல் தொடர்கிறது. நேற்று கூட என் புத்தகத்தைப் படித்துவிட்டு, உடனே என்னிடம்
அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்த தர்மபுரி வாசகர் ஜெயவேல்,
என்னைப்பார்ப்பதற்காகவே சென்னை வந்து, என்னுடன் நாலு மணிநேரம்
பேசிக்கொண்டிருந்தார். இதைவிட சந்தோஷம் வேறென்ன இருக்கமுடியும்? நான் கொடுத்துவைத்தவன்!

டிஸ்கி:- இது ஏப்ரல் 1 - 15 சூரியக்கதிருக்காக நான் எடுத்த பேட்டி.. இன்னும் நாடகம்., அரசியல்., சினிமா உலகம் பற்றி எல்லாம் பரபரப்புத்தகவல்கள் கொடுத்த பாரதி மணி ஐயா எல்லாம் ஆஃப் தெ ரெக்கார்ட் என சொல்லி விட்டதால் ரொம்பக் காரமாக இருக்காது இந்த கட்டுரை..:)

13 கருத்துகள்:

  1. அரசியல் கலக்கல் பிரவேசம் தேர்தலுக்கு பிறகு சூர்யகதிர் மூலமாக !!!
    தேனக்கா அசத்தறாங்க டோய் !

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு தேனம்மை...
    பயனுள்ள தேடல்கள் இன்னும் தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  3. அவருடன் ஒரு அரைமணி நேரம் பேசுனாவே 100 பதிவுகளுக்கு மேட்டர் சிக்கிரும்.எல்லாமே படு சுவாரசியமானவை. என்ன ஒரு சோகமுன்னா எல்லாமே ஆஃப் த ரெக்கார்ட். யார் மனசையும் நோகடிக்க விரும்பாத பெருந்தன்மையாளர்.

    எங்கள் வீட்டுக்கு ஒரு சமயம் வந்து சுமார் மூணரை மணி நேரம் எங்களுடன் உரையாடினார். நான் எவ்வளவு பாக்கியசாலின்னு அன்னைக்கு முழுசும் தரையில் கால் பாவாம அரையடி உசரத்தில் நடந்தேன்:-)

    அவர் வந்தது எதுக்காம்? கோபாலைப் பார்த்துப் பேசவாம்!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  4. அருமையான பேட்டி.சுவாரஷ்யமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஆனால் நான்
    ஒரு நல்ல வாசகன். தேடித்தேடி வாசிப்பவன்.

    அருமையான நேர்காணல். நீங்கள் கொடுத்து வைத்தவர் அம்மா. ஒரு உயர்ந்த மனிதருடன் நட்பு வைத்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள் அம்மா.

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஆகாய மனிதன்

    நன்றி அரவிந்த்

    நன்றி துளசி

    நன்றி ராஜி

    நன்றி ரத்னவேல்

    நன்றி சாந்தி

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. >>தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...

    வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிவர் சங்கத்தலைவி தேன் வாழ்க.. ஹா ஹா

    பதிலளிநீக்கு
  9. மேடம் ஒரு டவுட்.. இந்த பதிவுக்கு இண்ட்லில ரொம்ப கம்மியான ஓட்டு விழுந்திருக்கே? ஏன்? இண்ட்லி ரிப்பேர்ரா?

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப நன்றி செந்தில்.. அப்பிடியே தமிழ் மணத்தில் முதலிடம் பிடிப்பது எப்படின்னு சொல்லிக் கொடுத்துடுங்க..:)

    பதிலளிநீக்கு
  11. இண்ட்லி அடிக்கடிரிப்பேராகுது ஏன்னுதெரியலை செந்தில்..:)

    பதிலளிநீக்கு
  12. //தேனம்மை லெக்ஷ்மணன்
    ரொம்ப நன்றி செந்தில்.. அப்பிடியே தமிழ் மணத்தில் முதலிடம் பிடிப்பது எப்படின்னு சொல்லிக் கொடுத்துடுங்க..:)//
    அத உங்களுக்கு கத்துக் கொடுத்துவிட்டு அவர என்ன பன்னச் ஜொள்ளுறது ?

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)