வியாழன், 14 ஏப்ரல், 2011

அசடன் மொழியாக்கம் (முன்பதிவு..) என் அம்மாவின் அற்புதமொழிவளத்தில்..:)


என் அன்பி்ன் சுசீலாம்மாவின் புத்தகம் குற்றமும் தண்டனையும் குமுதத்தில் பெஸ்ட் செல்லரில் 2008 இல் 9 வது இடத்தைப் பிடித்தது.. அதைப் படித்தபின் டில்லியில் இருந்த அவர்களோடு தொடர்பு கொண்டு பின் நானும் ஒரு வலைத்தளம் .,ஆரம்பித்து ., புத்தகங்கள் என இந்த அளவு வந்துள்ளேன்..
அவர்களின் நூல் விமர்சனம் .. அதுவே ஒரு புத்தகமாகி விடும். அந்த அளவு எனக்கு ரஸ்கோல்னிகோவையும் துனியாவையும் பிடிக்கும் நிச்சயம் ஒரு நாள் அதை முழுமையாய் எழுதுவேன்.. இப்போது என் அம்மாவின் அடுத்த படைப்பு அசடன் வெளியாக உள்ளது.. அதை வாசிக்க கீழிருக்கும் முகவரியில் முன்பதிவு செய்யுங்கள்.. உலக இலக்கியங்களை ., கலைச் செல்வங்களை நம் மொழியில் சேர்க்கும் அம்மாவுக்கும் மற்றும் அனைத்து வலைப்பதிவர்களுக்கும்., வாசகர்களுக்கும்., இணைய இதழ்களுக்கும்., பத்ரிக்கையாளர்களுக்கும்., பொது ஜன ஊடக மக்களுக்கும்., சின்னத்திரை., பெரிய திரை., முகபுத்தக நட்புக்களுக்கும் என் சித்திரைத் திருநாள் வந்தனங்கள்.. மங்கலம் பொங்கட்டும் மங்களகரமான நாளில்.. வாழ்க வளமுடன்.. !!!


////’’உண்மையின்அழகு பொதிந்த ஓர் ஆன்மாவை சிருஷ்டிப்பதே என் நோக்கம்’’எனக் குறிப்பிடும் தஸ்தாயெவ்ஸ்கி அந்த எண்ணத்துடன் உருவாக்கியுள்ள ஆக்கமே இடியட்/அசடன்.(The Idiot) குற்றமும் தண்டனையும் நாவலை விடவும் அளவில் பெரியதாக நான்கு பாகங்களைக் கொண்டிருக்கும் இந்த நாவலைக் கொடிய வறுமை,இடைவிடாச்சூதாட்டம்,முதற்குழந்தையின் மரணம் முதலிய சொந்த வாழ்க்கைச்சிக்கல்களுக்கு நடுவிலிருந்து கொண்டு,அவற்றோடு போராடியபடி - முன்னதை முடித்த இரண்டு வருடங்களுக்குள்ளேயே உருவாக்கிச் சாதனை படைத்தார் தஸ்தாயெவ்ஸ்கி.

அந்த நாவலைப் போன்ற சீரான ஒருமுகத் தன்மை அற்றதாய்ப் பல்வேறு முடிச்சுக்களும் பலரின் உணர்வுப் போராட்டங்களும் இணைந்த ஒரு கலவை இடியட்.


மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தாயெவ்ஸ்கியின் இந்த நாவலின் மூலம் தரிசிக்கும்போது ஏற்படும் பரவசச் சிலிர்ப்பு வார்த்தையில் விவரிக்க ஒண்ணாதது மனிதச் சிறுமைகளின் கறை படியாத புனிதமான ஒரு மானுடனாக வளர்ந்து உருவாகும் இளவரசன் மிஷ்கின் , தான் போற்றிவந்த மேன்மையான கிறித்தவக்கோட்பாடுகளுக்கு எதிர்மாறான ஒரு சமூகத்துக்குள் சிக்கிக்கொள்ள நேரிடுகிறது; பணம்,அதிகாரம்,பாலியல் வேட்கை ஆகியவற்றில் மட்டுமே கருத்துச் செலுத்தி வெறி கொண்டு அலையும் அந்தக் கும்பல் அவனை எவ்வாறு மூச்சுத் திணற வைக்கிறது என்பதே இந்நாவல்.


குறிப்பிட்ட அந்தச் சமூகத்துக்குள் அவன் காலடி எடுத்து வைத்த ஒரு சில நாட்களுக்குள்ளாகவே - அதி பயங்கரமாகத் தன்னை மூழ்கடிக்கக் கூடிய ஒரு காதல் முக்கோணத்தின் பிடிக்குள்ளும் அவன் ஆட்பட்டுப்போகிறான்; ’ஊரறிந்து’சிறுமைப்பட்டுப்போன ஒரு பெண்ணும்,அழகிய வேறொரு இளம் பெண்ணும் அவனது அன்பைப்பெறப் பகையாளிகளாகிப் போட்டி போடுகின்றனர்.மிஷ்கினை அலைக்கழிக்கும் அந்த இரண்டு பெண்களையும்....அவர்களின் மன அமைப்பையும் துருவித் துருவிப் படம் பிடித்து அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.


ஒருத்தி மிகப் பாதுகாப்பான சூழலில் வாழும் வாய்ப்புக் கிடைத்தவள்;ஒழுக்கத்தை அரணாகப் பூண்டிருப்பவள். (அக்லேயா இவாநோவ்னா) மற்றொருத்தி, சந்தர்ப்ப சூழலால் சீரழிவுகளுக்கு ஆளாகி அதன் காரணமாகவே ஒருபுறம் வஞ்சத்தோடும் , மறுபுறம் தாழ்வு மனப்பான்மையோடும் தவித்துக் கொண்டிருப்பவள்.(நஸ்டாஸ்யா பிலிப்போவ்னா) இருவருமே இடியட் மிஷ்கினை நேசிக்கவும் செய்கிறார்கள்; அவனை அலைக்கழிப்புக்கும் ஆளாக்குகிறார்கள். மிஷ்கினும் அவர்கள் இருவரையும் வெவ்வேறு கண்ணோட்டங்களோடு அணுகிப் பரிவும் பாசமும் காட்டுகிறான். ஆனால் ஏற்கனவே சற்று மனப்பிறழ்வுக்கு ஆட்பட்டிருந்த அவனை மேலும் பைத்தியமாக்கி வேடிக்கை பார்ப்பதே அவர்கள் இருவரின் வாடிக்கையாக இருக்கிறது. ஒருத்தி திருமண நிச்சயம் வரை சென்றுவிட்டு அவனை மறுதலிக்கிறாள். இன்னொருத்தியோ மணமேடையில் அவனைக் காத்திருக்க வைத்து விட்டு ஓடிப் போகிறாள்.


பொருள்கொள்ளை,வதந்தி,கொலை ஆகியவை தொடர்ந்து நிகழ்ந்தபடி மிஷ்கினின் அற உணர்வுகளுக்குச் சவால் விடுக்கின்றன. மனித மனத்தின் புரியாத பக்கங்களை....இண்டு இடுக்குகளைப் புறவயப் பார்வையோடு வாசகர் முன் வைத்து விட்டுத் தீர்ப்பை அவரவர் ஏற்புத் திறனுக்கே விட்டு விடுகிறார் தஸ்தாயெவ்ஸ்கி மனிதனுக்குள் ஒளிந்திருக்கும்’ இன்னொரு மனிதனை இனம் காண நேரும்போது ஏற்படும் கரைகாணா மானுட வேதனைகளையும்,உள்ளச் சிதைவுகளையும் இந்நாவலின் மூலம் கண்டடைய முனைந்திருக்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி.


ரஷ்ய மக்களின் சிக்கலான - வேறுபட்ட மனோபாவங்களைத் துருவிப்பார்த்துப் பதிவு செய்திருக்கும் முற்றான ஒரு ரஷ்யத் தன்மை கொண்ட நாவலாக உருப்பெற்றிருப்பது ‘அசடன்’. ’’எல்லோரும் என்னை ஓர் உளவியலாளன் என்று அழைக்கிறார்கள்;ஆனால் அது பொருத்தமானதில்லை.என்னிடம் இருப்பது சற்று மிகையான யதார்த்தவாதம்;அதனாலேதான் மனித ஆன்மாக்களின் அடியாழம் வரை ஊடுருவிப் பார்த்து என்னால் சித்தரித்திருக்கமுடிந்திருக்கிறது’’என்பதே தன்னைக்குறித்து தஸ்தாயெவ்ஸ்கி வெளியிடும் கணிப்பு....


பின்குறிப்பு; தஸ்தயெவ்ஸ்கியின் இடியட் நாவல் அதன் ஆங்கில மொழியாக்கத்தின் துணையுடன் ’அசடன்’என்ற பெயரில் என்னால் முழுமையாக மொழியாக்கம் செய்யப்பட்டு மார்ச் மாதம் - (2011 )வெளியாக இருக்கிறது. நூலை வெளியிடவிருக்கும் மதுரை பாரதி புத்தக நிலையம் அதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை அறிவித்திருக்கிறது.


http://www.masusila.com/2010/12/blog-post_11.html பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட்/அசடன் நாவலின் வெளியீட்டுப் பணி நடந்து கொண்டிருக்கிறது. நான்கு பாகங்கள் கொண்டதும் அச்சில் ( டபுள் கிரவுன் அளவு ) 800க்கு மேற்பட்ட பக்கங்கள் நீள்வதுமான (என் கையெழுத்துப் பிரதியில் 1200 பக்கங்களுக்கும் மேல்..) அந்த மாபெரும் உலக இலக்கியப் படைப்பை மேம்போக்காகச் செய்துவிடாமல்..,ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு உணர்வோடு செய்வதே அதற்கு வழங்கும் நியாயமாகவும்,அதற்குச் செலுத்தும் மரியாதையாகவும் இருக்கக் கூடும் என்பதால்,அச்சுப் படி திருத்திச் செம்மைப்படுத்தும் பணியை மிகுந்த நிதானத்துடனும், கவனமாகவும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் மூல நூலின் ஒரு சொல் கூட விடுபட்டுப் போகாத முழுமையான மொழியாக்கமாக இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதால், நூல் வெளியாகும் நாளில் சிறிது தாமதம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகியிருக்கிறது .


ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் நூலை வெளிக்கொணர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாவலை முன்பதிவு செய்வதற்கான கால அவகாசமும் ஏப்ரல் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.


முன்பதிவு செய்ய ...

விலை;ரூ.600.00 முன் வெளியீட்டுத் திட்ட விலை;ரூ;350.00 கூரியர் செலவு;ரூ;75.00 ஏப்ரல் 25 வரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.


முன் பதிவுத் தொகையை ‘பாரதி புக் ஹவுஸ்’ என்ற பெயரில் மதுரையில் மாற்றும் வகையில் வங்கி வரைவோலை(டிராஃப்ட்) அல்லது பணவிடை( எம்.ஓ.)மூலம் அனுப்பலாம். நேரடியாகக் கனரா வங்கிக் கணக்கு எண்ணிலும் செலுத்தலாம். எண்; 1013256227


இணைய வழிமுன்பதிவுக்கும் நூலைப் பெறவும்.. உடுமலை.காம். காண்க இணைப்பு; அசடன் மொழியாக்கம்-முன் வெளியீட்டுத் திட்டம் http://www.masusila.com/2011/04/blog-post.html --

எம்.ஏ.சுசீலா,(M.A.Susila)

புது தில்லி (தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை) D II 208 KIDWAI NAGAR WEST,NEW DELHI110023 www.masusila.com http://www.google.com/profiles/susila27 ///


டிஸ்கி:- இன்று விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தோம் . தொலைக்காட்சி எதிர்ப்பாளர்கள்., ஆதரிப்பவர்கள் என இரு அணி.. அதில் நாங்கள் எதிர்ப்பு அணி., ஜாக்கி சேகர்., தமிழரசி., தமிழ் செல்வி., நான் மற்றும் பலர். மிகச் சிறப்பாக கருத்துக்களைப் பதிவு செய்த ஜாக்கிசேகர்., தமிழரசி, தமிழ் செல்விக்கு வாழ்த்துக்கள். ( என் பெயரை விஜய் மகேந்திரன் முன் மொ்ழிந்திருக்கிறார். நான் தமிழ் செல்வி ., தமிழரசி., பத்மா.,மதுமிதா., ஈழவாணி பேரை முன் மொழிந்தேன்.. மற்ற மூவரும் கலந்து கொள்ளவில்லை) ..


தொலைக்காட்சித் தொடர்கள் உறவுச் சிக்கல்களையும் ., உணர்வுச் சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றன என நான் கூறிய கருத்து எடிட்டிங்கில் வெளியாகவில்லை.. என் கருத்துக்கள் அடுத்த இடுகையில் பகிர்வேன்..:)

9 கருத்துகள்:

  1. பகிவுக்குப் பாராட்டுக்கள்.
    தமிழ் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்! உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் பதிவை வாசிக்க ஆவல். வீடியோ லிங்க் இருந்தால் இணைக்க மறக்காதீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. நற்செய்தி. நானும் சுசீலா அம்மாவுடன் பேசுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. இனிய தமிழ் புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்..

    சங்கர்.

    பதிலளிநீக்கு
  5. ??>>>>. என் கருத்துக்கள் அடுத்த இடுகையில் பகிர்வேன்..:)

    hi hi hi ஹி ஹி வார்த்தை தவறி விட்டீர்களே

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஆர் ஆர் ஆர்

    நன்றி ராஜி..

    நன்றி சித்து

    நன்றி கலாநேசன்

    நன்றி சந்தானசங்கர்

    நன்றி மனோ

    நன்றி செந்தில்குமார்

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)