சனி, 26 ஜனவரி, 2019

சாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் சார் சொல்லும் நமக்கு நாமே திட்டம்.

இந்த வாரமும் சாட்டர்டே போஸ்டில் பெரியவர்கள் அத்யாவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் ஒன்றை திரு விவிஎஸ் சார் கூறியுள்ளார். படித்துப் பயனடையுங்கள்.

நமக்கு நாமே திட்டம் !

”ஹலோ ஸார்,  எங்கப்பா எல் ஐ சி-ல போட்டிருக்காரே ஜீவன் அக்‌ஷை பாலிஸி.  அதுக்கு என்ன ரேட் ஆஃப் இண்டரஸ்ட் வருது ஸார் ?”
“12 %”
“பூ, இவ்ளோதானா.  ஸார் பேசாம அத ஃபோர்கிளோஸ் பண்ணி செக் வாங்கி குடுத்துடுங்க.  அத அமவுண்ட்ட என் பிசினஸ்ல போட்டுக்கறேன்.  ஃபிஃப்டீன் பர்சண்ட் எங்கப்பாவுக்குக் கொடுத்துடறேன்”
“ஸார்,  பேங்க் எஃப்டீ மாதிரி அப்படி நெனச்ச ஒடனே கிளோஸ் பண்ண முடியாது.  அவருக்கு ஏதாவது சர்ஜரி மாதிரி மெடிக்கல் நீட் இருக்கணும்.  அப்பத்தான் ஃபோர்கிளோஸ் பண்ண முடியும்.  அதுக்கும் மெடிக்கல் ரிப்போர்ட் காபீஸ் கொடுக்கணும்”


“என்ன ஸார், அநியாயமா இருக்கு.  எங்கப்பா அவரோட பணத்தத் திரும்ப வாங்க இவ்ளோ புரொஜீசர்ஸா ?”

ஏஜண்டுகளிடம் மட்டும்தான் இந்தக் கோபம் செல்லுபடியாகும்.  காப்பீட்டுக் கழகத்திடம் பாச்சா பலிக்காது. 

பென்ஷன் பாலிஸி திட்டம் அப்படிப்பட்டதுதான்.   பாலிஸிதாரர் இறந்த பிறகுதான் நாமினீக்குப் பணம் கிடைக்கும். 

பாலியின் கருவூலப் பணம் பெரும்பாலும் ரிடயர்ட் ஆன போது கிடைத்த தொகை.   கைநிறைய சம்பளம் வாங்காதவர் கூட பி எஃப் கிராஜுட்டீ போன்றவற்றை ஒரே செக்காக வாங்கும் போது அது “கைநிறையும்” தொகையாக இருக்கும்.   

அதற்குப் பின்னர் அதே அளவுத் தொகையை வாழ்நாள் முழுவதும் கூட அந்த நபர் பார்க்காமலேயே போகக் கூடும்.  அதனால்தான் எல் ஐ சி அதை இடைமுறிவு செய்வதைத் தடுக்கிறது.

கடந்த வாரம் நடந்த கதை.  வெளிநாட்டிலிருந்து வந்த மகள், தன் தந்தையை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறாள்.  சொல்லப் போனால்  நாற்காலியோடு தூக்கிக் கொண்டு வந்து ரோட்டில் வைத்து விடுகிறாள். 

திக்பிரமை பிடித்த நிலையில் நடுத்தெருவில் அவர்.  .  அந்தத் தள்ளாத வயதில்.  வீடு போனது கூட அதிர்ச்சி இல்லை.  பெண்ணாலேயே தூக்கி எறியப்பட்டோம் என்பது பேரதிர்ச்சியாக இருந்தது.   இத்தனைக்கும் அந்தப் பெரியவர் ஓய்வு பெற்ற ஒரு போலீஸ். 

சேக்‌ஷ்பியரின் கிங் லீயர் கதை ஞாபகம் உள்ளதா ?  தன் மூன்று மகள்களுக்கும் நாட்டைப் பிரித்துத் தர விரும்புகிறார்.  “என் மீது  எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாய் என்று சொல்”  இதுவே அவர் கேட்ட கேள்வி.  ஒவ்வொரு மகளிடமும்.

முத்தவள், “இந்த உலகளவு” என்றாள்.   “இந்த பிடி பாதி ராஜ்ஜியம்” என்றார்.  இரண்டாம் மகளும் அதே போல் ஏதோ சொன்னாள்.  அவளுக்கும் கிடைத்தது பெரும் பங்கு.   மூன்றாமவள், “நத்திங்” என்றாள்.  ”நத்திங் ?  தென் நத்திங் கம்ஸ் அவுட் ஆஃப் தி கிங்” என்று அவளை வெறுங்கையோடு திருப்பி அனுப்புகிறார். 

இரண்டு மகள்களும் தந்தையை ஏமாற்றுகின்றனர்.  மூன்றாமவளோ அவருக்கு ஆதரவாக நிற்கிறாள்.  ஆனால் அந்த நேரத்தில் இறந்து போகிறாள்.  அவளது சடலத்தின் கையில் ஏந்தியபடி லீயர் சொல்கிறான்.  “நெவர், நெவர், நெவர், நெவர், நெவர்” என்று ஐந்து முறை. 

”மகளின் உண்மையான அன்பைப் புரிந்து கொள்ளாத பாவி நான்” என்பதே அந்த ஐந்து நெவர்-ரின் அர்த்தம்.  

எல்லாப் பிள்ளைகளுமே இப்படித்தான் என்பதில்லை இங்கே வாதம்.   ஆனாலும் ஓய்வு காலத்திற்கு ஒதுக்கிய பணத்தை இறுதி வரையில் காக்க வேண்டும்.  அதற்காகவே இந்தத் திட்டம் முன்முறிவை அனுமதிப்பதில்லை.   

இங்கே பென்ஷன் (ANNUITY என்பதுதான் சரியான வார்த்தை) ஒவ்வொரு மாதமும் முதல் நாள் பூக்கிறது.  அது நமக்கு ஒரு மரியாதையைப் பெற்றுத் தருகிறது. 

கருவூலப் பணத்தைக் கொடுத்தால்தான் ஆச்சு என்கிறதா அடுத்த தலைமுறை ? “நெவர்” என்று ஐந்து முறை நமக்கு நாமே சொல்லிக் கொள்வோம் ! பயன் தரும் “நமக்கு நாமே” திட்டம் !

டிஸ்கி :- எல்லாருமே கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டியவை சார் இவை. அன்பு பாசம் என்பது வேறு அடிமுதலைக் கடைசிவரை கொஞ்சமாவது தனக்காகத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியம் எனச் சொன்ன கட்டுரை. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி விவிஎஸ் சார். !

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)