திங்கள், 28 ஜனவரி, 2019

மகனைக்கூடத் தண்டித்த மனுநீதிச் சோழன்:- தினமலர் சிறுவர்மலர் - 2.

மகனைக்கூடத் தண்டித்த மனுநீதிச் சோழன்:-
மாபெரும் குற்றம் செய்தவர்கள் ராஜாவின் பிள்ளையானால் தண்டனையிலிருந்து எப்படியோ தப்பி விடுவார்கள். ஆனால் ஒரு ராஜா குற்றம் செய்தவன் தன் மகன் என்று தெரிந்ததும் நீதி கேட்ட ஒரு பசுவின் கன்றுக்காக தன் மகனை ஈடு கொடுக்கிறார். அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சோழ நாட்டினைத் திருவாரூரில் இருந்துகொண்டு ஆட்சி செய்து வந்தான் ஒரு மன்னன். நீதி நெறி வழுவாமல் ஆட்சி செய்து வந்ததால் அவன் மனு நீதிச் சோழன் என்று அழைக்கப்பட்டான்.  அவனது பிரியத்துக்குரிய மகன் பெயர் வீதிவிடங்கன் என்றழைக்கப்படும் பிரியவிருத்தன். மன்னனுக்கு மகன் மேல் அளவிடமுடியாத பாசம் உண்டு.
பிரியவிருத்தன் ஒரு நாள் மணிகள் பூட்டிய மிகப் பெரிய தேரில் ஏறி நகர் உலா சென்றான். அரசவீதிகள் பெரிதாகத்தான் இருந்தன. ராஜபாட்டையில் ராஜன் மகன் உலா வருவது கண்டு அனைவரும் விலகி வழிவிட்டார்கள். ஆனால் எங்கிருந்தோ துள்ளிப் பாய்ந்து வந்தது பயமறியாத இளங்கன்று ஒன்று.
இளவரசன் மட்டுமல்ல யாருமே எதிர்பாராமல் தேர்க்கால்களுக்குள் புகுந்து விட்டது. இளவரசன் சிறியவன் என்பதால் தேரை உடனடியாக நிறுத்த முடியாமல் போனது. அதற்குள் அந்தக் கன்று தேர்க்காலில் அடிபட்டு மாண்டுவிட்டது. அதன் பின்னேயே ஓடிவந்த அதன் தாய்ப்பசு மா மா எனக் கதறியது. இளவரசன் தேரிலிருந்து குதித்து செய்வதறியாது திகைத்து நின்றான்.
அந்த நாட்டில் ஒரு பழக்கம் இருந்தது. யாருக்காவது தீர்க்கமுடியாத பிரச்சனை இருந்தால் அரண்மனை வாயிலில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் ஆராய்ச்சி மணியை அடித்து அரசனுக்குத்தெரிவிப்பார்கள். அரசனும் அதை ஆய்ந்து தீர்ப்பு வழங்குவார்.
இந்தத் தாய்ப்பசு என்ன செய்தது உடனே அரண்மனைக்கு ஓடி அங்கே கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த கயிறை இழுத்து ஆராய்ச்சி மணியை அடித்தது. திரும்பத் திரும்ப வாயில் கவ்வி அம்மணியை ஓங்கி ஓங்கி ஒலிக்கச் செய்து நீதி கேட்டது அப்பசு. வாயிற்காவலர்களுக்கு இது புதிதாக இருந்தது. மன்னனிடம் ஓடிப்போய் விவரத்தைச் சொன்னார்கள். உடனே மன்னனும் ஆச்சர்யப்பட்டு வாயிலுக்கு வந்து அந்தப் பசுவுக்கு நேர்ந்த துயரத்தை விசாரித்தான்.
அப்போது அரசன் மகனின் தேர்க்காலில் கன்று இறந்ததை அறிந்த மந்திரி பிரதானிகள் அங்கே வந்து விஷயத்தை மன்னனிடம் தெரிவிக்கிறார்கள். இதைக் கேட்டதும் மன்னனுக்கு சிந்தை கலங்குகிறது.கன்றைப் பறிகொடுத்த பசுவின் நிலையை நினைத்து நொந்து போகிறான். மந்திரி பிரதானிகளுடன் ஆலோசனை செய்கிறான்.
அவர்களில் பிரதான மந்திரியான உபயகுலாமலன் என்பவர் ” மன்னா. ! இளவரசன் அறியாச் சிறுவன் . மேலும் கன்று ஐந்தறிவு பெற்ற உயிர்தானே அதைத் தெரியாமல் கொன்றதால் பாவமில்லை. அதுவும் இளவரசன் வேண்டுமென்றே செய்த தவறல்ல. கன்று தானே தேர்க்காலின் குறுக்கே ஓடி வந்து மாய்ந்து பட்டது. அதனால் அவர் செய்த தவறை மன்னிக்கலாம்” என்கிறார்.
மன்னன் கண்களில் நீர் தன்னையறியாமல் பெருகிறது. அந்தப் பசுவைப் பார்க்கிறார். அதன் துயரம் அவர் நெஞ்சை அறுக்கிறது. அதன் கன்றைத் திருப்பித் தர இயலாது என்ன செய்யலாம். அதற்குத் துன்பம் ஏற்படுத்திய இளவரசனை அதற்கீடாகத் தருவதுதான் முறை என நினைக்கிறார்.
மன்னன் தன் மனதை இரும்பாக்கிக் கொண்டு மந்திரி உபயகுலாமனிடம் தன் மகன் மேல் தேரேற்றிக் கொல்லப் பணிக்கிறார். ஆனால் மந்திரியோ மன்னர் குலத்துக்கு ஒரு தீங்கும் செய்யமாட்டேன் என்று மறுக்கிறார்.
மன்னன் என்பவன் குடிகளின் ஐவகையான பயத்தைப் போக்கக் கடமைப்பட்டவன் என்று கூறி அவை என்னென்ன என்று தெளிவுறுத்துகிறார். ஆள்பவர்களாலோ, அவர்களைச் சேர்ந்தவர்களாலோ, பகைவர்களாலோ, கள்வர்களாலோ மற்ற ஜீவராசிகளாலோ குடிமக்களுக்குப் பயமோ கெடுதியோ ஏற்படாமல் காக்கவேண்டியது அரச கடமை. அக்கடமையிலிருந்து தான் வழுவக்கூடாது என்று தானே இளவரசன் மேல் தேரை ஏற்றப் போகிறார்.
கன்றுகொல்லப்பட்ட அதே ராஜபாட்டை. அதே தேர். அதில் ராஜா மனு நீதிச் சோழன் அமர்ந்து தேரை ஓட்டி வருகிறான். அரசனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு வீதிவிடங்கன் அதே ராஜபாட்டையில் இறைவன் தியாகேசப் பெருமானை எண்ணிக் கரங்குவித்து நிற்கிறான். இதோ தேர் நெருங்குகிறது. தேர்க்கால் உருள்கிறது. அடுத்த நொடி இளவரசன் மேல் பாயப்போகிறது.
அஹா அதோ நிகழ்ந்தது மாயம். இளவரசன் மேல் தேர் ஏறாமல் அப்படியே நின்றது. அரசனின் நீதி நெறி வழுவாத தன்மையைப் பார்த்து திருவாரூரில் கோயில் கொண்டிருக்கும் தியாகேசப் பெருமான் இறந்துபோன கன்றையும் உயிர்ப்பித்து விட்டார். அது தேர்க்காலின் அடியிலிருந்து துள்ளிக் கொண்டு ஓடி தனது தாய்ப்பசுவை நக்குகிறது. மக்கள் எல்லாம் வியந்து கூவுகிறார்கள். என்ன அதிசயம். இறந்த கன்று உயிர்பெற்றதே.
இறைவனின் கருணையை எண்ணி வியந்த மனு நீதிச் சோழன் இறைவனை வணங்கித் தன் மகனைக் கட்டி அணைக்கிறான். நீதி நெறி மாறாத தன்மையினால் மகனைக் கூடத் தண்டித்த அரசன் பாராட்டுதலுக்குரியவன் அவனினும் தன் தந்தை சொல் கேட்டு தன் தவறுக்கு பிராயச்சித்தமாக தன்னைக் கொடுத்த பிரியவிருத்தனும் பாராட்டுக்குரியவன்தானே குழந்தைகளே

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 25 . 1. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & தேவராஜன் ஷண்முகம் சார்.

5 கருத்துகள்:

  1. Nandri .Padam Puguttum Arumai Kathai.

    https://www.tamilinfotek.com/

    பதிலளிநீக்கு
  2. கண்ணுக்கு கண் என்பது எல்லாம் சரியா மகனைக் கொன்றதால் பசுவின் கன்றுக்கு நீதி கிடைத்தாதா

    பதிலளிநீக்கு
  3. நன்றி தமிழ் இன்ஃபோடெக்

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி குமார் சகோ

    நன்றி பாலா சார். கதை அப்படிப் போகலையே :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)