வெள்ளி, 17 நவம்பர், 2017

தபால்காரனும் ரிஷிகுமாரனும்.

உன் கடிதம் பார்த்து
வாசலிலேயே
தவம் கிடக்கும்
கதவாய்
மனசும்

என் எதிர்ப்பார்ப்பைப்
போலத்
தேய்ந்து போகும்
வாசற்படிகள்

உன் கடித வரவிற்காய்
உறுத்து விழித்து
மெல்ல்ல்ல சுவாசித்து
மௌனமாய் அடங்கும்
சமையற்கட்டுச்
சன்னல் கதவு.


கிழட்டுத் தபால்காரனோ
உன் கடிதங்களுடன்
என் வெறுப்பையும்
உறிஞ்சிக்கொண்டு
சைக்கிளுடன்
உருளுவான்

ஏமாற்றம்
வெய்யில்போல் என் மேல் அப்பும்
மனசோ காற்றுள் தூசியாய்.

* * * * * * * * * ** * ** * **

குளிரில்
விறைத்துத் தவம்
கிடக்கும்
துவைகல்லாய் நானும்.

அட்டானியில்
துணிப்பை எடுத்துக் கொண்டு
பதிலாய் என்னை
இருத்திச் சென்ற நீ..!

நிம்மதியின்மையைத்
தந்துவிட்டு
நீயும் ஏன்
நிம்மதியில்லாமல்
நகர்ந்துகொண்டிருக்கிறாய் ?

ரிஷிகுமாரா !
தவம் செய்வதற்கு
இதுவல்ல வயது.
நீரிலும் மூழ்கி
நெருப்பிலும் ஒளிரும்
வல்லமையை
எனக்குத் தா !

--- 83 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)