செவ்வாய், 1 ஜூலை, 2014

யட்சியும், வனப்பேச்சியும், காளியும்.

யட்சிகளும் வனப்பேச்சிகளும் உலவிக் கொண்டிருந்தார்கள் காளியின் கோயிலில். வண்ணத்துப் பூச்சிகளைப் போல வெய்யில் நிறம் தடவி அவர்கள் பறக்கப் பின் தொடர்ந்தாள் காளி. தனக்காகக் கட்டமைக்கப்பட்ட பிம்பமும் கருநிறமும் உதிர்ந்து விடுமோவென்ற கவலையில் அவளால் பறக்க முடியவில்லை. தன் கடினச் சொற்களும் ப்ரயோகமும் கோரைப்பற்களும் மண்டையோட்டு மாலையும் சூலமும் இறுக்கிச் சுமந்தபடி எவ்வ யத்தனித்தாள். எதிர்ப்படும் முயலகன்களை மிதிக்காமல் போய்விட்டால் கடமை தவறிவிடுவோமோ என்ற பதற்றம் வேறு.


செந்நிறக் கனிகள் அங்கங்கே பூக்களோடு காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தன. அவை தடுக்கப்பட்ட ஆப்பிள்களைப் போலப் பயங்காட்டின கருத்த காளிக்கு. அவை செந்நிற நாகங்களாய்க் காட்சி அளித்தன. யட்சியும் வனப்பேச்சியும் அவை ருசியெனக் கூற சீச்சீ இந்தப் பழம் துவர்க்கும் பின் உவர்க்கும் என்றாள். கலகலத்துச் சிரித்தபடி யட்சியும் வனப்பேச்சியும் ஒருவரை ஒருவர் துரத்தியபடி கானகத்துள் புகுந்தார்கள்.

பயத்தினாலும் சரித்திர பூகோளக் கோளாறுகளாலும் பறப்பது போல் மிதந்து கொண்டிருந்த காளியைப் பேயெனக் கருதி சாமக் கோடங்கிகள் உடுக்கை அடிக்கத் துவங்கினார்கள். காளிக்கே குழப்பமானது தான் பேயோ பிசாசோ பூதமோ காளியோ கருப்போவென. வேப்பமரத்தின் பூக்கள் உதிர வேப்பிலைகள் சூழ ஒரு கசப்பான அனுபவத்துக்குப் போனாள் காளி. களிம்பு பதிந்த பாதங்களும் கருச்சுமந்த உடலும் அவள் பறப்பதற்குப் பக்குவமற்றவள் எனக் கெக்கிலி கொட்டின.

உடுக்கையும் பம்பையும் அவள் யாரென அறிவித்துக் கொண்டேயிருந்தன. முளைக்கத் துவங்கிய இறக்கைகளை அவள் பதினாறு கைகளுக்குள் மறைத்துக் கொண்டாள்.

சாம்பிராணியும் தூபமும் தீபமும் வெக்கையூட்ட பட்டுப்புடவை அணிந்து பூக்களுக்குள் ஒளிந்து இன்னொரு அவதாரம் எடுத்துப் புன்னகைத்தாள் காளி.. இப்போது எல்லாம் இலகுவாய் இருந்தது அவளுக்கும் அனைவருக்கும். பாவை விளக்காய் ஒருத்தியும் பக்கத் துணையாய் இருவரும் தாங்கள் மகிழ்வோடு உள்ளே வந்த கதையைச் சொல்லத் துவங்கினார்கள்.

கருப்பு அறைக்குள் எண்ணெய்ப் பிசுக்குக்குள் உறைந்து சிரித்த காளியின் கண்களில் வனமும் வனப்பேச்சியும் யட்சியும் ஏக்கமாய் உறைந்திருந்தார்கள்.

3 கருத்துகள்:

  1. காளியின் குழப்பம் சாமக்கோடாங்கிக்கு சாதகமாகிவிட்டது. இன்று கருவறையில் பூட்டிவைக்கப் பட்டு பூஜிக்கப்பட்டாலும் என்றேனும் ஒருநாள் கதவுடைத்து வெளிக்கிளம்ப நேரிடும் காளியும் தன் சுயம் தேடி!

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் கீத்ஸ் சரியா சொன்னீங்க. :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)