வெள்ளி, 16 அக்டோபர், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 11

 

11

”சின்னக் கெழவனும் பெரிய கெழவனும் கல்லுக்குண்டாட்டம் இருக்காய்ங்க . இந்தச் சொக்குப்பய சின்னப்பய போய்ச் சேந்துட்டானே. எல்லாம் முன்னச் செஞ்ச வெனைதான் தாக்குது “ வெனையத்தாச்சியின் குரல் அடுப்படிக்குள்ளிருந்து வெளியே கேட்டது.

கண்கலங்க உட்கார்ந்திருந்தாள் சோகி. ஆதரவாய்த் தலையைத் தடவிய மீனா அம்மாமிண்டி குலுங்கிக் குலுங்கி அழுதாக. ’இந்தப் பச்சச் சிசுவை இப்பிடிப் பார்க்கும்படி ஆயிருச்சே’ என சீதை ஆயாவும் கொந்தளிச்சுப் போயிருந்தாக.

எவ்வளவு வைத்தியம் பார்த்து என்ன, சருகாய் உலர்ந்து கொண்டே வந்தான் சொக்கு. சாப்பாடு இறங்கவில்லை. தண்ணீர் குடிப்பது கூட அரிதானது. மதறாசுக்கும் காரைக்குடிக்குமாக அவனோட்டே அலைந்து திரிந்து கொண்டிருந்தாக எல்லாரும். பணம் தண்ணீர் மாதிரி செலவாகிக்கினு இருந்துச்சு.

அப்பச்சியை வேற வீட்டோட கூட்டியாந்ததில் இருந்து சோகிக்கு ரெட்டிப்பு வேலை. ஆள் கூனிக் குறுகிக்கினே போனாள். “ சூதும் வெனையும் புடிச்ச புள்ள. சின்னப் புள்ளையிலயே தான்தான் பெரிய ரதின்னு ராங்கியா அலையும். இப்ப நல்லாப் படுது.” என்று குதூகலித்துக் கொண்டிருப்பாக வெனையத்தாயா. அவுக மகன் சந்திரமௌலிக்கு இப்படி சீரும் செனத்தியுமா அழகான பொண் அமையலயேன்னு அவுகளுக்கு நெஞ்சுமட்டும் கொறை. அதை இப்படி ஆத்திப் போக்கிக் கொண்டிருந்தாக.

என்னைக்கும் போல இன்னிக்கும் காலைல எந்திரிச்சா சோகி. ஆனா சொக்கு எந்திரிக்கல. மீளாத்தூக்கத்துலேயே போயிட்டான். வாயோரம் லேசா நத்தம் இருந்துச்சு அம்புட்டுத்தான். வேற மூச்சுப் பேச்சு இல்ல. அப்பாசாமி டாக்டர் வந்து நாடியெல்லாம் புடிச்சுப் பார்த்து ராத்திரியிலேயே ஆயிருச்சுன்னுட்டாரு.

அங்காளி பங்காளி எல்லாம் வந்து கூடிட்டாக. ஆளுக்கொரு வேலையா எடுத்துக் காரியத்தை நடத்துனாக. முருகப்பனுக்கோ, சீதாளுக்கோ, மீனாவுக்கோ, குமரப்பனுக்கோ நடக்கக் கூடத் தெம்பில்லை. கருப்பஞ்செட்டியோ ஞாபகம் பெறண்டு கை கால் வேற செயலத்துப் போய்க் கிடக்குறாக.

கொட்டுக்காரனுக்குச் சொல்லிவிட்டாக. நோய் நொடியினால ரொம்ப நொந்து போன உடம்புங்கிறதால சாயரட்சைக்குள்ள எடுத்துட்டாக. கொட்டுச் சத்தமெல்லாம் கேட்டு சோகி ஒடம்பு நடுங்குனுச்சு. ’தெம்பா இருக்கோணும். தைரியமா இருக்கோணும். இருக்க நாளெல்லாம் யாரையும் அண்டாம இருந்துட்டுப் போகோணும். ’ திரும்பத் திரும்பத் தனக்குள்ள சொல்லிக்கினா சோகி.

கண்ண இருட்டிக்கினு வந்துச்சு அவளுக்கு. அப்பச்சி போடவேண்டிய வெள்ளைச் சேலையை பங்காளி வீட்டு வள்ளியப்ப அண்ணன் பட்டம் சுத்தி வந்து போட்டாக. குமுறிக் குமுறி அழுதா சோகி . அதுதான் அவ கடோசியா அழுதது. அப்ப இறுகிப் போனவதான். மனசும் இறுகிப் பாறையாப் போச்சு.

நல்லெண்ணெய் சீயக்காய் தொட்டு நெத்தில வைச்சுக் குளியாட்டி விபூதிபூசி கண்ணுல சந்தனம் அப்பி மூக்குல பஞ்சுவைச்சு வேட்டிகட்டி மாலைபோட்டு ஜம்முன்னு பொறப்புட்டுட்டான் சொக்கு. ’போதுமடா சாமி இந்தப் பொறப்பு’ன்னு.

மூணுசுத்து சுத்தி பந்தக்காலை அங்கிட்டு எடுத்துட்டுப் போனதுதான் தாமசம் வெள்ளைச்சீலைக்கார ஆச்சிக எல்லாம் கூடி சோகிய அந்தப் பந்தக்கா இருந்த எடத்துல உக்கார வைச்சு தாலிய கழட்டச் சொல்லிப் பால் இருந்த லோட்டாவுல போடச்சொன்னாக.

இறுகுன மனசோட கழட்டிப் போட்டா. போய்த் தலமுழுகிட்டு வரச் சொன்னாக. அதுக்குள்ள யாரோ , சனிப்பொணம் தனியாப் போகாது. சிவபதவி வண்டில இருக்க கம்புல சாவலைக் கட்டுங்க “ ன்னு சொல்ல தோட்டத்தில் திரிந்து கொண்டிருந்த சாவல் ஒன்றைப் பிடிச்சுப்போய்க் கட்டினாக யாரோ.

“லக்கலக்கலக்க “என்று அது இறக்கை அடித்துக்கொண்டு பறந்ததைப் பார்த்தபோது தன்னிலை குறித்து இரக்கம் ஏற்பட்டது சோகிக்கு. “என்னய எதுக்குப் பெத்தே ஆத்தா” என்று குளியலறைக்குள் சென்று கண் கசிந்தாள். விறுவிறுவெனத் தண்ணீயை ஊத்திக்கிட்டு வெள்ளைச் சேலையைச் சுத்திக்கிட்டு அவ ஆல்வீட்டில் சொக்குவைக் கிடத்தி இருந்த இடத்தில் வந்து உக்காரவும் கட்டத்தலத்துக்குப் போனவுக திரும்பி வரவும் சரியா இருந்துச்சு.

”உன்னய இப்பிடிப் பார்க்கவா கொடுத்து வைச்சிருக்கு” என்று சீதை ஆயாவும் ஐயாவும் தலையிலடித்துக் கொண்டு அழுதார்கள். “ அப்பச்சி.. அவன் எனக்குக் கொள்ளி வைப்பான்னு இருந்தேன். நான் அவனுக்குக் கொள்ளி வைக்கும்படி ஆயிருச்சே அப்பச்சி “ என்று குமரப்பம்மான் வீட்டுக்குள் நுழைந்ததும் நெஞ்சிலறைந்து கொண்டு அப்பச்சியைக் கட்டிப் பிடிச்சிக்கினு அழுதார்கள். வீடே ஒரு மயானக் கோலத்தில் இருந்தது.

எதுவும் புரியாமல் மூலையில் குறிச்சியில் சாய்ந்தபடி மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த கருப்பஞ்செட்டியின் கண்ணிலிருந்தும் கரகரவெனக் கண்ணீர் வழிந்தது. மறுநாள் காலையில் அவுக கண்ணீரும் நின்றிருந்தது. மூச்சும் நின்றிருந்தது.

“நாஞ்சொல்லல . சனிப்பொணம் தனியாப் போகாதுன்னு. மாமனாரையும் கூட்டிப் போயிருச்சு பாரு “ என்று நொடிச்சாக வெனையத்தாயா.

“ சத்த சும்மாயிருக்க மாட்டீகளா. வம்பைக் கொண்டாந்திருவீக போலிருக்கே. அவ லண்டி மட்டை. எங்க எங்கன்னு இப்பல்லாம் சண்டைக்கு நிக்கிறா “ என அந்தாயாவின் மருமகள் நாச்சம்மை கடிந்தாள்.

ஆம்பிளையானுக்கும் அப்பச்சிக்கும் சேர்த்து இன்னும் வறண்டு போனாள் சோகி. இருபதுவயதிலேயே காரைக்காலம்மையார் போல் நரம்பு தெறிக்க எலும்பு புடைக்க சுருங்கிப்போனது தேகம். அன்றிலிருந்து அவள் பேசத் தொடங்கினாலே வில்லும் அம்பும் இல்லாமல் எல்லாருக்கும் ரத்தகாயமே வந்தது. வெனையத்தாச்சியின் வெசம் பூரா அவள்மேல் பாய்ந்து இறங்கி நீலம் பாரித்துக் கிடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)