புதன், 26 ஆகஸ்ட், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 9

 

9

”அக்கினியாத்தா எங்கள ஏன்தா இப்பிடிச் சோதிக்கிறே. ” மனமுருகிக் கையேந்திக் கேட்டுக் கொண்டிருந்தாக ஆவுடையப்பன். உங்கிட்ட உத்தரவு வாங்கித்தானே இந்தப் புள்ளைக்குக் கலியாணம் பண்ணினேன். ஆத்தா இல்லாத புள்ள மனக்கொறை இருக்கப்புடாதுன்னு புள்ளைகிட்டயும் கேட்டுத்தானே செஞ்சோம். மாப்பிள்ளைக்கு ரத்தப் புத்தாமே. என்ன செய்வேன் ஆத்தா?”

அவுகளை விட அதிகமாகக் கலங்கிக் கொண்டிருந்தாக கருப்பஞ்செட்டி. ”எங்க ஆத்தா போல உன்னயத்தானே நம்புனோம். எங்கள ஏன் கைவிட்டே.”

”சரி தம்பி கிளம்புங்க ஆறுமாசமா வைத்தியம் பார்க்குறோம். சரியாயிரும்னு நம்புவோம். வேலுவோட போய் பொங்கச்சீரைக் கொடுத்துட்டு வாங்க”.

“அப்பச்சி நீங்களும் வாங்க. “

“இல்லப்பா எனக்கு அந்தப் புள்ளயப் பாக்கத் தெம்பில்ல . நீங்களே போய்க் கொடுத்துட்டு வாங்க. மொதவருசச் சீர். ஒண்ணுகூடக் கொறையாம மொறைச்சிட்டைப்படி வாங்கி வச்சிருக்கு. அக்கினியாத்தாவும் கருப்பரும் கைவிடமாட்டாக “

”சரி அப்பச்சி.” என்றவடி டிரைவர் வேலுவோடு பொங்கல் சீர் சாமான்களை எடுத்துக் கொண்டு தனது மாமியார் வீட்டுக்கு - தற்போது தனது மகளின் மாமியார் வீட்டுக்குக் கிளம்பினாக கருப்பன்செட்டி.

எத்தத்தண்டி ரெட்டை வீடு. ரெட்டைவளவு. யானைக்கால் தூண்கள். பதினாறு பதினாறு முப்பத்திரெண்டு தூண்கள் இருக்கும் வளவுக்குள்ளே. அவுக பங்காளி வீடுகளுக்குள்ளேயே இவுகதான் பெரிய கை. பெனாரீனா முனா ரூனான்னாலே அலோர் ஸ்டார் மூனா ரூனாவான்னு கேப்பாக. மாப்பிள்ளைக்கு ஐயாவும் அப்பச்சியுமே கொண்டுவித்து வந்தவர்கள்தான். சொக்கு சோகி கலியாணத்தை ஒட்டி இப்ப எல்லாருமே சுருக்கிக்கினு வந்துட்டாக.

அங்கே ப்ளஷர் கார் சத்தம் கேட்டு வாசலுக்கு வரவேற்க வந்த மகளைப் பார்த்த கருப்பஞ்செட்டிக்கு மருகிக் கொண்டு வந்தது. மகதானா. ஆறுமாசத்துல கறுத்துச்சிறுத்துப் போனாளே இப்பிடி.. “ ஆத்தாப் பொண்ணு “ கூப்பிட்டவர்கள் குரலில் ஜீவனில்லை. கூப்பிடப்பட்டவளும் ஜீவன் அற்றவள் போல்தான் இருந்தாள். “அப்பச்சி வாங்க “ என்றபடி கையைப் பற்றி உள்ளே அழைத்துப் போனாள்.  

வேலு சீர் சாமான்களைக் கொண்டுவந்து வளவில் வைத்தான். சாமி வீட்டில் கோலமிட்டு வைத்திருந்தாக ஒமையாளின் ஆத்தா சீதை ஆச்சி. ”மாப்புள்ள வாங்க” என்றாக சீதை ஆச்சியும் முருகப்பண்ணனும். “ஆத்தா சோகி வந்து இந்த வெளைக்கை ஏத்து” என மருமகளைக் கூப்பிட்டாக மீனா அம்மாமிண்டி. மருமகளுக்கு அப்பச்சியைப் பார்த்து ’வாங்க’ என்று வாயசைப்பாகச் சொன்னாக. சொக்கலிங்கத்தின் அப்பச்சி குமரப்பனும் ’வாங்க’ என்று வாயசைச்சாக. ஒருவருக்கும் வேறு ஏதும் பேச நா எழவில்லை.

மகள் கருத்துப் போயிருந்ததற்கு மாற்றாக மாப்பிள்ளை சொக்கலிங்கம் வெளுத்துச் சவுத்துக் காகிதம் போலிருந்தான். காத்துப்போல எடையற்று இருந்தான். “ வாங்கம்மான் “ என்று அவன் சொன்னது காற்றில் கலந்து லேசாக ஒலித்தது. எப்பிடி இருந்தான் சொட்டவாளங்குட்டி மாதிரி. ஆறு மாசத்துல புத்து தின்னிருச்சே. “மருந்து வீர்யத்தில் முடி வேறு பாதிக்குமேல் கொட்டிப்போய் இருந்தது.

மாப்பிள்ளை வீட்டில் வெளிநாட்டில் இருந்து மருந்து தருவித்துக் கொடுத்துக்கினு இருந்தாக. ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா மதறாஸ் போய் அடையார்ல புதுசா ஆரம்பிச்சிருக்குற கேன்சர் ஆசுபத்திரிக்குப் போய் கீமோதெரபி பண்ணிக்கிட்டு வந்துக்கினுதான் இருந்தாக.

சாமி வீட்டில் தலைப்பாக் கட்டிக்கொண்டு போய் கடகாத்தில் பொங்கல் சீரை வைத்துவிட்டு வணங்கிக் கும்பிட்டுத் தடுக்கில் உக்காரும்போது கலங்கிக் கலங்கிப் பொருமிப் பொருமி வந்தது கருப்பஞ்செட்டிக்கு.

”என் ஆத்தாளை எடுத்துக்கினே, பொண்டாட்டியையும்  எடுத்துக்கிட்டே,என் மகதான் பாக்கி. அவ தைரியக்காரிதான். ஆனா அவ ஆம்பிளையானை எப்பிடியாச்சும் காப்பாத்து.”

அப்பச்சியின் மனசைப் படிச்சதுபோல் சொன்னாள் சோகி “எல்லாம் நல்லா வந்துரும் அப்பச்சி.அவுக நல்லா ஆயிருவாக. கவலைப்படாதீக. ” பலகாரம் சாப்பிடலாம் வாங்க. “

உக்காரை, மசாலச்சீயம், ஊத்தப்பம், கதம்பச்சட்னி, சாம்பார் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா நஞ்சா இருந்துச்சு கருப்பஞ்செட்டி நாக்குக்கு. நெஞ்சக்குழிக்குள் எல்லாம் அடைச்சது போல் ஆனது கருப்பஞ்செட்டிக்கு. எதையும் உங்கப் பிடிக்கல. கையை நனைச்சிட்டு எந்திரிச்சிட்டாக. அவுக உங்காத போது வேலுவுக்கும் பசிக்கல. கொடுத்த காப்பியைக் குடிச்சிட்டுக் கிளம்பினான்.

’பட்டாம்பூச்சிபோல திரிஞ்சிக்கினு இருந்ததக் கட்டி வைச்சிட்டாக. பாவம் அது ரோதனைப்படுது’ என்று வேதனைப்பட்டான்.

அப்பச்சி போனதும் அடுப்படிக்குப் போன சோகிக்கு இன்னொரு பங்குக்கார நாச்சாவின் மாமியார் வெனயத்தாயாளின் குரல் கேட்டது. ”ஆத்தாள முழுங்கிப்பிட்டுப் பொறந்த குட்டி. ஆம்புள்ளையானையும் முழுங்க வந்திருக்கு. சீரான சீரா கொட்டிக் குடுத்துக் கலியாணம் பண்ணினாலும்தான் என்ன ?  கொடுப்பினை என்னவோ அதுதானே கெடைக்கும்”

கேட்டதும் இறுகி உறைந்துபோனாள் சோகி.

சிவகாமின்னு பேரிட்டேனே. சொக்கலிங்கம்னு சோமசுந்தரக்கடவுள் மாதிரி மாப்பிள்ளை பாத்தேனே. உனக்கு சோகம் வந்துறப்புடாதுன்னுதானே சோகுன்னு கூடக் கூப்பிடுறதில்ல. சோகின்னுதானே கூப்பிட்டேன். தாயம் தகைஞ்சமாதிரி நீயும் தகைஞ்சு வருவேன்னு நெனைச்சேனே . பிள்ளையும் குட்டியுமா பெருகிப் பல்கிருவேன்னு நினைச்சேன். தாயமாவே தனிக்கட்டையா நின்னுருவியாத்தா. ”நினைக்க நினைக்க ஆறாமல் வந்தது ஆவுடையப்பனுக்கு. குறிச்சியில் சாய்ஞ்சபடி கீழ்வாசலில் விழுந்துகொண்டிருந்த நிலா வெளிச்சத்தைப் பார்த்தாக. விரிந்த கண்களுக்குள் நிலா உறைந்து போயிருந்தது.

”சாயங்காலம் இருட்டிப் போச்சு. என்ன அப்பச்சி சத்தத்தைக் காணோமே , விளக்கேத்தலையா என்ன” என்று அடுப்படியிலிருந்து வந்த கருப்பையா அண்ணன் கண்ணுக்கு வளவும் பட்டாலையும் மட்டுமல்ல வீடே இருண்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)