கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி
நான் பார்த்ததிலே, தொட்டால் பூ மலரும், ஜவ்வாது மேடையிட்டு, உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா, நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம், பாலும் பழமும் கைகளில் ஏந்தி, ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் என எத்தனை எத்தனை இதயம் கவர்ந்த பாடல்கள், கன்னடத்துப் பைங்கிளி அபிநய சரஸ்வதி எனப்படும் சரோஜாதேவி அவர்களின் நளினமான நடிப்பிலே.
ராதாதேவி கவுடா எனப்படும் சரோஜாதேவி ஜனவரி 7, 1938, பெங்களூருவில் பிறந்தார். தந்தை பைரப்பா, தாயார் ருத்ரம்மா, நான்கு சகோதரிகள் உண்டு. 17 வயதில் நடிக்க வந்தார். கணவர் பெயர் ஹர்ஷா. 1967 மார்ச்சில் திருமணம். கணவர் 1986 இல் மறைந்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் கௌதமராமச்சந்திரன், இந்திரா ஆகியோர். ஜூலை 14, 2025 இல் தனது 87 ஆம் வயதில் மறைந்தார்.
அபிநய சரஸ்வதி, கன்னடத்துப் பைங்கிளி, அபிநய பாரதி, அபிநய காஞ்சனமாலா, சல்லாப சுந்தரி எனப்படும் இவர் கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். பிரகாஷ் ராஜ், ரஜனி போல் இவர் உச்சரிப்பிலும் அவ்வப்போது கன்னடச் சாயல் வீசும். சினிமாவை செனேமா என்று உச்சரிப்பார்கள். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என்று கிட்டத்தட்ட 200 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.
தந்தை பைரப்பாவின் ஊக்குவிப்பால் நடிகையானார். ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த மகாகவி காளிதாஸ் என்ற கன்னடப்படத்தில் 1955 இல் சரோஜாதேவி என்னும் பெயரில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திற்கே தேசிய விருது கிடைத்ததால் தமிழில் நாடோடி மன்னனில் எம்ஜியாரின் ஜோடியாக அறிமுகம்.
ஏதோ ஒரு மனஸ்தாபத்தால் அதில் நடித்த பானுமதியைப் பாதியிலேயே நீக்கிவிட்டு இவரை ஹீரோயினாக்கியதாகச் சொல்வார்கள். பாதிப்படம் வரை ப்ளாக் & வொயிட் திரை. ”மானைத் தேடி மச்சான் வரப் போறான்” என்று அட்டகாசமாக ஆடியபடி இவர் தோன்றும் போது ஈஸ்ட்மென் கலரில் திரையே வண்ணமயமாகி விட கிளர்ச்சியடைந்த ரசிகர் கூட்டம் இக்கன்னடத்துப் பைங்கிளியை மொழித் துவேஷமில்லாமல் வாரி அணைத்துக் கொண்டது.
அடுத்துக் கல்யாணப் பரிசு. அதுவும் சூப்பர் ஹிட் படம். எம்ஜியாருடன் 26 படங்கள், சிவாஜியுடன் 22 படங்கள். ஜெமினியுடன் 17 படங்கள். 1955 இலிருந்து 65 வரை சினிமாவில் இவரது பொற்காலம். பெண் என்றால் பெண் என்பது இவரது நூறாவது படமாம். பத்மஸ்ரீ, பத்மபூஷண், வாழ்நாள் சாதனையாளர் விருது, என் டி ஆர் தேசிய விருது, ராஜ்குமார் தேசிய விருது, நாட்டிய கலாதர் விருது, ரோட்டரி சிவாஜி விருது, எம்ஜியார் விருது, கௌரவ டாக்டர் விருது, ராஜ்யோச்சவ் விருது, சினிமா எக்ஸ்பிரஸ், ஃபிலிம்ஃபேர் விருதுகள் என மொழி வாரியாக எண்ணற்ற விருதுகள் பெற்றவர்.
ஜப்லா ரவிக்கை, ரிங் கொண்டை, உயர்ந்த பன் கொண்டை, கொஞ்சல் மொழி, கழுத்தை ஒட்டிய நெக்லஸ், எம்ப்ராய்டரி புடவைகள், நட்டநடு நெற்றியில் நீள் கோபிப் பொட்டு, காதலில் உருகும், கோபத்தில் மிரட்டும், வெட்கத்தில் பட்டாம் பூச்சிகளாய்ப் படபடக்கும் கண்கள், மான்விழி, தேன் மொழி, கோவைப்பழ உதடுகள், கவர்ச்சிகரமான பருக்களோடு கூடிய கன்னம், கொடி போன்று மெலிந்தவர் சரோஜாதேவி. அன்பு, ஆக்ரோஷம், வருத்தம் எல்லாமே கொஞ்சலாய் வெளிப்படுவதே இவரின் நடிப்பின் அழகு.
கல்யாணப் பரிசில் ஆசையினாலே மனம் விரும்பிய ஜெமினியை தன் அக்காவும் விரும்ப அவருக்கே திருமணம் செய்து வைத்துப் பிரியும் சரோஜா தேவி தனிமையிலே இனிமை காண முடியுமா என்றும் உன்னைக் கண்டு நான் வாட என்றும் வருந்த முடிவில் ஜெமினி தனக்கும் இவரது அக்காவுக்கும் பிறந்த குழந்தையை இவரின் கல்யாணப் பரிசாக அளித்துச் செல்வார்.
காரைக்குடி இராமவிலாசில் கல்யாணியின் கணவன் என்னும் படம் பார்த்தோம். ”நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம். அதில் இரவும் பகலும் தூக்கமில்லை ஒரே சந்தோஷம்”.. என்று பிரம்மாண்டத் தொங்கட்டான்கள் அசைய இவர் பாட ”மனதில் ஒரு களங்கமில்லை ஒரே கொண்டாட்டம். அதில் மைவிழியாள் பாடுகின்றாள் காதல் வண்டாட்டம்” என்று சிவாஜி புகழ பார்க்கும் நமக்கு ஒரே குதூகலம்தான் போங்கள்.
இவர் நடித்து அருணோதயத்தில் இடம் பெற்ற முத்து பவளம் முக்கனிச் சர்க்கரை என்ற கண்ணதாசனின் பாடல் கோடி பெறும். அஹா மெல்ல நட மெல்ல நட என சிவாஜி பாட துடி இடை அசையப் பின்னழகு ஒசியப் புதிய பறவையாய் மிதப்பார். சிவாஜியும் சரோஜாதேவியும் இப்பாடலில் மகிழ்ச்சியில் மின்னுவார்கள். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்ற அதி அற்புதமான பாடல் காட்சியில் எம்ஜியாரும் சரோஜாதேவியும் ஓடாத ரதத்தில் கனவுலக ராஜா ராணியாகவே மிளிர்வார்கள்.
அரச கட்டளையில் வேட்டையாடு விளையாடு என்று அவர் தம் பரந்து விரிந்த கூந்தலால் வேட்டையாடுவதுடன் நம் உள்ளத்தை உண்மையான அறிவுரைகளால் நிரப்பி விடுவார். ஆடிவா என்று எம்ஜியார் பாட மேடையில் சண்டைக் காட்சிகளுக்கிடையே சரோஜாதேவி ஆடும் பரதநாட்டியம் வித்யாசம்.
குடும்பத் தலைவனில் கமலா என்று எம்ஜியார் தொட்டவுடன் ”ஏதோ ஏதோ ஒரு மயக்கம்” என்று அந்தத் தடாகத்தில் அவர் சுழலும் போது ”கண்ணை இழுத்து வளைச்சு என்னைப் பாரு” புரியும் என எம்ஜியாரும் உருகும்போது பார்க்கும் நமக்கும் ஒரு போதையான மயக்கம் உண்டாகும். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்பதெல்லாம் சின்னக் குடைபோல் விரியும் இமையும் விழியும் கொண்ட சரோஜாதேவியின் முகத்தில்தான் ரசிக்க முடியும்.
பாலும் பழமும் கைகளில் ஏந்தும் பதுமை. அதே சமயம் ஆலயமணியின் ஓசையைக் கேட்டு உன் இறைவன் அவனே அவனே என்னும் தாயின் மொழி கேட்பது பாந்தம். அதிலும் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்பது மொழி கடந்த என் தோழமைகளுக்கும் பிரியமான பாடல். கணவன் மனைவியின் பூர்வபந்தத்திற்கு மொழி வேண்டுமா என்ன? இப்படி இருப்பவர் தனக்குக் கான்சர் நோய் வந்ததால் கணவனைப் பிரிந்து சென்று குணமான பின் காதல் சிறகைக் காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா. கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா என்று ஏக்கம் ததும்பப் பாடும்போது எப்போது அவர்கள் சேருவார்களோ என்று நம்மையும் ஏங்கவைக்கும்.
மீனவர்களின் துயர வாழ்வையும் மீனவப் பெண்களின் பிரிவாற்றாமையையும் பாட்டுக்குப் பாட்டெடுத்து சித்தரிக்கும் படம் படகோட்டி. இதில் தொட்டால் பூ மலரும் எனக் கைகளை விதம் விதமாகத் தட்டிப் பாடுவார்கள் எம்ஜியாரும் சரோஜாதேவியும். கள்ளப் பணக் கும்பலால் கைதாகி சரோஜாதேவியிடம் அடைக்கலம் புகுவார் எம்ஜியார். இருவரும் பணத்தோட்டத்தில் ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு போதை மிக்கூரப் பாடுவது வித்யாசம்.
புதிய பறவையில் போலீஸ் அதிகாரியாக, பறக்கும் பாவையில் சர்க்கஸ் கலைஞராக, எங்க வீட்டுப் பிள்ளை, பெரிய இடத்துப் பெண்ணில் பணக்காரப் பெண்ணாகத் தத்ரூபமாக நடித்திருப்பார். சபாஷ் மீனா, பார்த்திபன் கனவு, அருணோதயம், தர்மம் தலை காக்கும், தாய் சொல்லைத் தட்டாதே, திருடாதே, நான் ஆணையிட்டால், பணக்காரக் குடும்பம், பாகப் பிரிவினை, பார்த்தால் பசி தீரும், பெற்றால்தான் பிள்ளையா, நீதிக்குப் பின் பாசம், குலமகள் ராதை,, கலங்கரை விளக்கம், அன்பே வாஎன எத்தனை முத்திரைப்
இலக்கியத்திற்காகத் தனது அக்கா மகள் புவனேஸ்வரியின் நினைவாக விருது ஒன்றை வழங்கி வந்தார் என்பது ஸ்பெஷல் தகவல். தன் அழகிய பெரிய கண்களைத் தானம் செய்து இறப்பிற்குப் பின்னும் இவ்வுலகைக் காண்கிறார் சரோஜாதேவி. அபிநயசரஸ்வதி சரோஜாதேவி பெயரில் விருது அறிவித்துள்ளது கர்நாடக அரசு. சமீபத்தில் மறைந்த அந்த அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளிக்கு நமது அஞ்சலிகளும்.
டிஸ்கி:- மணிமடல்களில் வாழ்த்திய வாசகர்கள் ராயவரம் முத்து ஆச்சிக்கும், தேவகோட்டை கண்ணன் அண்ணாமலைக்கும் நன்றி.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)