திங்கள், 15 டிசம்பர், 2025

சகலகலா வல்லவர் கமல்ஹாசன்

சகலகலா வல்லவர் கமல்ஹாசன்


ஜெர்மனியின் செந்தேன் மலரே, உன்ன விட, இஞ்சாருங்கோ, சுவாசமே, என்னோடு காதலென்று, ஒரே நாள் உனை நான், அந்திமழை பொழிகிறது, எங்கேயும் எப்போதும், சுந்தரி நீயும் சுந்தரன் நானும், இதழில் கதை எழுதும் நேரமிது, சிப்பி இருக்குது, மாயா மச்சீந்த்ரா, காதலா காதலா இன்னும் பல நூறு பாடல்கள் சகலகலா வல்லவனான கமல் நடிப்பில் நாங்கள் மயங்கிய பாடல்கள்.  

பிறந்தது நவம்பர் 7, 1954. மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவர். 4 தேசிய விருது, 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 19 ஃபிலிம்பேர் விருதுகள், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள், கலைமாமணி, செவாலியே, கௌரவ முனைவர் பட்டம், மேலும் உலகநாயகன், ஆஸ்கார் நாயகன் எனப் புகழப்படும் இவரைப் போத்தீஸ் சுவரிலும் பிக் பாஸ் வீட்டிலும் காணப் பிடிப்பதில்லை.

இராமநாதபுரம் பரமக்குடியில் பிறந்தவர். தந்தை ஸ்ரீனிவாசன். சகோதரர்கள் சாருஹாசன், சந்திரஹாசன். இவரது குடும்பத்தில் சாருஹாசனும், சுகாசினியும், அனுஹாசனும் கூட நடிகர்கள்தான். வாணி, சரிகா, கௌதமி வாழ்க்கைத் துணைஇணைகள், ஸ்ருதி, அக்‌ஷரா மகள்கள். 220 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

ஐந்துவயதில் நடிக்க வந்தார். 65 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் உள்ளார். களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம். 71 வயதிலும் தக் லைஃப், விக்ரம் என்று ஹீரோவாகக் கலக்குபவர். இவரது பெரும்பான்மையான படங்களைப் பார்த்திருப்போம் நாங்கள். நடிகர், இயக்குநர், திரைக்கதாசிரியர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். குருதிப் புனல், தூங்காவனம், பாபநாசம், அன்பே சிவம் இவர் நடிப்பில் நாங்கள் மிரண்ட படங்கள்.

உன்னால் முடியும் தம்பி, வறுமையின் நிறம் சிவப்பு, சத்யா புரட்சிகர இளைஞனைப் புடம்போட்ட படங்கள், மன்மதலீலை, அவள் ஒரு தொடர்கதை, அந்தரங்கம், அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், அவள் அப்படித்தான், அவர்கள்  ஆகியன உறவுச் சிக்கல்களையும் உணர்வுச் சிக்கல்களையும் சொல்லிய படங்கள். காதலா காதலா, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், தெனாலி எங்களின் எவர் ஃபேவரைட். சகலகலா வல்லவன் பக்கா கமர்ஷியல் படம்.

ஹாலிவுட் ஹீரோக்களைப் போன்ற அசத்தலான பர்சனாலிட்டி. கமலும் ஸ்ரீதேவியும் என்று பொருத்தமான ஜோடிகளை இயல் வாழ்வில் கூடப் பாராட்டுவார்கள். மன்மத லீலை, சொல்லத்தான் நினைக்கிறேனில் ப்ளேபாய் கேரக்டர்ஸ். ஜெமினி காதல் மன்னன் என்றாகி விட்டதால் பொள்ளாச்சியில் நடந்த ஒரு படத்துக்கான பாராட்டு விழாவில் இவருக்குக் காதல் இளவரசன் பட்டம் சூட்டப்பட்டது.

பரீட்சார்த்த முயற்சிகளில் மன்னன். தன்னைச் சிதைத்தும் நடிப்பில் அழகியலைக் கூட்டக் கூடியவர். அன்றைக்குப் புகழ்பெற்ற ஹீரோவான இவர் எந்தத் தயக்கமும் இல்லாமல் லங்கோடு அணிந்து நடித்த பதினாறு வயதினிலே இவருக்கு மட்டுமல்ல சினிமா உலகுக்கே திருப்புமுனையான படம். சிப்பிக்குள் முத்து, குணா, தெனாலியில் மனநிலை பிறழ்ந்த ஹீரோ. மரணதண்டனையை எதிர்க்கும் கருக்கொண்ட விருமாண்டி ரஷோமோன் எஃபக்ட் என்ற திரைக்கதை வழிப்படி எதிரெதிரான இருவரின் பார்வையில் விரியும் படம்.

இலங்கைத் தமிழர், கன்னடர் என்று யாரையாவது பகைத்துக்கொள்வதும், விருமாண்டி(சண்டியர்), வசூல்ராஜா எம் பி பி எஸ் என்று படப் பெயர்களினால் சர்ச்சையில் முக்குளிப்பதும் இவருக்குப் பிடித்தமான ஒன்று. பேச்சுத்தான் சினிமாவில் இவரது பலமும் பொதுவெளியில் பலவீனமும்.


நினைத்தாலே இனிக்கும், ஷிம்லா ஸ்பெஷல், எனக்குள் ஒருவன் என ஆரம்பப் படங்களில் இவரது நடனங்கள் சிறப்பானவை. இந்தியனில் மைக்கேல் ஜாக்ஸனின் ரிமெம்பர் த டைம் பாதிப்பில் சில நடனங்களும் காட்சிகளும் உண்டு. கமல், சங்கர், சுஜாதா வெற்றி பெற்ற சிறப்புக் கூட்டணி.

மிஸஸ் டவுட்ஃபையர் என்ற ஆங்கிலப் படத்தின் பாதிப்பே அவ்வை ஷண்முகி என்றாலும் கமலின் நடிப்பு அபாரம். கல்யாணம் கச்சேரி என்ற பாடல் இரு படங்களில் (சொல்லத்தான் நினைக்கிறேன் 1973, அவ்வை ஷண்முகி 1996 ) இருவிதமாகக் கையாளப் பட்டிருக்கும்.  

சக ஹீரோயின்களைத் தன் நடிப்பினால் அடுத்து அவர்கள் நடிக்க வேண்டும் என்பதையே மறக்கச் செய்துவிடுவார். இதைப் பல பேட்டிகளில் ரேவதி, ஊர்வசி ஆகியோர் கூறி இருக்கிறார்கள். சொல்லப் போனால் இவர் ஒரு முத்த ஸ்பெஷலிஸ்டும் கூட என்றும் கூறி இருக்கிறார்கள்.  

பத்துவித கெட்டப்பில் தசாவதாரம், விடுதலைப் புரட்சியைப் பற்றிய ஹே ராம், தீவிரவாதத்தைப் பேசிய விஸ்வரூபம் ஆகியன மிக நீண்டு பொறுமையைச் சோதித்த படங்கள். அபாரத் திறமையும் அளவுக்கதிகமான கதைகளும் ரசிகர்களை விரட்டிவிடும் அபாயம் கொண்டவை. இவை டிவி தொடர்கள் போல நீண்டு செல்வதால் மையப்புள்ளியை விட்டுக் கதை எங்கோ பட்டம்போல் பறந்துவிடும். இவர் படங்களில் எனக்குப் பிடிக்கவே பிடிக்காத ஒரே படம் சொந்தச் சகோதரனையே கொல்ல வந்த ஆளவந்தான்.

தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகியவற்றிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மூலம் பட படங்கள் தயாரித்துள்ளார். பல படங்களில் இவரது காமெடி சென்ஸ் நகைச்சுவை நடிகர்களையும் ஓவர்டேக் செய்துவிடும். ஈவினிங் சிக்னெஸ், பர்த்ருஹரி என எண்ணற்ற, எல்லையற்ற விஷயங்கள் பேசக்கூடிய அறிவுஜீவி.

நூல்வேலி, தில்லு முல்லு, நள தமயந்தி, மகளிர் மட்டுமில் கௌரவத் தோற்றம். குறத்தி மகன், அல்லாவுதீனும் அற்புத விளக்கும், மீண்டும் கோகிலா, தப்புத் தாளங்கள், மகராசன், உல்லாசப் பறவைகள், விக்ரம், கடல் மீன்கள், டிக் டிக் டிக், சிம்லா ஸ்பெஷல், உருவங்கள் மாறலாம், தூங்காதே தம்பி தூங்காதே, உயர்ந்த உள்ளம், சூரசம்ஹாரம், வெற்றி விழா, சிங்கார வேலன், கலைஞன், பார்த்தாலே பரவசம், மும்பை எக்ஸ்ப்ரஸ், உத்தம வில்லன், மன்மதன் அம்பு, வேட்டையாடு விளையாடு எனப் பல படங்கள். எதை விவரிக்க, எதை விட எனத் திகைப்பேற்படுத்துகின்றன.

கண்ணற்ற காதலராக ராஜபார்வை, உயிர்துறக்கும் காதலனாக வாழ்வே மாயம், அன்பான காதலனாக மூன்று முடிச்சு, ஏக் துஜேகேலியே, குரு, காதல் பரிசு, புன்னகை மன்னன், காதல் பரிசு, இளமை ஊஞ்சலாடுகிறது, அபாயமான காதலனாக சிகப்பு ரோஜாக்கள், அட்டகாசமான காதலனாக நிழல் நிஜமாகிறது, மனநிலை வளராத காதலனாக கல்யாணராமன், ப்ளேட்டானிக் லவ்வைச் சித்தரிக்கும் அழியாத கோலங்கள், முன்னாள் காதலியின் மகளை வழிப்படுத்தும் சலங்கை ஒலி, காமெடி நடிகையான கோவை சரளாவை ஜோடியாகக் கொண்ட சதி லீலாவதி நால்வகைக் காதல்களைச் சித்தரிக்கும் மைக்கேல் மதனகாமராஜன் என்று இவரது காதலிலும் பன்முகத் தோற்றங்கள்.

கம்பீரமான தேவர் மகன், இரட்டை வேடத்தில் அபூர்வ சகோதரர்கள், நல்லாசிரியராகவும் நல்ல மனிதராகவும் மூன்றாம் பிறை, கோட்பாடுகளையும் வேதாந்தங்களையும் சித்தாந்தங்களையும் பேசினாலும் முடிவில் அன்பே சிவம் என்று கூறும் தொழிற்சங்கவாதி, நேர்மையான போலீஸ் அதிகாரிகளாக கைதியின் டைரி, காக்கிச் சட்டை, உரையாடலே இல்லாத பேசும்படம், மாணவனை நெறிப்படும் நம்மவர், பெற்ற மகளைப் பாலியல் கூடத்திலிருந்து மீட்கும் அவலத் தகப்பனாக மஹாநதி, இணையத்தின் மூலம் மகளுக்கு இன்னல் ஏற்படுத்தியவனை அடையாளம் இல்லாமல் அழித்த பாபநாசம் என எத்தனை பரிமாணங்கள்!

மருதநாயகம் இவர் நடிப்பில் நாங்கள் காண நினைத்த படம். இவரோடு நடித்த ஹீரோயின்களுக்கு எல்லாம் கெமிஸ்ட்ரி பிஸிக்ஸ் மட்டுமல்ல அனாடமியும் காதல் காதல் என்றே ஒத்துழைக்கும். என் கணவருக்கும் எனக்கும் எப்போது மனஸ்தாபம் வந்தாலும் டிவியைத் தட்டும்போது கமல் படக் காட்சிகள் வந்தால் எல்லாவற்றையும் மறந்து சிரித்து விடுவோம். இதையே என் தோழிகள் பலரும் வழிமொழிந்திருக்கிறார்கள். 42 ஆண்டுகளுக்கும் மேலாக இவரது புத்தாண்டு வாழ்த்துக்களோடுதான் உலகமே விடிகிறது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகலகலா வல்லவரே கமல்ஜி. இந்தச் சினிமா உலகில் எங்களுக்கு உங்களை விடச் சிறப்பானவர் எவருமே இல்லை.


 

டிஸ்கி:- வாசகர்கள் கடிதத்துக்கும், என் நூல் கொலோன் பல்கலையில் இடம் பெற்றிருப்பதும் முதல்வர் வருகையின்போது வழங்கப்பட்டது குறித்தும் செய்தி வெளியிட்டு இருப்பதற்கு தனவணிகனுக்கு நன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)