புதன், 2 ஜூலை, 2025

பிரலம்பாசுரனுக்கு முக்தி அளித்த பலதேவர்

பிரலம்பாசுரனுக்கு முக்தி அளித்த பலதேவர்


தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையினால் தனக்கு அழிவு ஏற்படும் என்பதை அசரீரி கூறக் கேட்ட கம்சன் ஒவ்வொரு நாளும் கோகுலத்துக்குக் கிருஷ்ணரை அழிக்கப் பூதனா, சகாட்சுரா, பகாசுரா என்று அரக்கர்களை அனுப்பிக் கொண்டிருந்தான். இவர்களை எல்லாம் குழந்தை கிருஷ்ணர் அழித்ததால் அடுத்துப் பிரலம்பாசுரன் என்பவனை அனுப்பினான். இவனிடமிருந்தும் குழந்தைக் கிருஷ்ணரும், பலராமரும் எப்படித் தப்பினர் என்பதைப் பார்ப்போம்.

யமுனை நதிக்கரையில் பாண்டீரவனம் என்றொரு வனம் இருந்தது. ஆநிரைகளின் மேய்ச்சலுக்கு உகந்த இடம் பசும்புற்களும், சுனைப் புற்களும், நிரம்பிய இடம் அது.  மேலும் குழந்தைகள் எல்லாம் ஊஞ்சலாடி மகிழ ஆலம் விழுதுகளும் கைகோர்த்துக் காட்சி அளிக்கும். ஆயர்பாடிச் சிறுவர்களுக்குப் பிடித்த அற்புத வனம் அது.


அங்கே பலதேவரும் கிருஷ்ணரும் ஆயர்பாடிச் சிறுவர்களான இளம் கோபர்களுடன் பச்சைக் குதிரை தாண்டுதல், குதிரை ஏறுதல் போன்ற விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே ஒரு புதிய சிறுவன் வந்தான். பார்ப்பதற்கு ஆயர்பாடிச் சிறுவன் போலத் தோன்றினாலும் கிருஷ்ணருக்கு அவனைப் பார்த்ததும் அவன் கம்சன் அனுப்பிய அரக்கனின் அம்சம் என்பது புரிந்து விட்டது.

இந்த அரக்கனுக்கு ஒரு முற்கதை உண்டு. அவன் ஹூஹூ என்னும் கந்தர்வனின் மகன் விஜயன். ஒரு முறை குபேரன் சிவபூஜை செய்யத் தன்னுடைய நந்தவனத்தில் அபூர்வ மலர்ச் செடிகளை நட்டு வைத்திருந்தான். அந்த அபூர்வ மலர்களுக்குப் பலத்த காவல் போட்டும் அவை திருடு போய்க் கொண்டிருந்தன. இதனால் கோபமுற்ற குபேரன் “என் தோட்டத்தில் இந்த அபூர்வ மலர்களைத் திருடுபவர்கள் யாராக இருந்தாலும், அவன் மனிதனோ, யக்ஷனோ, தேவனோ, கந்தர்வனோ எப்பேர்ப்பட்டவனாக இருந்தாலும் பூமியில் அசுரனாகப் பிறக்கக் கடவான்” என்று சாபமிட்டிருந்தான்.

இதை எல்லாம் அறியாத விஜயன் தன் வீணையில் இனிய இசையை மீட்டி, விஷ்ணுவின் புகழைப் பாடிப் பரவியபடி இந்த அபூர்வ வனத்துக்கு வந்து சேர்ந்தான். அவனுக்குக் குபேரனின் சாபம் பற்றி ஏதும் தெரியாது. பூக்களின் நறுமணத்திலும் அழகிலும் மயங்கிய அவன் அங்கிருந்த சில பூக்களைப் பறித்ததுதான் தாமதம், அழகிய கந்தர்வன் உருவம் மறைந்து அசுர உருவம் பெற்றான்.


திடுக்கிட்ட அவன் அந்தத் தோட்டத்துக்கு உரிமையாளனான குபேரனைக் கண்டு சரணடைந்து வணங்கி சாபத்திலிருந்து விடுவிக்க வேண்டினான். அதற்குக் குபேரன், ”விஷ்ணு பக்தனான உனக்குக் காலம் கனியும் போது அவரது திருக்கரத்தாலேயே சாப விமோசனம் கிட்டும்” என்று வரமளித்தான். அந்த கந்தர்வந்தான் பிரலம்பாசுரனாகக் கம்சனின் ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பாண்டீர வனத்துக்கு ஆயர்பாடிச் சிறுவன் உருவில் வந்திருந்தான்.

”நானும் உங்களோடு விளையாடலாமா” என்று அவன் வினயமாகக் கேட்டதும் கிருஷ்ணரும் ஒப்புக் கொண்டு “நாம் இப்போது அணி பிரித்து விளையாடுவோம்.” என்றார். கிருஷ்ணர் தலைமையில் ஒரு அணி என்றும் பலராமர் தலைமையில் இன்னொரு அணி என்றும் முடிவானது. கிருஷ்ணரின் அணியில் பத்ரசேனர், புதிதாக வந்த சிறுவன் ஆகியோர் இருக்க பலராமர் அணியில் ஸ்ரீ தாமனும் விருஷபனும் சேர்ந்து கொண்டார்கள்.

போட்டி இதுதான் இரு அணியும் யுத்தம் செய்யவேண்டும். போட்டியில் தோற்கும் அணியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்ற அணியில் உள்ளவர்களைத் தம் முதுகில் குறிப்பிட்ட தூரம் வரை சுமந்து சென்று இறக்கிவிட வேண்டும். இரு அணியினரும் ஒப்புக் கொண்டு யுத்தத்தைத் தொடங்கினார்கள். ஒருபக்கம் பசுக்கள் அவைபாடு மேய்ந்து கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் விளையாட்டு மும்முரத்தில் பாண்டீரவனம் காடு அல்லோலகல்லோலப் பட்டது.

ஒருவழியாக ஸ்ரீ தாமனும், விருஷபனும் இருந்த பலராமரின் அணி வெற்றி பெற்றது. தோல்வியுற்ற கிருஷ்ணரின் அணி அவர்களைச் சுமக்க வேண்டியதாயிற்று. ஸ்ரீ தாமனை கிருஷ்ணரும், விருஷபனைப் பத்ரசேனரும் சுமந்து செல்லத் தொடங்கினார்கள். இதேபோல் புதிதாக வந்த ஆயர்குலச் சிறுவன் தன் முதுகில் பலராமரைச் சுமந்து செல்லத்  தொடங்கினான்.

கிருஷ்ணரும், பத்ரசேனரும் குறிப்பிட்ட தூரம் வந்ததும் ஸ்ரீ தாமனையும், விருஷபனையும் இறக்கி விட புதிதாக வந்த சிறுவனோ பலராமரைச் சுமந்து கொண்டு பாண்டீரவனத்தினூடே யமுனை நதிக்கரை வரை வெகுதூரம் சென்றான். அவனுடைய நோக்கம் என்னவோ பலசாலியான கிருஷ்ணரை விட்டு விலகி பலராமரை மதுராவுக்குத் தூக்கிக் கொண்டு போவது போலிருந்தது.


கிருஷ்ணரின் கண்ணை விட்டு மறைந்து சிறிது தூரம் செல்லச் செல்ல அச்சிறுவன் திடீரெனக் கருமேகம் போல் உருவம் பெருத்துப் பயங்கர அசுர உருவம் எடுத்தான். அவன் கண்கள் நெருப்பாய் மின்னக், கூரிய பற்களும் வெளிப்பட்டன. இதைக் கண்ட பலராமர் சில கணங்கள் வியப்பெய்தினார். அரக்கனின் நோக்கம் அறிந்திருந்தாலும் தன் அண்ணன் பலராமர் அவனிடமிருந்து எப்படியும் தப்பிவிடுவார் என்பதை உணர்ந்திருந்தார் கிருஷ்ணர்.

அதேபோல் கருமேகம் போல் ஓடிய அந்த அரக்கனின் முதுகில் அமர்ந்திருந்த பலராமரின் பாரம் அதிகமானது. அவன் திணற ஆரம்பித்தான். பலராமரின் காதுகளில் இருந்த குண்டலங்கள் அந்த மேகத்தைக் கீறிய மின்னல்கள் போல் ஒளிவிட்டன. நடக்கத் திணறிய அவனின் தலையில் இந்திரனின் வஜ்ராயுதம் போல் தன் முஷ்டியை மடக்கி ஓங்கி ஒரு அடி கொடுத்தார் பலராமர். மலை உடைவது போல் அவன் தலை உடைந்து கீழே விழ அவனது உடலிலிருந்து ஒரு ஒளி பிரிந்து பலதேவரோடு ஐக்கியமானது.

விஷ்ணு பக்தனான அவன் விஷ்ணுவின் அம்சமான பலதேவரோடு இரண்டறக் கலந்து மோட்சத்தை அடைந்து முக்தி பெற்றான். பலராமர் மீது தேவர்கள் மலர் தூவி ஆசீர்வதித்தனர். இவ்வாறு கம்சன் அனுப்பிய ஒவ்வொரு அசுரர்களிடமிருந்தும் ஆயர்பாடிச் சிறுவர்களான பலதேவரும் கிருஷ்ணரும் தம் அபரிமிதமான தெய்வ பலத்தால் தப்பினர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)