புதன், 13 நவம்பர், 2024

புத்திர தோஷம் நீங்கப் பெற்ற மாண்டவ்ய புத்திரர்கள்

புத்திர தோஷம் நீங்கப் பெற்ற மாண்டவ்ய புத்திரர்கள்


அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது என்றாள் ஔவைப் பிராட்டி. இப்பூவுலகில் ஒருவனுக்கு அப்படிப்பட்ட அரிய மனிதப் பிறப்புக் கிடைப்பதே பெற்றோரால்தான். அப்படிப்பட்ட உத்தமப் பெற்றோரை மதியாது மதிகெட்டு வாழ்ந்து பின் வீழ்ந்தவர்கள் சிலர் உண்டு. தம் பெற்றோரை மதியாதவருக்குப் பிள்ளைப் பாக்கியமும் கிட்டுவதில்லை. அப்படி வீழ்ந்த சிலர் அதிலிருந்து எப்படி யாரால் மீண்டார்கள் என்பதைப் பார்ப்போம்.

கோதாவிரி நதி பாயும் அழகிய ஆரண்யம் அது. சம்பகவனம் என்று பெயர். பெயருக்கேற்றாற்போல் சண்பக மலர்கள் பூத்துக் குலுங்கி மணம் வீசிக் கொண்டிருந்தது வனமெங்கும். அந்த ஆரண்யத்தில் ஒரு பர்ணசாலையில் கர்மாண்டன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது மகன் மாண்டவ்யன். மாண்டவ்யனின் மனைவி பெயர் ஹேமாவதி.

காலாகாலத்தில் மாண்டவ்யனுக்கும் ஹேமாவதிக்கும் ஒன்றல்ல இரண்டல்ல ஆறு புத்திரர்கள் அடுத்தடுத்துப் பிறந்தார்கள். வீதி ஹோத்ரன், யக்ஞஹேது, மதுஷ்யந்தன், வேதஹேது, பர்ணாதன், உதங்கன் என்பது அவர்களின் பெயர்கள். தாய் தந்தை இருவரும் இவர்களைப் பாராட்டிச் சீராட்டித்தான் வளர்த்தார்கள். உரிய பருவத்தில் தகுந்த கன்னிகைகளுடன் திருமணமும் செய்து வைத்தார்கள்.

திருமணம் ஆனதாலோ, இயல்பான அசட்டையாலோ இவர்கள் அறுவருமே பெற்றோரைப் புரந்து வருவதில் அக்கறை காட்டவில்லை. உலக வழக்கைப் புரிந்திருந்த மாண்டவ்யர் தம் மனைவியுடன் தனித்து வசித்து வந்தார். சிலகாலம் கழித்து அவர் மாண்டபின் ஹேமாவதி தன் பிள்ளைகளுடன் தங்க வந்தார். தாங்கள் போற்றிப் பாதுகாத்த புதல்வர்கள் தன்னைக் காப்பார்கள் என மிக உறுதியாக அவர் நம்பினார். ஆனால் அவர் நம்பிக்கை பொய்த்தது.


தாயாரைச் சுமையாகக் கருதிய பிள்ளைகள் ஒருவர் மாற்றி ஒருவர் தம் பொறுப்பைத் தட்டிக் கழித்தனர். மனம் சோர்ந்தார் ஹேமாவதி. ஊணுறக்கம் இல்லாமல் மெலிந்தார். பெற்றதாயைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை பிள்ளைகள். இவ்வாறு கைவிடப்பட்டதால் மனம் வருந்தி தனித்து நோயுற்றுக் கிடந்த தாய் ஹேமாவதி ஒருநாள் மரித்துப் போனார். அப்போதும் பதறிக்கொண்டு ஓடவில்லை அவர்கள்.

ஆனால் பத்துமாதம் சுமந்து பெற்ற தாயின் தீரா வருத்தம் சும்மாவா போகும்?  அவர்களுக்கு மாதாவைக் கொன்ற மாத்ருஹத்தி தோஷத்தைக் கொண்டு வந்தது. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே பாலாரிஷ்டம் வந்தது போல் அடுத்தடுத்து மரித்துப் போயினர். அறுவரின் இல்லத்திலும் அப்படி நிகழ்வது தொடர்ந்ததால் திகைத்துப் போயினர் மாண்டவ்ய சகோதரர்கள். என்ன செய்வது, ஏன் இப்படி நிகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை அவர்களால்.

இவ்வாறு நிகழாமல் தடுப்பது எப்படி என்பதைக் கேட்டு அவர்கள் கௌதம முனிவரைச் சரணடைந்தார்கள். அவர் கூறினார்,”உங்கள் தாயார் ஹேமாவதியை நீங்கள் ஆதரிக்காமல் புறக்கணித்ததன் காரணமாக அவர் மரணம்டைந்ததால்தான் இவ்வாறு மாத்ரு ஹத்தி தோஷம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரே பரிகாரம் பலாசவனத்தில் எழுந்தருளி இருக்கும் ஈசனைப் பூசித்து வருவதுதான்” என்றார்.

மேலும்,”அங்கே ஒருநாள் செய்யப்படும் யாகம் ஆயிரம் சத்ரயாகங்கள் செய்வதற்கு ஒப்பாகும். அங்குள்ள காவிரியில் நீராடினால் கங்கையில் பன்னிரெண்டு ஆண்டுகள் நீராடிய பலன் கிட்டும். இங்கே முன்னோர்களுக்காகச் செய்யப்படும் நீத்தார் கர்மங்கள் காசியில் செய்வதற்கு ஈடாகும்’ என்று கூறினார்.

அவர்கள் உடனே பாவத்தைப் போக்க வல்ல பலாசவனம் எனப்படும் கஞ்சனூரை அடைந்தார்கள். அங்கே உத்தர வாஹிணி என்னும் காவிரி நதி தெற்கிலிருந்து வடக்காகப் பாய்ந்து செழுமை அளித்துக் கொண்டிருந்தது. அறுவரும் மெய்குளிர, மனம் நடுங்கக் காவிரியில் நீராடி எழுந்தார்கள். தம் தாயாரான ஹேமவதியை அவரது முதுமைக் காலத்தில் கவனிக்காததை நினைத்து வருந்தி ஈமச்சடங்குகளைச் செய்தார்கள். 

அடுத்துக் கற்பகாம்பாள் சமேத அக்னீசப்பெருமானின் சந்நிதிக்குச் சென்று மனம், மெய் உருகப் பிரார்த்தனை செய்து பூசித்தார்கள். தினம் தினம் அவர்கள் அறுவரும் பூசனை செய்வதைக் கண்ட ஈசன் மனம் இரங்கினார். ஒரு மாசி மாத்தின் மக நட்சத்திர நாளில் இறைவன் திருக்காட்சி தந்து அவர்களின் பாவங்களைப் போக்கி அருள் பாலித்தார். அவர்கள் அறுவரும் இறைவா! எங்களின் புத்திர சோகத்தையும் நீக்கி அருள வேண்டும்” என்று வேண்டினார்கள். 

அவர்களின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்த அக்னீசப் பெருமான் “உத்தர நட்சத்திரத்தன்று காவிரியில் நீராடி திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை ஆகிய ஆறுதலங்களிலும் வழிபட்டு அர்த்தசாம பூசையில் இங்கே பலாசவனத்தில் எம்மையும் வழிபட்டால் புத்திரதோஷம் நீங்கும்” என்று வரமளித்தார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த மாண்டவ்ய புத்திரர்கள் சப்த ஸ்தலங்களிலும் உத்தர நட்சத்திர நாளன்று வழிபாடு செய்து சந்தான சௌபாக்கியம் பெற்றார்கள். பெற்றோரைக் கவனிக்காதவர்களுக்குப் பிள்ளைகள் தங்காமல் போனதும் பின் தவறுணர்ந்து திருந்தியதும் இறையருளால் புத்திரப் பாக்கியம் கிடைத்ததும் ஒரு விசித்திரமான படிப்பினைதானே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)