வெள்ளி, 1 நவம்பர், 2024

மூடு பனி ஷோபா

 மூடு பனி  ஷோபா


என் இனிய பொன் நிலாவே, செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல், ஏதோ நினைவுகள் கனவுகள், பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம், பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து, அடிப் பெண்ணே பொன்னூஞ்சலாடும் இளமை என்ற பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் பதின் பருவத்தில் மறைந்த எளிமையும் அழகும் நிறைந்த ஷோபா மனதுக்குள் நிழலாடுவார்.

பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம். அறியாமையில் அதே சமயம் முதிர்ச்சியிலும் மின்னும் கண்கள். நடுவில் லேசாய் மடிந்த கவர்ச்சிகரமான உதடுகள். பாலு மகேந்திராவின் நாயகிகள் மாதிரி அலை அலையான சுருட்டைக் கூந்தல். மெல்லிய ஆனால் திண்ணியமான உருவம், கண்களைச் சுருக்குவதிலாகட்டும், உதட்டைக் குவித்துப் புன்முறுவல் செய்வதிலாகட்டும் எதையும் அலட்சியமாகக் கையாளும் சோபனையான பாவனையோடு அநாயாசமாகக் கடந்து விடும் அவரது நடிப்பு..  

இவர் பெயர் மஹாலெக்ஷ்மி. செப்டம்பர் 23 1962இல் பிறந்தார். தந்தை கே.பி.மேனன், தாய் பிரேமா. தாயும் மலையாள சினிமா நடிகைதான். 1964 இல் குழந்தைக் கலைஞராக மலையாளத்தில் அறிமுகம். தமிழிலும் 1966 இல் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தில் பேபி மகாலெக்ஷ்மியாக அறிமுகமானார். அடுத்தடுத்துப் புன்னகை, வைரம், நாணல். இருகோடுகள் ஆகியவற்றிலும் நடித்தார்.

பதினெட்டு வயது வரையே வாழ்ந்த இவர் மலையாளத்தில் கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட படங்களும் தமிழில் 23 படங்களும் தெலுங்கு கன்னடத்தில் ஓரிரு படங்களும் நடித்துள்ளார். பந்தனம், எண்டே நீலாகாஷம், ஓர்மைகள் மரிக்குமோ என்ற படங்களுக்காக மூன்று முறை கேரள மாநிலத் திரைப்பட விருதுகளும், கன்னட தமிழ்ப் படங்களுக்காக இரண்டு தென்னக ஃபிலிம்ஃபேர் விருதுகளும், பசி படத்துக்காகத் தேசியத் திரைப்பட விருதும் பெற்றுள்ளது இவரது நடிப்புத் திறமையின் சான்று.

1965 இல் 3 வயதில் ஜீவித யாத்திராவில் குழந்தை நட்சத்திரம். 1978 இல் உத்ராடா ராத்திரியில் கதாநாயகியாக அறிமுகம். அதே கால கட்டத்தில்தான் பசி, முள்ளும் மலரும், நிழல் நிஜமாகிறது, அழியாத கோலங்கள், மூடுபனியில் நடித்தார். அர்ச்சனா, மௌனிகாவை விட ஷோபனா பாலு மகேந்திராவின் இயக்கத்தில் பூரணத்துவம் பொலிந்தவர், பதின் பருவத்திலேயே அவரின் மனைவியும் ஆனவர்.  

அவர் நடித்தார் என்பதை விட அந்தந்தக் கேரக்டர்களுக்குப் பொருத்தமாக இருந்தார் என்பதே அதன் சிறப்பு. குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே இவரது நடிப்புப் பலரது கவனத்தையும்  கவர்ந்தது, மேலும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரத்துக்கான விருதும் பெற்றுள்ளார்.

1983 இல் வெளியான லேகாயுடே மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக், இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு டைரக்டர் கே. ஜி. ஜார்ஜ் எடுத்த படம். ஒரு நடிகனின் வாழ்வை விட ஒரு நடிகையின் வாழ்வு எவ்வளவு அவதிகள், வலிகள், அவமானங்கள் மிகுந்தது என்பதை இந்தப் படம் மிக நன்றாகவே காட்டி இருந்தது. பொது மகளிர் போல் திரைத்துறைக்கு உள்ளேயும் வெளியேயும் பணம் ஒன்றே குறிக்கோளாய் வைத்து நடத்தப்படும் விளையாட்டில் அவர்கள் பகடைக் காய்கள்.

சில நடிகைகள் பரமபதத்தை, அதாவது தனக்கான கௌரவமான இடத்தை எட்டு முன்னே தம்மைச் சுற்றும் பிரச்சனைகளாலும்  மனிதர்களாலும் பாம்புக் கடிபட்டு மீளமுடியாமல் வீழ்ந்து மரிக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்தது இவர் வாழ்வும். மோனல், ஃபடாஃபட் போல ஷோபாவும் மூடுபனியாய்த் தன்னை மூழ்கடித்த பிரச்சனைகளில் இருந்து மீளமுடியாமல் தன்னையே அழித்துக் கொண்டார்.


அச்சாணி, ஏணிப்படிகள், வீட்டுக்கு வீடு வாசப்படி, ஒரு விடுகதை, ஒரு தொடர்கதை, வேலி தாண்டிய வெள்ளாடு, பொன்னகரம், சாமந்திப்பூ, மயில், வாடகை வீடு, அன்புள்ள அத்தான் ஆகியவற்றில் நடித்துள்ளார். இவர் நடித்த நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், சக்களத்தி, அகல் விளக்கு, பசி, மூடு பனி ஆகியவை எனக்குப் பிடித்த படங்கள்.

பிரபல இயக்குநர்களான கே.பாலசந்தர், மகேந்திரன், பாலு மகேந்திரா, துரை ஆகியோரின் இயக்கத்தில் முத்திரை பதித்தவர். பசி படத்தில் ஒரு காட்சியில் விளையாட்டுத்தனமாக இவர் தனது கிழிந்த முந்தானையின் ஓட்டை வழியாக உலகைப் பார்ப்பது வாழ்வின் அவலம். பசியின் கொடுமையால் ட்ரக் ட்ரைவர் விஜயனிடம் பிரியாணிக்காகச் சோரம் போகும் குப்பம்மா கதாபாத்திரம். கீழ்த்தட்டு மக்களின் ஏழ்மை நிலையைச் சித்தரித்த படம். உணவின் தேடலுக்காக இவர் அழுக்கடைந்த உடையுடன் பேப்பர் பொறுக்கிச் செல்வது இழிவரல் தோன்றவைக்கும். வெகு சாமான்ய மக்களின் யதார்த்த வாழ்வைப் பிரதிபலித்த இப்படத்தில் தன் நடிப்புக்காக இவர் ஊர்வசி விருது பெற்றது சிறப்பே.

நிழல் நிஜமாகிறதுவில் சுமித்ராவின் வீட்டு வேலைக்காரியாகப் பாத்திரம். சுமித்ராவின் அண்ணன் சரத்பாபு இவருடன் உறவு கொண்டு ஏமாற்றிவிட அவரின் குழந்தையைச் சுமக்கும் இவரை அங்கேயே வேலை செய்யும் அனுமந்து ஏற்றுக் கொள்வது நல்ல முடிவு. மனைவிக்காகக் குடிசையைப் புதிதாக முடையும் அனுமந்துவை இவர் கன்னத்தில் கைவைத்துக் குழந்தையாய் அப்பிராணிச் சிரிப்போடு பார்ப்பதும் அழகு.

தன் அண்ணன் காளியின் மேல் வைத்த பாசத்தினால் இன்ஜினியர் சரத்பாபுவுடன் நடக்க விருக்கும் திருமணத்தை விடுத்துத் திரும்ப ஓடிவந்து அண்ணனை அணைத்துக் கொள்ளும் பாசக்காரத் தங்கை வள்ளி முள்ளும் மலரும் படத்தில். அவர் கதறி அழும்போது நம் மனமும் நெகிழ்வது இயல்பு. இப்படத்தில் அடிப்பெண்ணே, செந்தாழம் பூவில் பாடல்கள் ஷோபாவின் நடிப்போடு இயற்கை எழிலையும் வாரி இறைத்திருக்கும்.

கணவனுடன் கோபமாயிருக்கும் நேரம் தன் கணவன் மார்பில் தான் வைப்பது போன்ற வயலட் நிறக் குங்குமம் ஒட்டியிருப்பதைக் கண்டு அவரைச் சந்தேகப்படும் மனைவி கேரக்டர் சக்களத்திப் படத்தில். வீட்டுக்கு வெளியில் ”வாடை வாட்டுது” என்று சுதாகர் ஏக்கத்துடன் பாட, கோழி முட்டக் கோழி அதப் புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி என ஒய்.விஜயாவும், ஷோபாவும் ஆடும் கிராமத்து ஆட்டம் செழுமை. “சின்னச் சின்னப் பாத்தி கட்டி சீரகச்சம்பா நாத்து நட்டேன். நா நட்ட நாத்துக்கு நானே சொந்தம்” எனத் துணியை வெளுப்பதுபோல் தன் சக்களத்தி என நினைத்து ஒய்.விஜயாவை வெளுப்பது நகைச்சுவை.

மூன்று வளரிளம் பருவ மாணவர்களின் ஆசிரியை இந்துமதியாக அழியாத கோலங்கள் படத்தில் நடித்திருப்பார். இதில் பிரதாப்புடன் பாடும் பூவண்ணத்தில் மிளிரும் அழகுடன் ஜொலிப்பார். டீச்சர் மேல் அந்த இளைஞர்களின் ஒருவரான கௌரி சங்கருக்கு ஏற்படும் ப்ளேடானிக் லவ்/பப்பி லவ்/இன்ஃபாக்‌ஷுவேஷன்தான் அழியாத கோலங்கள்.

பொன் ஏணிப்படிகளில் தன்னை ஏற்றி நடிகையாக்கிய சிவக்குமாருடன் மிகப் பெரிய பொட்டுடனும் தலை நிறையப் பூவுடனும் ”பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து” எனப் பாடுவது பாந்தம். அகல்விளக்கு படத்தில் “ஏதோ நினைவுகள், கனவுகள் மனதிலே மலருதே” என்று விஜய்காந்துடன் மஞ்சள் பூங்கொத்துப் போல் அவர் பொலிவது அற்புதம்.

மூடுபனிதான் அவர் நடித்த படங்களிலேயே முத்தாய்ப்பான படம். புடவையைப் போலவே ஃபேஷன் உடைகளும் அவருக்கு அதி அழகைக் கொடுக்கும். சிறுவயதில் தந்தை மூலம் தாய்க்கு நேர்ந்த கொடுமையைப் பார்த்த பிரதாப் போத்தன் மனச்சிதைவு நோய்க்கு ஆளாகி ஷோபாவைக் கடத்தித் திருமணம் செய்து வாழ நினைக்கும் கதை. இதில் ஷோபாவின் நடிப்பும் பிரதாப் போத்தனின் நடிப்புமே எக்ஸலண்ட். தாயின் எலும்புக்கூட்டைப் பராமரிக்கும் பிரதாப்பிடம் இருந்து தப்பிக்கும் அவர் அதே ஆண்டில் காலனின் கொடுமுடிச்சில் சிக்கியது வருத்தம். இந்த செப்டம்பருக்கு இருந்திருந்தால் 62 இல் பிறந்த அவருக்கு 62 வயது ஆகியிருக்கும். இருந்தாலும் என் இனிய பொன் நிலாவே என்று இன்றைக்கும் பிரதாப்புடன் சேர்ந்து ரசிகர்களும் அவரது நினைவைக் கொண்டாடத்தான் செய்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)