சனி, 16 நவம்பர், 2024

12.திருவடித் தீர்த்தம் பெற்றுய்ந்த தொண்டரடிப்பொடியார்

12.திருவடித் தீர்த்தம் பெற்றுய்ந்த தொண்டரடிப்பொடியார்


திருப்பள்ளி எழுச்சி பாடித் திருவரங்கத் திருமாலைத் துயிலெழுப்பியவர்தான்.  திருஅரங்கனைப் போலத் திருவரங்கத்தை மட்டுமே பாடியவர்தான். ஆனால் பத்தினி ஆழ்வாரென்று போற்றப்பட்ட இவரும் வாழ்க்கையின் மாயையில் வீழ்ந்து அதன் பின் திருமகளின் கருணையால் மீண்டு எழுந்து அடியார்களின் திருவடித் தீர்த்தம் பெற்றுய்ந்தார். அரங்கனின் அடியவர்க்கெல்லாம் அடியவராய்த் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட விப்ரநாராயணர் என்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் கதையைப் பார்ப்போம்.

எட்டாம் நூற்றாண்டில் தஞ்சையம்பதிக்கு அருகில் உள்ள திருமண்டங்குடி என்ற ஊரில் பிறந்தவர் விப்ரநாராயணர். விஷ்ணுவைப் புகழ்ந்து பாடும் விப்ராமக்கள் என்று அழைக்கப்பட்ட பிரிவில் பிறந்ததால் இவருக்கு விப்ரநாராணயர் என்னும் பெயர் சூட்டப்பட்டது. தந்தை வேதவிசாரதரால் உரிய காலத்தில் உபநயனம் செய்விக்கப்பட்டார்.

திருமாலின் மேல் கொண்ட ப்ரேமையினால் இவருக்குத் திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்தது. எனவே திருமாலின் திவ்யதேசங்களைத் தரிசித்து வரலாம் என்ற எண்ணத்தில்தான் இவர் புறப்பட்டார். ஆனால் திருவரங்கத்தை அடைந்ததுதான் தாமதம். அங்கே பாம்பணைமேல் கம்பீரமாகப் பள்ளி கொண்ட அரங்கனைக் கண்டார். தன்னை மறந்தார். ஊரிலென் காணியில்லை, உறவு மற்றொருவரில்லை. பாரில் உன் பாதம் பற்றினேன் பரமமூர்த்தி என்று அவனுக்கே அடிமையானார்.

மேகங்களை எட்டிப் பிடிக்கக் கூடிய அளவு உயரமாய் வளர்ந்திருந்த விருட்சங்களும், செடிகளும் கொடிகளும் பின்னிப் பிணைந்திருக்க, அங்கே வண்டுகள் முரல, குயிலினம் கூவ, மயிலினம் ஆட, அண்டர்கோன் அமர என்று திருவரங்கமே அவருக்கு ஒரு சோலையாகக் காட்சி அளித்தது. இவ்வளவு ஏன் பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே, ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே என்றெல்லாம் அரங்கனின் மேல் பிரேமை கொண்டு அங்கேயே இருந்துவிட்டார்.


வனமாலையின் அம்சம் ஆனதாலோ என்னவோ இவருக்கு வனப்பான நந்தவனம் அமைத்துப் பெருமாளுக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பாமாலையோடு பூமாலை கட்டித் தரும் கைங்கர்யத்தை மேற்கொண்டார். நாளும் பொழுதும் இப்படியே போயிருந்தால் நலமாய் இருந்திருக்கும். பாசுரங்களைப் படைத்திருந்த விப்ரநாராயணருக்கும் ஒரு சோதனை வந்தது பெண் ரூபத்தில்.

த்தமர்கோயில் என்னும் ஊரைச் சேர்ந்த தேவதேவி சோழனின் உறையூர் அரண்மனையில் நடனமாடித் திரும்பிக் கொண்டிருந்தாள். வழியில் விப்ரநாராயணரின் மனதைப்போலச் செழித்துப் பூத்திருந்த நந்தவனம் அவள் கண்ணில் பட்டது.

அதன் நறுமணத்திலும் சௌந்தர்யத்திலும் மயங்கியவள் உள்ளே நுழைந்தாள். நந்தவனத்தினை உருவாக்கிய விப்ரநாராயணரைப் பார்த்தாள். அவரோ பெருமாளுக்கான துவளத் தொண்டில் ஈடுபட்டு நினைவெல்லாம் திருமாலாகத் திருமாலையைத் தொடுத்துக் கொண்டிருந்தார். திருமாலைத் தவிர வேறு ஒருவரையும் கண்கொண்டு நோக்காத அவரைத் தன்வயப்படுத்த எண்ணி அவர் பாதம் பணிந்தாள் தேவதேவி.


தன் குலத் தொழிலால் ஏற்பட்ட இழிவு நீங்கத் தானும் அங்கே தொண்டு புரிய விரும்புவதாகக் கூற விப்ரநாராயணரும் அனுமதித்தார். நந்தவனத்தில் பூப்பறித்தல், மாலை தொடுத்தல், செடிகளுக்கு நீரூற்றுதல், தூய்மைப் படுத்துதல் என அவள் ஈடுபட விப்ரநாராயணரும் தனக்குக் கிடைத்த உணவின் ஒரு பகுதியைத் தொண்டு செய்து வந்த அவளுக்கு அளித்து வந்தார். நல்லவள் என நினைத்து அவர் நம்பிக்கை கொண்டபின் ஒரு நாள் இனிமையாகப் பேசி அவர் உள்ளத்தைக் கவர்ந்து தன் வயமாக்கிக் கொண்டாள்.

இப்படி விப்ரநாராயணரின் பொருளை எல்லாம் கவர்ந்தபின் சிலகாலம் கழித்துத் தேவதேவி தன் ஊர் போய்ச் சேர்ந்தாள். அவளின் பிரிவை ஆற்றாமல் விப்ரநாராயணர் அவள் வீடு தேடிச் சென்றாள். பொருளிலாரை அனுமதிக்காத அவள் தாய் அவரை வெளியேறச் சொல்ல அவரோ மனம் வருந்தித் தோட்டத்தில் சென்று அமர்ந்தார்.

அக்கணம் அவரை ஆட்கொள்ள விரும்பிய திருமகளின் கோரிக்கையால் திருமால் ஒரு திருவிளையாடலைச் செய்தார். தன் அடியார் ஒருவர் மூலம் திருவரங்கக் கோயிலின் பொன் வட்டில் ஒன்றைத் தேவதேவியின் தாயிடம் விப்ரநாராயணர் சார்பாகச் சேர்ப்பித்தார். உடனே தேவதேவியின் தாய் அவரை உள்ளே அனுமதிக்க விப்ரநாராயணர் களிபேருவகை கொண்டு தேவதேவியைச் சேர்ந்தார்.

பொழுது விடிந்தது. அங்கோ கோயிலில் பொன் வட்டிலைக் காணவில்லை எனத் திருக்கோயிலில் ஒரே அமளி துமளி. சோழனின் சபையில் அர்ச்சகர், பரிசாகரர் என அனைவரும் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். ஆனாலும் வட்டில் கிடைக்கவில்லை. ஊரெங்கும் ஒற்றர் உலாவினர். ஒரு ஒற்றன் கண்டுபிடித்தான் அவ்வட்டில் தேவதேவியின் வீட்டில் இருப்பதை. உடனே அரசர்க்குத் தெரிவிக்க அவரோ உடனே விசாரணை மேற்கொண்டார்.

கோயிலில் இருந்து திருடப்பட்ட பொருளை வாங்கியதற்காகத் தேவதேவியின் தாய்க்கு அபராதம் விதித்த சோழன் பொன் வட்டிலைத் திருடியதாகக் கூறி விப்ரநாராயணரைக் காராக்ரகத்தில் அடைத்தான். விப்ரநாராயணரின் பக்தியை அறிந்த திருமகள் திரும்பத் திருமாலிடம் பரிந்து பேச அவர் அரசனின் கனவில் தாமே அப்பொருளைக் கொடுத்ததாக உரைத்தார்.

விழித்து எழுந்த சோழன் தன் தவறுணர்ந்து விப்ரநாராயணர விடுவித்தான். ஆனாலும் விப்ரநாராயணருக்குத் தான் மோகமெனும் மாயையில் வீழ்ந்து அரங்கனை மறந்தது துன்பமளிக்கப் பெரியோர்களிடம் ப்ராயச் சித்தம் வேண்டினார். திருமால் அடியவர்களின் திருவடித் தீர்த்தமே இதைத் தீர்க்கும் என்று கூறப்பட அரங்கனின் அடியவர்களின் திருவடித் தீர்த்தம் பெற்றுப் பருகி உய்ந்தார். இவ்வாறு தொண்டர்களின் அடிப்பொடியாக அவர் ஆனதால் தொண்டரடிப்பொடி என்றும் அழைக்கப்பட்டார்.

அப்படிப்பட்ட உத்தம அடியாரைக் கண்டதால் தேவதேவியும் தன் பொருளனைத்தையும் அரங்கனுக்கே அர்ப்பித்துத் திருக்கோயிலில் திரு அலகிடுதல், மெழுகுதல், கோலமிடுதல் ஆகிய பணிகளைச் செய்து நற்கதி அடைந்தாள்.  தன் திருவரங்கத்து நந்தவனத்துக்குத் திரும்பித் துவளத் தொண்டில் ஈடுபட்டுத் திருப்பள்ளி எழுச்சி, திருமாலை போன்ற பாமாலைகளால் மங்களாசாசனம் செய்து திருவரங்கனைப் பள்ளி எழுந்தருளப் பாடி மகிழ்ந்திருந்தார் விப்ரநாராயணர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)