சனி, 21 செப்டம்பர், 2024

சிந்து பைரவி சிவக்குமார்

 சிந்து பைரவி சிவக்குமார்


உன்னிடம் மயங்குகிறேன், உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது, ஒரே நாள் உன்னோடு ஒரே நாள், தேன் சிந்துதே வானம், ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருளென்ன, தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது என்ற மென்காதல் பாடல்களைக் கேட்டால் சிவக்குமார் ஞாபகம் வருவார். எம்ஜியார், சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர், கமல், ரஜினி, விஜய்காந்த், சத்யராஜ் சரத்குமார், பிரபு, விக்ரம் விஜய், சூர்யா, அஜித் என நான்கு தலைமுறை நடிகர்களோடு நடிப்புலகில் பயணம் செய்தவர்.

சிறந்த ஓவியர். ஒரு முறை குமுதத்திலோ விகடனிலோ இவர் வரைந்த ஓவியம் ஒன்று வெளியானது. சூரிய உதயத்தில் மரங்களைத் தங்கமஞ்சள் நிறப்பின்னணியில் ஒளீரிடும்வண்ணம் வரைந்திருந்ததைக் கண்டு அசந்துள்ளேன். மேடைப் பேச்சாளர். கம்பராமாயணம், திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவது மட்டுமல்ல. நூறு பூக்களின் பெயர்களையும் கூட மனப்பாடமாகச் சொல்லக் கூடியவர்.

சிவகுமார் கோயம்புத்தூர் காசிக்கவுண்டன் புதூரில் பிறந்தவர். பிறந்து பத்து மாதங்களிலேயே தந்தையையும், அவருக்கு நான்கு வயதாயிருக்கும்போது மூத்த சகோதரனையும் இழந்தார். இவரது இயற்பெயர் பழனிச்சாமி. மனைவியின் பெயர் லெக்ஷ்மிகுமாரி. இவருக்கு மூன்று குழந்தைகள் சூர்யா, கார்த்தி, பிருந்தா. மருமகள் ஜோதிகா. மகன்கள் இருவரும் மருமகள் ஜோதிகாவும் சிறந்த நடிகர்கள்.

1965 இல் காக்கும் கரங்களில் அறிமுகம். திருமால் பேருமை, கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் ஆகியவற்றில் விஷ்ணு, முருகன் போன்ற கடவுளர் வேடங்களில் தோன்றினர். புராணக் கதாபாத்திரங்களிலும் வரலாற்றுப் பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்துள்ளார்.

மிகுந்த அர்ப்பணிப்போடு நடிப்பவர். எத்தனை கதாநாயகிகளோடு நடித்திருந்தாலும் யாரோடும் கிசுகிசுக்கப்படாதவர். வாழ்வியல் விழுமியங்களில் நம்பிக்கை கொண்டவர். தினப்படியே யோகா, தியானம் போன்றவற்றைச் செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்.

இவர் நடித்த சில படங்கள் நான் பாடும் பாடல், எங்கம்மா சபதம், சரஸ்வதி சபதம், கவிக்குயில்,  காதல், அரங்கேற்றம், மேல்நாட்டு மருமகள், வெள்ளிக்கிழமை விரதம், ராஜராஜசோழன், அகத்தியர், உயர்ந்த மனிதன், யாருக்கும் வெட்கமில்லை, மேல்நாட்டு மருமகள், தேன் சிந்துதே வானம், துணையிருப்பாள் மீனாட்சி, கண்ணாமூச்சி, கண்ணன் ஒரு கைக்குழந்தை, கடவுள் அமைத்த மேடை, அதைவிட ரகசியம், ஏணிப்படிகள், தாய் மூகாம்பிகை, தங்கைக்கோர் கீதம், உனக்காகவே வாழ்கிறேன், ஒருவர் வாழும் ஆலயம், பொறந்தவீடா புகுந்த வீடா, பொன்னுமணி. அன்னை வேளாங்கண்ணி, பாபு, பாரத விலாஸ், பொண்ணுக்குத் தங்க மனசு, திருமாங்கல்யம், தீர்க்கசுமங்கலி, கண்கண்ட தெய்வம், பணமா பாசமா, நவக்கிரகம் என ஜனரஞ்சகமான கேரக்டர்களில் அநாயாசமாக நடித்தவர்.

1975 இல் வெளிவந்த படம் புதுவெள்ளம், இது பொங்கி வருகின்ற புதுவெள்ளம் ஒரு தங்கு தடையின்றி இது வெல்லும் என்று சுருட்டை முடியுடன் அரிவாளைப் பிடித்தபடி தோன்றுவார். கட்டுக்கோப்பான உடற்கட்டு, அடர்ந்த கேசம், சதுர முகவெட்டு, கருகரு மீசை கிருதா, கருணையில் மிளிரும் கண்கள், புன்னகை முகம், தன்மையான நெகிழ்ந்த பேச்சு. நடிப்பில் இவ்வாறே பார்த்துப் பழகியதால் சில பொது நிகழ்வுகளில் அவர் கோபப்படுவதைப் பார்த்தால் வியப்பாயிருக்கும் இவராவென்று.

கலைஞரின் கதையான பாசப்பறவைகளில் இவரின் நடிப்பு வித்யாசமானது. தங்கை ராதிகா தன் கணவர் மோகனைக் கொலை செய்ததாக சகோதரன் சிவகுமாரின் மேல் வழக்குத் தொடுக்க அதிலிருந்து தான் குற்றமற்றவர் என்று நிரூபித்து மீளும் கதை.  


உறவாடும் நெஞ்சத்தில் ஒரே நாள் உன்னோடு ஒரே நாள் பாட்டில் நெஞ்சத் துடிப்புப் போல டிக் டிக் என்று ஒரு பின்னணி ரிதம் ஒலிப்பது இதம். சொல்லத்தான் நினைக்கிறேன் மூன்று பெண்கள் கிடைத்தும் தன் காதலைச் சொல்லமுடியாமல் சொல்லத்தான் நினைத்த படம்.

பத்ரகாளியில் கேட்டேளே அங்கே எனக் கணவனுக்காக வீட்டிற்குள் ரெகார்ட் டான்ஸ் ஆடும் மனைவி கண்ணன் ஒரு கைக்குழந்தை எனக் கொஞ்சவும் செய்வார். முடிவில் மனநோய் பாதித்துத் தன் குழந்தையையே இழக்கும் இடம் வருத்தம் தரும். அவன் அவள் அது, இல்லம் சங்கீதம் என்று இருக்கும் கணவன் மனைவியான சிவக்குமாரும் லெக்ஷ்மியும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் கதை. வெளிவந்த ஆண்டோ 1980!  

வண்டிச்சக்கரம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படங்களுக்கு ஃபிலிம்பேர் விருது கிடைத்தது. இதில் ரோசாப்பு ரவிக்கைக்காரியில் வெத்தல வெத்தல பாடல் தன் உரையாடல் பாணியில் வருவது வித்யாசம். வண்டிச்சக்கரத்தில் முரடனான கஜா வடிவு என்னும் சரிதாவுடன் காதலில் வீழ்ந்ததும் மென்மையானவனாக மாறுவான், தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாகச் சேறும் என்றும் பாடுவான்.

அக்னி சாட்சி ஸ்கிஸோஃபிர்னியா என்னும் மனநோய் தாக்கிய மனைவி சரிதாவைப் புரிந்து கொண்டு பொக்கிஷமாய்ப் பாதுகாக்கும் கணவன் அரவிந்தனாக சிவக்குமார். ஹாலின் ஒரு சுவர் முழுவதும் தன் மனைவியின் புகைப்படத்தைப் போஸ்டராக ஒட்டி வைக்கும் அளவுக்கு அன்புடையவர். முடிவில் அவளது சிறுபிராய நிகழ்வு ஒன்றினால் அவள் பாதிக்கப்பட்டிருப்பது அறித்து மனநோய் மருத்துவர் மூலம் மீட்க முயல்வார்.

ஆட்டுக்கார அலமேலுவில் பருத்தி எடுக்கையிலே என்று அலமேலு பாட தாகம் தீர்ந்ததடி அன்னமே என்று சிவக்குமார் பாடுவார். ஆனால் இவர்களோடு ஒரு ஆடும் டேப்ரெக்கார்டரும் முக்கியப் பாத்திரமாக நடித்தன. அன்னக்கிளி சுஜாதாவுடன் மென்காதலும் பிரிவின் சோகமும் கொண்ட கதை.

பெரும்பாலும் நாயகன் அல்லது குடும்பத்தலைவன் பாத்திரங்கள். தந்தை, சகோதரன் வேடம் ஏற்றுச் சிறப்பாகச் செய்த படங்கள் காதலுக்கு மரியாதை, சேது. எதிர்நாயகனாக நடித்த படம் புவனா ஒரு கேள்விக்குறி. உனக்காகவே வாழ்கிறேன் இவருக்கு வயசாகவே இல்லையா என்று தோன்ற வைத்த படம் ஏனெனில் ஜோடி நதியா. கண்ணா உனைத் தேடுகிறேன் வா என்று வேறு அவர் பாடுவார்!.

இவரது படங்களில் என்னை அசரவைத்த படம் சிந்து பைரவி. மனைவி பைரவியும், மனத்துணையான சிந்துவும் இவரோடு கைகோர்த்த கதை. பரம்பரை ராகமாய் பைரவி இருக்க பாடறியேன் படிப்பறியேன் எனக் காவடிச் சிந்தின் மெட்டைப் போல இவரைக் கவர்வார் சிந்து என்னும் சுகாசினி.ஸேபியோசெக்ஸுவல் எனப்படுவது கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது. அதாவது ஒருவரின் அறிவார்ந்த தன்மையினால் கவரப்பட்டு அவரைக் காதலிப்பது. அதை மிக அழகான இசையாக கேபி இப்படத்தில் மீட்டியிருப்பார்.

அறிவின் தீட்சண்யத்தால் ஜொலிக்கும் கண்களோடு திகழும் ஜேபி சிந்துவை இழந்ததும் தண்ணீர்த் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான் எனத் தவழ்வது பரிதாபம். நீர் விசிறி அடிக்கும் பாறையின் மேல் அமர்ந்து தன்னைத் தாக்கும் கூடா உணர்வுகளை எதிர்கொள்ள இயலாமல் மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும், வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும், காப்பாய் தேவி எனக் கரைவது,ம் பின்னர் உன்னதமான உணர்வின் வெளிப்பாடாய்  கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் என உருகுவதும் க்ளாஸ். வழமையான கேபியின் புதுமைப் பெண் கதாநாயகிகள் போல் சிந்து இவருக்கு ஒரு குழந்தையைப் பெற்றுப் பரிசளித்துவிட்டுச் செல்வார். முடிவு சுபம்.  

இவர் சின்னத்திரையில் அண்ணாமலை, சித்தி உட்பட 12 தொடர்களில் 1990 இலிருந்து 2008 வரை நடித்துள்ளார். இது ராஜபாட்டை அல்லகம்பன் என் காதலன் என்ற நூல்கள் எழுதி உள்ளார். ஜெயா டிவியின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். சினிமாவுக்கு வந்து 60 வது வருடத்தை எட்டப் போகிறார். திரைச் சரித்திரமான இவரது சாதனைகள் இன்னும் தொடர நல்வாழ்த்துக்கள்.



டிஸ்கி:- மணி மடல்களில் நடிகை ஸ்ரீவித்யா பற்றிய எனது கட்டுரையினைப் பாராட்டியுள்ள மிதிலைப்பட்டி வாசகர் திரு. சித. சீ. வள்ளியப்ப செட்டியார் அவர்களுக்கு நன்றிகள். இக்கடிதத்தை வெளியிட்ட தனவணிகனுக்கும் நன்றிகள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)