திங்கள், 9 செப்டம்பர், 2024

அபூர்வ ராகம் ஸ்ரீவித்யா

அபூர்வ ராகம் ஸ்ரீவித்யா


ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், மங்கையர் மங்கல நாயகி பூப்போல் மெல்லச் சிரித்தாள், பாடும் வண்டைப் பார்த்ததுண்டா மாலை அணிந்த என் மாப்பிள்ளை, மாலே மணிவண்ணா மாயவனே, அன்பே உயர்ந்தது அவனியிலே என்று ஸ்ரீ வித்யா பாட ஜெயாம்மா ஆட என அட்டகாசமான காம்பினேஷன். இதைவிட கேள்வியின் நாயகனே டாப் க்ளாஸ்.  இல்லாத மேடையிலே, எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் – நாம் எல்லோரும் பார்க்கின்றோம் என வாழ்க்கை என்பது ஒரு நாடக மேடை என்பதை உணர்த்திய பாடல்.

அகன்ற பெரிய கண்கள் கொண்ட அபூர்வ ராகங்கள் பைரவியை மறக்கமுடியுமா என்ன. தன் 22 வயதில் 17 வயது ஜெயசுதாவுக்கு அம்மாவாக நடித்தவர். அதே வயதில் பங் கிராப், பெல்பாட்டத்துடன் அதில் நடித்த கமலையும் காதலித்திருக்கிறார். கைக்கிளைப் பெருந்திணைக் காதலைச் சித்தரித்த படத்தின் கதை போலவே அவரது காதலும் கைகூடாமல் போனது. ’என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகளின் அப்பா என் மகளுக்கு மாமனார்” என்றால் அவருக்கு எனக்கும் என்ன உறவு?" எனச் சிக்கலான உறவை முதன் முறையாகத் தமிழ்த்திரையில் முன் வைத்த படம்.

முரசறைவது போல் மிருதங்கத்தை அதிர வைப்பார் கமல். அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம், ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி, மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி, முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி, முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி என்று கவியரசால் குழைத்து எழுதப்பட்ட வரிகளைக்  கமல் மனதால் உணர்ந்து வெளிப்படுத்துவது பொன்னோவியம். இப்படி வரையமுடியா எழில் மிக்கவர் ஸ்ரீவித்யா. வடிவான மோவாய், எடுப்பான நாசி, லேசாய் மடியும் ரோஜா இதழ்கள், குழல் சுருளும் காதோரம், என அழகின் ராட்சசி, பிரம்மாண்டக் கண்ணழகி, செதுக்கிவைத்த கோயிற்சிற்பங்கள் போன்ற பெண்மையின் பூரணத்துவம் பொலியும் பேரழகி.

1953 ஜூலை 24 இல் சென்னையில் பிறந்தார் ஸ்ரீவித்யா. தந்தை விகடம் கிருஷ்ணமூர்த்தி, தாய் பிரபல பாடகி எம். எல். வசந்தகுமாரி. இவரின் தாய் கர்நாடக இசைப் பாடகி என்றாலும் 100 க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் பாடி உள்ளார். இவர் தந்த அபூர்வராகம்தான் ஸ்ரீவித்யா. குடும்ப நிதி நெருக்கடிக்காக நடிக்க வந்த நடிகைகளைப் போலத்தான் ஸ்ரீவித்யாவும் நடிப்புலகில் புகுந்தார்.  1970 – 2000 ஆண்டு வரை தமிழில் நடித்து வந்துள்ளார்.

மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். பிறந்தது தமிழகம் என்றாலும் கேரளம்தான் இவருக்கு உச்சபட்ச மரியாதை அளித்துள்ளது.  குழந்தை உள்ளம் குமரி உருவம். வெள்ளந்திக் குணம். அதனாலேயே வாழ்நாள் முழுவதும் அவர் முழுதும் நம்பிய சிலரால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்.

1966 இல் குழந்தை நட்சத்திரமாகத் திருவருட் செல்வரில் அறிமுகம். நூற்றுக்கு நூறுவில் இவரை நடிக்க வைத்த கேபியே அபூர்வ ராகங்களிலும் இவருக்கு பைரவி வேடம் அளித்தார். மலையாளத்தில் அம்பா அம்பிகா அம்பாலிகாவில் இவர் ஏற்று நடித்த அம்பா கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்ட ஒன்று. பின்னணிப் பாடகியாக அமரன் படத்தில் பாடியுள்ளார். இன்னும் சில படங்களிலும் பாடியுள்ளார்.

அபூர்வராகங்களில் ரஜனிக்கு ஜோடியாக நடித்த இவர் தளபதியில் அவரது அம்மாவாக நடித்திருப்பார். ஏன் தன் முதல் படத்தில் தான் காதலித்த கமலின் (குட்டி அப்பு ) அம்மாவாகவும் அபூர்வ சகோதரர்களில் நடித்துள்ளார். கமலுடன் நடிப்பதானால் எந்த ரோலானாலும் ஏற்றுச் செய்வார். அவரது தாய் ரோல் ஆனாலும் கூட. அபூர்வராகங்களில் கமலுடன் ஆரம்பித்த இவரது காதல் அன்று ஏனோ நிறைவேறாமல் போனாலும் கமல் தன் காதலி என்று உரிமையுடன் இன்றளவும் சுட்டிக் காட்டும் நிலையில் உள்ளது அமரத்துவம் வாய்ந்த இவர்களது காதல். மரிக்குமுன் இவர் பார்க்க விரும்பி அழைத்தவரும் கமல் ஒருவர்தான்.


கமல் வாணியை மணக்க அதன் பின் ஜார்ஜ் தாமஸைக் காதலித்து மதம்மாறி மணம் புரிந்து கொண்டார். அத்திருமணமும் இவரது 35 வயதிலேயே விவாகரத்தில் முடிந்தது. அதன்பின் கேரளாவிற்கே சென்றுவிட்டார். அங்கே சினிமா மற்றும் சின்னத்திரையில் கோலோச்சினார். தொடர்ந்து தான் அன்பு செலுத்துபவர்களால் இவர் ஏமாற்றப்பட்டதுதான் மிச்சம். அங்கேயும் நண்பரும் நடிகருமான கணேஷ்குமார் என்பவருக்குத் தன் சொத்தின் பவர் ஆஃப் அட்டர்னியை வழங்கினார். ஆனால் இவர் தகுதி உள்ள கலைஞர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்ட எந்தத் தொண்டும் நிறைவேற்றப் பட்டதாகத் தெரியவில்லை.

தன் 40 வருட சினிமா கேரியரில் 800 படங்கள் நடித்திருக்கிறார். நூற்றுக்கு நூறு, டில்லி டு மெட்ராஸ், வெள்ளி விழா, சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள். மூன்றெழுத்து, அன்னை வேளாங்கண்ணி, ஆசை அறுபது நாள், ரௌடி ராக்கம்மா, திருக்கல்யாணம், ராதைக்கேற்ற கண்ணன், ஆசை 60 நாள், உறவுகள் என்றும் வாழ்க, ராஜராஜசோழன், புன்னகை மன்னன், நம்மவர், தளபதி ஆஹா, கண்ணெதிரே தோன்றினாள், காதலுக்கு மரியாதை, காதலா காதலா, சங்கமம், ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகியன இவர் நடித்த படங்களில் சில.

ஆரம்ப காலப் படங்களில் இருந்தே இரண்டு மூன்று கதாநாயகியரில் ஒருவராகவே அறியப்பட்டார். அம்மா, அக்கா, அத்தை, சித்தி போன்ற பாந்தமான குடும்பப்பெண் பாத்திரங்களே இவருக்கு அமைந்தன. பெரும்பாலும் அப்பாவியான, ஏமாற்றப்பட்ட பெண் ரோல்கள். அல்லது பாசத்தில் சிக்கி உழலும் தாய் கதாபாத்திரம். அந்தச் சோகமும் பாவங்களும் அனைவரின் இதயத்தையும் கலக்க வைத்தன. தளபதியில் சிறுவயதில் யாரோலோ ஏமாற்றப்பட்டு அதன் மூலம் பெற்ற குழந்தையை உறவினர்கள் கூட்ஸ் வண்டியில் போட்டுவிட அக்குழந்தைக்கான தேடலில் தவிக்கும் தாயாக இணையற்ற வெளிப்பாடு இருக்கும்.

கண்ணெதிரே தோன்றினாளில் தன் மகனின் நண்பனால் காதலிக்கப்பட்ட தன் மூத்த மகளை இழந்த தாய் அவன் தன் நண்பர்களை வீட்டிற்கு அழைப்பதைக் கண்டிப்பாள். முடிவில் நட்புக்கு மரியாதை அளித்து ஒதுங்கி இருக்கும் சின்ன மகளின் காதலன் தன் மகனின் நண்பனாக இருந்தாலும் ஏற்றுத் திருமணம் செய்து கொடுப்பாள்.

இதே தன் மகன் விஜய் தனக்காகக் காதலியை உதறிவிட்டு வந்ததும் அவளது சங்கிலியைக் கொடுக்கச் சென்ற இடத்தில் பெண்ணைப் பார்த்துவிட்டு (ஷாலினி) அவளது தாயான லலிதாவிடமே எனக்கு இந்தப் பெண்ணைக் கொடுத்திடுங்க. என்று புடவை முந்தியை விரித்துக் கேட்பதும் லலிதா எடுத்துக்குங்க, கூட்டிக்கிட்டுப் போங்க எனக் கண்கலங்குவதும் காதலுக்கு மரியாதை மட்டுமல்ல. பெற்றவர்களுக்கும் மரியாதை.

காதலா காதலாவில் தன் மகள் ரம்பா காதலித்துத் திருமணமாகிக் குழந்தையுடன் இருப்பது அறிந்து கணவர் எம் எஸ் வியுடன் வந்து பேர் வைக்காத பேரக் குழந்தையைக் கொஞ்சி மகிழ்வதெல்லாம் காமெடி கலாட்டா. ஃப்ளவர்வாஸிலிருந்து மாடிப் படியில் வழியும் நீரைக் கூடப் பேரனின் சிறுநீர்த்தூவல் என்று மகிழும் பரவசப்பாட்டி..

சங்கமத்தில் விந்தியாவின் தாய் அபிராமியாக பாந்தமான ரோல். பார்வையிலிருந்து உடல் அசைவு வரை எல்லா இடங்களிலும் மென்மையும் தன்மையுமாக இருப்பார். தன் மகளின் காதல் அறிந்தும் அதை நிறைவேற்ற முடியாத தாயாக மகள் விஷம் குடித்தது தெரிந்து கண்களும், அங்கங்களும் பதறும் இடம் எல்லாம் முத்திரை நடிப்பு. ஆனந்தத்திலும் நான்கு மகன்களின் பொறுப்பான தாய் கதாபாத்திரம். ஆனந்தம் விளையாடும் வீடு, நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு என்ற பாடல் அதில் சிறப்பு.

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேனில் இயலாமையும் சோகமும் ததும்பும் பெரிய விழிகள். பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையிலிருக்கும் தந்தை தன் உயிலைக் கடைசியில் தன்னைப் பராமரித்துவரும் மகளான ஸ்ரீவித்யா பேரில் மாற்ற வேண்டும் எனத் துடிப்பார். அதைச் சொல்லுமுன் மரித்துவிட அதைப் புரிந்து கொள்ள முடியாமல் ஸ்ரீவித்யா தவிப்பார். முடிவில் தம்பி மனைவி வந்து சொத்தை எடுத்துக் கொண்டு யதார்த்தத்தைப் புரிய வைக்க இவரும் இரு மகள்களும் ( தபு, ஐஸ்வர்யா) வருத்தத்தோடு சென்னை செல்வார்கள். இவர்கள் குடும்பமாக ஒரு ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்க இவர்களின் வாழைப்பூ வடை டேஸ்டை வைத்து இவர்களின் ஆதிகால குடும்ப நண்பனான மேஜர் பாலா ( மம்முட்டி) சந்தித்து உதவ, இவர்கள் இன்னும் நல்ல நிலைமையை எட்ட அனைத்தும் சுபம். 

கண்களாலேயே நடிப்பவர். அவர் நினைக்கும் அனைத்தையும் கண்களாலேயே அவரால் கடத்த முடியும். தலைமுடியோ கடல் அலைபோல் விரிந்திருக்கும். கடைசியில் கான்சர் ட்ரீட்மெண்டில் கூட முடி கொட்டிவிடும் என்பதால் கீமொதெரஃபி செய்து கொள்ளக் கூட அவர் சம்மதிக்கவில்லையாம். 2006 இல் புற்றுநோயின் தீவிரத்தால் இவ்வுலகை விட்டு மறைந்தார். கேரள அரசின் ராணுவ மரியாதையோடு இவரது இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.

குழந்தைப் பருவத்தில் தாய்ப்பால் கொடுக்கக் கூட இசையரசியான அவரது தாய்க்கு நேரம் இருந்தது இல்லையாம். தாயின் பாசம் கிடைக்கா ஏக்கத்தில் வளர்ந்ததாலோ என்னவோ சினிமாவில் எல்லாம் ஸ்ரீவித்யாவுக்கு சூப்பர் மதர் கேரக்டர்களே கிடைத்துள்ளன. என்னதான் அன்பைக் கொட்டியும் சிலரின் வாழ்வு ஏனோ பாலையில் காய்ந்த நிலவாகி விடுகிறது. அன்பாலே நெய்யப்பட்ட ஸ்ரீவித்யாவின் வாழ்வும் அக்கினியில் வார்த்த நெய்போல் புகையாய் மறைந்தது. மறைந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் திரையின் அவரது பங்களிப்பின் நறுமணம் இன்னும் பரிமளித்துக் கொண்டேதான் இருக்கிறது. அந்த அபூர்வராகமும் ரசிகர்களின் மனத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)