வியாழன், 5 செப்டம்பர், 2024

ஜெர்மனியில் கண்டதும் கேட்டதும் 1.ஹம் ஹிந்து ஸ்ரீ சங்கரர் காமாட்சி அம்மன் திருக்கோவில்

 ஜெர்மனியில் கண்டதும் கேட்டதும்


1.ஹம் ஹிந்து ஸ்ரீ சங்கரர் காமாட்சி அம்மன் திருக்கோவில்

 

ஜெர்மனியில் இருக்கும் ஹம் காமாட்சி அம்மன் கோவில் மிகவும் ப்ரசித்தி பெற்றது. ஐரோப்பாவில் அமைந்த இந்துக் கோவில்களில் மிகப் பெரிய ஆலயம் என்று இதைச் சொல்கிறார்கள். டுசல் டார்ஃபிலிருந்து 120 கிமீ தூரத்தில் சீகன்பெக்ஸ்ட்ராஸே என்ற இடத்தில் அமைந்துள்ள இக்கோவிலை டோட்மண்ட் என்ற இடம் வரை ட்ராம் வண்டி மூலமாகவும் அதன் பின் பேருந்து மூலமாகவும் சென்று அடைந்தோம். ஐந்து நிலை இராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. நெடுஞ்சாலையிலிருந்து நீண்ட பூத்தோரணம் கொண்ட நடையைத் தாண்டியதும் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் திரு. பாஸ்கரன் என்ற ஈழத்தமிழரின் முயற்சியால் உருவானது. 1985 இல் இருந்து வழிபாட்டில் இருந்தாலும் நம் தமிழ்க் கோவில் அமைப்புப்படி உருவானது 2002 ஆம் ஆண்டுதான். சந்நிதியின் எதிரே கொடிமரமும் பலிபீடமும் சிம்ம வாகனமும் உள்ளது. எழில்வடிவான துவாரபாலகியர் கருவறையின் இருபுறமும் நிற்கிறார்கள். நம் தாய் போன்ற வடிவழகுடன் எழில்மிகு திருக்கோலத்தில் காட்சி தரும் காமாட்சி அம்பாளைத் தரிசித்தோம். உற்சவர் திருமேனி கொள்ளை அழகு. உள்ளே சக்தியின் இன்னும் சில எழில் உருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

பிரகாரத்தில் நவக்ரஹ சன்னிதி உள்ளது. சிவன் மற்றும் பைரவர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. வள்ளி தெய்வானை முருகன், லெக்ஷ்மி நாராயணன் , ஐயப்பன் ஆகியோரும் காட்சி அளிக்கிறார்கள். வெள்ளியன்று மிகவும் விசேஷம் என்பதால் மதிய பூஜைக்குச் சென்றிருந்தோம். ஈழத்தமிழர்கள் அநேகரைக் காண முடிந்தது. வடிவழகான தூண்களுடன் பிரகாரம். முருகனும் விநாயகரும். சண்டேசரும் குடிகொண்டிருக்கிறார்கள். காமாட்சி அம்மனுடன் ஆதி சங்கரர் இல்லாமலா ? அவரும் இங்கே அருள் பொலிகிறார். இக்கோவிலே ஹம் ஹிந்து ஸ்ரீ சங்கரர் காமாட்சி கோவில் என்றுதான் அழைக்கப்படுகிறது.

 

அர்ச்சனையும் தீபமும் பார்த்துப் பிரதட்சிணம் செய்து வணங்கி அமர்ந்தோம். மனம் நிறைவாக இருந்தது. இங்கே மதிய உணவும் கிடைத்தது. இந்தக் கோவில் கோபுர வாசல் கதவு மிகப் பிரம்மாண்டம். வாசலின் இருபுறமும் அன்னைக்குக் காவலாய் விநாயகரும், முருகனும். இங்கே அம்பாளுக்கும் பூங்கொத்து கொடுக்கிறார்கள் பக்தர்கள். இக்கோயிலில் திருமணம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

 

வெளியே நந்தவனமும் தேர்க்கொட்டகையும் உள்ளது. ! ஒவ்வொரு மாதத்திலும் அந்தந்த மாதத்திற்குரிய சிறப்புப் பண்டிகைகளோடு மாதாமாதம் தேவி மஹாத்மிய ஹோமமும் நடப்பதாகக் கூறினார்கள். வருடா வருடம் ஜூலை மாதம் தேர்த்திருவிழாவின் போது காவடி எடுத்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் ஆகியன நேர்ந்து கொண்டு செய்கிறார்கள் பக்தர்கள். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 15,000 பக்தர்கள் வந்து கலந்து கொள்ளும் தேர்த்திருவிழா இது. இத்திருவிழாவுக்காக ”ஹம் காமாட்சி புகையிரதம்” என்று ஹாம் புகைவண்டி நிலையத்திலிருந்து தமிழில் எழுதப்பட்ட சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 15 ஏக்கர் பரப்பளவில் உள்ளது இக்கோவில். இதன் அன்னதான உணவுக் கூடம் இக்கோவிலுக்கு எதிரிலேயே தனியாக அமைந்துள்ளது. இங்கே ரெஸ்ட் ரூமும் உள்ளது. கோயிலுக்கும் அன்னதானத்துக்கும் நிதி அளிக்க விரும்புபவர்கள் அங்கே இருக்கும் உண்டியலில் நிதியைச் சேர்க்கலாம். உணவுண்டு வந்த பின்பு உண்டியலைப் பார்த்த நாங்களும் ஒரு தொகையை சேர்த்தோம். இக்கூடத்தில் சங்கராச்சாரியார் அவர்களின் வாழ்க்கைச் சரிதம் சித்திரமாக வரையப்பட்டுள்ளது சிறப்பு.

 

ஆதிசங்கரர் காலடி என்னும் ஊரில் ஆர்யாம்பாள், சிவகுரு தம்பதியினருக்கு மகவாய்ப் பிறந்தார். கோவிந்த பகவத் பாதர் என்பவரிடம் சீடராகச் சேர்ந்து வேதாந்தம் தத்துவம் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டார். ஏழாம் நூற்றாண்டில் பிறந்த அவர் காஞ்சியில் சர்வக்ஞா பீடம் நிறுவி உள்ளார். அதன்பின் அவர் காஞ்சியிலேயே சமாதி அடைந்ததாக காஞ்சி சங்கரமடம் வரலாறு சொல்கிறது. இம்மடமே ஜெர்மனியின் இந்த ஹம் காஞ்சி காமாட்சியம்மன் கோவில் நிர்வாகத்தையும் ஏற்று நடத்தி வருகிறது. ஆகையால்  காமாட்சி அம்மனும் ஆதிசங்கரரும்  இணைந்த கோவிலாகவே உள்ளது. கோவிலிலும் அவரது ஓவியங்கள் காணப்படுகின்றன.

துறவறம் மேற்கொண்டாலும் தாய் ஆர்யாம்பாளுக்குக் கொடுத்த வாக்குப்படி அவரது மரணத் தருவாயில் உடனிருந்து இறுதிக் காரியங்கள் செய்தார். அத்வைத சித்தாந்தத்தை நிறுவியவர் இவர். உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதைக்கு உரை இயற்றி உள்ளார். சுப்ரமண்ய புஜங்கம், பஜ கோவிந்தம் கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியன இயற்றி உள்ளார். கபாலிகர்களோடு வாதம் செய்து தடுத்தாட்கொண்டு கபாலிக மதத்தை வேரறுத்தார்.

மண்டன மிஸ்ரர் என்பவருடன் வாதம் செய்ய நேரிட்டது. அவரது மனைவி சரசவாணியே நடுநிலை ஏற்று அமர்கிறார். வாதத்தின் போது சங்கரர் அணிந்த மாலை வாடவே இல்லை. மண்டன மிஸ்ரர் அணிந்த மாலை வாடிச் சுருங்கிவிடுகிறது. எனவே சரஸவாணி தன் கணவன் மண்டன மிஸ்ரர் தோற்றதாக அறிவிக்க வேண்டி வருகிறது. உடனே சரஸவாணியும் சங்கரருடன் வாதில் பொருத அமர்கிறார். அவரும் தோற்றவுடன் மண்டன மிஸ்ரர் சுரேஸ்வரர் என்னும் நாமத்துடன் சங்கரரின் சீடராகிறாகிறார்.

ஆதி குரு தட்சிணா மூர்த்திக்கு சனகாதி முனிவர்கள் போல் நான்கு சீடர்களை உருவாக்கி இருக்கிறார் சங்கரர். அவர்கள் முறையே பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர், மற்றும் தோடகர். இவர்களை முறையே கிழக்கு, தெற்கு, மேற்கு , வடக்கு ஆகிய திசைகளில் மடங்கள் அமைத்து அதற்கு பீடாதிபதிகள் ஆக்கினார். ரிக், யஜுர் , சாமம் , அதர்வணம் ஆகிய வேதங்களில் இவர்கள் சிறந்து விளங்கினார்கள். முடிவில் ஆதிசங்கர பகவத்பாதர் பிரம்மமே ஆனந்தமயமானவன் என்பதை நிறுவி மறைந்தார்.

அழகான இந்த ஓவியங்களை வரைந்தவர் வர்ணகலாபம் கிருபா என்பவர். சங்கரர் என்னும் அருட்பிரசாதம் ஓவிய வடிவில் கிடைத்தது மனதிற்கு இனிமையாக இருந்தது. அத்துடன் இந்தியாவிலிருந்து ஏறத்தாழ 7,800 கிமீ தூரம் சென்று அருளும் பொருளும் அள்ளித்தரும் நம் ஹம் காமாட்சியைத் தரிசித்தது அற்புத அனுபவம். இக்கோவில் காலை 8 முதல் மதியம் 2 வரையிலும் மாலை 5 முதல் இரவு 8 வரையிலும் திறந்திருக்கும்.

ஹம் நகரில் வரசித்தி விநாயகர் கோவிலும் அமைந்துள்ளது. இங்கேயும் மாதாந்திரப் பண்டிகைகளோடு கந்தர்சஷ்டி, விநாயகர் சதுர்த்தி போன்றவை விசேஷம். கற்பக விநாயகர், ஷிர்டி சாயிபாபா, பெருமாள், நாகபூசணி அம்மன், இஸ்கான், கதிர்வேலாயுதசாமி, கந்தசாமி, முருகன், ஜெகன்னாத், மீனாக்ஷி, சிவாலயம், சிம்மாசலா நரசிம்ம ஸ்வாமி ஆலயம் ஆகிய கோவில்களும் ஜெர்மனி நகருக்கு எழில் கூட்டுகின்றன என்றால் மிகையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)