சனி, 31 ஆகஸ்ட், 2024

பொன்னனையாளின் பேரன்பு

பொன்னனையாளின் பேரன்பு


பெண்கள் என்றாலே பேரன்பு கொண்டவர்கள்தான். குடும்பத்தினர் மேல் எப்போதும் அளவற்ற அன்பைப் பொழிபவர்கள். இனியவர்கள், இன்னாதவர்கள் பாகுபாடு கருதாமல் தமக்குத் தொடர்புடைய அனைவரும் நலமுடன் இருக்கவே எண்ணுவார்கள். அதிலும் இறைபக்தி என்று வந்துவிட்டால் அவர்களின் பேரன்பு இன்னும் விகசித்து ஒளிவிடும். இப்படி இறைவனின் மேல் பேரன்பு கொண்ட பொன்னனையாள் என்பவளுக்காய் இறைவன் நிகழ்த்திய ரசவாத வித்தையைப் பார்ப்போம்.

மதுரைக்குக் கிழக்கே வைகையாற்றின் கரையில் அமைந்திருக்கிறது திருப்பூவனம் என்னும் சிற்றூர். சில நூற்றாண்டுகளுக்கு முன் அவ்வூரின் தளிச்சேரியில் பொன்னனையாள் என்னும் பொதுமகள் வசித்து வந்தாள். நாட்டிய சாத்திரம் அனைத்தும் கற்றுச் சிறந்தவள். சிவனின் மேல் பக்தி கொண்டு பாடல்கள் இயற்றுவதும், அவற்றைப் பக்திப் பரவசத்துடன் பாடுவதும், வீணை வாசிப்பதும்,  தான் இயற்றிய பாடல்களுக்குப் பதம் பிடித்து நாட்டியமாக ஆடுவதுமே அவளுக்குப் பிடித்த செயலாக இருந்தது.

சிவனின் மேல் பக்தி கொண்டவள் மட்டுமல்ல. சிவனடியார்களையும் சிவ ரூபங்களாகவே கருதிப் பணி செய்பவள். இரவு நீங்கி விடியத் தொடங்குமுன்னே துயில் எழுவாள். வையையின் தூய நீரில் நீராடித் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வாள். நித்தமும் திருப்பூவணநாதர் கோவிலுக்குச் சென்று தீப தூப அர்ச்சனை செய்து வணங்கி வழிபடுவாள். இறைவனுக்காய்த் தன் நாட்டிய நிகழ்வை அர்ப்பணிப்போடு நிகழ்த்துவாள்.

இறைவனைச் சேவிக்க வரும் அடியார்களை இறைவனாகவே கருதி அவர்களைத் தன் இல்லத்துக்கு எழுந்தருளச் செய்து அறுசுவை உணவைத் தன் கையாலே சமைத்து அவர்கள் உண்ணும்படிச் செய்வாள். அவர்கள் உண்ட மிச்ச உணவை இறைவனின் பிரசாதமாகக் கருதி அதன் பின்புதான் அவள் உணவு உண்பாள்.

இத்தகைய பொன் மகள் வீட்டில் ஒருநாள் திருடர்கள் கன்னம் வைத்தார்கள். தினமும் உறங்குமுன் இறைவன் மேல் பக்தி கொண்டு பாடல்களைப் பாடிவிட்டுத் துயில்வது பொன்னனையாளின் வழக்கம். தானே பாடல்கள் இயற்றும் வல்லமை உள்ளவள் என்பதால் திருப்பூவண நாதரின் மேல் ஒரு செய்யுளை இயற்றத் தொடங்கினாள். பாதி வரை சொல்லி இருப்பாள். ஏனோ அதன்பின் சொல்ல இயலாமல் தடங்கித் தவித்தாள்.

திருட வந்த எண்மர்களில் எழுவர் சகோதரர்கள். ஒருவர் அவர்களின் தங்கையின் கணவர் தலைமலை கண்டர். பரம்பரைத் திருடர்கள் குலத்தில் பிறந்திருந்தாலும் அவர் என்னவோ திருட்டை வெறுத்து சிவப்பணியையே முழுமூச்சாகக் கொண்டவர். திருமணத்துக்குப் பின் அவரின் மனைவி தன் தாய்வீட்டார் தந்த  சீர்வரிசையைக் கொண்டு குடும்பம் நடத்தினாள். அதன்பின் வாழ்க்கையை நடத்தப் பொருள்வேண்டித் தன் கணவரையும் தமையன்களோடு களவு புரிய அனுப்பினாள்.


தன் சம்மதம் இல்லாமல் வந்த அவரோ பொன்னனையாள் இல்லத்தில் அவளின் துயிலறைக்குப் பக்கத்தில் பதுங்கி இருந்தார். செய்யுளை முடிக்க அவள் சிரமப்படுவதைக் கண்டு அடுத்த அடியை அவர் எடுத்துக்கொடுக்க அவள் மகிழ்ந்து அதைச் சேர்த்து அதற்கு அடுத்த அடியைச் சொல்லி முடித்தாள். ஆச்சர்யத்துடன் விளக்கை ஏந்தி இதைச் சொல்லியவர் யாரென்று பார்க்க அவள் வெளியே வர அங்கே பதுங்கி இருந்த எழுவரும் ஓட்டம் பிடித்தார்கள்.

தலைமலைகண்டர் மட்டும் தயங்கி நிற்க வெளியே வந்த அவள்,” பூவணநாதர் பாடலை அருமையாகப் பூர்த்தி செய்தீர்கள். நீங்கள் யார் ஐயா?” என வினவினாள். அவரோ மனம் வருந்தி,”அம்மா, நான் உன் வீட்டில் கன்னமிட வந்த கள்வன்.” என்று கூறினார். அவளோ,”அப்படிச் சொல்லாதீர்கள் ஐயா, தகுந்த பொருள் கொண்டு அந்தப் பாடலை நிறைவு செய்த நீங்கள் திருப்பூவன நாதராகத்தான் இருக்கவேண்டும்.” என்று மகிழ்ந்து கூறிப் பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பினாள்.

அவர் சென்றதும் சில நாட்களாக அவள் மனதில் வாழ்வுப் பொருள் பற்றிய சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. இறைப்பொருளைப் பற்றிய அவளுக்கு உலோகாயுதப் பொருட்கள் மீதான நாட்டம் குறைந்தது. தன்னிடம் இருக்கும் பொன்னைக் கொண்டு இறைவனின் திருவுருவச் சிலையைச் செய்ய எண்ணினாள். ஆனால் அவளிடம் அதற்குத் போதிய அளவு தங்கம் இல்லை.

இறைவனுக்குப் பொற்சிலை செய்யும் எண்ணம் நாளடைவில் ஏக்கமாக மாறி அவளை வாட்ட அவளால் உண்ணவும் உறங்கவும் கூட இயலவில்லை. அப்படி ஒருநாள் அவள் சிவனடியார்களுக்கு அமுது படைக்கும்போது அங்கே வந்த சித்தர் ஒருவர் அவளின் வாட்டத்தைக் கவனித்தார். அவளை அழைத்து விசாரிக்க அவளோ ”பூவணநாதருக்குப் பொற்சிலை செய்யத் தேவையான தங்கம் என்னிடம் இல்லையே” என்கிற கவலை தன்னைத் தின்னுவதாகத் தெரிவிக்கிறாள்.

”உன்னிடம் இருக்கும் இரும்பு, ஈயம், செம்பு, பித்தளைப் பாத்திரங்களைக் கொண்டு வா அம்மா” எனச் சொல்லிய அவர் என்ன இரசவாத வித்தை செய்தாரோ தெரியாது. அவள் அறியுமுன்னே அனைத்தையும் தங்கமாக ஆக்கி விட்டார். மகிழ்வின் உச்சிக்குச் சென்ற அவள் அவரை வணங்கி நிமிர்ந்தாள். சித்தரைக் காணவில்லை. தன் சிந்தை நிறைந்த சிவனார்தான் சித்தராய் வந்திருக்கவேண்டும் என உணர்ந்துகொண்டாள். அத்தங்கம் முழுவதையும் பொற்கொல்லர் ஒருவரை அழைத்து அழகிய பூவணநாதரின் பொற்சிலையைச் செய்யச் சொன்னாள்.

அவள் மனம் போல் மிக மிக அழகாக பூவணநாதரின் திருவுருவப் பொற்சிலை அமைந்தது. தங்கத் தகாயமாகத் தன் எதிரே ஜொலித்த பூவணநாதரைப் பார்த்துப் பரவசமான அவள் தன்னை மறந்து ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல ”அச்சோ, அழகிய பிரானே” என்று கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள். அப்படி அவள் உள்ளன்போடு கிள்ளியதும் பொன்னாலான அச்சிலையின் கன்னத்தில் கிள்ளிய வடு ஏற்பட்டது. இதைக்கண்ட அவள் இன்னும் மகிழ்ந்து இறைத்தொண்டு புரிந்து இறைவனோடு ஐக்கியமானாள்.

பெண்ணின் அன்பு பேரன்புதான். அதிலும் பொன்னனையாளின் அன்பு இறையன்பின் சாட்சியாகத் திருப்பூவணத்துப் பூவனநாதரின் பொற்சிலையின் கன்னத்து வடுவோடு இன்றளவும் விகசித்துப் பிரகாசிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)