திங்கள், 12 ஆகஸ்ட், 2024

பராசரர் இடர் களைந்த பரந்தாமன்

பராசரர் இடர் களைந்த பரந்தாமன்


நீரின்றி அமையாது உலகு. அந்த நீருக்காக மூன்றாம் உலகப் போர் ஏற்படலாம் என்று கூட மக்கள் பேசிக் கொள்வதுண்டு. அந்த அளவில் இன்று மட்டுமல்ல திரேதா யுகத்திலேயே நீர் நிலையைக் காப்பதற்காக இறைவன் தோன்றி அந்நீர்நிலைகளைக் கெடுத்தவர்களை அழித்திருக்கிறார். அது பற்றிப் பார்ப்போம்.

திரேதா யுகத்தில் மது என்னும் அரக்கனுக்குத் தஞ்சகன், தாண்டகன், கஜமுகன் என்று மூன்று மைந்தர்கள் உண்டு. இவர்கள் அசுரர்களாய் இருந்தாலும் சிவபக்தி கொண்டவர்களாய் இருந்தார்கள். எனவே சிவனை நோக்கிக் கடுந்தவம் இருந்தார்கள்.

இவர்களின் தவத்தை மெச்சிய முக்கண்ணனார் இவர்கள் முன் தோன்றி ”என்ன வரம் வேண்டும்” எனக் கேட்டார். இவர்களோ ”இறவா வரம் வேண்டும்” எனக் கேட்டார்கள். அப்படி ஒரு வரம் கொடுத்தால் இவர்களின் கொட்டத்தை அடக்க முடியாது என எண்ணிய சிவனார் “இறவா வரம் தர இயலாது. ஆனால் என்னால் உங்களுக்கு இறப்பு நேராது என்ற வரத்தை வேண்டுமானால் தருகிறேன்” என்றார்.

மனமகிழ்ந்த மூவரும் முக்கண்ணனாரையே தாங்கள் பணியத் தேவையில்லை என்பதால் மமதை கொண்டார்கள். முனிவர்களைக் கொடுமைப் படுத்தத் தொடங்கினார்கள். அவர்களைக் காக்க வந்த தேவர்களையும் தாக்கினார்கள். தேவர்கள் பரமேஸ்வரனிடம் தங்களைக் காக்க வேண்டினார்கள். அவரோ தான் அசுரர்களுக்கு வழங்கிய வரத்தைக் கூறி அவர்களைக் காக்கும்படி சாஸ்தாவிடம் கூறினார். அவர் இவர்களை எல்லாம் ஓரிடத்தில் சிறைவைத்துக் காத்து வந்தார்.

அச்சமயம் நாடெங்கும் கடும் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டது. நீருக்காக மக்கள் அலைமோதிக் கொண்டிருந்தார்கள். குடிப்பதற்குக் கூட நீரின்றிப் போனது. அசுரர்களுக்கும் நாவரட்சி ஏற்பட்டு நன்னீருக்காக ஏங்கித் தவித்தார்கள். அவர்கள் தம் சேனைகளுடன் புறப்பட்டு நாலாபுறமும் ஆர்ப்பாட்டம் செய்தபடி நீரைத் தேடி வந்தார்கள்.


விண்ணாறு என்று வழங்கப்படும் வெண்ணாற்றங்கரையில் பராசரர் என்னும் முனிவர் தன் பர்ணசாலையை அமைத்து அமைதியாகத் தவம் செய்து வந்தார். முன்பொரு காலத்தில் பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தம் விஷ்ணுவால் அவருக்குத் தேவலோகத்தில் வழங்கப்பட்டிருந்தது. அதைத் தான் மட்டும் உண்ணாமல் அந்த அமிர்தத்தின் சில துளிகளை அவர் இந்த வெண்ணாற்றிலும் சிந்திக் கலந்து வைத்திருந்தார். அதனால் உலகெங்கும் பஞ்சம் ஏற்பட்டாலும் இந்த ஆற்றில் உள்ள நன்னீர்ச் சுனை மட்டும் வற்றாமல் நீர் ஊறிச் சுவையுடன் இருந்தது.

தாகத்தோடு வந்த தஞ்சகன், தாண்டகன், கஜமுகன் தங்களின் அசுரப் பட்டாளத்தோடு இந்த நீரை ஆசைதீரக் குடித்து மகிழ்ந்தார்கள். அத்தோடு சும்மா இருக்காமல் அந்த நீரை மற்றவர் பயன்படுத்த முடியாத அளவு பாழ்படுத்தினார்கள். இதைக் கண்ட பராசர மகரிஷி அவர்களைத் தடுத்தார். தடுத்த பராசரரையும் எள்ளி நகையாடித் தாக்கினார்கள் அசுர சகோதரர்கள். வருந்திய அவர் பரந்தாமனிடம் முறையிட்டார்.

தன் பக்தனுக்கு ஒரு குறை என்றால் சும்மா இருப்பாரா பரந்தாமன். மூவரில் மூத்தவனான தஞ்சகனை அழிக்கத் தன் சக்ராயுதத்தை ஏவினார் எம்பெருமாள். தன் தலைபோகும் தருணத்தில் தவறுணர்ந்து அவன் மன்னிப்புக் கேட்க மனம் இரங்கினார் விஷ்ணு. பரந்தாமனால் தான் வீழ்ந்த இந்த பராசர க்ஷேத்திரம் இனித் தன் பெயரால் வழங்கப்பட வேண்டும் என வரம் கேட்டான். அவன் வேண்டுதலை ஏற்று தஞ்சகன் முக்தி பெற்ற அத்தலம் இனித் தஞ்சாவூர் என வழங்கும் என்ற வரம் அளித்தார் பெருமாள்.

தஞ்சகனின் சகோதரன் கஜமுகன் யானை உருவம் எடுத்துச் சண்டையிட்டான். அவன் முன் பரந்தாமன் நரசிம்மமாகத் தோன்றி அவனை வதம் செய்தார். உயிர் பிரியும் தருவாயில் அவனும் மன்னிப்பு வேண்ட அவனுக்கும் மோட்சம் அளித்தார். அவன் கொல்லப்பட்ட இடம் தஞ்சை யாளி என்று அழைக்கப்படுகிறது. நரசிம்மரின் உக்கிரத் தோற்றம் கண்ட பராசரர் அவர் தன் உக்கிரம் தணியுமாறு யோகத்தில் அமர்ந்து துதித்தார். பராசரரின் வேண்டுகோளை ஏற்று நரசிம்மர் உக்கிரம் தணிந்து புஷ்கரணியில் நீராடித் தன் உபய நாச்சியார்களுடன் காட்சி அளித்தார்.

இவர்கள் இருவரின் மரணத்தையும் கண்டு பயந்த மூன்றாவது அசுரன் தாண்டகன் தான் தப்பிக்க வேண்டிப் பாதாள லோகத்தில் இறங்கினான். இதைக் கண்டு பரந்தாமன் வராஹ உருவம் எடுத்துப் பாதாள லோகம் சென்று அவனை அழித்தார். தாண்டகனை அழித்ததால் இந்த இடம் தண்டகாரண்யம் என்று அழைக்கப்பட்டது  இந்த இடம்தான் இப்போது ஸ்ரீ முஷ்ணம் என்று அழைக்கப்படும் இடமாகும். இவனுக்கும் பரந்தாமன் மனம் இரங்கி மன்னித்து அருளி மோட்சம் வழங்கினார்.

தன் பக்தனான பராசர மகரிஷிக்கு இரங்கி அவரைக் காக்க வந்தது மட்டுமல்ல நீரைக் கெடுத்தவர்களை அழித்து நீர் நிலைகளைக் காக்கப் பரந்தாமனே தோன்றி இருக்கிறார் என்றால் நீரின் மகத்துவம் எவ்வளவு புனிதமானது என்பதை நாம் உணர வேண்டும். 

1 கருத்து:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)