வியாழன், 8 ஆகஸ்ட், 2024

தன்னம்பிக்கையின் சிகரம் இராமகிரி சுப்பையா ஆச்சி

 தன்னம்பிக்கையின் சிகரம் இராமகிரி சுப்பையா ஆச்சி

காரைக்குடியில் இருந்து அம்பத்தூருக்கு ராமு ட்ராவல்ஸ் என்ற பெயர் கொண்ட பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. இது மட்டுமல்ல இன்னும் பல ஊர்களுக்கும் ராமு ட்ராவல்ஸ் பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் யார் எனத் தெரிந்தால் வியப்படைவீர்கள். அவர் இராமகிரி சுப்பையா. 73 வயதுடைய நகரத்தார் பெண்மணி. இவர் பிறந்ததும் வாக்கப்பட்டதும் தேவகோட்டைதான். இரணிக்கோவிலைச் சார்ந்தவர். பேருந்துகள் மட்டுமல்ல, திருமண மண்டபங்களுக்கும் சொந்தக்காரர். அதற்கு முன் ஐஸ் கம்பெனி, கார் வேன் சர்வீஸ் என நடத்தியவர். என்னை மிகவும் கவர்ந்தது இந்த வயதிலும் அவரது தன்னம்பிக்கையும் ஆளுமையான குரலும்தான்.

இவரது குழந்தைப் பருவம், குடும்பம் பற்றியும், பொதுவாகப் பெண்கள் ஈடுபடாத இத்தொழில்களில் இவர் எப்படித் தடம்பதித்துள்ளார் எனக் கேட்டபோது, ”எனது பெற்றோர் ராமநாதன் செட்டியார், தாயார் முத்துச் சிகப்பி ஆச்சி. எனக்கு ஒரு தம்பி உண்டு. அவன் பெயர் லட்சுமணன். திருவேங்கடமுடையான் வித்யாலயா (இப்போது மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி) பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்தேன். 9,10,11, (எஸ் எஸ் எல் சி) பெத்தாளாச்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்தேன்.

திருமணமாகும்போது எனக்கு 16 வயது.  எங்க வீட்டுச் செட்டியாருக்கு 21 வயது. இப்போது 77 வயது ஆகிறது. மாத்தூர் கருப்பூரைச் சார்ந்தவர்கள். ஆவடி ட்யூப் ப்ராடக்ட்ஸ் அ.மு.மு. கம்பெனியில் 34 வருடம் இரவு, பகல் 8-4; 4-12; 12-8 என மூன்று ஷிப்டுகளிலும் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர்கள். அ.மு.மு.குடும்பத்தாரை நாங்கள் மறப்பதே இல்லை. எங்களை அம்பத்தூருக்குக் கூட்டி வந்து வேலை கொடுத்து அரவணைத்தவர்கள்.

நாங்கள் அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தில் ஒரு கிரவுண்டு வாங்கி அதில் ஒரு சிறிய வீடும் ஒரு கடையும் கட்டினோம். அந்தக் கடையில் ஐஸ் கம்பெனி ஒன்று ஆரம்பித்து “ராமு ஐஸ் கம்பெனி” என்று பெயரிட்டு ஆட்கள் மூலம் விற்பனை செய்து வந்தோம். எனது கணவர் அவர்கள் வேலைக்குச் சென்று வந்த பிறகு நானும் அவர்களும் சேர்ந்து கடையைப் பார்ப்போம். அவர்கள் வேலையில் இருக்கும் சமயம் நான் பார்ப்பேன்.

நாங்கள் தொழில்கள் ஆரம்பிப்பதற்கு எனது தந்தையார், தாயார், தம்பி ஆகியோர் வழிகாட்டியாக இருந்து உதவினார்கள். எங்கள் மூத்தமகன் லெட்சுமணன் என்ற சோமு தொழிலில் ஆர்வம் காட்டினான். பள்ளி சென்று வந்தபிறகு ஐஸ்கம்பெனியைப் பார்த்துக் கொள்வான். கார், வேன் வாங்கி வாடகைக்கு விட்டோம். அதையும் பார்த்துக் கொள்வான். இப்போது பஸ், கல்யாண மண்டபம் இவற்றை எங்களோடு சேர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.

எங்களது இரண்டாவது மகன் எஸ்.பி.அண்ணாமலை பி.காம்., எம்.பி.ஏ., முடித்து பாம்பேயில் ப்யூர் கெமிக்கல்ஸ் ஆஃபீஸில் மேனேஜராக இருந்து வருகிறான். தகுந்த சமயத்தில் சின்ன மகனும் எங்கள் தொழிலில் ஆலோசனை சொல்லிப் பார்த்துக் கொள்வான். எங்களது மூத்த மகன் லெட்சுமணனுக்கு எனது மூன்றாவது நாத்தனார் பேத்தி விசாலாட்சியைத் திருமணம் செய்து பேரன் பேத்தி எடுத்து விட்டோம். பேரன் வெங்கடாசலம் E.E.E. படித்து முடித்து அமேஸான் கம்பெனியில் டெஸ்டிங் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறான். அத்துடன் வேலைக்கு இடையூறு இல்லாமல் பஸ் ட்ராவல்ஸையும் பார்த்துக் கொள்கிறான்.

எங்கள் சின்ன மகன் அண்ணாமலைக்குக் காரைக்குடி அழகப்பா காலேஜில் ஆங்கிலத் துறை பேராசிரியர் மணிச் செட்டியாரின் மகள் திருநெல்லையைத் திருமணம் செய்து இரண்டு பெண்குழந்தைகள் இருக்கிறார்கள். மருமகள் எம்.சி.ஏ. படித்தவர். சின்ன மகனின் குழந்தைகள் பாம்பேயில் பள்ளியில் படித்து வருகிறார்கள். விளையாட்டுப் போட்டிகளில் நிறையப் பரிசுகள் வாங்கி இருக்கிறார்கள்.

அம்பத்தூர் வெங்கடாபுரம் தெற்கு பார்க் தெருவில் 1987 இல் இடம் வாங்கி ராமு கல்யாண மண்டபம் கட்டினோம். அதே இடத்திலேயே கார், வேனை ராமு ட்ராவல்ஸ் என்ற பெயரில் வாடகைக்கு விட்டோம். பிறகு ராமு ஏர் பஸ் என ஆரம்பித்து தேவகோட்டை, காரைக்குடி, பொன்னமராவதி, நாட்டரசன்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்குப் பஸ் போய்வந்து கொண்டிருக்கிறது. SEAT; SEAT WITH SLEEPER; A/C SLEEPER என பஸ்கள் இயங்கி வருகின்றன.

பஸ் ட்ரைவர், க்ளீனர், ஆஃபீஸ் வொர்க்கர், மெக்கானிக், சூப்பர்வைஸர், கல்யாண மண்டபத்தில் வேலை செய்யும் வேலை ஆட்கள் எனப் பல குடும்பங்களுக்கு வேலை கொடுத்து ஆதரவு அளித்து வருகிறோம். எங்களது அம்பத்தூர் ராமு கல்யாண மண்டபத்தைப் பிள்ளையார் நோன்பு இழை எடுப்பதற்கும், நகரத்தார் சங்கக் கூட்டங்களுக்கும், மகேஸ்வர பூஜை பொதுக்குழு கூட்டத்துக்கும் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இலவசமாகக் கொடுத்து வந்தோம்.

எங்களது பஸ்ஸில் செல்லும் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் நடத்துகிறோம். அம்பத்தூர் நகரத்தார் சங்க மகளிர் குழுவின் தலைவியாக இருந்து இப்போது கௌரவத் தலைவியாக இருந்து வருகிறேன். இப்போது வள்ளி பழனியப்பன் தலைவியாக இருக்கிறாள்.

எங்கள் மகளிர் நகரத்தார் சங்கத்தால் நடத்தப்பட்ட ஒரு நாடகத்தில் நானும் வள்ளியும் மாமியார் மருமகளாக நடித்தோம். புரசைவாக்கத்தில் இரண்டாம் பரிசு கிடைத்தது. தஞ்சை மாநாட்டிலும் பரிசு கிடைத்தது. செட்டிநாடு வித்யாஸ்ரமத்தில் நடந்த மாநாட்டில் tastes judge ஆக இருந்தேன்.

பழனி நகரவிடுதி கட்ட ரூபாய் ஒரு லட்சமும், தேவகோட்டை நகரப் பள்ளிக்கூடத்துக்கு ரூபாய் இருபத்தி ஐயாயிரமும், அம்பத்தூர் மேனாம்பேடு முருகன் கோவில் கும்பாபிஷேகத்தின்பொழுது ரூபாய் இருபத்தி ஐயாயிரமும், ஏற்கனவே இருந்த மகேஸ்வர பூஜை நிர்வாகத்தினரிடம் ஒரு அறை மட்டும் கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சத்து முப்பதாயிரமும் கொடுத்துள்ளோம்.

எங்களுடைய தொழிலுக்கு முதலில் பேங்க் ஆஃப் மதுராவும், பிறகு நாங்கள் முதலீடு செய்தது  போக சில சொந்தக்காரர்கள், வேண்டியவர்கள், பழக்கப்பட்டவர்கள் குறைந்த வட்டிக்குக் கொடுத்தார்கள். தேவகோட்டையில் என் கணவருடன் பிறந்த அண்ணன் தம்பியுடன் ஒற்றுமையாக மூன்று பேரும் சேர்ந்து எங்கள் வீட்டை அண்ணாமலையார் திருமண மண்டபம் என்று பெயர் வைத்து நடத்தி வருகிறோம். அனைவருடைய ஆதரவினாலும், வாழ்த்துக்களினாலும், சுவாமிகள் புண்ணியத்தில் அனைத்தும் நன்றாகவே நடந்து கொண்டு இருக்கிறது.

இளைய தலைமுறைக்கு நான் சொல்வதெல்லாம் தன்னம்பிக்கையோடு முடிவெங்கள். சோம்பேறித்தனமில்லாமல் உழையுங்கள். தொடர்ந்த உழைப்பு நிச்சயம் உங்களை உயர்த்தும். ” என்று கம்பீரமாகக் கூறினார் ராமகிரி ஆச்சி. கிரி என்றால் மலை என்று பொருள் உண்டு. ராமு ட்ராவல், திருமண மண்டபம் எனப் பல்வேறு தொழில்களில் தடைகளைத் தகர்த்துச் சிகரத்தை எட்டியுள்ள ராமு ஆச்சியின் தன்னம்பிக்கையை நாம் ஒவ்வொருவரும் கைக்கொண்டால் நிச்சயம் நாமும் ஒருநாள் சிகரத்தை எட்டலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)