வியாழன், 18 ஜூலை, 2024

சோகி சிவா சொல்வழக்கு -- 5

8.

கல்யாணப் படைப்பு - திருமணம் முடிந்ததும் சாமி வீட்டில் படைத்து வழிபடுவது.

கோழிப்படைப்பு - சாமிக்கு கோழி அறுத்துப் படைப்பதுண்டு. இதை அசைவப் படைப்பு என்பார்கள்.

ஒறங்கப்பச்சி - உறங்கு அப்பச்சி, தூங்குப்பா எனச் சொல்லுதல்.

மறுவீடு  - திருமணம் முடிந்து மறுவீடு வருவது.

பால்பழம் வைச்சுக் கும்பிடுதல் - வீட்டில் இருக்கும் சாமிக்கும் முன்னோருக்கும் பால் பழம் படைத்துக் கும்பிடுதல்.

பால்பழம் சாப்பிடுதல் - திருமணம் முடிந்த தம்பதியர் தாய்வீட்டுக்கு மறுவீடு வரும்போது உறவுக்காரர்கள் கையால் பால்பழம் சாப்பிடுவார்கள்.

வகைப்பழம் - திருமணத்துக்குச் சீராகக் கொடுப்பது, மேலும் பல வகையான பழங்களை வைத்துக் கும்பிடுதல். ( ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி பைனாப்பிள், மாதுளை, செவ்வாழை, ப்ளம்ஸ்),

பேழை - முன்னோர்களுக்கு வருடா வருடம் படைக்கும் பொருட்களை ( தாலி, மிஞ்சி, சங்கிலி பதக்கம், மோதிரம், உடைகள்)  பேழை எனப்படும் மூடி போட்ட கொட்டான் கூடைகளில் கட்டித் தொங்க விட்டு வைத்திருப்பார்கள். முதல் வருடப் படைப்புச் சேலைகளை எடுத்துக் கொண்டு அடுத்த வருடப் படைப்புச் சேலைகளை அதில் வைப்பார்கள்.

வர்க்கானம் - கலவைசாதம், சித்ரான்னம்.

எளநி கண் தொறந்து வைத்தல் - கோவிலில் எளநியைக் கண் திறந்து முன்னோடி அல்லது காவல் தெய்வத்துக்கு வைப்பார்கள்.

கார் ஓட்டிய மணியமாக - ஒரு விஷயத்தைத் தொடர்ந்து செய்தால் ஒரே வேலை மணியமாக இருக்கு எனச் சொல்வார்கள்.

கல்யாணச் சீர் பரப்புறது - திருமணச் சீரில் மாப்பிள்ளை சாமான், பெண்ணுக்கு வைக்கும் சாமான், மாமியார் சாமான் எனப் பரப்புவார்கள்.

குடி ஊதுறது - இல்லம் புகுதல், திருமணமாகி மாமியார் வீடு செல்லல்,புது இல்லம் புகுதல்.

வேற வைக்கிறது - மாமியார் மருமகள் என்றாலும் தனித்தனியாக ஒரே வீட்டில் வேற வடிப்பது உண்டு. அதற்கு மாமியார் மருமகளுக்குத் தீஞ்சாமான்களைக் கொட்டிக் கொடுப்பார்கள்.

யாபகத்துல - ஞாபகத்துல.

கரும்புத் தொட்டில் - முத்தாளம்மன் கோவில் திருவிழாவில் கரும்பைக் கட்டையாக்கி அதில் தொட்டில் கட்டிப் பிள்ளைகளைப் போட்டு உலாவந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.

பொதுப்படைப்பு - பங்காளிகள் ஐயாக்க வீடு படைத்தபின் பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி கும்பிடும் படைப்பு. ( மெய்யாத்தா படைப்பு )

ஆம்புள்ளையான் - கணவன், புருஷன்.

அம்மாமுண்டி - அம்மான்பெண்டிர், மாமாவின் மனைவி.

கம்மாய் - கண்மாய், ஊரணி

சின்னாச்சி - வீட்டில் இருக்கும் சிறு பெண்களை வேலை செய்வோர் சின்னாச்சி என அழைப்பார்கள். பெரியவர்களை ஆச்சி என்றோ அல்லது பெரியாச்சி என்றோ அழைப்பார்கள்.

இரட்டை வீடு - இரண்டு வீடுகள் இணைந்தது போல் இருக்கும் வீடு, இதில் இரட்டை வளவு, இரண்டு இரண்டாங்கட்டு இருக்கும். ஒரு வீட்டில் புகுந்து மறு வீட்டுக்கும் வரலாம்.

படைப்புப் பள்ளயம் - சாமிக்குப் படைப்பது. ஏழெட்டு இலைகள் போட்டுப் ப்ரசாத உணவுகளை குவித்துப் பழம் வடை போன்றவற்றையும் நிறைய வைத்துப் படைப்பது.

ராராட்டி - தாலாட்டி

தொட்டி கட்டுதல் - சாமிக்குத் தொட்டில் கட்டுவதாக வேண்டிக் கொள்ளுதல்.

பந்திக் கட்டு - திருமணம் போன்ற சமயங்களில் நிறையபேர் அமர்ந்து சாப்பிடும் இடம்.

என்னங்கிறேன் - கணவரை மனைவி விளிக்கும் சொல். ( என்னங்க என்கிறேன் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)