வெள்ளி, 3 மே, 2024

நன்றி முனைவர் திரு. மு. பழனியப்பன் அவர்களுக்கு !

 நற்றமிழ் வளர்த்த நகரத்தார்கள்

(நன்றி பதிப்பாளர் திரு. இராம.மெய்யப்பன் அவர்களுக்கும்)

முனைவர் மு.பழனியப்பன், 
தமிழ்த்துறைத் தலைவர், 
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரி,
திருவாடானை

மூத்த வணிகக் குடியினர் நகரத்தார்கள் ஆவர். நகரத்தார்கள்  வணிகத்தை நன்முறையில் செய்த பொருள் ஈட்டினர். அவ்வாறு ஈட்டிய பொருள் கொண்டு பல்வகை அறச்செயல்களை நடத்தினர். வணிகத்தோடு தம் தாய்மொழியாம் தமிழையும் வளர்க்கும் மேன்மைப் பணியிலும் நகரத்தார்கள் ஈடுபட்டனர். தமிழறிஞர்கள் பலரும் நகரத்தார் மரபில் தோன்றி நற்றமிழ் வளர பாடுபட்டுள்ளனர். அவர்களின் சொல்லாற்றலும், படைப்பாற்றலும் தமிழை மேன்மை கொள்ள வைத்தன. செட்டி நாட்டுச் செந்தமிழ் என்ற நிலையில் தனித்த தமிழ் வளர்ச்சிச் செயல்பாட்டு அடையாளங்களை நகரத்தார் குலத்துத் தமிழ் அறிஞர்கள், படைப்பாளர்கள் உருவாக்கினர். உருவாக்கி வருகின்றனர். 

பக்தித் தமிழ் வளர்த்தார் காரைக்காலம்மையார். அவர் அற்புதத் திருவந்தாதி, மூத்த திருப்பதிகங்கள் பாடி தெய்வத்தமிழை வளர்த்தார் காவிரிப் பூம்பட்டினத்தில் ஞானத் தமிழ் வளர்த்தார் பட்டினத்தார். கோயில் நான்மணி மாலை, திருக்கழுமலம், திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருஏகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபது  போன்ற நூல்களை அவர் பாடியுள்ளார். இவ்விருவரும் காவிரிப் பூம்பட்டினம் சார்ந்த நகரத்தார் பெருமக்கள் ஆவர். தெய்வத் தமிழ் வளர்த்ததில் இவர்களுக்குத் தனித்த பங்குண்டு. இவர்களைத்  தொடர்ந்து தற்போதைய செட்டிநாட்டுப் பகுதியில் தெய்வத் தமிழ் வளர்த்தவர்களாக கீழச் சிவல்பட்டியி்ல் வாழ்ந்த  பாடுவார் முத்தப்பர், கோவிலூரில் வேதாந்த மடம் கண்ட முத்துராமலிங்க ஆண்டவர் போன்றோர் விளங்குகின்றனர். பாடுவார் முத்தப்பர் திருமுகவிலாசம், செயங்கொண்டார் சதகம் முதலியனவற்றைப் பாடியுள்ளார். நகரத்தார் தமக்கென கோயில்கள் பெற்று தெய்வ வழிபாடுகளைச் செய்த நிலையில் பாடுவார் முத்தப்பர் பாடிய செயங்கொண்டார் சதகம்  நகரத்தார் கோயில் சார் இலக்கியமாக விளங்குகின்றது. 

தேவகோட்டையைச் சார்ந்த வன்றொண்டர் என்ற நாராயணன் செட்டியார்  என்பவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டவர். தானும் ஆசானாக இருந்து, காரைக்குடி சொக்கலிங்க ஐயா, வீர,லெ. சின்னையா செட்டியார்  (சிந்நய செட்டியார்). பாலகவி இராமநாதன் செட்டியார் என்ற சிவஸ்ரீ தத்புருஷ தேசிகர்  போன்றோருக்குப் பாடம் கற்பித்துச் செட்டிநாட்டில் தமிழ் பரவ வழி வகை செய்தார். இவரது சீடர்களும் தமிழ் வளர்த்தனர். சொக்கலிங்க ஐயா ஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ், போற்றிக் கலிவெண்பா, திருவூசல் போன்ற நூல்களை எழுதியவர். இவர் சிதம்பரத்தில் மெய்கண்ட சித்தாந்த வித்யாசாலை என்பதை ஆரம்பித்து அங்குத் தெய்வத்தமிழை வளர்த்தார். தேவகோட்டையைச் சார்ந்த வீர. லெ சின்னையா செட்டியார்  திருவொற்றியூர் புராணம், குன்றக்குடி பிள்ளைத்தமிழ், நகரத்தார் வரலாறு, பிரபஞ்ச பந்தம் போன்ற நூல்களை எழுதியள்ளார்.  தேவகோட்டை பாலகவி இராமநாதன் செட்டியார்  அனுட்டான விதி  போன்ற முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் ஆவார்.  

அமராவதிப் புதூரின் வயிநாகராம் குடும்பத்தில் தோன்றிய அ. இராமநாதன் செட்டியாரும் பல நூல்கள் எழுதியுள்ளார். கண்ணுடையம்மை பதிகம், கொன்னையூர் முத்துமாரியம்மன் பதிகம், திருப்பரங்கிரி மும்மணிக்கோவை போன்ற நூல்களை அவர் இயற்றியுள்ளார். 
தமிழறிஞர்கள் தனித்தும் அமைப்பு நிலையிலும் தமிழ் வளர்த்தனர். அவ்வகையில் மேலைச்சிவபுரியில் உள்ள சன்மார்க்கசபை 13.5.1909 ஆம் நாள் தொடங்கப்பெற்று அது முதல் இன்று வரை தமிழ் வளர்த்து வருகிறது. இச்சபையின் தலைமைப் புலவராக விளங்கியவர் தமிழும் வடமொழியும் கற்ற பண்டிதமணி கதிரேசன் செட்டியார் ஆவார். இவர் மண்ணியல் சிறுதேர் என்று வட நூலான மிருச்சகடிகத்தை மொழியாக்கம் செய்துள்ளார். இவரின் கைவண்ணத்தால் சுக்ர நீதியும் தமிழில்  வெளிவந்தது.  திருவாசகப் பகுதிகளுக்கு இவர் உரை வரைந்து அவ்வுரைகள் கதிர்மணி விளக்கம் என்றும் சிறப்பிடத்தைப் பெற்றன. உரைநடைக் கோவை (1,2), இலக்கிய நயம் என்பனவும் இவர் படைத்த உரைநடை நூல்களாகும். இவரின் மாணாக்கராக விளங்கியவர்  செம்மல் வ.சுப. மாணிக்கனார். மேலைச்சிவபுரியைச் சார்ந்த இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக விளங்கினார். இவர் மனைவியின் உரிமை, மனைவியின் உரிமை, கொடைவிளக்கு, இரட்டைக் காப்பியங்கள், தமிழ்க்காதல், நெல்லிக்கனி, தலைவர்களுக்கு, வள்ளுவம், மாணிக்கக் குறள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். இவர் சிறந்த திறனாய்வாளராகவும், படைப்பாளராகவும் விளங்கினார். இவரின் பாதையில் பயணித்தவர்கள்  நெற்குப்பை ராம. பெரியகருப்பன் என்ற தமிழண்ணல், சுப. அண்ணாமலை போன்றோர் ஆவர். மகிபாலன்பட்டியைச் சார்ந்த சி. ராமசாமி செட்டியார், நாகப்ப செட்டியார், பூங்குன்றம் இராமசாமி ஆகியோர்  தொடர்ந்து திருக்குறள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த நூல்களை  எழுதி வெளியிட்டுள்ளனர். 

     தமிழின் செட்டி நாட்டு அடையாளங்களாக விளங்கியவர்கள் தமிழ்க் கடல் ராய. சொக்கலிங்கனார்,  சீர்திருத்தவாதி சொ. முருகப்பா, கம்பன் அடிப்பொடி சா. கணேசன் ஆகியோர் ஆவர். மகாகவி பாரதிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து உதவியவர் கானாடுகாத்தான் வை. சு. சண்முகம் செட்டியார்.  இவர்களும் தனித்து இயங்காமல் இந்து மதாபிமான சங்கம் என்பதை நிறுவி அதன் வழி தமிழ் வளர்த்தனர். இது 1930 ஆண்டு தொடங்கப் பெற்றது.  சொ. முருகப்பா குமரன் என்ற இதழை நடத்தி சமுதாயப் பணியாற்றினார். கம்பராமாயணத்திற்கு அவர் செய்த உரை அருமை உடையது. தமிழ்க்கடல் ராய . சொ மிகச் சிறந்த படைப்பாளர், கட்டுரையாளர், ஆட்சியாளர். இவர் காந்தியடிகள் குறித்துப் பல படைப்புகளைப் படைத்தளித்துள்ளார். காந்தியடிகள் மீது இவர் பல சிற்றிலக்கியங்கள் பாடியுள்ளார். வள்ளவரின்பம், திருக்குற்றால வளம், காதல் கடிதங்கள், காந்தியும் வள்ளுவரும், நாமார்க்கும் குடியல்லோம் போன்ற பல நூல்களை இவர் எழுதியுள்ளார். காரைக்குடியில் கம்பன் கழகத்தைத் தொடங்கியவர் கம்பனடிப்பொடி சா. கணேசன் ஆவார். நாட்டரசன் கோட்டை கம்பரின்  வாழ்க்கை நிறைவு பெற்றது என்பதை  உலகிற்கு உணர்த்தியவர். கல்வெட்டு, சிற்பக் கலை வல்லுநர். பிள்ளையார்பட்டி  கோயிலின் தலவரலாறு எழுதியவர்.  இவர்களால் செட்டி நாட்டுத் தமிழ் மேன்மை பெற்றது. 

     புதுவயல் சண்முகம் செட்டியார் என்பவர் சாக்கோட்டை இறைவன் மீது அளகை அஷ்ட பிரபந்தங்கள் பாடியுள்ளார். தேசியப் போராட்ட காலத்தில் களம் கண்ட சின்ன அண்ணாமலை தன் அனுபவத்தை ‘‘சொன்னால் நம்பமாட்டீர்கள்” என்ற தலைப்பில் நூலாக எழுதியுள்ளார். இவர் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கோட்டையூரில் பிறந்த அண்ணாமலை கருப்பன்  செட்டியார் என்ற ஏ.கே. செட்டியார் உலகம் சுற்றிய தமிழராக அறியப்படுகிறார். தமிழ்நாட்டுப் பயணக் கட்டுரைகள், ஜப்பான் கட்டுரைகள் போன்றன சிறப்பு வாய்ந்தன. காந்தி பற்றி படம் எடுத்த தமிழர் இவர். 

      திரைப்படப் பாடல் உலகில் தனக்கென தனித்த இடம் பிடித்தவர் சிறுகூடல் பட்டியில் பிறந்து, காரைக்குடியில் வளர்ந்து சென்னையில் புகழ்க் கொடி நாட்டியவர் கவியரசர் கண்ணதாசன். இவர் கவிதைகள், நாடகம், காவியம், நாவல், சிறுகதை, தன்வரலாறு போன்ற பல இலக்கிய வகைகளை எழுதியவர். இவரின் அர்த்தமுள்ள இந்துமதம் சிறப்பான எளிமையான வாழ்க்கை நூலாகும். தனிப்பாடல்களில் நகரத்தார்கள் பற்றிய பல பதிவுகளை இவர் தந்துள்ளார். கண்ணப்பன், காந்தி கண்ணதாசன் போன்றோரும்  தமிழ் சிறக்க பல படைப்புகளைப் படைத்தனர்.
துணிவே துணை என்ற தொடரை தன் இலட்சியத் தொடராகக் கொண்டு நாவல்கள், கதைகள் போன்றவற்றைத் தந்தவர் தமிழ்வாணன்  ஆவார். இவரின் மகன்களான லேனா தமிழ்வாணன், ரவி தமிழ்வாணன் ஆகியோர் இவரின் எழுத்துப்பணியைத் தொடர்ந்து வருகின்றனர். 
விரையாச்சிலை முரு. பழ. ரத்தினம் செட்டியார் சிறந்த சைவ சித்தாந்தி.  இவர் கடவுளால் முடியாத செயல்கள், இதோ சைவ சித்தாந்தம் தெரிந்து கொள்ளுங்கள், திருவாசகச் சுவை, ஆணவ மல நீக்கமும் ஒடுக்கமும் போன்ற பல நூல்களை எழுதியவர்.  கண்டனூர் நாகலிங்கையா என்பவர் வேதாந்தப் புலமைபெற்றவர்.  அவர் வாசுதேவமனனம் என்ற நூலைத் தமிழ்ப்படுத்தினார். இவரின் வழியில் வந்த நாகப்பா நாச்சியப்பன் புதுச்சேரியில் பேராசியராகப் பணியாற்றியவர். இவர் தமிழ் நாட்டில் பைரவர் வழிபாடு பற்றி ஆய்வு செய்தவர். 

     மேலைச்சிவபுரியில் பிறந்த பனையப்ப செட்டியார் என்பவர் காந்திமதி. மாணிக்கவாசகன், அமிர்தம், சண்முக நாதன், சந்திரசேகரன் ஆகிய தலைப்பிலான நாவல்களை எழுதியுள்ளார். இவை விடுதலை இயக்க நாவல்கள் ஆகும்.  கண்டனூரில் பிறந்த அரு. இராமநாதன் சிறந்த நாவலாசிரியர். இவர் எழுதியனவாக வீரபாண்டியன் மனைவி, இராச இராச சோழன், பழையனூர் நீலி போன்ற பல நாவல்களை இவர் எழுதியுள்ளார். 
நெற்குப்பை மிகச் சிறந்த இலக்கியவாதிகளின் இருப்பிடமாக விளங்குகிறது. இங்கு  தமிழண்ணல், சோம.லெ ,  தினமணி இதழின் ஆசிரியர் சம்பந்தம் ஆகியோர்  இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழண்ணல், சோம. லெ ஆகியோரின் மக்களும் தற்போது இவர்களின் பெருமையை உலகறியச் செய்துவருகின்றனர்.  தமிழண்ணல் சிறந்த படைப்பாளர்.  திறனாய்வாளர், ஒப்பிலக்கிய அறிஞர். பல இலக்கண நூல்களுக்கு இவர் உரை வரைந்துள்ளார். நல்ல தமிழ் எழுத வேண்டுமா என்ற தலைப்பில் தமிழைப் பிழையின்றி எழுத வழி வகுத்துக் கொடுத்தார். இவரின் புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு வகைமை நோக்கில் அமைந்தது. மத்திய அரசின் தொல்காப்பியர் விருத பெற்றவர் இவர். சோம. லெ அவர்கள் பயணநூல்கள், உலக நாடுகள் பற்றிய நூல்கள், தமிழ் நாட்டு மாவட்டங்கள் பற்றிய நூல்கள், நகரத்தாரியல் நூல்கள், கோவில் குடமுழுக்கு விழா மலர்கள் போன்ற பல்துறை நூல்களை நூற்றுக்கும் மேற்பட்ட நிலையில் உருவாக்கியவர். தன்னலம் கருதாத் தமிழ்த் தொண்டர். 

     வேந்தன்பட்டியில் வாழ்ந்த முனைவர் மெ. சுந்தரம்  சிறந்த ஆங்கில மற்றும் தமிழ் அறிஞராக விளங்கினார். இவர் தமிழகத்து நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வழங்கினார். சங்க காலத் தமிழரின் கடல் வணிகம் என்ற இவரின் நூல் சிறந்த நூல் ஆகும். சுப. அண்ணாமலை அவர்களும்  சிறந்த தமிழறிஞர். இவர் கோவிலூர் வேதாந்த மடத்தின் சார்பில் திருமந்திர விளக்கவுரை வரைந்துள்ளார். இலக்கியச் சங்கமம், திருக்குறள் சிந்தனை போன்ற பல நூல்களையும் எழுதியுள்ளார். 

     சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலரும் தமிழ்க் கொடை புரிந்துள்ளனர். லெ.ப. கரு இராமநாதன், சோம. இளவரசு, பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன், ஆறு. அழகப்பன்,  முத்துவீரப்பன்  இவ்வகையில் குறிக்கத்தக்கவர்கள். 

    செட்டிநாட்டுக் கவிஞர்கள் வரிசையில் புதுவயல் எஸ்.பி வீரப்பா, புதுவயல் செல்லப்பன், அர. சிங்கார வடிவேலன், சோம. சிவப்பிரகாசம்,  பெரி.சிவனடியான், அரு, சோம சுந்தரன், மீனவன், கண்டனூர் ரெ.ராமசாமி, ரெ. முத்துக்கணேசன்,  நாரா. நாச்சியப்பன், சித. சிதம்பரம், புலவர் மாமணி முத்துராமன், நாராயணன்,  கா. நாகப்பன், கனவு தாசன், தாலாட்டுக் கவிஞர் குமரப்பன், அரு. நாகப்பன், அரிமழம் செல்லப்பன், இளங்கோவன், ஆறாவயல் சண்முகம்,  அரசி பழனியப்பன், சொ. சொ. மீ சுந்தரம், அரியக்குடி சபா ரத்தினம், முத்துக்குமார், புதுவயல் பிரசன்னா பழனியப்பன் போன்றோர் குறிக்கத்தக்கவர்கள். குழந்தை இலக்கியம் படைப்பதில் சிறந்தவராக விளங்கியவர் அழ. வள்ளியப்பா. அவர் வழியில் கவிஞர் செல்ல கணபதி, தேவி நாச்சியப்பன், குழ. கதிரேசன் போன்றோர் இயங்கி வருகின்றனர். இலக்கியப் பேச்சாளர்கள் வரிசையில் கண. சிற்சபேசன், சி.எஸ். விசாலாட்சி, பழ. முத்தப்பன், சௌந்தரவல்லி, உமையாள் முத்து, இராகவன் முத்து,  சிவல்புரி சிங்காரம், ரெங்க. லெ. வள்ளியப்பன், தேவகோட்டை இராமநாதன், டோக்கியோ இராமநாதன், மனிதத் தேனீ சொக்கலிங்கம், கண்டர மாணிக்கம் வினைதீர்த்தான்,  திருக்குறள் தேனீ மெ. செயங்கொண்டான், கபிலா விசாலாட்சி, புதுவயல் எஸ். வீரப்பன்,  நாராயண கோவிந்தன் போன்றோர் அமைந்து பேச்சுத்தமிழை வளர்த்து வருகின்றனர். 
சிறுகதைப் படைப்புத்துறையில்  தேனம்மை லட்சுமணன், சுப்பையா வீரப்பன் வ. தேனப்பன் போன்றோர் குறிக்கத்தக்கவர்கள். நகரத்தார் கலைக்களஞ்சியம் உருவாக்கிய முனைவர் கரு. முத்தையா,  முனைவர் சபா. அருணாசலம் ஆகியோர்  திறனாய்வு, பேச்சுத்துறை, கல்வித்துறை ஆகியவற்றில் சிறப்புற்று விளங்கி வருகின்றனர். செட்டிநாட்டுப் பட்டயங்கள், கல்வெட்டுகள் போன்றவற்றில் தேர்ந்தவராக காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் நா. வள்ளி விளங்குகிறார். இக்கல்லூரியில் பணியாற்றிய தியாகராசன், சுப்பிரமணியன், மெய்யம்மை ஆகியோரும் தமிழ் வளர பாடுபட்டவர்கள் ஆவர். தற்போது பணியாற்றும் அன்பு மெய்யப்பன்  சிறந்த கட்டுரையாளர். உலக நாடுகளில் தமிழ்ப் பணி செய்துவரும் சிங்கப்பூர் பேராசிரியர் சுப. திண்ணப்பன், லஷ்மி ஆகியோர் குறிக்கத்தக்கவர்கள். 

  தன்னம்பிக்கை, பொருளாதாரம் பற்றி நூல்களை வழங்கும் சோம. வள்ளியப்பன், அவரின் குடும்பம் சார்ந்த திருக்குறள் கருத்துகளை நூல்வடிவில் வெளியிட்டு வரும் சோம. வீரப்பன் ஆகியோர் தற்கால எழுத்தாளர்களில் கண்டு கொள்ளத்தக்கவர்கள்.  நன்னடையில் பக்தி இலக்கியவாணர்களை ஆராய்ந்து எழுதும் இராமநாதன்  பழனியப்பன் அவர்களின் திருச்செந்தூரின் கடலோரத்தில்  என்பது சங்கரரின் சுப்பிரமணிய புஜங்கத்தின் மொழியாக்க நூலாகும். இவரின் மதுரை மீனாட்சி, காரைக்காலம்மையார் பற்றிய நூல்கள் சிறந்த ஆய்வு நூல்கள் ஆகும். 
கம்பராமாயணம், நாலாயிரம் போன்றவற்றிற்கு உரையெழுதி பெருமை கொண்ட அம்பத்தூர் (பள்ளத்தூர்)  பழ . பழனியப்பன்,  கம்பன் பற்றிய பல நூல்களை எழுதிய கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் போன்றோர் தம் எழுத்துகளும் தமிழ் வளர்ப்பனவாகும்.  பழ. அண்ணாமலை நகரத்தார் கணக்கியல் முறை என்ற நூலை எழுதி நகரத்தாரியல் ஆய்விற்கு அடிகோலினார். பேராசிரியர் தே. சொக்கலிங்கம் (நகரத்தார் அறப்பணிகளும் வரலாறும்) கண்டவராயன்பட்டி சேதுராமன் குமரப்பன், கைலாஷ் ஆகியோர்  நகரத்தாரியல் ஆய்வுகளை நிகழ்த்தி வருகிறார். பேராசிரியர் ஆறாவயல் பிச்சப்பன் நகரத்தார் மரபியல் குறித்து ஆராய்ந்து வருகிறார். பேராசிரியர் இராம இராமநாதன் சிலப்பதிகாரத் தமிழை வளர்த்தவர்.  வணிகத் தமிழ் வளர்ப்பவராக புதுவயல் சேதுராமன் சாத்தப்பன் விளங்கி வருகிறார். மேலும் ராம. மெய்யப்பன், நெற்குப்பை சோம. லெ. சோமசுந்தரம், அலவாக் கோட்டை சித்தார்த் போன்றோரும் எழுத்துத் துறையில் பயணித்து வருகின்றனர். மருத்துவத் தமிழுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருபவராக மருத்துவர் ஜெயபாலன் விளங்குகிறார். அரசியல் தமிழுக்கு ஆக்கம் தருபவராக பழ. கருப்பையா அவர்கள் விளங்கி வருகிறார். இலக்கியச் சிந்தனை அமைப்பினை நிறுவி அதன்வழி படைப்புத் தமிழுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர்களாக ப. லெட்சுமணன், ப. சிதம்பரம் ஆகியோர் உள்ளனர். நூலகத் தமிழ் வளர உதவியவர் கோட்டையூர் ரோஜா முத்தையா அவர்கள் பணி சிறப்பிற்குரியது. 

ஊடகத் தமிழ் உரம் பெற உழைப்பவராக கரு.பழனியப்பன் விளங்குகிறார். மேலும் திரைத் தமிழ் மேன்மை பெற பாடுபட்டு வருபவர்கள் இயக்குநர்கள் முத்துராமன், வசந்த் ஆகியோர் குறிக்கத்தக்கவர்கள். பதிப்புத் துறையில் பழனியப்பா பிரதர்ஸ்  செல்லப்பன், வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு, முல்லைப் பதிப்பகம் முத்தையா. உமா பதிப்பகம் லட்சுமணன், குமரன் பதிப்பகம்,  மணிவாசகர் பதிப்பகம் மெ. மீனாட்சி சுந்தரம், மணிமேகலை பிரசுரம், கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் போன்றோர் குறிக்கத்தக்கவர்கள். நகரத்தார் இதழ்த்துறையில்   தனவணிகன், நமது செட்டிநாடு, ஆச்சி வந்தாச்சு, பூச்சரம், நகரத்தார் மலர் போன்றன  திறம்பட செயல்பட்டுவருகின்றன. 

தமிழ் வளர்க்கும் நிறுவனங்களாக  மேலைச்சிவபுரி, சன்மார்க்க சபையும், வள்ளுவர் மன்றமும்,  கணேசர் செந்தமிழ்க் கல்லூரியும், காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியும்,  காரைக்குடி கம்பன் கழகம், இந்துமதாபிமான சங்கம், திருக்குறள் கழகம் ஆகியனவும் குருவிக்கொண்டான்பட்டி கவிமணி மன்றமும், புதுவயல் ஸ்ரீசரசுவதி சங்கமும், ஓ. சிறுவயல் கண்ணதாசன் நற்பணி மன்றமும், குழந்தை எழுத்தாளர் சங்கமும்  திகழ்ந்து வருகின்றன. 
தமிழுக்குத் துறைதோறும் தொண்டு செய்யும் தமிழறிஞர்கள் பலர் நகரத்தார் மரபில் தோன்றி தமிழையும், பண்பாட்டையும் காத்துவருகின்றனர். தமிழ் உள்ளவரை நகரத்தார் தமிழ்ப் பணிகள் நினைவு கூரப்பெறும்.

1 கருத்து:

  1. நன்றி அம்மான். அனைத்தும் இறை செயலை அன்றி நம் செயல் ஏதுமில்லை.

    - பூங்குன்றம் இராமசாமி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)