வெள்ளி, 8 மார்ச், 2024

முள்ளும் மலரும் ரஜினிகாந்த்

முள்ளும் மலரும் ரஜினிகாந்த்


ஸ்டைல் மற்றும் மேனரிஸங்களால், வசீகரமான பாடிலைன் மற்றும் ஹேர்ஸ்டைலால், கன்னடத் தமிழ் உச்சரிப்பால், அஸால்டான நடிப்பால் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் ரஜினி. மஸ்குலைன் இல்லையென்றாலும் ஒரு ஆல்ஃபா மேல் ஆகவே காட்சி தருபவர் ரஜினி. எம்ஜியார் சிவாஜி, ரஜனி கமல் போன்ற உச்ச நடிகர்கள் பற்றி ஒரு கட்டுரையில் எழுதிவிட முடியாது. பத்துப் பன்னிரெண்டு படங்களை மட்டுமே குறிப்பிடலாம். முழுசாக சொல்லணும்னா ரெண்டு வால்யூம் புக்தான் போடணும்.  

சிவாஜிராவ் கெய்க்வாடா இருந்து சிவாஜியா நடிச்சவரின் வாழ்க்கைச் சரித்திரம் மற்றும் அவர் பெற்ற விருதுகள் பற்றி எல்லாம் உங்க எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். அதுனால இந்தக்கட்டுரை நான் ரசித்த அவரோட நடிப்பின் பல்பரிமாணங்களையும் திரும்ப ரீவைண்ட் பண்ணிப் பார்க்கத்தான். 1975 இலிருந்து 2023 வரை அவர் நடித்த 170 சொச்சம் படங்களில் 100 படங்களுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.

”காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்”, என்று பாடிய ரஜினி பல்லாண்டுகள் கழித்து ”காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை” என்று பாடினாலும் ரசிக்க முடிகிறது. சின்னக் குழந்தைகளின் செல்ல ரஜினி ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் வந்தாலும் எந்திரனாக இரும்பில் முளைத்த இதயத்தோடு சிட்டியாக ஆட்டம் போட்டாலும் நாமும் அவர் கை பிடித்துச் செல்லும் சின்னக் குழந்தையாகிறோம். என் தம்பிகள், என் சிநேகிதிகளின் தம்பிகளுக்கு மட்டுமல்ல. என் குழந்தைகளுக்கும் இன்னிவரைக்கும் அவர்தான் ரொம்பப் பிடிச்ச ஹீரோ.

அறிமுகமே வில்லன். அபூர்வ ராகங்கள், அவள் அப்படித்தான், தப்புத்தாளங்கள், காயத்ரி, புவனா ஒரு கேள்விக்குறி, அவர்கள், மூன்று முடிச்சு, இவற்றில் நெகடிவ் கேரக்டர் என்றாலும் நினைவில் நின்ற பாத்திரங்கள். கமல் ரஜினி டுயோவில் பதினாறு வயதினிலேயில் சப்பாணியாகவும் பரட்டையாகவும் பட்டையைக் கிளப்பியவர்கள். அதே இளமை ஊஞ்சலாடுகிறதில் இருவரும் இதமான நட்பு கொண்டவர்கள். மூன்று முடிச்சிலும் இதே டுயோ நேர் எதிராய்.

ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு என்று தர்ம யுத்தத்தில் தங்கைக்காக உருகுபவர் பைரவியில் நண்டூறுது நரியூறுது என்று தன் தவறால் மரித்த தங்கையின் சமாதியில் கண்கலங்குவார். முள்ளும் மலருமில் தன் அண்ணனின் அனுமதி இல்லாமல் தங்கை ஷோபா திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று ஒரு கை இழந்த இவரை ஓடிவந்து கட்டிப் பிடித்துக் கொள்ளக் கடைசியில் இவர் தங்கைக்காக விட்டுக் கொடுப்பது ஹைலைட். ஆறிலிருந்து அறுபது வரையிலும் “அண்ணன் என்ன தம்பி என்ன” என்று தம்பிகளுக்காக விட்டுக் கொடுக்கும் தர்மதுரை. கூடவே ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம்தான் என்றும் சமத்துவம் பேசியவர்.  

என்னம்மா கண்ணு சொல்லம்மா கண்ணு என்று சத்தியராஜுடன் அலப்பறை செய்து நான் பொல்லாதவன், வெத்திலையைப் போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி என்றெல்லாம் உதார் விடுவார் ஆனால் அவர் உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே என்று ராதிகாவுடன் கைகோர்க்கும் நல்லவனுக்கு நல்லவன். அம்மா நீ சுமந்த பிள்ளை என்றும் அம்மாவை அழைக்காத உயிரில்லையே  என்றும் அன்னையை ஓர் ஆலயமாகக் கருதிய மன்னன். சின்னத் தாயவள் தந்த தளபதி.

சம்போ சிவ சம்போ என்று நினைத்தாலே இனிக்கும் சிங்கப்பூரில் குறுந்தாடியுடன் கிடார் வாசித்தவர். ஓ ப்ரியா என்று சுஜாதாவின் கதையான த்ரில்லர் படத்தில் கணேஷாக மலேஷியா முழுதும் கட்டிடம் கட்டிடமாக ஸ்ரீதேவியைத் தேடிய டிடெக்டிவ். ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன்லைட் என்று அசத்திய இண்டர்நேஷனல் ஸ்டைல் மன்னன், சிவாஜி த பாஸ்.


இன்றைய ஜெயிலர் வரை அவரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அபாரமானது. இது எப்பிடி இருக்கு, அது, நான் ஒருதரம் சொன்னால் நூறு தரம் சொன்னா மாதிரி , ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் கேக்குறான் என்ற இவரது பஞ்ச் டயலாக்குகள் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம். பாம்புடன் சில படங்களில் இவர் தோன்றும் காட்சி நமக்கே கிலியெடுக்கும். நாற்காலிக்குச் சண்டை போடும் நாமெல்லாம் பைத்தியம்தாண்டா என்று குரு சிஷ்யனில் அவர் பாடும் பாட்டு அரசியலை விரும்பாமல் ஒதுங்கி இருக்கும் அவரது மனநிலையைப் பிரதிபலித்தது. மேலும் தனது ரசிகர் மன்றங்களை 2021 இல் கலைத்து நற்பணி மன்றங்களாக்கித் தன் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்திவிட்டார்.

1978 – 79 களில் குப்பத்து ராஜா படம் வந்த காலத்தில் இனி ரஜினி அவ்வளவுதான் என ஒரு கருத்து நிலவியது. ஆனாலும் பொதுவாக என் மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம் என்று முரட்டுக் காளையாக அடித்துத் தூள் பரத்தி மேலே வந்தார் ரஜினி. ஹேய் மாமன் மச்சான் என்று பாடும் சுமலதா பாவம் என்று தோன்றினாலும் எந்தப் பூவிலும் வாசம் உண்டு என்று அதில் அறிமுகமான ரதி அக்னிஹோத்ரிதான் தன் அபார அழகால் என்னைக் கவர்ந்தவர். ஏவிஎம், பஞ்சு அருணாசலம், எஸ் பி முத்துராமன் கூட்டணி எடுத்த இப்படத்திற்குப் பின் ரஜினி சூப்பர் ஸ்டாரானார்.  

மன்னன் படத்தில் தெலுகு சூப்பர் ஸ்டார் விஜய்ஷாந்தியுடன் ஜோடி. செம கலக்கலான படம். ஒரே ஒரு சந்திரன்தான், ஒரே ஒரு சூரியன்தான் ஒரே ஒரு பாட்ஷாதான், நீ நடந்தால் நடையழகு, ஸ்டைலு ஸ்டைலுதான் என்று பாடல்களிலேயே புகழப்பட்டவர். அன்புள்ள ரஜினிகாந்தில் குட்டிப் பெண்ணாக ரஜினிகாந்துடன் நடித்த மீனா முத்து படத்தில் ஜோடி. முத்து ஜப்பானிலும் கெலித்த படம். ரஜினிக்கு மட்டுமல்ல மீனாவுக்கும் ஜப்பான் ரசிகர்களைப் பெற்றுத்தந்த படம்.

அண்ணாமலை கேட்கவே வேண்டாம். கடவுளே கடவுளே என்ற வசனத்தை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அருணாச்சலம் சாதாரணமாக இருந்து திடீர் பணக்காரர் ஆகும் தன் பூர்வீகம் பற்றித் தெரியாத எளிய மனிதனின் கதை. நெற்றிக்கண், தம்பிக்கு எந்த ஊரு, தில்லு முல்லு மூன்றும் அவரது இயல்பான நடிப்பின் உச்சத்தைத் தொட்டவை. ராமனின் மோகனம், ஜானகி மந்திரம் என்று இளைய ரஜினி தன் ஜோடி மேனகாவுடன் பாடுவது மனதை மயக்கும் இதம். அதே மின்சாரக் கண்ணா என்று ரம்யா கிருஷ்ணன் படையப்பாவில் பாடுவது சிறிது அதிர்ச்சி ரகம்.

நான் மகான் அல்ல, நான் அடிமை அல்ல ஆனாலும் அன்புக்கு நான் அடிமை என்பவர். அதிசயபிறவியில் இரட்டை வேடம், வீராவில் இரு வேறு மனிதன் என்று புனைவேடம். கழுகில் நரபலி கூட்டத்தைக் கண்டுபிடித்துத் தண்டிக்கும் பாத்திரம். இதற்கு நடுவில் பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும், கொண்டேனம்மா பேரின்பம் என்று கேரவேனில் ரதியுடன் ஒரு ஆட்டம்.

நமது கதை புதுக்கவிதை என்று ஜோதியுடன் மென்மையாய் ஒரு ரொமான்ஸ். “நீயாவது நல்லா இருக்கியா என்று ஏன் கேட்டீங்க” என்று கேட்கும் ஜோதியிடம் அவர் ”நீ என்னைப் பத்திக் கேட்காட்டா என் இதயமே வெடிச்சுப் போயிருக்கும். அது ஏற்கனவே வெடிச்ச இதயம்தானே” என்று கூறுமிடம் கண்ணில் நீரைக் கசியவைக்கும் நெகிழ்வு.  இதற்கு மாறாக வேட்டைய மகாராஜாவாக ரா ரா என்று ஸ்பிளிட் பர்சனாலிட்டியாக டான்ஸ் ஆடும் ஜோதிகாவின் காதலன் தலையைச் சீவுவது திகில்.   

பாபா, லிங்கா, காலா, கபாலி ஆகியவை அவரது பட லிஸ்டில் சேர்ந்தாலும் நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திராவுக்குப் பின் அவருடைய ரசிகர்களின் மணிக்கட்டுக்களை அலங்கரித்த ராகவேந்திரரின் உருவம் பொறித்த செம்பு ப்ரேஸ்லெட்கள் 86 களில் பிரசித்தம். படையப்பாவில் வெற்றிக் கொடி கட்டியவர். படிக்காதவன், ஆட்டோக்காரன், வந்தேண்டா பால்காரன் என்றெல்லாம் அவர் பாடினாலும் ஒரு நாளும் உனை மறவாத உயிரான நிலை வேண்டும் என எண்ணும் 80 ஸ் கிட்ஸின் எஜமான்.

38 ஆண்டு காலத் திரைப்பயணத்தில் மட்டுமல்ல. சினிமா பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் எல்லாரையுமே தன்னை ஒரு ரஜினியாக உணர வைக்கும் ராஜாதிராஜா. முட்களை விலக்கித் தன் பாதையை மலர்களால் நிரப்பிக் கொண்டவர். எப்போதும் நெகிழ்வோடும் மகிழ்வோடும் தமிழக ரசிகர்களே தன்னை வாழ வைத்த தெய்வங்கள் என்று மறவாமல் குறிப்பிடும் ரஜினி சாருக்கு மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

1 கருத்து:

  1. நல்ல தொகுப்பு என்றாலும் சில சிறு பிழைகள்...  புவனா ஒரு கேள்விக்குறியில் அவர் நெகட்டிவ் கேரக்டர் கிடையாது.  சிவகுமார்தான் நெகட்டிவ் கேரக்டர்.  ரத்தி அக்னிஹோத்ரி அறிமுகமானது முரட்டுக்காளை அல்ல, புதிய வார்ப்புகள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)