வெள்ளி, 1 மார்ச், 2024

பெண் பரிமாணங்கள் - 4. பாசுரங்களுக்குக் கோலமிடும் காயத்ரி

 காயத்ரி பொதிகை மங்கையர் சோலை குழுமத்தில் இருக்கிறார். மார்கழி முழுவதும் தினம் ஒரு பாசுரத்துக்குக் காவிக் கோலம் வரைந்து அசத்தி இருந்தார். பாசுரத்துக்குக் கோலம் என்பது புதுமையான விஷயம் என்பதால் இதுபற்றி அவரிடம் விசாரித்தபோது அவர் கூறியவை இவை. 




கோலக்கலை , எனது  பார்வையில் 
      
                      கோலம்  என்பது ஒரு 'வரைகலைப் பிராத்தனை'. 64 கலைகளில் ஒன்றான கோலக்கலை , நம் வீட்டு வாசலின் அடையாளம். கோலம் என்ற சொல் அழகு, ஒப்பனை, வரிசை என பல பொருள் கொண்டுள்ளது.  வேதகாலம் தொட்டே கோலம் போடும் வழக்கம் இருந்தது என்பதை   யாக சாலை  பூஜையின் போது ,ஹோம குண்டத்தை கோலத்தின் மீது வைத்து , மஞ்சள் ,குங்குமம் ,பூவினால்  அலங்கரித்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன .  அபிஷேகம், ஆராதனை ,பூஜை போன்றவற்றை இசைப் பாடல்களாக பாடி  கடவுளிடம் பிரார்த்தனையை செலுத்துவது போல் , கோலம் மூலமாக நம் பிரார்த்தனையை செலுத்துவதும் ஒரு வழக்கம் தான். 

     நாம் வாசல் தெளித்து அரிசி மாவினால் கோலமிடுவது புழு ,பூச்சிகளுக்கு  உணவாகிறது . செம்மண் இடுவது  துஷ்ட சக்திகள் நம்மை அண்டாமல் காக்கிறது.  வாசல் அழகாக இருக்கையில் நம் மனமும் அழகாக மாறி,  மன சாந்தி அடைகிறது.   
 எந்த ஒரு விஷயத்தையும் ,கோலம் முலமாக எளிதாகத் தெரிவிக்க முடியும். 

“முகம் பார்க்கும் கண்ணாடி”யாக விளங்கும் கோலத்தில்,

புள்ளி - ஒரு சவால்,

கோடு- ஒரு தீர்வு.

நாம் கோலத்தை புள்ளி வைத்து ஒரு சவாலாக ஆரம்பித்து ,கோடுகளால் இணைத்து தீர்வு காண்கிறோம். இதுவே நம் வாழ்க்கை தத்துவமாகவும் அமைகிறது.

    என்னைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு :               திருமதி. காயத்திரி சங்கர்நாராயணனான நான் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை என்ற சிறிய டவுனில்  கூட்டுக்  குடும்பத்தில்  பிறந்து வளர்ந்தவள்.  ஐந்தாவது வயதிலேயே  கோலம் போட ஆரம்பித்து , நான்கு வீடுகளாகச் சேர்த்து ஒரே கோலமாக மார்கழி மாதத்தில் என் தாயாருடன் விளையாட்டு போக்கில் கோலம் போட்டது , 'சந்தோஷத் தருணங்கள்' என்பேன்.   அம்மண்ணின் வாசத்திற்கேற்ப , கற்பனைத்திறன் மிகுந்த  அவ்வூர் மக்கள் கோலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது  மனதில் வேரூன்றியதால் , இத்துறையை தேர்தெடுத்தேன் .

     நான் , செங்கோட்டையில் அரசு பள்ளியில் தமிழ் மொழியில் பத்தாம் வகுப்புவரை படித்து,   அதன்பிறகு  திருவனந்தபுரத்தில் ஸ்வாதித்திருநல் கல்லூரியில்  'இசை'த்துறையில்  கானபூஷன் (4 வருட டிப்ளமா) படித்தேன் .

     இளம் வயதில் திருமணம் ,கூட்டுக் குடும்பம் என ஒரு பக்கம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் குடும்பத்தாரின் உற்சாகமூட்டும் வார்த்தைகளும்  ஒத்துழைப்பும் இருந்ததால் , இசையில் இளங்கலை ,முதுகலைப் பட்டம் பெற்று,   இசையோடும்  கோலத்தோடும் பயணித்தேன். 

             பட்டப் படிப்பை முடித்ததும் ,எனது குருவான டாக்டர் .எஸ்.ஏ.கே.துர்கா அவர்களின் ஊக்குவிப்பினால்   பி.ஹெச்.டி.யில் ஒரு பகுதியாக , அவர்  தேர்தெடுத்த தலைப்பு "ஆரம்பக் கல்வியில் கோலத்தையும்  இசையையும் இணைத்து கற்பித்தல்'. இதில்  நான் கற்றதை , 2008ல் ஆட்டிசம் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு ஒரு  சிகிச்சையாக  கற்றுக் கொடுத்து  அறிமுகப்படுத்தினேன் .  2017-2019ல் கலாச்சார அமைச்சகத்தின் ‘மூத்த பெல்லோஷிப் விருது’ பெற்றேன் .  

 சுமார் 25 ஆண்டுகளாக   இசை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறேன் . அறிவியல்  தொழிநுட்ப வளர்ச்சியை  பயன்படுத்தி ,  மெருகேற்றிக் கொண்டு   ஆன்-லைன் மூலமாக பல வெளி நாட்டு மாணவர்களுக்கு ஸ்கைப் மூலமாக பாட்டு கற்றுக் கொடுக்கிறேன். அவர்கள் இந்தியா வரும் போது ஒரு வாரமாவது நேரில் வந்து கற்றுக்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இவ்வாறு வருபவர்களுக்கு பாட்டு வகுப்பை முடித்த பிறகு ,'பரிசாக ' கோலத்தை கற்றுக் கொடுத்து ,நம் பாரம்பரியத்தை அவர்கள் வசிக்கும் ஊரிலும் தொடர வழி வகுக்கிறேன். 

கோடை விடுமுறையில் , கோலம் பயிலரங்கு  வகுப்புகளை  வீட்டிலும் , ஆன்-லைனிலும் நடத்துகிறேன். கோலத்தின் பழைமை மாறாமல் புதுமையை புகுத்தி,  கோலம் மேலும் வளர வேண்டும் என தோன்றிய எண்ணத்தை,  தொடர்ந்து கொண்டிருக்கிறேன் . 

மார்கழி மாதமும் கோலமும் : மார்கழி மாதம் என்றாலே நினைவிற்கு வருவது   இறை வழிபடு- கோலம், ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள், கர்நாடக இசைக்கச்சேரி. 3-4 வருடங்களாக அன்றைய தினத்தின் திருப்பாவை பாசுரத்தின் பொருளை  வீட்டு  வாசலில் கோலமாக இடுகிறேன். 

கோலத்தைப் பற்றிய எனது  வாழ்க்கைத் தத்துவம் - கோலம் என்பது 'முகம் பார்க்கும் கண்ணாடி ' போன்றது. மனிதனின் உள்மனதின் பிரதிபலிப்பே கோலம் . மனித வளத்தின் தத்துவத்தை எடுத்துறைக்கிறது கோலம் . இன்று நாம் போடும் கோலம் நாளை மறைகிறது . மறு நாள் , மீண்டும் ஒரு புதூ கோலம் பிறக்கிறது.  ஒரு மனிதன் பூமியில் பிறந்து வாழ்வது போல் , கோலம் மண்ணிலே பிறந்து மண்ணிலே மறைகிறது . நாம் பூமியை மாசு படுத்தினாலும் , பொறுத்துக்கொண்டு பூமி நமக்கு நீர், காய், கனிகள் ,தானியங்களை தருவதற்கு ,நாம் 'பூமி மாதா 'விற்கு நன்றி தெரிவிக்கும் விதமே கோலமாகும். 

நான் ஒரு இயற்கை விரும்பி. நம் பூமி மாசுபடாமல் இருக்க என்னால் முடிந்த விதிமுறைகளைப் பின்பற்றுவேன். சுலபமாக மக்கக்கூடிய அரிசிமாவு மற்றும் செம்மண் பொடி மட்டுமே உபயோகித்து கோலம் போடுவேன் .   

   சாதனைகள் :   அமெரிக்க தூதரகத்தின் 2020 ஆம் ஆண்டு 'நன்றி தெரிவிக்கும் விழா'வின் அழைப்பிதழை எனது  கோலம் அலங்கரித்தது.   ‘மைலாப்பூர் டைம்ஸ்’ என்ற மிகப் பிரபல வார இதழ், பல வருடங்களாக   நடத்தும் ‘கோலப்போட்டி’யில் நீதிபதியாகவும்  ,தெற்கு ரயில்வே, அரசு நிறுவனங்கள் , பன்னாட்டு நிறுவனங்களில் , கோலப்போட்டிக்கு நீதிபதியாகவும் ,  கோல வகுப்புக்களும் நடத்தியுள்ளேன் .

அயல் நாட்டுப் பயணம் :
பணி நிமித்தமாக ஜப்பான் சென்ற என்  மகனுடன் செல்ல ஒரு அறிய வாய்ப்பு  கிடைத்தது. ஜப்பானிலுள்ள என் ஆன்-லைன் மாணவர்கள் மூலம் ஜப்பானியர்களிடமிருந்து கிடைத்த  அழைப்பை ஏற்றுக் கொண்டு மூன்று நாட்கள் ஒசாக்கா, நாரா,  டோக்கியோவில்  கோல பயிலரங்குகள் நடத்திதேன். கோலம் என்றால் என்ன ,  அரிசி மாவை கோலப் பொடியாக  பயன்படுத்தி எப்படி கோலம் போடுவது , இழைகோலம் போடுவது எப்படி, சுலபமாக கோலம் போடும் வழிமுறைகள், ஏன், எதற்கு, எப்போது, எவ்வாறு,எப்படி  கோலம் போடலாம் என்பதை  கற்றுக் கொடுத்தேன்.   

      என்னிடம் கோல வகுப்பில் பங்கேற்ற ஜப்பானியார்கள் பலர் ,ஸ்ரீ  தயானந்த சரஸ்வதியின் சிஷ்யர்கள். அவரது வழிமுறைகளை பின்பற்றி வேதாந்தா வகுப்பில்  பங்கேற்பவர்கள் . அவர்கள் ,முதல் முதலில் கோலம் போட கற்றுக் கொண்டு ஆரம்ப  நிலைக் கோலத்தை  திரும்பத்திரும்ப போட்டுப் பார்த்து பழகிக் கொண்டு, கோலக்கலையை வெகுவிரைவில் கற்றுக் கொண்ட 'விடாமுயற்சி ' , என்னை வியக்க வைத்தது .

  ஜப்பானியர்களுக்கும் நம் இந்தியர்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளதைக் கண முடிந்தது.  இதனால் தானோ , நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும்  விளக்கும் கோலக்கலையை ஆர்வமாகவும் , சுலபமாகவும் கற்றுக்  கொண்டனர்  , எனது மாணவர்கள் ! கோவிலின்  உள்ளும் , அதன்  வாசலிலும் ,தெய்வீக மணம் கமழ நான் கற்றுக் கொடுத்த கலையை ஜப்பானியர்கள் நேர்த்தியுடன் கற்றுக் கொண்டது  , என்னை 'மெய் சிலிர்க்க' வைத்தது.

 முடிவுரை : இன்றைக்கும் நான் எந்த ஊருக்கு சென்றாலும்   அவ்வீட்டு வாசளை மெழுகி கோலமிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.  இந்திய கலாச்சாரம் ,பண்பாட்டின் முக்கிய அம்சமாக விளங்கும் கோலக்கலையை உலகெங்கும் பரப்ப எனக்கு கிடைத்த ஒரு 'பொக்கிஷமாக' நான் இதை கருதுகிறேன். இத்தெய்வீக கோலக்கலை பற்றிய 'விழிப்புணர்வு  பயிலரங்குகள் ' தொடர்ந்து நடைபெறவும் , இக்கலையின் மகத்துவத்தை பள்ளி கல்லூரியில் பாடத்திட்டமாகக் ( syllabus  ) கொண்டு சென்றால் , கோலக்கலையின்  நுணுக்கங்களை , வருங்கால தூண்களான  மாணவர்களும் தெரிந்து கொள்ள  வழி வகுப்போம். 
 நம் வீட்டு  வாசலில் கோலமிட்டு  , நம் வாழ்கையை  கோலாகலமாக   கொண்டாடுவோமாக !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)