வியாழன், 8 பிப்ரவரி, 2024

நலமே அருளும் ச்ருதகர்மா

 நலமே அருளும் ச்ருதகர்மா


ஒருவரின் பார்வையின் தீட்சண்யத்தைப் பார்த்து இந்த உலகே பயப்பட முடியுமா. அதுவும் இந்த உலகைப் படைத்த பரம்பொருளான சர்வேஸ்வரனே ஒளியும் வண்ணம் தீர்க்கப்பார்வை கொண்டவர் யார்? அவரால் விளைந்த நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.

பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் உதித்தவர் நான்முகன். இவரது மானஸ புத்திரர்கள் எழுவர். அவர்களுள் மூத்தவரான மரீசி மகரிஷி, சம்பூதி தம்பதிகளின் மகன் காசியபர். இவருக்கும் தக்ஷப் ப்ரஜாபதியின் மகளான அதிதிக்கும் சூரிய பகவான் மகனாகப் பிறந்தார். சூரிய பகவானின் மனைவி சுவர்ச்சலாதேவி. இவர்களுக்கு வைவஸ்தமனு, யமன், யமுனை ஆகிய குழந்தைகள் பிறந்தனர்.

ஒரு கட்டத்தில் சூரியனின் ஆக்ரோஷக் கதிர்களைத் தாங்கொணாமல் சுவர்ச்சலாதேவி அவரிடம் அதைச் சொல்ல அஞ்சி தன்னைப் போலவே ஒரு நிழலுருவை உருவாக்குகிறாள். அவள் பெயர் சாயாதேவி. தன் இடத்தில் இருந்து சூரிய பகவானோடு குடும்பம் நடத்தும்படிக் கூறிவிட்டு சுவர்ச்சலா தேவி தவம் செய்யப் போய் விடுகிறாள்.

சாயாதேவிக்கும் சூரிய பகவானுக்கும் தபதீ, ச்ருதச்ரவஸி, ச்ருதகர்மா என்ற குழந்தைகள் பிறந்தார்கள். மாற்றாந்தாயாக நடக்காவிட்டாலும் யமன் தன் தாயின் அன்பில் வேறுபாடு கண்டு சூரியனிடம் சொல்கிறார். சூரியன் சாயாதேவியை அழைத்து விசாரிக்க அவள் ‘தான் சுவர்ச்சலாதேவியின் நிழலுரு’ என்ற உண்மையை ஒப்புக் கொள்கிறாள். சூரியன் சுவர்ச்சலா, சாயா இருவரையும் மன்னித்து ஏற்றுக் கொள்கிறார்.

சூரியனோ தகதகக்கும் தங்கநிறம். ச்ருதகர்மாவோ கருநிற மேனி கொண்டவர். பார்வை வேறு தீட்சண்யம். இதனால் அடிக்கடித் தந்தையின் கோபத்துக்கு ஆளாவார் ச்ருதகர்மா. எனவே தாய் சாயாதேவி முடிந்தவரை அவரை அனைவர் பார்வையிலிருந்தும் மறைத்து வைப்பாள். சொல்லப் போனால் தன் மகனின் பார்வையினால் யாருக்கும் எந்தக் கேடும் வந்துவிடக் கூடாது என எச்சரிக்கையாக இருப்பாள். ஆனால் விதி யாரை விட்டது ?அது விநாயகரையும், சர்வேஸ்வரனையும், தசரதனையும், நளனையும் படுத்திய பாடு பெரும்பாடு.

கைலாயத்தில் விநாயகப் பெருமான் அவதரித்ததை முன்னிட்டு மாபெரும் வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த வைபவத்தைப் பார்க்க ச்ருதகர்மாவுக்கு ஆசையோ ஆசை. ஆனால் தாயாரோ போகவிடாமல் தடுக்கிறாள். ”ஒரு ஓரமாக நின்னு பார்த்துட்டு வரேம்மா” என்று கெஞ்சிக் கூத்தாடித் தாயாரைச் சமாதானப் படுத்திவிட்டுச் செல்கிறார் ச்ருதகர்மா.


கைலாயத்தில் எள் போட்டால் எண்ணையாகிவிடும் அளவு கூட்டம். அங்கே எல்லாரும் தொட்டிலில் கிடக்கும் குட்டி கணபதியின் பேரழகைப் புகழ்ந்து கொண்டே செல்கிறார்கள். ச்ருதகர்மாவுக்கும் ஆசை. அவரும் கூட்டத்தில் முண்டியத்துப் போய்க் குழந்தையைப் பார்க்க அக்கணமே அக்குழந்தையின் தலை காணாமல் போகிறது. இதென்ன விபரீதம். ச்ருதகர்மாவே ஒரு கணம் அதிர்ச்சிக்கு ஆளானார். பார்வதி தேவியோ பதட்டத்துடன் பரமசிவனைப் பார்க்க அவர் அக்கணம் வடக்கில் தலைவைத்துப் படுத்திருந்த ஒரு யானையின் தலையைக் குழந்தையின் தலையோடு பொருத்த கணபதி விநாயகர் ஆகிறார்.

“என் குழந்தைக்கு ஏன் இப்படி” என பார்வதி கேட்க, பரமனோ” மனிதமுகம் இருந்தால் அசுர சம்ஹாரம் செய்ய முடியாது. கணபதியால் அசுர சம்ஹாரம் நடைபெறவேண்டி இருக்கு. அதுனால இப்படி ஆச்சு. ச்ருதகர்மாவின் பார்வை நலம்தான் செய்திருக்கு” எனச் சமாதானம் சொன்னாலும் பார்வதி கோபத்தோடு ”ச்ருதகர்மாவின் கால் ஊனமாகட்டும்” எனச் சாபமிடுகிறாள். ஊனமாக வீடு திரும்பிய மகனைப் பார்த்து வெகுண்ட சாயாதேவி சும்மா இருப்பாளா. அவள் “கஜமுகன் லம்போதரன் ஆகட்டும் “ என சபிக்கிறாள். அதனால் கணபதியின் வயிறு தொந்தியைப் போல் பெரிதானது.

இச்சம்பவங்களால் சூரியபகவானின் கோபம் கடுமையானது. அதனால் கடுந்தவம் செய்து சர்வேஸ்வரனிடம் தன் தந்தைக்கு நிகரான வலிமையைப் பெறுகிறார். சர்வேஸ்வரன் ”சனி உன் பக்தியை மெச்சி உனக்கு ஈஸ்வரப் பட்டம் தந்தேன்” என்கிறார். அத்துடன் நவகோள்களில் ஒன்றாகவும் ஆக்கினார். பூலோகவாசிகளின் பூர்வ புண்ணியத்தின்படி அவர்களைச் சோதித்துப் பலன் வழங்கும் பொறுப்பையும் ஒப்படைத்தார். வரம் கிடைத்ததும் அதைப் பரமன் மேலேயே பரீட்சித்துப் பார்க்க ஆசையுறுகிறார் சனி பகவான். இதென்ன விபரீத ஆசை எனப் பரமன் கேட்கவில்லை.

சனியின் விருப்பப்படி பூமியில் அவதரித்தார். ஆனால் சனி தன்னைப் பீடிக்காமல் இருக்க தாமரைத் தடாகமொன்றில் தாமரைத் தண்டின் கீழே மூன்று நாழிகை பதுங்கி இருந்தார். அவர் வெளியே வந்ததும் சனி அவர் முன் தோன்றினார். “ என்ன சனி? நீ என பெரிய சனியா ? உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை பார்த்தாயா?” எனக் கேட்க, சனியனோ” ஐயனே! நெற்றிக்கண்ணால் அனைத்தையும் பஸ்பமாக்கும் தாங்களே என் பார்வையின் வீர்யத்திலிருந்து தப்பிக்கத் தாமரைத் தண்டில் ஒளிந்தீர்களே. இது ஒன்று போதாதா” எனக் கேட்க பரமன் ”நானாக இருந்தாலும் உன் பார்வையிலிருந்து தப்பமுடியாது என்ற உண்மையை உலகம் உணரவேண்டும் என்பதற்காகவே நான் ஒளிந்தேன். “ எனக் கூறி மறைந்தார்.   

அறுபதாயிரம் ஆண்டுகள் அரசுக் கட்டிலில் அமர்ந்து ஆட்சி செய்தவர் தசரதச் சக்கரவர்த்தி. ஒரு முறை பன்னிரெண்டு வருடம் அவரது இராஜ்ஜியத்தைப் பஞ்சம் தாக்கப் போவதாக ஜோதிடர்கள் ஆரூடம் சொன்னார்கள். ”மாதம் மும்மாரி பொழியும் நாட்டில் அவ்வாறான நிலை ஏன் ஏற்படும்” என அவர்  கேட்க ”அதற்கெல்லாம் சனிபகவானே மூலகாரணம்” என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். வசிஷ்டரிடம் என்ன செய்யலாமென மன்னர் ஆலோசனை கேட்க அவரோ ”சனிபகவானை நேரில் கண்டு இதற்குத் தீர்வு காண்பாயாக” எனக் கூற தசரதன் தன் தங்கத் தேரில் ஏறிச் செல்கிறார்.


சனிபகவானைக் கண்டதும் தாங்காத கோபத்தோடு ஏதும் பேசாமல் தன் வில்லில் நாண் ஏற்றி சம்ஸார அஸ்திரத்தைப் பிரயோகிக்க முற்படுகிறார். நாட்டு மக்கள் நலனுக்காகத் தன்னிடம் போரிட வந்திருக்கும் மன்னரைப் பார்த்துச் சனி பகவான் மனமிரங்கி “மன்னா! மக்கள் நலனுக்காக வந்திருப்பதால் உன் பிழை பொறுத்தேன். என்ன வரம் வேண்டும்” எனக் கேட்க அவரோ ”பஞ்சம் தாக்காமல் மழை பொழிய வேண்டும்” என்ற வரம் கேட்கிறார். அது போலவே சனீஸ்வரனும் அருள்கிறார்.

இத்துடன் ஒருவரைப் பீடிக்கும் போது அத்துயரைச் சனிபகவானும் அடைகிறார் என்பதை நளன் என்னும் மன்னனின் சரித்திரம் கூறுகிறது. நிடத  நகரத்தின் அரசன் நளன். அவன் மனைவி தமயந்தி. ஒருமுறை புறங்கால் நனையும்படி நீரூற்றிக் கழுவாமல் பூஜையில் அமர்ந்தான் நளன். நியம நிஷ்டைகளில் கறாராக இருக்கும் சனி பகவான் இதுதான் சாக்கு என அவனைப் பிடித்துக் கொண்டார். இதன் விளைவால் அவன் புஷ்கரன் என்பவனோடு சூதாடி நாடு நகரம் அனைத்தும் இழந்தான்.

மனைவியோடு கானகம் புகுந்து இன்னல்களை அனுபவித்தான். ஒருகட்டத்தில் மனைவி தூங்கும்போது அவளை விட்டுப் பிரிந்து காட்டுக்குள் சென்றுவிட்டான். அப்போது காட்டுத்தீயில் கார்க்கோடகன் என்ற பாம்பு சிக்க அதைக் காப்பாற்றுகிறான். அதுவோ தன்னைக் காத்தவன் என்றும் எண்ணாது அவனைத் தீண்டுகிறது. பாம்பின் விஷம் ஏறியதால் நீலநிறமாகும் அவன் கறுத்துச் சிறுத்து அடையாளம் மாறிப் போகிறான். ”உனக்குப் போய் உதவி செய்தேனே உன் புத்தியைக் காட்டி விட்டாயே “ என அவன் வருந்த அது அரவுரியைக் கொடுத்து ”தேவையான போது இதை அணிந்தால் உன் சுய உருவம் திரும்பும்” எனக் கூறி மறைகிறது.

பல்வேறு இக்கட்டுகள், இன்னல்கள், போராட்டங்களுக்குப் பிறகு தமயந்தியைச் சந்தித்து அரவுரியை அணிகிறான் நளன். நாட்டையும் மீட்டுத் திரும்ப ஆட்சிக்கு வருகிறான். ஆனாலும் அவன் மனத்தில் நிம்மதி இல்லை. தீர்த்த யாத்திரை செய்து திருநள்ளாறு வந்து வணங்கும்போது சனியின் அருளால் நிம்மதி கிட்டுகிறது.

அவன் சனி பகவானிடம் கேட்கிறான்” இவ்வளவு இன்னல்களையும் நான் அனுபவிக்க நேர்ந்தது ஏன்?” “அன்பு நளனே, இத்துன்பங்களை நீ மட்டுமா அனுபவித்தாய். உன்னோடு சேர்ந்து நானும்தான் அனுபவித்தேன். கார்க்கோடகனின் விஷத்தால் அன்றே நீ அழிந்திருப்பாய். நீ அழியாமலிருக்க அதை நான் ஏற்றுக் கொண்டேன். அல்லும் பகலும் அவ்விஷம் என்னை மிகவும் வாட்டியது. படாதபாடு பட்ட நான் உன்னை விட்டு நீங்கும் இத்தருணத்தில்தான் நிம்மதி அடைந்தேன். உன் கதையைக் கூறி என்னை வணங்குவோர்க்கு எந்த இடரும் கொடுக்க மாட்டேன் ” இதைக் கேட்டு நளன் மனம் உருகி சனீஸ்வரனை வணங்குகிறான். இவ்வாறு வேண்டியவர் வேண்டாதவர் எனப் பாகுபாடு காட்டாது தன் பார்வையாலும் நலமேதான் நல்குவான் ச்ருதகர்மா எனும் சனிபகவான்!!!  


”வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்

ளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி

சனிபாம்பி ரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)