சனி, 3 பிப்ரவரி, 2024

கலைச்செல்வங்களைக் கொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா

கலைச்செல்வங்களைக் கொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா 



மத்தியதர வர்க்கத்தில் பிறந்து திருமணத்துக்குப் பின் பல மொழிகளும் கற்று நூல்கள் பல படைத்துள்ளார் மதுமிதா என்னும் பெயரில் எழுதிவரும் கவிதாயினி மஞ்சுளாதேவி.  இவர் இராஜபாளையத்தில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்ட தியாகி, காந்தி அரங்கசாமிராஜா அவர்களின் பேத்தி. தந்தை ரகுபதிராஜா; தாயார் பாக்கியலட்சுமி. கணவர் ரெங்கனாத ராஜா; மகன் பத்ரிநாத்; மகள் அம்ருதா ப்ரீதம். எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளமோ இன் போர்ட்போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். இவரின் தாய்மொழி, தெலுங்கு. ஹிந்தி பிரவீன் உத்தரார்த் வரையும், சமஸ்கிருதத்தில் பட்டயப்படிப்பும் படித்துள்ளார். 

இல்லறக் கடமைகள், வீட்டில் உள்ளோர் தேவைகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டுப் பல சமயம் இரவு நேரங்களில் அமர்ந்து தனது இலக்கியப் பணியைத் தொடர்வார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் கணவர் ஆகியோர் உடல் நலக் குறைவுக்குள்ளான போதும் திடீரென புற்றுநோய் தாக்கிக் கணவர் ஆஸ்பத்ரியில் அனுமதிக்கப்பட்டபோது ப்ளேட்லெஸ் கவுண்டை மாற்ற இவர் இரத்தம் தேடி அலைந்ததும் படித்தால் அதிர்ந்து போவீர்கள். முடிவில் இவரது கணவரைப் புற்று காவு கொண்டதும் முடங்கிப் போனவர் பல மாதங்களுக்குப் பின் தன்னைத் தானே மீட்டெடுத்துத் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்து வருகிறார்.

இவர் எழுதியுள்ள நூல்களைப் பட்டியலிட்டால் வியப்பு மேலிடும். இவரின் மொழியாக்க நூல்கள் நீதி சதகம் (பர்த்ருஹரியின் தத்துவங்கள்), பர்த்ருஹரியின் சுபாஷிதம், தைவான் நாடோடிக் கதைகள், வசீகரிக்கும் தூசி (ஒரிய கவிஞர் பிரதீபா சத்பதி), அக்கமகாதேவி வசனங்கள், மேகதூதம் (மகாகவி காளிதாஸ்), நிஜ இளவரசி (ஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் ), கவிஞர் சித்தலிங்கையாவின் 40 கன்னடக் கவிதைகள், வேமன மாலை, பூக்களை விற்ற ஊர் (கவிஞர் பெருகு ராமகிருஷ்ணா), பெத்தி பொட்ல சுப்பராமய்யா அவர்களின் 34 கதைகள், சோதனைக் குடுவை (சில்வியா ப்ளாத்), முடிவற்ற யாத்திரை ( சூத்ர ஸ்ரீனிவாஸ்), கஸ்தூர்பா VS காந்தி ( பரகூர் இராமச்சந்திரப்பா ).

மௌனமாய் உன் முன்னே, காலம், தசாவதாரம், காந்தியமும் நானும், நினைவில் அன்புள்ள பறவை, ஆகியவை இவர் எழுதிய நூல்கள். பாயும் ஒளி நீ எனக்கு, இராஜபாளையம் ஸ்பெஷல், மதிப்பீட்டுக் கலை ஆகியவை இவரது மின்னூல்கள். நான்காவது தூண் என்ற தலைப்பில் 18 பத்திரிகை ஆசிரியர்களின் நேர்காணல்களின் தொகுப்பு மற்றும் இரவு, மரங்கள், பருவம், தண்ணீர் – நீரலைகளும் நினைவலைகளும், அகம் ஆகிய தொகுப்பு நூல்களின் ஆசிரியர். 5 புத்தகங்கள் அச்சில் உள்ளன.

மதுமிதாவின் காற்றுவெளி என்னும் பெயரில் வலைப்பூவும் யூட்யூப் சேனலும் தொடங்கிப் பங்களிப்புச் செய்து வருகிறார். நூற்றுக்கணக்கான ஆடியோ புத்தகங்கள் மற்றும் வீடியொக்கள் வெளியிட்டுள்ளார்.  600 க்கும் மேற்பட்ட நேர்காணல்களைச் செய்துள்ளார். தமிழ்குஷி எப். எம். இணைய வானொலியில், ஆட்டோகிராப் என்னும் நிகழ்ச்சியில் 60 க்கும் மேற்பட்ட நேர்காணல்களைச் செய்தவர். பொதிகை, ஜெயா, கலைஞர், மக்கள், வின்,பெப்பர் தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளில்பங்கு பெற்றுள்ளார். பொதிகையிலும் கொழும்பு ஆதவன் தொலைக்காட்சியிலும் இவரின் நேர்காணல்கள் வெளியாகியுள்ளன.

மொழிபெயர்ப்புக்கான திசையெட்டும் விருது, இலக்கியச் சாதனையாளர் விருது - மணிமேகலை மன்றம், இராஜபாளையம், சாதனையாளர் விருது - பத்திரிகை சங்கம், சென்னை, அப்துல்கலாம் நினைவு சாதனையாளர் விருது - நெல்லூர், பல்துறை இலக்கியச் செல்வி விருது, கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு விருது, சாவித்திரிபாய் புலே விருது, அக்கமகாதேவி விருது, சாதனையாளர் விருது 2020, 2021– இராஜபாளையம், ஸ்பாரோ இலக்கிய விருது (2020) மும்பை, அறம் விருது 2021 இராஜபாளையம், ஸ்ரீ சக்தி விருது, ஜி நாகராஜன் நினைவு இலக்கிய சிற்பி விருது , தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை,தாரகை விருது தென்சென்னை தமிழ்ச்சங்கம் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், மங்களூர் பல்கலைக் கழக நிகழ்வில் கவிதை வாசிப்பு,  சர்வதேச கவிஞர்கள் சந்திப்பு 'Poetic Prism' விஜயவாடாவில் கலந்துகொண்டு கவிதை வாசிப்பு  2016, 2017, 2018 மூன்றுமுறை, டெல்லியில் Saarc சார்க் இலக்கிய விழாவில் கலந்துகொண்டு  சர்வதேச கவிஞர்கள் நடுவில் கவிதை வாசிப்பு மற்றும் உரை,  இலங்கையின் கண்டி தமிழ்ச்சங்கம், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், நூலகங்களில் உரை. அமெரிக்காவில் வள்ளுவன் தமிழ் அகாதெமி எட்டாவது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு உரை ஆகியன இவர் கௌரவிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள்.

தமிழ்நாடு அரசு இராஜபாளையம் பெண்கள்குழந்தைகள் நூலகம்  அமைய காரணியாகஇருந்தவர். 1991 களில் இருந்து இந்த நூலகத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நூலக வாசகர் வட்ட தலைவியாக இப்போதும் செயல்படுபவர். துளி அமைப்பில் இருந்து சேவைப்பணிகள் ஆற்றி வருகிறார். துளி அமைப்பின் துணைத் தலைவர். இரத்த தானம் செய்தல், பார்வையற்றோருக்கு வாசித்தல், பரீட்சை எழுதுதல், குடும்பப் பிரச்சினைகளுக்கு கவுன்சிலிங் என சேவைப்பணிகளில் இயங்கி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)