திங்கள், 8 ஜனவரி, 2024

காவல்தெய்வம் டாமி

 காவல்தெய்வம் டாமி

ஹேய் ஹோய் ஹூ என்று மிஷின் இம்பாஸிபிளின் பின்னணி இசை ஒலிக்க டாம் க்ரூஸ் மலையேறிக் கொண்டிருந்தார்,. காரை ஓட்டிக் கொண்டிருந்த ஸாம் பென் ட்ரைவை எடுத்து இசையை நிறுத்திவிட்டு கடற்கரைச் சாலையில் நிறுத்தினான். சிறிது தூரத்தில் அவனது அன்பிற்குரிய முத்தழகி நடந்து வந்து கொண்டிருந்தாள். ஆதி தேவதை..அற்புத சௌந்தரி. ரோஜாப்பூ.

 

வேகமாக வந்தவள் மூச்சிறைத்தாள். ’என்னாச்சு டாமிக்கு?” . கேட்கும்போது அவள் குரலில் பதட்டம் நிலவியது. மூன்று நாளாயிற்று டாமி இறந்து. அதைச் சொல்ல அவனுக்கும் வருத்தம் மனதைப் பிய்த்தது. டாக் ஷோவில் எல்லாம் டாமி முதல் கப் வாங்காமல் திரும்பியதே இல்லை. அவர்கள் குடும்பத்தில் யார் எந்த மனநிலையில் இருந்தாலும் அதை மாற்றும் மந்திரம் டாமியின் கொஞ்சலில் இருந்தது.

 

குழந்தைகளுடன் குழந்தைகளாகச் சுற்றியே திரிந்து கொண்டிருக்கும் டாமி. கடைசியில் குழந்தைகளைக் காப்பாற்றி விட்டுத் தான் பலியாகி விட்டது.

 

” மூன்று நாள் முன்னே கோடை போயிருந்தோம். அங்கே ப்ராம்புலேடரில் பசங்களை உக்காரவைச்சு நீலாக்காவும், தேவியும் கூட்டிட்டுப் போயிட்டிருந்தாங்க. அப்போ ரோட்டோட இறக்கத்துல நந்தினி இருந்த வண்டி தேவியோட கைலேருந்து வழுக்கி ஓட ஆரம்பிச்சிருச்சு. எதிர்ல ஒரு டூரிஸ்ட் பஸ் வந்திருக்கு. தேவி வேகமா ஓடிப் பிடிக்கிறதுக்குள்ள டாமி குறுக்கே பாஞ்சு பஸ் சக்கரத்தடியில விழுந்திருச்சு. ட்ரைவர் சடன் ப்ரேக் போட்டுட்டார். ப்ராம் ஓரமா ஓடி பாதுகாப்புச் சுவர்ல முட்டி நின்னுருச்சு. ஆனா டாமி ஸ்பாட் அவுட். அது ஓடித் தடுக்காட்டா பஸ் நந்தினி வந்த ப்ராம் மேலே மோதி இருக்கும்.

 

அவசரமாக அவன் வாயைப் பொத்தினாள் அழகி. ” சொல்லாதீங்க. சொல்லாதீங்க. ”கண்ணில் நீர் வழிந்தது அவளுக்கு அவனுக்கும் கசிந்தது. கர்ச்சீஃப் எடுத்துக் கண்ணைத் துடைக்கக் கொடுத்தான். என்ன செய்வது ? வீட்டின் இரு மருங்கும் டாமியின் உருவத்தை வடித்து நிறுத்தி இருக்கிறான் நேற்றுத்தான். வீட்டின் காவல் தெய்வம் ஆகிவிட்டது டாமி.

 

காரின் வெக்கையிலிருந்து அவள் மேல் ரோஜாப் பூப்போல் ஒரு சுகந்தம் வீசிக் கொண்டிருந்தது. பவளமல்லி ராணியின் வாசம் போல தேவியின் வாசம் என்ன என்று நினைக்கும் போது மல்லிகைப்பூ வாசமடித்தது அவன் மனதுக்குள்.

 

மூக்கை உறிஞ்சியபடி சமாதானமானவள் விரல் நகங்களை ஆராய்ந்தவாறு சொன்னாள். ”அப்பாவும் அம்மாவும் கல்யாணம் செய்யச் சொல்லி வற்புறுத்துறாங்க”.

 

”நியாயம்தான். செஞ்சுக்க வேண்டியதுதானே”.புன்னகைத்தான்.

 

அவனை அடிப்பதுபோல் கையை ஓங்கினாள். கை பட்டு காரின் எஃப் எம் ஒலித்தது. “ பூங்காற்று திரும்புமா ?’ அவளது கண்ணில் ஏக்கத்தைப் படித்தவன் ” சரி  நாம எங்காவது காஃபி சாப்பிடலாமா ? “ அவள் “ம் “ என்க ஒரு காஃபி டேயில் நிறுத்தினான்.

 

”எவ்ளோ நேரம் இங்கே இருந்தாலும் ஏன் இருக்கீங்கன்னு கேக்க மாட்டாங்க அவ்ளோ நல்லவய்ங்க”  என்று சிரித்தவன், ”எங்க வெப்ஸைட் எல்லாம் ரெடி ஆயிருச்சா அழகிம்மா “ என்றான். ” ஆயிடும். ஆயிடும். சீக்கிரம் ஆயிட்டா அப்புறம் பார்க்க முடியாதே “ இப்போது அவன் வயிற்றில் பட்டாம் பூச்சி பறந்தது.

 

இரண்டு ஸ்நாக்ஸும் இரண்டு காப்புசினோவும் ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தார்கள். ”ஒன்னு போதுமே” என்றவளை அவன் குறும்பாகப் பார்க்க. “ யூ நாட்டி “ என்று கைப்பையால் அடித்தாள் முத்தழகி. இன்னும் அவளிடம் காதல் மிச்சமிருந்தது.

 

பாக்கெட்டில் செல்ஃபோன் விர்ரிட்டது. தேவியிடமிருந்து வாட்ஸப் மெசேஜ். ”எப்ப வர்றீங்க நந்தூஸ் அப்பா. பசங்களோட உம்மா. சீக்கிரம் வாங்க. ” அவன் செல்ஃபோனை எடுத்துப் பார்க்கவும் அவள் முகம் சுருங்கியது. ”கிளம்பணுமா” என்றாள். ”இல்லடா கொஞ்சம் நேரம் கழிச்சுப் போலாம்” என்றான் சமாதானமாக. அவன் டா என்றதும் அவளது முகம் குங்குமமாகச் சிவந்தது.

 

” சரி ராணி என்னானாங்க. எங்க போனாங்க. கண்டுபிடிச்சிட்டீங்களா.. “

 

“இல்லடா. போலீஸ்ல ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க சொல்லி இருக்கேன். ஒரு டிடெக்டிவ் ஏஜென்ஸியும் அப்பாயிண்ட் பண்ணி இருக்கேன்.  அவங்கள கண்டுபிடிக்க”  என்றான்.

 

காஃபி வந்தது. இருவரும் ஸ்நாக்ஸை சாப்பிட்டு இதய வடிவில் இருந்த காஃபியை அருந்தத் தொடங்கினார்கள். இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ என்ற இன்பமான வேதனை அவனைப் போட்டுத் தாக்கத் துவங்கி இருந்தது.

 

வெளியே வருமுன் அவனது கையைப் பிடித்துப் பிணைத்துக் கொண்டாள் முத்தழகி. இருவரும் காரில் அமர்ந்தார்கள். அவளது அலுவலகத்துக்கு சற்று முன்பே இறக்கிவிட்டு விட்டுக் காரைத் திருப்பினான். அவள் காரை விட்டு இறங்கியதும் சிறிது தூரம் சென்று கடற்கரைச் சாலையில் ஓரமாக நிறுத்தினான்.

 

அவனது இளமை வனத்தில் மூன்று பெண்கள்.  அழகியில் ஆரம்பித்து தேவியில் முடிந்து திரும்ப ராணியிலும் அழகியிலும் வந்து நிற்கிறது. மூவருமே விருட்சம் சுற்றிய பாசப் பூங்கொடிகள்தான்வனப்பெல்லாம் கரைந்து பிஸினஸ் பூர்ஷ்வா ஆகிக் கொண்டிருக்கும் நேரத்திலும் தன் மனதில் எழும்பும் காதல்கள் அவனுக்கே விநோதமாக இருந்தது. தேவியை நினைத்தான். ராணி கொடுத்த பிள்ளைப் பரிசுகளை நினைத்தான். முத்தழகியின் மாசற்ற பிரதிபலன் பார்க்காத அன்பை நினைத்தான். இதெல்லாம் எங்கே கொண்டுபோய் விடப்போகிறது என்ற மிரட்சியோடு ஒரு எதிர்பார்ப்பும் ஓங்கி  இருந்தது மனதில்

 

தேவிக்கண்ணு அர்ஜண்ட் பிஸினஸ் மீட்டிங். ஒன் ஹவர் வந்திருவேன்என்று லட்சத்தி ஒன்றாவது தடவையாக டெம்ப்லேட் மெசெஜ் ஒன்றைத் தட்டிவிட்டு லேசாகப் புன்னகைத்துக் கொண்டான். மனதில் எந்த பயமும் எந்தக் குழப்பமும் இல்லை. தேவியும் பிள்ளைகளும் இருக்கும் படத்தை எடுத்து முத்திட்டான்

 

செல்ஃபோனை டாஷ்போர்டில் போடப்போனவன் திரும்ப எடுத்து சென்ற வாரம் புது நம்பர் ஒன்றில் இருந்து வந்திருந்த ஒரு படத்தையும் மெசேஜையும் ஆவலுடன் படிக்கத் துவங்கினான்.


”ஸாம் நான் ராணி, உங்க மஹாராணி. அன்னிக்கு நான் ஏன் வீட்டை விட்டு வந்தேன்னு தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு. ஏன்னா நான் இரண்டு மாசம் கர்ப்பமா இருந்தேன். அதிர்ச்சியா இருக்காதுன்னு நினைக்கிறேன். அந்த இரவை நான் வெறுக்கலை. உங்களுக்கும் கில்டி ஃபீலிங் வேணாம். ஏதோ ரொம்பநாளா வேணும் வேணும்னு ஆசைப்பட்டது நடந்தது போல்தான் இருந்தது. இப்ப நான் குஜராத்ல இருக்கேன். இங்கே ஒரு ஸ்கூலிலும் ஹோட்டலிலும் ஸ்விம்மிங் இன்ஸ்ட்ரக்டரா வொர்க் பண்றேன். நந்தனுக்கும் நந்தினிக்கும் நாளானைக்கு செகண்ட் பர்த்டே. நம்ம அன்புக் குட்டீஸுக்கு என் அன்பு முத்தங்கள். உங்களுக்கும் ஒரு பரிசு இருக்கு. அது இந்த நாலு மாத நந்துதான். எடுத்து முத்தாடிக்குங்க. நந்தனுக்கும் நந்தினிக்கும் தம்பி இவன். என் கண்ணின் மணி . என்வாழ்க்கையின் உந்துதல். எப்போ சந்தர்ப்பம் வாய்க்குதோ அப்போ சந்திப்போம். அதுவரை எதையும் சிக்கலாக்காம இருங்க. என்னைத் தேடவும் வேண்டாம். “

 

நந்தனையும் நந்தினியையும் உரித்தாற்போல் சொப்பு மாதிரி ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு ராணி நின்றிருந்தாள் புகைப்படத்தில். நூறாவது தடவையாக ஸாம் கொடுத்த எச்சில் முத்தத்தில் நனைந்து கொண்டிருந்தது அந்த ஐ ஃபோன்.

 

அவள் நம்பருக்குப் ஃபோன் செய்தால் எப்போதும் சுவிச்ட் ஆஃப் என்றே வந்தது. ஒரு வழியாகக் கண்ணிலும் மனசிலும் நிரப்பிக் கொண்டு வீட்டிற்கு வண்டியைத் திருப்பினான். காம்பவுண்ட் சுவரில் காவலுக்காய் வைக்கப்பட்டிருந்த டாமி துள்ளிக் குதித்து அவனிடம் உற்சாகமாய் ஓடிவருவது போல் தோன்றியது

2 கருத்துகள்:

  1. என்ன இது?  சிறுகதையா?  தொடர்கதையா?  நாவலின் ஒரு பகுதியா?

    பதிலளிநீக்கு
  2. காதல் வனம் நாவலின் நிறைவுப் பகுதி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)