சனி, 27 ஜனவரி, 2024

மதுரைக் கணக்காயனாரின் மகனைக் காத்த கந்தவேலன்

 மதுரைக் கணக்காயனாரின் மகனைக் காத்த கந்தவேலன்


ந்த செயலைச் செய்தாலும் ஆழ்ந்த சிரத்தையோடு ஈடுபாட்டுடன் செய்யவேண்டும். அப்போதுதான் அதன் பலன் சிறப்பாக இருக்கும். ஏனோ தானோவென்றோ அல்லது பல பக்கமும் கவனம் சிதறவோ ஒரு காரியத்தைச் செய்தால் அது துர்ப்பலனை அளித்துவிடும். அப்படிக் கவனம் சிதறியதால் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரன் ஒரு தண்டனை அடைந்தார். அதிலிருந்து எப்படி, யாரால் விடுபட்டார் என்பதையும் பார்ப்போம்.

தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது” “தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது” என்று அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்தது கார்முகி. அது குதிரை முகமுடைய ஒரு பெண்பூதம். திருப்பரங்குன்றத்தின் பொய்கைக் கரையில் நின்று சாலையின் இரு மருங்கையும் பார்ப்பதும் பின் முகத்தைக் கோணி விரலை மடித்து நொடித்துச் சொடுக்கி அலுத்துக் கொள்வதுமாய் இருந்தபோது அங்கே ஒரு புலவர் வந்தார்.

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” என்று முணுமுணுத்தவர் ”உண்மையைச் சொன்னதற்கு இந்தத் தண்டனை தேவைதான் சொக்கநாதா. கோபப்பிரசாதம் பாடியும் தீரவில்லையே உன் கோபம் சோமசுந்தரா.” எனக் கூறிப் பொய்கையின் கரையில் அமர்ந்தார். அவர் மதுரைக் கணக்காயனாரின் மகனான நக்கீரனார்.

பொய்கைக் கரையில் கல்தறி வடிவில் ஒரு சிவலிங்கம் இருந்தது. ”கைலைக்கு இன்னும் எத்தனை திங்களோ, எத்தனை அயனமோ, இங்கேயே கல்தறியில் உன்னைக் காண்கிறேன். எப்போது என் நோய் நீக்குவாய் ஈசா பரமேசா” என்றவர் நீராடிப் பூசையில் ஈடுபட்டார்.

கார்முகிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. ’இதோ இதோ என் ஆயிரமாவது ஆள்’ குதூகலித்தபடி தன் குதிரை வாயைக் குவித்துக் காற்றை ஊதியது. பொய்கைக்கரையில் இருந்த விருட்சத்திலிருந்து சில இலைகள் உதிர்ந்தன. நீரில் விழுந்த இலையில் பாதி  மீனாகித் துள்ள முயன்றது. நீரில் நனையாத இன்னொரு பாதி பறவையாகிப் பறக்க முயன்றது. இந்த விசித்திரக் காட்சியை சிவபூசை செய்து அமர்ந்திருந்த நக்கீரனாரும் பார்த்தார். அடுத்த நொடி பிடித்துக் கொண்டது கார்முகி.

“இதென்ன கொடுமை. யார் இந்தக் குதிரைமுக அரக்கி.” வியந்து விழித்தார் நக்கீரனார். ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் அப்பூதம் அவரை அப்படியே அலேக்காகத் தூக்கிப் போய் ஒரு இருட்குகையில் இட்டு வாயிலில் ஒரு பாறையைப் போட்டு மூடிச் சென்றது. உள்ளே பயங்கர நெருக்கடி. தோராயமாக ஆயிரம் பேர் இருப்பார்கள் என்று தோன்றியது. அவர்களின் அவலக் குரல் வேறு அவரை இம்சித்தது. ”எல்லோரும் அமைதியாய் இருங்கள். என்ன நடக்கிறது இங்கே, இந்த பூதம் ஏன் என்னைப் பிடித்தது“ என்று கேட்டார்.


“சிவபூசையில் சிந்தை தவறுவோர் ஆயிரம் பேரைப் பிடித்துக் காளிக்குப் பலி கொடுக்க அலைகிறது இந்தக் கார்முகி பூதம். அப்போதுதான் அது சாபவிமோசனம் பெறுமாம். நீங்கள்தாம் அந்த ஆயிரமாவது ஆசாமி. இத்தனை நாளாக ஆயிரமாவது ஆள் அகப்படவில்லை என்று நிம்மதியாய் இருந்தோம். உம்மால் எமக்கு வந்தது வினை. எம் உயிருக்கு வைத்தீரே உலை. நீர்தாம் இதைச் சரி செய்ய வேண்டும்” எனக் கதறினார்கள் அங்கு சிறைப்பட்டிருந்தோர்.

தென்னடா மதுரைக்கு வந்த சோதனை, அது மட்டுமில்லாமல் திருப்பரங்குன்றத்திலும் தொடர்கிறது இச்சோதனை” என்று வருந்திய நக்கீரனார், “ சுப்ரமணியா, சிவகுமாரா, கந்த வேலா, உன் வேலால் எங்களைக் காக்கவேண்டியதிருக்க இப்படிக் கார்முகியிடம் பிடிபடச் செய்துவிட்டாயே. உன் தகப்பனின் கோபத்தால் நோய் பெற்றேன். உனக்கும் என் மேல் கோபமா?. அவருக்குப் பூசை செய்துவிட்டு உன்னையும் பூசித்து, என் பாமாலையைச் சூட்ட எண்ணியிருந்தேன். கந்தா உனைப் பாடுமுன் கார்முகிக்கு இரையாகாமல் எமைக் காக்க வா”.

இருட்குகையுள் பயந்த மனிதர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன. நம்பிக்கை கொண்ட நக்கீரரோ,” வெற்றி வேலா, வீர வேலா, தேவர்களை சிறை மீட்டவா, தெய்வானை மணாளா, அத்தெய்வானைக்காக உன் வேலால் தீர்த்தம் சமைத்தவா. உன் வேல் கொண்டு வா, எம் வினை தீர்க்க வா ” என்றெல்லாம் வேண்டுகோள் விடுத்தார்.

காற்றில் கிடு கிடு சத்தம். கார்முகி வரப் போவதன் அறிகுறியை உணர்ந்த மனிதர்கள் நடு நடுங்கிக் கிடந்தார்கள். ”மலை கிழவோனே, தமிழ்க் கடவுளே, தேவசேனாபதியே, நெற்றிக்கண்ணால் எனை எரித்தார் பரமன், அந்த நெற்றிக் கண்ணில் உதித்த அழகன் நீ , எங்களை இன்னும் வாட்டாதே போர்க்கடவுளே. அமரரை மீட்டதுபோல் எம் ஆயிரவரையும் மீட்க வா. ஒளியாக வா, வழியாக வா”

ருட்குகையுள் ஆயிரம் கோடி சூரியப் பிரகாசம் தோன்றியது. தன் தண்டைக் கால்களில் வீரக் கழல் பொலிய வேல் கொண்டு வினைதீர்க்க வந்தான் அழகன் முருகன். மனிதர்கள் வெளிச்சத்தால் கூசினார்கள். குகையின் வாயிலில் இருந்த பாறையை எத்தி உள் நுழைந்த கார்முகியோ வெளிச்சம் கண்டு விதிர்விதிர்த்தது. பயந்து பின்வாங்கி ஓட முயன்றது. சிறு நொடியும் தாமதிக்காமல் அப்பூதத்தைக் கந்த வேலனின் கைவேல் பாய்ந்து தாக்கியது. வீழ்ந்து மடிந்தது கார்முகி. 

தகைசால் தமிழ்ப் புலவர்களிடம் பிரியம் கொண்ட தமிழ்க் கடவுள் கந்த வேலன் மதுரைக் கணக்காயனாரின் மகனைக் காப்பாற்றியது அற்புதம் என்றால் அறுபடைகளிலும் உறையும் அவனை  திருமுருகாற்றுப்படை பாடி நக்கீரனார் குளிர்வித்தது அதி அற்புதம். ஆனாலும் கவனம் சிதறாது எக்காரியத்திலும் ஈடுபட்டால் இக்கட்டு இல்லை என்ற உண்மையை இந்நிகழ்வு உணர்த்துகிறதுதானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)