செவ்வாய், 2 ஜனவரி, 2024

”நான் இருக்கேன் புள்ள” – சாந்தி மாரியப்பன்

”நான் இருக்கேன் புள்ள” – சாந்தி மாரியப்பன்




அமைதிக்குப் பெயர்தான் சாந்தி. இந்தப் பாட்டை 700 தரமாவது முணுமுணுத்திருப்பேன். என் பள்ளி நட்பிலிருந்து இன்று வரை நிறைய சாந்திகள் என்னைச் சுற்றி. இந்த சாந்தி அமைதி அதே சமயம் கொஞ்சம் கலகலப்பும் கூட. சக எழுத்தாளர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் அமைதிச்சாரல் என்ற சாந்தி மாரியப்பன். அவர் எடுக்கும் புகைப்படங்கள் மட்டுமல்ல. சிறுகதைகளும் சிறப்பானவை. அவர் எழுதும் சமையல் குறிப்புக்கள் ருசிகரமானவை. சிறகு விரிந்தது என்றொரு கவிதை நூலுக்குச் சொந்தக்காரர்.


கொரோனா காலகட்டத்தில் அவர் ஒரு வித்யாசமான பிரச்சனையை எதிர்கொண்டார். கஸ்டம்ஸில் பணிபுரிந்து வந்த அவரது இன்னுயிர்க் கணவருக்கு ஏற்பட்ட மூளைக் கட்டி, அதற்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சைகள், மருத்துவங்கள் பற்றி, மேலும் அச்சமயங்களில் எவ்வளவு தன்னம்பிக்கையைக் கைக்கொள்ள வேண்டியிருந்தது என்பது பற்றியும் அவர் கூறியபோது மனம் உறைந்தது.  


”என் பெயர் சாந்தி மாரியப்பன், நான் மஹாராஷ்ட்ராவில் நவிமும்பையில் வசிக்கிறேன். நாமிருவர் நமக்கிருவர் என்ற அளவான அழகான அமைதியான குடும்பம் எங்களுடையது. யார் கண் பட்டதோ!! எங்கள் நிம்மதியைக் குலைத்துப்போடும் விதமாக, எதிரிக்குக்கூட வரக்கூடாத வியாதி என் கணவருக்கு வந்தது.

CRANIOPHARYNGIOMA.. இதுதான் என் கணவருக்கு வந்த ப்ரெய்ன் ட்யூமரின் வகை. ப்ரெய்ன் ட்யூமர் மூளையில் உருவாகும் இடங்களைப்பொறுத்து ஒவ்வொரு வகைப்படும். மூளையின் மிகமிக ஆழமான உட்பகுதியில், கிட்டத்தட்ட மூளையின் நடுப்புள்ளியில் இருக்கும் பிட்யூட்டரிச்சுரப்பி, ஹைப்போதலாமஸ் பகுதி, மற்றும் பார்வை நரம்புகளின் குறுக்கமைவு இம்மூன்றும் சந்திக்கும் இடத்தில் வளரும் மூளைக்கட்டிதான் க்ரேனியோஃபேரிஞ்சியோமா. இது கான்சர் கிடையாது ஆனால் வெட்ட வெட்ட வளரும்.

பார்வைக்குறைபாடாகத்தான் முதலில் பிரச்சினை ஆரம்பித்தது. ஆஸ்பத்திரிக்குப்போய் டெஸ்டுகள், MRI எல்லாம்எடுத்துஒன்றுக்கு நான்கு ந்யூராலஜிஸ்டுகளைப்பார்த்தபோது ஆப்டிக் நெர்வ் அட்ரோஃபி இருக்கிறது என்றனர். அச்சமயம் இது மூளைக்கட்டிக்கான ஆரம்பம் என டாக்டர்கள் உட்பட யாருக்கும் தெரியவில்லை. (ஆரம்பத்தில் தெரியவும் செய்யாதென்று பிற்பாடு ந்யூரோசர்ஜன் சொன்னார்)ஆகவே ஒரு வருஷம் மெடிக்கல் லீவ் போட்டுவிட்டு அதற்கான சிகிச்சை, சத்தான சாப்பாடு, ஓய்வுஎன எட்டு மாதங்கள்ஓடின.2020 ஃபெப்ரவரி கடைசியில் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் ஆரம்பித்தது.“நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம்” படத்தில் விஜய் சேதுபதிக்கு ஐந்து நிமிடத்துக்கொரு முறை நண்பர்கள் ஞாபகப்படுத்திக்கொண்டிருப்பார்களே அதே மாதிரி நான் என் கணவருக்கு ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தேன்.

என்னவோ சரியில்லை என தோன்றிக்கொண்டே இருந்ததால் டாக்டரிடம் கிட்டத்தட்ட சண்டையிட்டு இன்னொரு MRI எடுக்கச்சொன்னேன். அப்போதுதான் ட்யூமர் வளர்ந்திருக்கும் விஷயம் தெரிய வந்தது. மும்பையின் பிரபல மருத்துவமனையின் ந்யூரோசர்ஜனிடம் ஆலோசனை கேட்டபோது அவரும் இதையேதான் சொன்னார். தாங்க இயலாமல் தவித்தோம், அழுதோம், ஆனால் கணவர் முன்னால் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனாலும் லேசாகக் கண்கள் கலங்கினால் ‘இதப்பாரு.. நான் இருக்கேன் புள்ள.. எதுக்குக் கவலைப்படுகே” என்று அவர் ஆற்றுப்படுத்துவார்.



ஒரே நாளில் உணர்ச்சிக்கொந்தளிப்புகளை துடைத்தெறிந்து விட்டு அடுத்து என்ன செய்வதென்று யோசித்து அட்மிட் செய்து 14-3-2020 அன்று ஆறு மணி நேரம் சர்ஜரி நடந்தது. அப்போதுதான் இந்தியாவில் கோவிட் பரவ ஆரம்பித்து மும்பையையும் அது தாக்கியிருந்த சமயம். மருத்துவமனையில் ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்தன. மயக்கம் தெளிந்து கண் விழித்தவர் எங்களை அடையாளம் கண்டுகொண்டபோது நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. கெட்டதிலும் நல்லதாக இவருக்கு வந்திருப்பது கான்சர் கட்டி இல்லை என பயாப்சி ரிப்போர்ட் சொன்னது.

ஐஐசியு, ஐசியு, செமி ஐசியு என்று படிப்படியாக வந்து கடைசியில் வார்டுக்கு மாற்றினார்கள். ஏகப்பட்ட மருந்து மாத்திரைகளோடும், இருபத்து நாலு மணி நேரமும் யாராவது பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்ற வற்புறுத்தலோடும், அடுக்கடுக்காய் சுகர், சோடியம் டெஸ்டுகள் எடுக்கப்பட வேண்டுமென்று கூறியும் பத்து நாளுக்கப்புறம் டிஸ்சார்ஜ் செய்தார்கள். ஆனால், லாக்டவுன் சமயம் என்பதால் டாக்ஸி எதுவும் ஓடாததால், ஆஸ்பத்திரியின் ஆம்புலன்சிலேயே அவரை வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

அதன் பின் வந்த நாட்கள் மிகவும் கொடியவை. லாக்டவுன் சமயம் என்பதால் மிகவும் சிரமப்பட்டோம். Brain surgeryக்கப்புறம் பேஷண்டின் நிலை பற்றிமுதலில் ஒரு வார்த்தை.. சாதாரண கட்டியோ அல்லது கான்சர் கட்டியோ.. அது இருக்குமிடம், சைஸ், எத்தனை நாட்களாக அது அங்கே இருந்தது என்பதைப் பொறுத்து ஒவ்வொரு பேஷண்டின் பாதிப்பும் வேறுபடும். குணமடைய எடுத்துக்கொள்ளும் காலமும் வேறுபடும்.

மூளையில் காயம் ஏற்படும்போது அந்தப்பகுதியிலுள்ள செல்கள் அழியும். அவை தன்னைப் புதுப்பித்துக்கொள்ளாது. ஆகவே அருகிலுள்ள செல்கள் டேக் ஓவர் செய்து பணியைத் தொடரும் என சைக்யாட்ரிஸ்ட் சொன்னார். மூளை தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் என ந்யூரோசர்ஜன் சொன்னார். இதிலும் ந்யூரான்கள் ஒன்றுக்கொன்று எவ்வாறு என்ன வேகத்தில் தொடர்பு ஏற்படுத்திக்கொள்கின்றன என்பதைப் பொறுத்து குணமடையும் காலமும் வேறுபடும்.

சர்ஜரிக்குப்பிறகு இவர் முற்றிலும் தன்னிலை மறந்து விட்டார். கிட்டத்தட்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை நடத்துவது போல்தான் இவரையும் நடத்த வேண்டியிருந்தது. சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறையில் மிகக் கஷ்டமாக இருந்தது. குழப்பமான மனநிலையிலேயே இருந்தார். எங்கேயிருக்கிறோம், நேரம் காலம் என எதுவும் புரியாது. ஹாலுஷினேஷன் எக்கச்சக்கமாக இருந்தது.

குழறும் பேச்சு, தள்ளாடும் நடை, உளறு மொழி என இருந்தது. ஆனால் இடையிடையே தெளிவாகப்பேச ஆரம்பித்து அதன்பின் உளறலாய்த் தொடர்ந்தது. இவ்வாறு பேசும்போது நாம் குறுக்கிட்டுத் தெளிய வைக்க முயன்றால் நமக்குத்தான் மண்டை காயும். இவற்றுக்கெல்லாம் ந்யூராலஜிஸ்டும், சைக்யாட்ரிஸ்டும் அவரவர் பங்கிற்கு மருந்துகளைக் கொடுத்தார்கள். வேளாவேளைக்கு சத்துள்ள ஆகாரம், பிஸியோதெரபி, சுகர் கன்ட்ரோல், நல்ல கவனிப்பு இவைதான் முக்கியமான தேவைகள்.

இவருக்குப் பழைய ஞாபகங்கள் எல்லாம் மனதில் மட்டுமே தங்கி, நேரில் எங்களைப் பார்க்கும்போது அடையாளம் தெரியாமல் போயிற்று. பின்னாலிருந்து கூப்பிடும்போது என் குரலை அடையாளம் கண்டு கொள்வாரே தவிர முகத்தைப் பார்க்கும்போது பெரும்பாலான சமயங்களில் அடையாளம் தெரியாது. தினமும், ஹாலிலிருந்து பெட்ரூம் வரைக்கும் ஒவ்வொரு அறையாகக் காண்பித்து அவர் தன் வீட்டில்தான் இருக்கிறார் என அடிக்கடி தைரியமூட்டுவேன். வாரத்துக்கொரு முறை டாக்டரிடம் விசிட், பிசியோதெரபி செய்ய வைத்து, கலோரி கணக்கிட்டு இன்சுலின் கொடுத்து, சாப்பிட அடம் பிடிக்கும்போது ஊட்டி விட்டு, ஷேவ் செய்து, பல் துலக்கி குளிப்பாட்டி விட்டு, எழுத்துகள், எண்கள், வார்த்தைகள் அத்தனையையும் ஞாபகத்துக்காக எழுத வைத்து, நடைப்பயிற்சிக்காக வெளியே கூட்டிப்போய் என குழந்தையைப்போல் கவனித்துக்கொண்டேன்.


ஒரு நிமிடம் நான் அருகில் இல்லையென்றாலும் கலங்கி அழுவார். ஆகவே அவர் உறங்கும் ஒரு சில நிமிடங்களில்தான் நான் என்னுடைய மற்ற வேலைகளைக் கவனிக்க வேண்டும். சமைக்கும்போது அடுக்களையிலேயே ஒரு நாற்காலியைப்போட்டு அவரை உட்கார வைத்து அவருடன் பழைய கதைகளைப் பேசியபடியே சமைத்து விடுவேன். இது அத்தனையிலும் பிள்ளைகள் செய்த உதவிகள் சொல்லிலும், கணக்கிலும் அடங்காது.


நானும் ஒரு நோயாளி என்பதால் எனக்கான மருந்துகளையும் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனா பயத்தால் யாரையும் உதவிக்கும் கூப்பிட முடியாது. கட்டுப்பாடுகள் காரணமாக மருந்துகளையும் அத்தியாவசியப்பொருட்களையும் பெறுவதில் ஏக சிரமம். இவருக்குத் தொற்று ஏற்பட்டு விடாவண்ணம் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு வேறு. பசி,தூக்கம் மறந்து கவனித்துக்கொண்டேன்.

இப்படியே போயிருந்தால் ஒரு சில வருடங்களில் பழையபடி ஆகியிருப்பார். ஆனால், விதி விட்டதா?!! திடீரென பிபி குறைந்ததால் மறுபடி அட்மிட் செய்ய வேண்டியதாயிற்று. அப்போது எடுத்த MRIயின் போது ட்யூமர் மறுபடி வளர்ந்திருப்பதாகச்சொல்லி இரண்டாவது சர்ஜரி நடந்தது. சர்ஜரியான நான்காம் நாள் திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஆகி, பத்து நிமிடம் போல இதயத்துடிப்பு நின்று உடனேயே சிபிஆர் கொடுத்து பிழைக்க வைத்து விட்டார்கள். ஆனால், அந்தச்சமயம் ரத்தம் மூலமாக மூளைக்குப்போகும் ஆக்சிஜன் தடைபட்டதால் மூளையின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதை ஹைப்பாக்ஸியா என்று சொல்வார்கள். இதன் காரணமாக வெஜிடேட்டிவ் நிலையும் ஏற்பட்டு விட்டது.

ஒரு மாதம் வரை அங்கு சிகிச்சை கொடுத்தபின் “இனிமேல் இவ்வளவுதான்.. நீங்கள் வீட்டுக்குக் கூட்டிச்சென்று விடுங்கள்” என்றனர் மருத்துவர். முடியாதென்று வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சையைத்தொடர்ந்தேன். அந்த ஆஸ்பத்திரியை கோவிட் நோயாளிகளுக்கென அரசு கையகப்படுத்திக்கொண்டதால் மூன்றாவதாக ஒரு ஆஸ்பத்திரிக்கு மாற்றினோம்.

எப்போதாவது கண் திறப்பார், லேசாகக் கால் அசையும், சில சமயம் கொட்டாவி வரும். இதைத்தவிர வேறு அசைவுகள் கிடையாது. படுக்கையிலேயேதான் எல்லாமும், மூக்கில் பொருத்தப்பட்ட குழாய் மூலமாக திரவ உணவு மற்றும் அதில் கரைக்கப்பட்ட மாத்திரை மருந்துகள், படுக்கைப்புண்ணுக்காக NPWT(Negative Pressure Wound Therapy) டயப்பர், வெண்டிலேட்டர் மூலமாக ஆக்சிஜன், பிசியோதெரபி,இதனிடையே மூளையைச்சுற்றியுள்ள பகுதியில் நீர் தேங்கியதால் அதற்கும் ஒரு சர்ஜரி என ஜூன் மாதம் வரை சிகிச்சை நடந்தது. படிப்படியாக வெண்டிலேட்டர் இல்லாமல் தானாகவே சுவாசிக்க முடியும் என்ற நிலைக்கு முன்னேறியபோது வீட்டிலேயே ஐசியு வசதி செய்து சிகிச்சையைத்தொடர டாக்டர் அறிவுறுத்தினார். சரியென வீட்டில் வைத்து சிகிச்சை தொடர்ந்தது. ஆனால், 2021 ஜூலை எட்டாம் தேதி உடல்நிலை மோசமாகி மருத்துவமனைக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே என் கணவர் எங்களை விட்டுப்பிரிந்தார். நான் சற்று மன சஞ்சலப்படும் நேரங்களிலெல்லாம், ‘நான் இருக்கேன் புள்ள..” என்று என்னைத்தேற்றும் அந்த உதடுகள் நிரந்தரமாக மூடிக்கொண்டன.

ஒற்றை வார்த்தையில் சிலவற்றைச்சொல்லிக் கடந்து போயிருக்கிறேனே தவிர உண்மையில் அது அத்தனை எளிதாயில்லை. பிள்ளைகள் வீட்டில் தனியாக.. நானும் இவரும் ஆஸ்பத்திரியில். யாரும் பார்க்க வர முடியாது, தொற்று ஏற்பட்டு விடக்கூடாதென அனுமதிக்க மாட்டார்கள். “அப்பாவைத்தேடுகிறது.. பார்க்க வேண்டும்’ என அழும் மகளுக்கு வீடியோ காலில் அவள் அப்பாவைக்காட்டுவேன். “அப்பா.. அப்பா”வென அழைத்துக்கொண்டேயிருப்பான் மகன். கவலை, ஸ்ட்ரெஸ், தூக்கமின்மை, பசியின்மை, ஏக்கம், எனத் தவித்த நாட்கள் அவை. அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் சிலீரென்கிறது, எப்படிச்சமாளித்தோமென மலைப்பாகவும் இருக்கிறது.”

படிக்கும்போதே தவிப்பாக இருக்கிறது. எப்படித்தான் இந்த இன்னல்களைக் கடந்து வந்தீர்களோ சாந்தி. இந்தியாவின் தென்கோடி கிராமத்தில் இருந்து சென்று மும்பையில் தனியாக உங்கள் கணவரைத் தாக்கிய நோய் அரக்கனோடு நெஞ்சுரத்தோடு போராடி உள்ளீர்கள். இன்று உங்களை நீங்கள் தேற்றிக் கொண்டு வாழ்வதும், உங்கள் குழந்தைகள் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு கை கொடுத்ததும் மறக்கவியலா தருணங்கள். உங்கள் கணவர் சொன்னது போல அவர் எப்போதும் என்றென்றும் உங்கள் தெய்வத்துணையாக இருப்பார்.

2 கருத்துகள்:

  1. கண்கள் கலங்கி படிக்க முடியாமல் எழுத்துகள் மறைய, சிரமப்பட்டுதான் படித்தேன்.  அவர் கணவர் மறைந்ததது தெரியும்.  அதன் பின்னால் இருக்கும் சிரமங்கள் படிக்கும்போது மனம் கனக்கிறது.  எவ்வளவு பெரிய பாரத்தை சுமந்திருக்கிறார்...  வணங்குகிறேன்.  குழந்தையைப் போல் கணவரைப் பார்த்துக் கொண்ட அவரை வணங்கத்தான்  தோன்றுகிறது.  கடவுள் சற்று மனம் இரங்கி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. நான் இந்தப் புத்தகம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் பகிர்வால் இதைப் படிக்க முடிந்தது. நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)