செவ்வாய், 26 டிசம்பர், 2023

அறநெறி தவறியதால் அழிந்த கார்த்தவீர்யார்ஜுனன்

 அறநெறி தவறியதால் அழிந்த கார்த்தவீர்யார்ஜுனன்


பத்துத் தலை கொண்ட இராவணனைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆயிரம் கரங்கள் கொண்ட பராக்கிரமசாலியைப் பார்த்திருக்கின்றீர்களா ? அதுவும் பத்துத் தலை கொண்ட அந்த அசுரனைத் தோற்கடித்துக் கைதியாக்கி அடைத்தவன் ஆயிரங் கரங்கள் பெற்ற மனிதன் என்று சொன்னால் ஆச்சர்யமாயிருக்கும். அப்படி ஆயிரம் கரங்கள் பெற்ற கார்த்த வீர்யாஜுனனும் தன் அறநெறி கடந்ததனால் முடிவில் பரசுராமரால் அழிக்கப்பட்டான். இவர்களின் கதையைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

தன் பொங்கிச் சுழலும் அலைக்கரங்களால் கரையோரப் பூக்களைத் தாலாட்டியபடி தாய்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது நர்மதை நதி. அதன் மடிமேல் மாட மாளிகையும் கூடகோபுரமுமாகப் பொலிந்து திகழ்கின்றது மகிஷ்மதி நகரம். இதை இந்திரலோகம் போல் சமைத்து அரசாண்டு வந்தான் ஹைஹேய வம்சத்தின் அரசன் கிருதவீரியன்.

அரசன் கிருதவீரியனும் அரசி பத்மினியும் பல்லாண்டுகள் தவம் செய்து தத்தாத்ரேயரின் அருளால் பெற்ற அருமைப் புத்திரன்தான் கார்த்தவீர்யார்ஜுனன். இவனுக்கு விஷ்ணுவைத் தவிர வேறு யாராலும் அழிவு ஏற்படக்கூடாது என்ற வரத்தை இவன் பெற்றோர் தத்தாத்ரேயரிடம் பெற்றனர். கார்த்தவீர்யார்ஜுனனும் தத்தாத்ரேயரிடம் ஆயிரம் ஆண்டுகள் பணிவிடை புரிந்தான். அதனால் மகிழ்ந்த அவர் இவனுக்கு ஆயிரம் கரங்களையும், மிக நீளமான தங்கத் தேர் ஒன்றையும், அனைத்துலகையும் ஆளும் பேறையும், யாராலும் வெல்லமுடியாத வலிமையையும் அளித்தார்.

இப்படி இருக்க ஒருநாள் அவன் தன் மனைவியருடன் நர்மதையில் நீராடிக் கொண்டிருந்தான். சூரியனின் செந்நிறக் கதிர்கள் பொழிய நர்மதை துள்ளி ஓடிக் கொண்டிருந்தது. அந்நேரம் அரசனின் பட்டமகிஷி “அரசரே நீர் பராக்கிரமசாலி என்பதை அறிவோம். ஆனால் உம்மால் துள்ளி ஓடும் இந்த நர்மதையை அடக்க முடியுமா ?”.


பட்டமகிஷி இவ்வாறு அவனைச் சீண்டியதும் அவளுக்குத் தன் புஜபலத்தைக் காட்டும்வண்ணம் தன் ஆயிரம் கரங்களையும் விரித்து நர்மதையைத் தடுத்தான். பீரிட்டும் கசிந்தும் வழிந்த நர்மதை சில கணங்களிலேயே அவன் கரங்களுக்குக் கட்டுப்பட்டு நின்றுவிட்டாள். உடனே பட்டமகிஷி தன் ”ஆஹா! நீரையே நிறுத்திவிட்டீரே. நீர்தான் மகா பராக்கிரமசாலி” எனக் கரங்களைக் தட்டி மகிழ்ச்சியால் கூவினாள்.

இச்சமயம் சில காதங்களுக்கு முன்னே இலங்கை அரசன் இராவணன் தன் புஷ்பக விமானத்தில் நர்மதை வழியாகப் பறந்து சென்றவன் அதன் அழகில் மயங்கிக் கரை இறங்கினான். தன் அமைச்சர்களிடம் சிவபூஜைக்கு மலர்கள் கொண்டுவரச் சொல்லிவிட்டு நதியில் நீராடி சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து தன் சிவபூஜையைத் தொடங்கினான். அவன் சிவத் தியானத்தில் ஆழ்ந்ததுதான் தாமதம். அவனைச் சுற்றிலும் நர்மதை பெருகத் தொடங்கினாள். ஒரு கணத்திலேயே அவன் கழுத்துவரை நீர்மட்டம் ஏறியது.

இதைக் கண்டு வியந்து கரை ஏறிய இராவணன் இவ்வாறு நீர் உயரக் காரணம் என்ன என அறிந்துவரும்படித் தன் அமைச்சர்களை அனுப்பினான்.  அவர்கள் ஆயிரம் கை கொண்டு தடுத்து நின்ற அரசன் கார்த்தவீர்யாஜுனனின் விளையாட்டால் இந்த விபரீதம் ஏற்பட்டது என்பதைக் கண்டு வந்து சொன்னார்கள்.

வந்ததே கோபம் இராவணனுக்கு. தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு புஷ்பகவிமானத்தில் ஏறிக் காற்றினும் கடுகிப் பறந்து வந்தான். அங்கே உல்லாசமாய் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்த கார்த்தவீர்யாஜுனனைப் பார்த்துக் கோபம் கொப்பளிக்க வாதம் புரியத் தொடங்கினான். வாதம் வாக்குவாதமாகி ஒரு கட்டத்தில் இருவரும் தம் கதாயுதத்தால் பேசிக் கொண்டனர். இராவணனும் வலிமையானவன் என்பதால் இந்த யுத்தம் சிலநேரம் நீடித்தது. எதிர்பாராத ஒரு கணத்தில் தன் கதாயுதத்தால் கார்த்தவீர்யார்ஜுனன் ஒங்கி அடிக்க கண்கள் இருளடைய இராவணன் மயங்கி வீழ்ந்தான். அடுத்து அவன் கண் விழித்த இடம் மஹிஷ்மதியின் காராக்ரகம்.

தன் பேரன் இராவணன் மஹிஷ்மதியின் சிறைச்சாலையில் அடைபட்டு இருப்பதை அறிந்த புலஸ்தியர் கார்த்தவீர்யார்ஜுனனைச் சந்தித்து அவனை விடுவித்து விடும்படிக் கேட்டார். மாபெரும் முனிவரே தன்னிடம் கேட்டுக்கொண்டதால் கார்த்தவீர்யார்ஜுனன் மனமிரங்கி இராவணனை விடுவித்தான்.

இவ்வளவு சிறப்புமிக்க கார்த்தவீர்யார்ஜுனனும் கிட்டத்தட்ட 85,000 ஆண்டுகள் மகிஷ்மதியைச் சிறப்பாக ஆண்டுவந்தான். ஒருமுறை வேட்டைக்குச் சென்றவன் தன் படை பட்டாளத்தோடு ஜமதக்கினி முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்றான். அத்தனை பட்டாளத்துக்கும் ஜமதக்கினி முனிவர் தன்னிடமிருந்த காமதேனுப் பசுவைக் கொண்டு அறுசுவை உணவைப் படைத்து வழங்கினார்.


முனிவருக்கு ஏன் அத்தகைய பசு, அது தன்னிடம் இருத்தலே சிறப்பு எனக் கருதிய கார்த்தவீர்யார்ஜுனன் முனிவரிடம் அப்பசுவைத் தனக்குத் தந்துவிடும்படிக் கேட்க அவரோ மறுக்கிறார். தான் அறநெறியைக் கடக்கிறோம் என்பது புரியாமல் கோபமடைந்த கார்த்தவீர்யார்ஜுனன் தன் வீரர்களுடன் முனிவர் மேல் போர் தொடுக்க முனிவரின் ஆணையால் காமதேனுவோ ஆயிரம் ஆயிரம் வீரர்களை உற்பத்தி செய்து அனுப்புகிறது. அவ்வீரர்களோடு போரிட்டு மன்னனின் வீரர்கள் அனைவருமே அழிய அவனோ வெகுண்டு தன் வாளால் ஜமதக்கினி முனிவரைக் கொன்றுவிட்டுச் செல்கிறான்.

ஆசிரமம் திரும்பிய ஜமதக்கினியின் முனிவரின் மகன் பரசுராமன் தன் தந்தைக்கு நேர்ந்த இந்த அகோர முடிவைக் கண்டு கொந்தளித்துப் போகிறார். உடனடியாக மகிஷ்மதி சென்று கார்த்தவீர்யார்ஜுனனுடன் போர் செய்கிறார். இருவரும் சளைக்காமல் பாணங்களை எய்கிறார்கள். நீதி அவர் பக்கம் இருந்ததால் கார்த்தவீர்யாஜுனன் தன் ஆயிரம் கரங்களால் விட்ட எந்த பாணமும் அவரைத் தாக்கவில்லை. ஆனால் அவனது படைகளை பரசுராமரின் பாணங்கள் துவம்சம் செய்து அழித்தன.

மேலும் அவனது ஆயிரம் கரங்களையும் அவர் தன் பாணங்களால் பூக்களைக் கொய்வதுபோல் தாக்கி வீழ்த்தினார். தன் முடிவு நெருங்கிவிட்டது என்பதையும், அவர் விஷ்ணுவின் அம்சம் என்பதையும் புரிந்து கொண்டான் கார்த்தவீர்யார்ஜுனன். அவர் விட்ட கடைசிப் பாணத்தில் அவன் சிரசு அவர் பாதாரவிந்தங்களில் சரணடைந்தது.

பத்துத் தலை இருந்தும் யோசிக்காமல் ஆயிரம் கரம் கொண்ட ஒருவனிடம் மோதியதால் தோற்கடிக்கப்பட்டான் இராவணன். அதேபோல் ஆயிரம் கரங்கள் இருந்தும் அறநெறி கடந்ததால் அழிந்தான் கார்த்தவீர்யார்ஜுனன். எனவே அடங்காக் கோபம் அழிக்கும் என்பதையும் எப்போதும் அறநெறியில் ஒழுகவேண்டும் என்பதையும் இக்கதை மூலம் அறிந்தோம்தானே குழந்தைகளே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)