திங்கள், 6 நவம்பர், 2023

அழகியை மீட்ட அழகி

 அழகியை மீட்ட அழகி

காதல் என்பது எதுவரை.. கல்யாண காலம் வரும்வரை”  என்று ஜெமினியும் சந்திரபாபுவும் பாடி ஆடிக்கொண்டிருந்தார்கள். யானைகள் செயின்போலக் கோர்த்தும் வரிசையாகவும் தும்பிக்கை பிடித்தும் அசைந்தாடி வந்துகொண்டிருந்தன. அழகியின் தந்தை செந்தில்நாதன் முகமலர்ச்சியோடும் சிறிது கவலையோடும் அமர்ந்திருந்தார்.

 

அவர் கையசைக்கவும் ஹாலில் இருந்த டிவியை ரிமோட் கொண்டு அணைத்துவிட்டுச் சென்றான் பணியாள். அவரது மனைவியும் மகனும் கூட அமர்ந்திருந்தார்கள். அழகி தெளிவில்லாத முகத்தோடு நீரில் நனைந்து கசங்கிய ஒரு பூங்கொத்துப் போல அமர்ந்திருந்தாள். இன்னும் கூட ஹார்மோன்களை இசைபாடத் தூண்டும் அவளது அழகு ஸாமுக்குப் பிரமிப்பூட்டியது. 

 

கல்யாணகாலம் வரும்வரைதானா காதல்.. என யோசித்தபடி செந்தில்நாதன் அருகில் அமர்ந்திருந்தான் ஸாம். அவனுக்கும் மிகுந்த மகிழ்ச்சியாகவும் சிறிது குழப்பமாகவும் இருந்தது. அழகியுடனான காதல் வாழ்வு.. எத்தனை நாள் ஏக்கம். நாள்கடந்து கிடைத்த வரம். அவனை வெறுமையாக்கியதோடு சிறிது அயர்வையும் தந்தது.

 

இதற்காக எத்தனை நாள் எண்ணி எண்ணி ஏங்கி இருக்கிறோம். என வியப்பாகவும் இருந்தது. கருத்தொருமித்த காதலைக்கூட காலமும் பிரிவும் மாற்றி விடுமா. அழகியின் முகத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தான். எந்த மாசு மருவுமில்லை. உதடுகளின் லேசான கருமையும் முகத்தில் ஆழ்ந்த யோசனையுமாக அமர்ந்திருந்தாள். தானே வளரும் காட்டுச் செடிகளைப் போல லேசாக சாம்பல் பூத்தாற்போலிருந்தது உடல். கரங்களில் மெல்லிய பூனை ரோமங்கள் அவளது நிறத்தை எடுப்பாகக் காட்டிக் கொண்டிருந்தது.

 

அவன் ரசித்த அம்முகத்தை இப்போது பார்க்கத் தயக்கமில்லாவிட்டாலும் அதீத ஆர்வம் பொங்கிக் கொண்டிருந்தாலும் ஏனோ அருகில் செல்லவோ அரவணைக்கவோ தோன்றாதது அவனுக்கே அதிசயமாக இருந்தது. அவளது பெற்றோர் இருக்கிறார்கள். பணிப்பெண்ணும், பணியாட்களும் இருக்கிறார்கள் என்றாலும் அவ்வப்போது வரும்போது அவளது முகத்தையோ கரத்தையோ தொட அவன் யோசித்ததில்லை. இன்று ஏனோ ஒரு அந்நியத்தன்மை திடீரென இருவருக்குள்ளும் ஏற்பட்டாற்போலிருந்தது.

 

விழித்து எழுந்த அவள் அப்படியேதான் இருந்தாள். அவள் விட்டுச் சென்ற அதே நடன நிகழ்வின் விளிம்பில் அமர்ந்திருந்தாள். பணிப்பெண் சொல்லியபடி நடனம் மட்டுமே ஒரு கரைபோலவும் அதைப் பற்றியபடி அவள் நீந்திக் கொண்டிருப்பதாவும் பட்டது ஸாமுக்கு.

 

”என்ன ஆச்சு” என பணிப்பெண் மாலாவை நோக்கி வினவினான்.

 

“தினம் போல் நீங்க கொடுத்த வீடியோவை ஒருதரம் போட்டு விட்டேன். தினம் பார்த்த எஃபக்டில் நானும் அவ்வப்போது அதேபோல் டான்ஸ் ஆடுவதுண்டு. அந்த ரூமில் இவங்களைத் தவிர யாருமில்லை என்ற நினைப்பில்” என்று வெட்கியவாறு பதில் சொன்னாள் மாலா.

 

லேசாகக் குனிந்த அவள் முகம் சிவந்திருந்தது. அவ்வப்போது அழகியை ஆச்சர்யத்தோடு உற்று நோக்கியவாறும் இருந்தது. அவளும் இருபதுகளில் ஒளிர்ந்த அழகிதான். செவிலிகளுக்கே உரித்தான உற்சாகமும் கட்டுக்கோப்பான உடலும் பெற்றிருந்தாள். மின்னும் இளமையை அன்றுதான் பார்த்தான் ஸாம். தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு,

 

”சரி.. அதன் பின்..” என்றான்.

 

”இன்னிக்கும் அதே வீடியோவைப் போட்டேன். அதன் பல பாட்டுக்களும் டான்ஸும் பரிச்சயமாக இருந்ததால் நானும் ஸ்டெப்ஸ் வைச்சு ஆடிப்பார்த்தேன். டாங்கோ ரொம்பப் பிடிச்சிருந்தது. என் ஹீல்ஸ் செப்பலை மாடிக்கு  ரகசியமாக எடுத்து வந்தேன். அந்தத் தாளங்கள் பிடித்திருந்ததால் அதே போல் ஹீல்ஸில் குதிகாலில் தட்டினாப்புல ஆடிப்பார்த்தேன் “ என்றாள் வெகுளியாய்.

 

அது ஏசி ரூம் என்பதும் மரத்தால் தளம் அமைக்கப்பட்டிருப்பதும் தெரியும் அவனுக்கு.

 

”ஹ்ம்ம்” என்றான் ’மேலே தொடரு’ என்பது போல். அனைவரும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். மூன்று நான்கு டாங்கோஸ். அதன் தாள லயத்தில் நான் ஆடிக்கிட்டே இருந்தேன். திடீர்னு என்னை யாரோ பார்க்கிறாப்புல இருந்துச்சு. “ நிறுத்தினாள்.

 

அனைவருக்கும் ஆர்வம் அதிகமானது. ”சொல்லு சொல்லு”’ என்றான். திரும்ப அழகியின் உணர்வுகள் உயிர்பெற்றதை, அவளின் உயிர்த்தலைக் கொண்டாடிக் கொண்டிருந்தது குடும்பம்.

 

”படுக்கைல இவங்க கண் திறந்து என்னையே பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நான் உடனே சத்தம் போட்டு இவங்க எல்லாரையும் கூப்பிட்டேன் “ என்றாள்.

 

”மாலா கூப்பிட்டவுடனே என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்து நானும் இவளும் மேலே ஓடினோம் ” என்றார் அழகியின் அறுபது வயதுத் தந்தை.. பரவசத்தின் உச்சியில் இருந்தாலும் அவர் முகத்தைக் கவலை அறுத்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

 

”ஹாலுக்கு அழைச்சிட்டு வந்தோம். இவ அம்மா அவள கட்டிப் பிடிச்சிட்டு அழ ஆரம்பிச்சிட்டா ” ஆனா அவ இவளைப் பார்த்து ஒன்னும் சொல்லாம தள்ளி உக்காந்துக்கிட்டா. நானும் அழகிம்மா முத்தழகி என்னடா ஆச்சுன்னு கேக்குறேன். யாரையும் தெரிஞ்சாமாதிரியே பாக்கலை. அந்நியர் மாதிரியே பார்த்துட்டு இருந்தா. அதான் உங்களுக்கு ஃபோன் செய்து வரவழைச்சோம் என்றார்.

 

அழகி அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென எழுந்து ஷோகேஸின் பக்கம் நடந்தாள். அங்கே எல்லாருடைய புகைப்படங்களும் டிஜிட்டலில்  மாறி மாறி ஒளிர்ந்து கொண்டிருந்தன. அதையே விநோதமாகப் பார்த்த அவள் திரும்பவும் வந்து அமர்ந்து தலையைப் பிடித்துக் கொண்டாள்.

 

”இருங்க. முதல்ல இவளுக்கு வாரம் ஒருமுறை வந்து செக்கப் செய்த டாக்டர் ராமமூர்த்தியை அழைப்போம். ”நியோரோ சர்ஜன் நம்பரைத் தட்டினான். அது பீப் ஒலியுடன் ஒரு ரெக்காடட் வாய்ஸைத் துப்பியது.

 

ஏமாற்றத்துடன் ஃபோனை அணைத்த ஸாம் சொன்னான் “ டாக்டர் ராமமூர்த்தி வெளிநாட்டுக்கு ஒரு மாநாட்டுக்குப் போயிருக்கிறாராம். வர ஒரு வாரம் ஆகுமாம். ”

 

”சரி இனி அவள் ஃப்ரெஷ் செய்துக்க உதவி செய்ங்க. அதன் பின் ஏதேனும் சாப்பிடக் கொடுங்க பின்னே என்ன செய்யலாம் என முடிவெடுப்போம்” என செந்தில்நாதனின் காதருகில் சென்று கிசுகிசுத்தான் ஸாம்.

 

தான் பேசியதை அழகி புரிந்துகொள்வாளா என யோசித்தபடி “ அழகி நான் ஸாம் “ என்று கை கொடுத்தான். அவள் குறிப்பற்று அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். “உங்க ஃபேமிலி ஃப்ரெண்ட் “ என முடித்தான். கொஞ்சம் ஆசுவாசமானாற் போலிருந்தது. இன்னும் அதே பார்வையோடு அமர்ந்திருந்தாள் அவள். எத்தனை முத்தங்கள் எத்தனை எத்தனை முத்தங்கள் எந்த யத்தனமுமில்லாமல் பெய்த உதடுகள் இன்னும் இறுக்கத்தோடுதான் இருந்தன.

 

அவளையே அனைவருக்கும் ஒரு அந்நியள் போலக் காட்டிக் கொண்டிருந்தது அவளது பார்வை. யாரும் நெருங்க அஞ்சினார்கள். மாலாவைக் குறிப்பாகப் பார்த்தான் ஸாம். மாலாவின் கரம் தொட்டதும் அதைப் பற்றியபடி எழுந்து உள்ளே சென்றாள் அழகி.

 

ன்னங்க என்னாச்சு எங்க இருக்கீங்க உங்க செல் கிடைக்கவேயில்லை..” எனக் கேட்டாள் தேவி.

 

அவளால் நிம்மதியாக அமர்ந்திருக்க முடியவில்லை வீட்டில். டாமி அவள் பக்கமாகத் தனது குஷனில் படுத்தபடி அவளை அரைக்கண் பார்த்துக் கொண்டிருந்தது.

 

திடீரென அவனுக்கு இன்னொரு கால் வந்து கொண்டிருந்தது திரை ஒளிர்ந்தது. மௌனமாய் ஸாம் ஸாம் என்றது.

 

“இதோ வந்திட்டே இருக்கேம்மா” எனக் கட் செய்ய முயன்றான் . லயன் கட் ஆகாததைக் கவனிக்காமல் ராணியின் காலை அட்டெண்ட் செய்தான்.

 

”என்னங்க எங்க இருக்கீங்க என்ன ஆச்சு உங்க செல் கிடைக்கவேயில்லை” இதையே ராணியின் குரலும் எதிரொலித்தது. துணுக்குற்றது அவனுக்கு.

 

என்ன சொல்வதெனத் தெரியவில்லை. எதிலிருந்து ஆரம்பித்து எதைச் சொல்ல. யாரிடமிருந்து ஆரம்பித்து யாரிடம் தொடர்ந்து யாரிடம் முடிக்க.?

 

”ம்ம்ம் நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம். வந்து சொல்றேன். ” ராணிக்கு அவன் சொல்லிய பதில் கேட்டுக்கொண்டிருந்த தேவியின் காதுகளில் அமிலத்தை ஊற்றியது.

ஃபோனைக் கட் செய்துவிட்டு எழுந்து சொல்லிக் கொள்ளாமலே நடந்து செல்லும் ஸாமைப் பார்த்துத்  திகைத்துப்போய் அமர்ந்திருந்தார்கள் செந்தில்நாதனும் அவர் மனைவியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)