வியாழன், 30 நவம்பர், 2023

காரைக்குடி முத்தாளம்மன் கோயில்

அம்மனின் முன் ஒரு சூலம் பார்த்திருப்பீர்கள். ஐந்து சூலங்கள் சந்நிதி முன் எலுமிச்சையோடு அலங்கரிக்க ஐந்து அம்மன்களை ஒரே சந்நிதியில் ஒரே கருவறை பீடத்தில் பார்த்திருக்கிறீர்கள். இல்லை என்றால் காரைக்குடிக்கு வாருங்கள். கண் குளிரப் பார்த்து மகிழலாம். காரைக்குடியில் அருளாட்சி செய்துவரும் அம்மன் கோவில்களில் ஒன்று முத்தாளம்மன் கோவில். 

இக்கோவில் காரைக்குடியின் மத்தியில் நகரச் சிவன் கோவிலுக்கு அருகில் முத்து ஊரணியின் கரையில் அமைந்துள்ளது .மிகச் சக்தி வாய்ந்த கோவில் இது. 

செவ்வாய்ப் பொங்கல் எனப்படும் வைகாசிப் பொங்கல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அன்று புற்றுமண் மாற்றும் நிகழ்வில் அம்மனுக்குச் சிறப்பு  அலங்காரம் நடைபெறும்.

நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருந்தபோது இந்தத் திருவிழாவின் போதுதான் அம்மன் உருவத்தைப் பார்ப்போம். மற்றைய சமயங்களில் அக்கோயிலின் எல்லாச் சந்நிதிகளிலும்  இப்போது இருப்பது போல் மேற்கூரை இல்லாமல்தான் இருக்கும்.  இப்போது கருவறை மட்டும் நடுவில் திறந்த வெளியாய் இருக்கிறது.  சுற்றிலும் வேல் கொண்ட கம்பித் தடுப்புகள். 

முத்தாரம்மன் என்றும் சொல்கிறார்கள். நாங்கள் முத்தாளம்மன் என்றே கூறிப் பழக்கப்பட்டு விட்டோம். முத்து ஆரம் போல் ஐந்து அம்மன்கள் நெருக்கமாய் அமர்ந்த திருவுருவம் முத்தாளம்மா.

இக்கோயில் பத்மசாலியர், சேணியர் என்னும் சமூகத்தினரால் ( வேளாளர்கள் என்றும் சொல்வார்கள் ) நிர்வகிக்கப்படுகிறது.  


புதுப்பிக்கப்பட்ட கோவிலின் தெற்கு வாயில். வெகு அழகாக கம்பீரமாக இருக்கிறது.  வெளியே முத்துக் கருப்பர் கோபுரத்தில் காட்சி அளிக்கிறார்

வைகாசிப் பொங்கல் அல்லது செவ்வாய்ப் பொங்கலின் போது காரைக்குடியின் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். சம்பந்தப்புரத்தினர் தேங்காய் பழம் வாங்கிக் கொண்டு பெண் கொடுத்த பெண் எடுத்த வீட்டிற்கு விருந்திற்கு வருவார்கள். 

ஊர்க்காரர்கள் ( நாட்டாரும் நகரத்தாரும் ) கோயிலுக்குப் போல் பொங்கல் இட்டு, மாவிளக்கு வைப்பார்கள். எனக்கு வயிற்று வலி அடிக்கடி வந்தபோது அம்மா வயிற்றில் மாவிளக்கு வைப்பதாக வேண்டிக் கொண்டிருந்தார்கள். கல்லூரிப் பருவத்தில் ஒரு திருவிழா நாளில் இங்கே சந்நிதியின் முன் என்னைப் படுக்க வைத்து வயிற்றில் வாழை இலை போட்டு ஒரு பாத்திரத்தில் மாவிளக்கு வைத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்கள். அதன் பின் வயிற்று வலி என்பதே வரவில்லை. மக்கள் இங்கே வேண்டிக் கொண்டு உரு வாங்கிப் போடுவதும் உண்டு. ( கை, கால், கண் போன்ற உடல் உறுப்புகள் உரு வடிவில் கிடைக்கும் )

நீர்மோர், பானகம் கிடைக்கும். வெல்லத்தைக் கொடுத்துவிட்டுத் தூக்குச் சட்டியில் பானகம் வாங்கி வருவார்கள். முத்தூரணித் தண்ணீரில் கரைத்துச் செய்யப்படுவதாலோ என்னவோ அந்தப் பானகத்துக்கு என்று தனி ருசி உண்டு.

குழந்தைகளுக்கு முடி இறக்கிக் கரும்புத் தொட்டில் கட்டுவார்கள். மேளதாளத்தோடு கரும்புத் தொட்டிலில் குழந்தைகளைப் போட்டு ஊரணியையும் கோவிலையும் கொதிக்கும் வெய்யிலில் பக்திப் பரவசத்தோடு சுற்றி வருவார்கள்.

பால்குடம் , காவடி , தீமிதி எல்லாமும் உண்டு. ஒரே பக்திப் பரவசமாய் இருக்கும். 

மேலும் முத்துமாரியம்மன் கோவில் பங்குனிப் பால்குடம் இங்கிருந்துதான் புறப்படும். 

6.2.2022 கும்பாபிஷேகம் நடந்தது. 



உள்ளே செல்வ விநாயகர், முத்து விநாயகர், 108 நாகர்கள் கொண்ட சந்நிதியும் உள்ளது. 


எங்கள் நேச முத்தாளம்மா. காவல் சிங்கங்கள் கர்ஜிக்க பொலிவோடு, எழிலோடு அழகாகக் காட்சி தரும் முத்தாளம்மா. 


முத்துக் கருப்பர் சந்நிதி. நான்கு அரிவாள்கள் வைக்கப்பட்டுள்ளன. 


ஐந்து சூலங்கள் எதிர் நின்று அம்மனின் சக்தியை அபரிமிதமாய் வெளிப்படுத்தும் சந்நிதி. ஐந்து சூலங்களிலும் பதினைந்து எலுமிச்சைகள் செருகப்பட்டு அருட் காட்சி தருகிறது. பார்த்தவுடன் சிலிர்க்கிறது. 


முத்துப் பேச்சியும் பேச்சியம்மனும் சூலாயுதங்களோடு கம்பீரக் காட்சி. சிறிதும் பெரிதுமாய்ப் பல சூலங்கள் அம்மன்களின் முன் வைக்கப்பட்டுள்ளது. 

இங்கே முத்து விநாயகர் கோவிலின் வடமேற்கு மூலையில் முத்தூரணியைப் பார்த்தவாறு கோவில் கொண்டுள்ளார். இங்கிருந்துதான் முத்துமாரியம்மன் கோவிலுக்குப் பங்குனிப் பால்குடம் புறப்படும். 

சுற்றுப் பிரகாரங்களில் முத்துக் கருப்பர், முத்துப் பேச்சி, பேச்சியம்மா, செல்வ விநாயகர், 108 நாகர்கள், முத்து விநாயகர் ஆகியோர் அருள் பாலிக்க முத்தூரணி இப்போது கட்டுக் கோப்புடன் நந்தவனத்துடன் , நடைபாதையுடன் செப்பனிடப்பட்டு இருக்கிறது. 


எங்கள் அம்மா வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் ஒரே ரோட்டில் (பசுமடம் வீதி) உள்ள கோவில் இது. எங்கள் இளமையில் நாங்கள் கண்ட அம்மன்கள் கொப்புடை அம்மனும், முத்தாளம்மனும் சிறிய பெரிய முத்து மாரியம்மன்களும். 

ஐந்து சூலங்கள் எலுமிச்சையுடன் எதிர் நிற்க அருளாட்சி வழங்கி வரும் முத்தாளம்மனைக் காணக் கண் கோடி வேண்டும். பங்குனிப் பெருவிழாவிலும் வைகாசிச் செவ்வாய்த் திருவிழாவிலும் எள் போட்டால் எண்ணெய் எடுத்துவிடும் அளவுக்குக் கூட்டம் நெருக்கித் தள்ளும். அன்றைய அலங்காரம் என்றென்றும் நம் நினைவில் நிற்கும். 

இப்போது எந்நாளும் இவளைக் கண்டு களிக்கலாம். கேட்டதெல்லாம் வழங்கும் முத்தாளம்மனைத் தரிசித்துப் பிறவிப் பயன் எய்துங்கள். 

கோவில் தினமும் காலை ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை திறந்திருக்கும்.

அமைவிடம்:- காரைக்குடி நகரச் சிவன் கோவில் அருகில். ரயில்வே நிலையத்திலிருந்து 2.8 கிலோ மீட்டர் தூரத்திலும் , புது பஸ்ஸ்டாண்டிலிருந்து 1.8 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. 

4 கருத்துகள்:

  1. எத்தாளம் இசைத்தாலும்
    எழுந்து வரும் பேரரசி
    முத்தாளம் பேரைச் சொல்ல
    முகிழ்த் தருளும் எழிலரசி..

    கைத்தாளம் வாழ்வினிலே
    கற்பனையாய் கரைந்து விட
    முத்தளம்மா வருவாய்
    வித்தாரம் தாரும் அம்மா...

    பதிலளிநீக்கு
  2. அழகான பாடல், வெகு அருமை. சந்த நயத்தோடு கூடிய வேண்டுதலும் வாழ்த்தும். நன்றி துரை செல்வராஜூ சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு நன்றியம்மா..

      நீக்கு
    2. நாளை எனது தளத்தில் முத்தாளம்மனுக்கு முத்தாரம் வெளியாகின்றது..

      வாசித்து மகிழ்வதற்கு
      அன்புடன்
      அழைக்கின்றேன்..

      நீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)