வெள்ளி, 3 நவம்பர், 2023

வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும், வாழ்வதிலும் பொருள் வேண்டும் எனக் கூறும் திரு. லயன் வெங்கட்.

வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும், வாழ்வதிலும் பொருள் வேண்டும் எனக் கூறும் திரு. லயன் வெங்கட்.


 


காரைக்குடியைக் கல்விக்குடியாய் மாற்றியதில் வள்ளல் அழகப்பரின் பங்கு அளப்பரியது. அதேபோல் காரைக்குடியில் 21 ஆண்டுகளாய்ப் புத்தகத் திருவிழா நடத்தி அறிவுச் சுடரேற்றி வருபவர்கள் காரைக்குடிப் புத்தகத் திருவிழாக் குழுவினர். இவர்களுள் லயன் வெங்கட் என்று நண்பர்களால் அழைக்கப்படும் திருமிகு.வெங்கடாசலம் அதன் பொருளாளராய் இருந்து திறம்படத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

 

இது மட்டுமல்ல வாழ்வியல் நெறிகளை அழகுறத் தரும் திருக்குறள் கழகம், மெய்யியல் நெறியைப் பரப்பும் இந்து மதாபிமான சங்கம், இசைத்தமிழுக்கென்று உருவான தமிழிசைச் சங்கம், தனவணிகர் மரபுக்கேற்ற காரைக்குடி தொழில் வணிகக் கழகம் எனக் காரைக்குடியின் பாரம்பரியச் சங்கங்கள் பலவற்றுக்கு இவர் அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றி உள்ளார். உலகளாவிய அரிமா சங்கத்தின் காரைக்குடி மாவட்ட வட்டாரத் தலைவராகவும் பல்வேறு தொண்டுகள் புரிந்துள்ளார். எப்படி இவ்வளவையும் திறமையாக, சரிவர நிறைவேற்ற முடிகிறதென்று பார்க்கும்கணம் தோறும் என்னை ஆச்சர்யப்பட வைப்பவர் இவர். சுறுசுறுப்பானவர். எப்போதும் பளிச் தோற்றம் கொண்டவர். இவரைப் பார்த்தாலே நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இந்த மனம் ஒரு நந்தவனம், சுவாமி சிவானந்தரின் பொன்மொழிகள் போன்ற நேர்மறை எண்ணங்கள் கொண்ட புத்தகங்களை அனைவருக்கும் பரிசாக வழங்கி மகிழ்பவர்.

 

காரைக்குடியில் இவர்கள் வீட்டுக்கு வேகுப்பட்டியார் வீடு என்று பெயர். இவரது தந்தையார் திருமிகு வள்ளியப்பச் செட்டியார் 96 ஆண்டுகள் சிறப்பாக வாழ்ந்து கடைசி வரை நடையுடையுடன் இருந்தவர்கள். முதன்முதலில் காரைக்குடியில் பங்கு வர்த்தகம் செய்தவர்கள். பெட்ரோபாட்டரி டிப்போ என்ற கடை நடத்தியவர்கள். 13 வயதிலேயே பர்மா, பின்பு மலேயாவிற்குக் கொண்டு விற்கச் சென்றவர்கள். இவரது தாயார் திருமிகு அலமேலு ஆச்சி ஆறாவயல் மஞ்சி வீட்டில் பிறந்தவர்கள். இவரது மனைவியின் பெயர் சரஸ்வதி. இசையில் வல்லவர். அருமையாகப் பாடுவார். இவர்களுக்கு மூன்று மகள்கள். ஒரு மகன். மகள்களுக்குத் திருமணமாகிப் பேரன் பேத்திகள் இருக்கிறார்கள்.

 

கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த இவரிடம் இவரது இளமைப்பருவம், கல்வி , திருமணம் பற்றிக் கேட்டபோது, ”நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ. கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவன். அப்போது பி.இ. ஐந்து ஆண்டுகள் படிக்க வேண்டும். படிக்கும்போதே எனக்குத் திருமணம் ஆகிவிட்டது.

 

இரண்டு ஆண்டுகள் சேஷசாயி பேப்பர், ஈரோட்டில் TNPL project office இல் வேலை பார்த்தேன். பின் இரண்டு ஆண்டுகள் குவாலிட்டி பேப்பர் மில்லில் வொர்க்ஸ் மேனேஜர் ஆக வேலை பார்த்தேன். அதன்பின் கோயமுத்தூர் சௌத் இந்தியா விஸ்கோஸில் வேலை பார்த்தேன். அங்கு சல்ஃபர்டை ஆக்ஸைடினால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே காரைக்குடிக்கு வந்துவிடுமாறு எனது தந்தையார் கூற காரைக்குடி வந்து சேர்ந்துவிட்டேன்.


 

எனது 35 – 40 வயதுக்குள் எனது தந்தையார் அவர்கள் குறிப்பு, பேரேடு, ஐந்தொகை எழுதுவது, வங்கி வேலைகள், வியாபார முறைகள் என ஒரு அறுபது வயதில் அடைய வேண்டிய அனுபவத்தை அப்போதே கற்றுக் கொடுத்தார்கள். வைரக்கற்களைப் பரிசோதிப்பது, மற்ற பச்சை, சிகப்பு இவற்றை எப்படிப் பரிசோதிப்பது என கற்றுத் தந்தார்கள்.

அத்தகைய தகப்பனார் கிடைத்தது எனது மாபெரும் அதிர்ஷ்டம் என எப்போதும் நினைத்துக் கொள்வேன்.” என்றார்.  

 

அமெரிக்கா சென்றிருந்த போது த இண்டர்நேஷனல் அசோசியேஷன் ஆஃப் லயன்ஸ் க்ளப்பிற்கு இவர் விசிட் சென்றிருந்த புகைப்படத்தைப் பார்த்து விட்டு லயன்ஸ் க்ளப்புடனான இவரது சேவைகளைப் பற்றிக் கேட்டபோது “நான் 1990 இல் லயன்ஸ் க்ளப் ஆஃப் காரைக்குடியில் இணைந்தேன். அதில் பொருளாளராக, செயலாளராக, தலைவராக, வட்டாரத் தலைவராக, மாவட்ட வட்டாரத் தலைவராக, எனப் பல நிலைகளில் ஏழைகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தொண்டாற்றி வருகிறேன்.

 

2008 இல் தலைவராக இருந்தபோது காரைக்குடி எஸ் எம் எஸ் ஆண்கள் உயர்நிலைப் பள்ளிக்குக் குடிநீர்த் தேக்கத் தொட்டியும், எஸ் எம் எஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியைகளுக்குக் கழிப்பறையும், குழந்தைகளுக்கு நீர்த்தேக்கத் தொட்டி, பம்ப்செட், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி எனப் பல உதவிகளைச் செய்துள்ளேன். மேலும் சின்னையா அம்பலம் பள்ளிக்கு டேபிள், பெஞ்ச், குடிநீர் வசதிகளைச் செய்து கொடுத்துள்ளேன்.

 

இந்த வருடம் காரைக்குடி முத்துப்பட்டணம் அரசு பெண்கள் பள்ளிக்கு கழிவறை வசதியும், சென்ற ஆண்டு கோவிலூர் அரசுப் பள்ளிக்குப் படிப்பறையும் அதற்கு முந்தைய ஆண்டில் அரியக்குடி அரசு உயர்நிலைப் பள்ளிக்குக் கழிவறை வசதியும் அதற்கு முந்தைய ஆண்டில் புதுவயல் சரஸ்வதி பெண்கள் பள்ளிக்குக் கழிப்பறை வசதியும் செய்து கொடுத்துள்ளேன். லயன்ஸ் சங்கம் மூலம் இரத்த தான முகாம், கண் சிகிச்சை முகாம் ஆகியன நடத்தி உள்ளோம்.

 

லயன்ஸ் இயக்கத்தில்  ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை ஒரு ஆண்டு தலைவராக இருக்கலாம்நான் தலைவராக இருந்த போது கடைசி நாளான ஜூன் 30 ஆம் தேதி அன்று எங்கள் மாவட்டம் 324B3யின் 100 ஆவது சங்கம் ஆரம்பித்துஆண்டின் நிறைவு நாளன்று கூட ஒரு சிறந்த சேவை செய்ததாகப்  பாராட்டு பெற்றேன்அது இன்றும் சிறப்பாக செயல்பட்டு வரும் கோட்டையூர் ஸ்ரீ ராம் நகர் லயன்ஸ் சங்கம்லயன்ஸ் சங்கம் 324 B3 மாவட்ட அறக்கட்டளை உறுப்பினராக நானும் என் மனைவியும் உள்ளோம். ”வாழ்வதற்குப் பொருள் வேண்டும். வாழ்வதிலும் பொருள் வேண்டும் “” என்ற நிலைப்பாட்டை உணர்த்திய லயன்ஸ் இயக்கத்தை என்றென்றும் வணங்குகின்றேன். ”என்றார். இவரது பல்வேறு சாதனைகளையும் பாராட்டி காரைக்குடி நியூஸ் மற்றும் வசந்த் டிவி இணைந்து கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடந்த விழாவில் ”வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கிக் கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அறிவொளிச் சுடர் ஏற்றும் காரைக்குடிப் புத்தகத் திருவிழா பற்றிக் கேட்டபோது, “காரைக்குடி புத்தகத் திருவிழா கடந்த 21 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஜூன் 30 முதல் ஜூலை 9 வரை நடைபெறுகிறது. முதல் ஐந்து வருடம் ஃபைனான்ஸ் கமிட்டியில் இருந்தேன். ஆறாவது வருடம் முதல் இன்றுவரை தொடர்ந்து பொருளாளராக இருந்து வருகிறேன்.

 

அதற்கெனத் தனி அறக்கட்டளை 2009 இல் ஆரம்பித்து அன்று முதல் இன்று வரை அறங்காவலராகவும் பொருளாளராகவும் இருந்து வருகிறேன். 2020 வரை டாக்டர் அய்க்கண் அவர்கள் தலைவராகவும் திரு முத்துப்பழனியப்பன் அவர்கள் செயலாளராகவும், நான் பொருளாளராகவும் இருந்து வந்தோம். டாக்டர் திரு அய்க்கண் அவர்கள் மறைவிற்குப் பிறகு திரு முத்துப் பழனியப்பன் அவர்கள் தலைவராகவும், நான் பொருளாளராகவும் தொடர்ந்து இருந்து வருகிறோம்.”


 

காரைக்குடித் திருக்குறட்கழகம் பற்றி “காரைக்குடி திருக்குறட்கழகத்தை 1953 ஆம் ஆண்டு டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் அவர்களின் தகப்பனார் திரு. சுப்பையா, எனது மூத்த சகோதரர் திரு. எஸ்பி,வி.சுப்பையா, நவயுகப்புத்தகாலயம் திரு.மெய்யப்பன், திரு.குறள் இலக்குவன் மேலும் கோவிலூர் ஸ்ரீலஸ்ரீ மெய்யப்ப ஞானதேசிக சாமிகள், பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் திரு வெ.தெ.மாணிக்கம் போல பல மேலோர் இணைந்து ஆரம்பித்தனர். 

 

அந்தக் காலத்தில் இதன் ஆண்டு விழா மகர்நோன்புப் பொட்டலிலும் பின்பு எஸ் எம் எஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும் நடைபெற்றது. கிட்டத்தட்டக் கம்பன் விழாவிற்குச் சரிநிகராக நடத்தப்பட்டது. ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆகின்றன. ஆரம்பத்தில் இவ்விழாவில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், திருகுறளார் முனுசாமி, தேவர் திருமகன் போன்ற மிகப்பெரும் பேரறிஞர்கள் கலந்து கொண்டனர்.” என்றார். இப்போது இதன் தலைவராக திரு பெரி. பஞ்சநதம், செயலாளராக திரு என் பி ராமசாமி, பொருளாளராக திரு. வெங்கடாசலம் ஆகியோர் செயலாற்றி வருகிறார்கள். இக்கழகத்தின் ஆண்டு விழாக்களில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திரு சுபவீ, திரு சொ.சொ.மீ, திரு மேலை பழனியப்பன் ஆகியோரின் உரைகளைக் கேட்டு நானும் மகிழ்ந்திருக்கிறேன்.  

 

மற்ற சேவைகள் பற்றி “காரைக்குடித் தொழில் வணிகக் கழகத்தில் 3 ஆண்டுகள் செயலாளராகப் பணிபுரிந்தேன். தொடர்ந்து 2009 முதல் செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறேன். காசி சத்திர செயற்குழுவில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தேன். காரைக்குடி தமிழிசைச் சங்கத்தில் 4 ஆண்டுகள் செயலராகப் பணிபுரிந்தேன். காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தில் 6 ஆண்டுகள் இணைச்செயலாளராகப் பணிபுரிந்தேன். காரைக்குடி நவீன எரிவாயு தகன மேடை அறநிலையில் ஆரம்பம் முதல் தொடர்ந்து செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறேன்.

 

தற்போது சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உடைய லயன்ஸ் க்ளப் ஆஃப் காரைக்குடி ட்ரஸ்டின் சேர்மன் ஆக இருந்து நிர்வகித்து வருகிறேன். எங்கள் குடும்பத்தில் அனைவரது பிறந்த தினம் மற்றும் எங்கள் திருமண நாள் அன்றும் முதியோர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். மற்றும் திருமண உதவி, கல்வி உதவி, மருத்துவ உதவி வழங்கி வருகிறோம்.

 










நிறைவாக இறைவன் நமக்குக் கொடுத்ததை மற்றவர்களுக்கும் கொடுத்து உதவுவோம் என்று கூறி நம்முடன் எதையும் எடுத்துச் செல்ல முடியாது எனவே அடுத்தவர்க்குக் கொடுத்து உதவுங்கள் என்று கூறி மகிழ்ச்சி கொள்கிறேன். ” என்றார். அனைவரும் பின்பற்றக்கூடிய அருமையான செய்தியைக் கூறி இருக்கிறீர்கள். மிக்க நன்றி திரு லயன் வெங்கட் அவர்களே. காரைக்குடிக்கு அறிவுச் சுடரேற்றும் உங்கள் பணி என்றென்றும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.  

2 கருத்துகள்:

  1. நல்ல அறிமுகம். நல்ல செயல்களைச் செய்துவரும் அருமையான வாழ்வியல் கருத்தைச் சொல்லும் உயர்ந்த உள்ளம் கொண்ட திரு லயன் வெங்கட் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)