வெள்ளி, 24 நவம்பர், 2023

சாண்டர்ஸ் ட்ராகனோ

சாண்டர்ஸ் ட்ராகனோ

காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன் பூப்பறித்துக் கோர்க்கச் சொன்னேன் ஓடிவந்து உன்னைச் சந்திக்க.. ” ஸாமின் செல்ஃபோன் ரிங்கிட்டது. சமீபகாலமாக அவன் இந்தப் பாட்டைக்கூட நேசிக்கத் துவங்கி இருந்தான்.

 

நேரம் கிடைக்கும்போதெல்லாம் எப்போதடா ராணியைப் பார்ப்போம் என்றே ஏங்கிக்கொண்டிருந்தது அவன் மனது. காலிங் பெல் அடிக்கும்போதும் மெல்லவே தட்டுவான். அவள் பயந்துவிடக்கூடாது என்று.  சரிந்த வயிற்றோடு மெல்ல மெல்ல நடந்து வந்து அவள் கதவைத் திறக்கும்போது அவள் வயிற்றில் கதவு இடித்துவிடுமோ என்று பயப்படும் அளவுக்கு அவனது பிரியம் எல்லை கடந்து கொண்டிருந்தது.

 

“ஹேய் ஒண்ணுல்லப்பா , குட்டீஸ் முண்டுறாங்க. ரெண்டு பக்கமும் வயிறு அசைஞ்சிச்சு அதான் சொல்ல கூப்பிட்டேன். என்னால அந்த பரவசத்தை தாங்க முடில. “ ஸ்கந்தபுரி எஸ்டேட்டில் இருக்கிறான் ஸாம். அவனது மனமோ பறந்து போய் அவளது வயிற்றைத் தொட்டுப்பார்த்துக் கொண்டிருந்தது.

 

காரின் ஸ்டீரியங்கை கன்னா பின்னாவென்று வளைத்தபடி மலைப்பாதையில் எங்கே போகிறோம் என்று தெரியாமல் பறப்பது போல் பறந்து கொண்டிருந்தான் அவன். இனிப்பான பரவஸத்தில் உள்ளம் எல்லாம் நனைந்து கொண்டிருந்தது. தன் குழந்தைகள் அதுவும் இரட்டைக் குழந்தைகள் துள்ளும் அழகை, பிஞ்சு விரலை குட்டிப்பாதத்தை எடுத்து தலையில் வைத்துக்கொள்ள வேண்டும்போல் உள்ளம் துடித்தது.

 

“கண்ட்ரோல் மேன்.. என்னா ராஷ் ட்ரைவிங் இது.. “ இடிப்பதுபோல் வந்த ஜீப்பில் அவரது காபிக் கம்பெனியின் பிஸினஸ் பார்ட்னர் ராஜேஷ். கொண்டை ஊசி வளைவுகளில் தட்டுத் தடுமாறி நின்றது அவனது மஹேந்திராதார்.  இறங்கி வந்த ஸாமின் கையை இறுக்கப் பற்றிக் குலுக்கினான் ராஜேஷ். “ லக்கி ஃபெலோ கங்கிராட்ஸ்டா “

 

”ஸாரி ஸாரிடா ..” என்றான் ஸாம். மனசுக்குக் கடிவாளமிட்டான்.

 

”அத விடு.. உன் பசுமை இல்லங்களுக்கு அரசாங்க சுற்றுச்சூழல் விருது கிடைச்சிருக்கு.. அதுக்கு வாழ்த்துக்கள்டா “ நீ எந்த பிஸினஸ் செய்தாலும் சக்ஸஸ்தாண்டா. பில்டராவும் ஜெயிச்சிட்டே. பிஸினஸ் கிங். !“

 

FORESTS AND SUSTAINABLE CITIES -  இந்த வருட வனதின தீம் இது. இதற்கு இவர்கள் எல்லாம் எவ்வளவு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அவன் அமைத்த ஃப்ளாட் இல்லங்களில், ஏசி போன்றவை ஃபிட் செய்யாமலே இயற்கைச் சாளர முறையில் காற்று வரும் ஏற்பாடு, ஹாலில் செயற்கை நீர்வீழ்ச்சி, மாடியில் ஸ்விம்மிங் பூல் என்று எவ்வளவு பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருந்தான். சாண்டர்ஸ் ட்ராகனோ என்ற அதிர்ஷ்டப் புல்லை எங்கெங்கு நோக்கினும் பதித்து இருந்தானே. அதிகம் தண்ணீர் தேவைப்படாத செடி. கிள்ளிக் கப்பில் போட்டு கல்லில் புதைத்து வைத்தாலும் கிளைக்கும் வகை. ஆக்ஸிஜனை அதிகப்படுத்தும்.

  

வில்லாக்களிலும், கேட்டட் சொஸைட்டியிலும்  இயற்கைப் பசுமையுடன்  பால்கனிச் செடிகள் மூலமும், மாடித்தோட்டம் மூலமும் சுற்றிலும் நாட்டு மரங்களான வேம்பு, பலா, அரசு, இலுப்பை, மகிழம், பூவரசு, புங்கை, இலந்தை, வாதநாராயணன் மரம் எல்லாம் நட்டிருந்தான்.   

 

அவனுடைய நெடுநாள் விஷன் அது. அதைப் பிடிவாதமாக தன் செலவில் நிறைவேற்றவே செய்தான். ஃப்ளாட்ஸ் எல்லாம் வித்தா விக்குது இல்லாட்டி இருக்கட்டும். நிச்சயம் இத விரும்புறவங்க வாங்குவாங்க. காதல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்னு நம்பிக்கை வேற இருக்கு. இதுனால புதுசா கட்டிக்கிட்டவங்க வாங்க தேர்ந்தெடுக்குற ப்ளாட்டுகள்ல இவனோட பசுமை இல்லங்கள் முன்னணி வகிச்சுது

 

ஆர்கானிக் காய்கறிகள் போல கிராக்கியும் தேவையும் அதிகமானாலும் நியாயமான விலையும் கட்டுமானத்துக்குப் பேர்போன கம்பெனிங்கிறதாலயும் நிறைய வெளிநாடுகள்லயும் கால்பதிக்கத் துவங்கி இருக்குது.

 

பிஸினஸ் கிங்தான் ஆனால்.. உள்ளம் லேசாக மருண்டது அவனுக்கு.

 

என்னவோ ஒரு மனமயக்கம். தேவியின் கோபமுகமும், முத்தழகியின் ஆதங்க முகமும் அதைவிட அதிகமாக ராணியின் நினைப்பும் சுழற்றிக் கொண்டிருந்தது அவனை.

 

ன்னை இங்கு மீட்கத்தான் உன்னைத் தேடி வந்தேனே. மீட்கும்போதும் மீண்டும் நான் உன்னில் தொலைகிறேனே..” பாடிக்கொண்டிருந்தார் கார்த்திக். அவர் குரலில் வழிந்த ஏக்கம் ஸாமின் மனதைக் கரைத்துக் கொண்டிருந்தது. 

 

சோஃபாவின் பின்னிருந்த ட்ராகனோ புல்லை வாஞ்சையோடு பார்த்தான் ஸாம். ”இதுக்கு எதுவுமே வேணாம்ல . ஈவன் தண்ணீ கூட . தானே பிழைச்சுக்குது. ” அதிசயித்தான் ஸாம்.

 

“புல்லுதானே பொழைச்சுக்கும். புல்லுருவிகள் “ படபடத்தாள் தேவி.

 

”ஏன் தேவி எப்பவுமே கோவமா இருக்கே. நாம செய்த முடிவுப்படிதானே எல்லாம் போயிட்டு இருக்கு.”

 

”நாம இல்லை நீங்க ப்ளான் பண்ணி செஞ்சது. அதுல நான் ஒரு பாத்திரம். பொம்மை. உங்க கைப்பாவை. நெனைச்சபடி எல்லாம் என்னை ஆட்டி வைச்சிட்டு இருந்தீங்க. இப்ப நான் முழிச்சிக்கிட்டேன். ”

 

கோபமாக உறுத்து விழித்தாள் தேவி. யம்மாடி ருத்ர ரூபத்தில் அவனுக்குக் கொஞ்சம் மிரட்சி கூட ஏற்பட்டது. அவளை எப்படி சமாதானப்படுத்த.

 

”லுக் தேவி, நீ சந்தேகப்படுற மாதிரி எதுவுமே இல்லை. எனக்கு ராணியை காலேஜ் டேஸ்லேருந்து தெரியும். அத சொல்லாம விட்டது தப்புத்தான். அவ நம்ம பிள்ளைகளைச் சுமக்கிறான்னு அதீத சந்தோஷம்.. அவ்வளவுதான். அதுக்குமேலே எதுவுமேயில்லை. “ சொல்லும்போதே மனசு விரல் நீட்டிக் குற்றம் சாட்டியது. தலை குனிந்து கொண்டான்.  

 

”என்னது பிள்ளைகளா… அப்ப இரண்டா..இதுவரைக்கும் சொல்லவேயில்லை.. ”

 

இதைக் கேட்கும்போது தேவியின் முகம் இன்னும் கோபத்தால் சிவந்தது. தனக்குப் பிள்ளை வரம் தராமல் செய்த ஆண்டவன் கையில் அகப்பட்டால் அவளே ப்ரத்யங்கிரா தேவி ஆகிவிடுவாள் போலிருந்தது.

 

தெரியாமல் சொல்லிவிட்டோமேயென “ இல்லைடா நமக்காக பிள்ளையைச் சுமக்கிறான்னு சொல்ல வந்தேன் “ என்றான்.

 

சுவரில் இருந்த இருவாட்சிகள் வெளியே வந்து இரு முறை கூவிவிட்டுச் சென்றன. இரவு இரண்டாகிவிட்டதா. இப்போதெல்லாம் தூக்கம் வருவதேயில்லை. அதுவும் தேவியின் கோபம் பட்ட இரவு நெருப்பாகி விடுகிறது. எல்லாமே தகிக்கிறதே. எல்லார் வாழ்விலும் பசுமையை விரிக்கும் தன் வாழ்வு ஏன் பாலையாய்க் காய்கிறது.. எங்கே தவறு புரியவேயில்லை அவனுக்கு.

 

இது அன்பும் அதிர்ஷ்டமும் பெருக்கும் புல்லாமே..  இங்கே மட்டும் ஏன் வெறுப்பை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது. மூங்கில் தொட்டிச்செடி அவன் கால்பட்டு உருண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)