செவ்வாய், 21 நவம்பர், 2023

எந்த மாற்றம் வரினும் வாழ்க்கை வாழ்வதற்கே என்று கூறும் மணிமேகலை

 எந்த மாற்றம் வரினும் வாழ்க்கை வாழ்வதற்கே என்று கூறும் மணிமேகலை.



மணிமேகலை. இப்பெயரைக் கேட்டதும் உங்களுக்கு மணிமேகலைக் காப்பியம் நினைவுக்கு வரலாம். இவர் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர்.தன் பத்து வயதிலேயே 1330 குறள்களையும் மனப்பாடம் செய்து ஒப்பித்துப் பரிசு வாங்கியவர். ஒரு கவிதை நூலுக்குச் சொந்தக்காரர். அனைவருடனும் தன்மையாக இயைந்து செல்லும் குணம் கொண்டவர். அழகப்பா கல்லூரியில் பி காம் படித்த இவர் சக்தி நிறுவனத்தின் தூணாக இருபத்தி ஐந்து வருடம் பணியாற்றினார். அதிலிருந்து விலக நேரிட்டதும் அடுத்த நாளே இன்னொரு கம்பெனியில் பணியில் அமர்ந்தார். ஆனால் தன் பூர்வீகப் பணியிடத்தைப் பற்றி ஒரு நாளும் குறை கூறியதே இல்லை. எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நங்கை. அவரிடம் அவரது குழந்தைப்பருவம், குடும்பம், பணி பற்றிக் கேட்டபோது அவர் கூறியதைத் தொகுத்திருக்கிறேன்.


 


”என் அம்மாவிற்கு தமிழ் இலக்கியம் இதிகாசங்கள் புராணங்கள் இவற்றின் மேல் தீராக் காதல். நான் அம்மாவின் வயிற்றில் நிறைமாதமாக இருந்தபோது காரைக்குடி கம்பன் விழாவுக்குச் சென்ற அம்மாவை அனைவரும் இப்படி நிறை மாதத்தில் வரலாமா எனக் கேட்க என் மகள் விழா முடிந்ததும்தான் பிறப்பாள் எனக் கூறினார்கள். அதுபோல் விழா முடிந்ததும் திருவாதிரை நட்சத்திரத்தில் நான் பிறந்தேன். ஆதிரை கையால் அமுத சுரபியில் அன்னம் பெற்றுப் பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுத்த மணிமேகலையின் பெயரை எனக்கு வைத்தனர்.


என் தந்தை மாணிக்கம் என் தாய் மீனாள். எனக்கு ஒரு சகோதரன் வள்ளியப்பன் .என் தந்தை செட்டிநாடு அரசரிடம் பணி புரிந்து வந்தார் எனவே எங்கெல்லாம் கட்டிட வேலை நடக்கிறதோ அங்கு அடிக்கடி பணி மாற்றல் நடக்கும். ஒரு ஊருக்கு போய் படிக்க ஆரம்பிக்க அடுத்த ஊர் மாற்றல் வரும். எனவே வருடா வருடம் பள்ளி மாறும். மேட்டூர் அணையில் இருந்த நாங்கள் பாண்டிச்சேரிக்கு மாற்றல் ஆகிப் போனோம். ஒரு ஃபேக்டரி கட்ட போன இடம் என்பதால் அது ஒரு குக்கிராமம். நானும் என் அண்ணனும் சீருடை அணிந்து காலணிகள் அணிந்து முதல் நாள் பள்ளிக்கு சென்ற போது அது ஒரு அரசுஆரம்பப் பள்ளி என்பதால் மாணவர்கள் பல நிற உடை அணிந்து இருந்தனர் ஒரு வழியாக நாங்கள் அந்த பள்ளியின் நடைமுறைப் படி எங்களை மாற்றிக் கொண்டு படிக்க ஆரம்பித்தோம்.

 

என் அம்மா எங்களுக்கு திருக்குறள் மனப்பாடம் செய்ய சொல்லிக் கொடுப்பது வழக்கம். அப்போது எனக்கு வயது 8. பள்ளிகளுக்கிடையேயான திருக்குறள் போட்டியில் கலந்து கொண்டேன் . ஆனால் எனக்கு இரண்டாம் பரிசு தான் கிடைத்தது. ’இப்படி ஆகிவிட்டதே எல்லாவற்றிலும் முதல் ஆளாய் வரும் நான் இப்படி இரண்டாம் இடத்தில் வந்து விட்டேனே’ என்று அழ ஆரம்பிக்க என் அப்பா பரிசு முக்கியமல்ல .பங்கு பெறுவது முக்கியம் என்று சொன்ன வார்த்தை என் மனதுக்கு இதமாக இருந்தது. முதல் பரிசு பெற்றவர் உன்னை விட என்ன வித்தியாசமாக செய்தார் என்று கவனி உன்னை மாற்றிக் கொள்ள அது உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னதை நான் இன்று வரை கடைப் பிடிக்கிறேன்.

 

பள்ளிபாளையம் சென்றதும் இரண்டு நல் ஆசிரியர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். ஒருவர் மதரஸா இஸ்லாமியா பள்ளியில் ஆசிரியர் கமாலுதீன். வார இறுதியில் மரபுக் கவிதை பயிற்சி இலவச வகுப்புகள் எடுப்பார். அதன் பின் 1330 குறட் பாக்களும் மனப்பாடம் செய்து ஒப்பிக்க வைப்பார். குறள் விளக்கம் வகுப்புகளும் நடக்கும். அவர்தான்  எங்களைப் போன்ற மாணவர்களை ஒன்று இணைத்து பட்டிமன்றம் ஏற்பாடு செய்ய அது மிகப் பிரபலம் ஆனது. நானும் என் சகோதரனும் எதிர் அணியில் வாதாடுவதும் உண்டு. 1330 குறட்பாக்கள் ஒப்புவித்து திருக்குறள் முனுசாமி அய்யா அவர்களிடம் பரிசும் பெற்றோம்.

 


என் பேச்சாற்றல் மிளிர தேவராஜ் மாஸ்டர் உதவி செய்தார். நான் போகும் பேச்சுப் போட்டிக்கெல்லாம் அவர்தான் குறிப்பு எடுத்து கொடுப்பார். நிறைய பரிசுகள் வாங்க ஆரம்பித்தவுடன் அவர் எழுதிக் கொடுப்பதை நிறுத்தி என்னிடம் நூல்களை கொடுத்து இதைப் படித்து நீயே குறிப்பெடுக்க வேண்டும் என்று வழிகாட்டினார். நிறைய படி மூளையில் சேர்த்து வை. எந்த தலைப்பில் எப்போது கேட்டாலும் பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.

 


அடுத்தது பள்ளி மேல் நிலை படிப்பு . கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் பெண்கள் மேல் நிலைப் பள்ளி. பக்கத்து வீட்டில் வசித்த பேராசிரியை சரஸ்வதி இராமநாதன் அவர்கள் தலைமையில் நடக்கும் பட்டி மன்றங்களில் நானும் பங்கெடுக்க உதவினார். பேராசிரியர் மா. கண்ணப்பன் அவர்களும் கவியரங்க  வாய்ப்புகள் பெற்றுத் தர பதின்ம வயதில் காரைக்குடியை சுற்றிய ஊர்களில் கோவை சேலம் ஈரோடு என என் பட்டிமன்றப் பயணம் தொடர்ந்தது. அப்போது திரு சாலமன் பாப்பையா கவிதா ராணி பேராசிரியர் சிற்சபேசன்  காந்திமதி அம்மா தா.கு கோதண்ட ராமன்  அரு.நாகப்பன்முதலியவர்கள் உடன் பேசும் வாய்ப்பும் கிட்டியது. காரைக்குடி கம்பர் விழாவிலும் கவி அரங்கில் கலந்து கொண்டேன். என் அம்மா அன்று அடைந்த  மகிழ்ச்சிக்கு ஈடே இல்லை.

 

இப்படி வளர்ந்த நான் பேராசிரியர் சிற்சபேசன் அவர்கள் உதவியினால் கல்லூரிப் படிப்பை முடித்ததும் அப்பாவுக்கு சென்னை மாற்றல் ஆகிவிட ஒரு நிதி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு 32 ஆண்டுகள் பணி புரிந்தபோது பல அனுபவங்கள். இளநிலை உதவியாளராக சேர்ந்து நிறுவனத்தின் மேலாளர் ஆக மாறி பல ஆண்டுகள் வெற்றிகரமாக பணி புரிந்தேன்

 

விடா முயற்சி,கொடுத்த பணியில் ஆர்வம் நேர்மை , நியாயம்,எப்போதும் வாடிக்கையாளர் சேவை ,உடன் பணி செய்பவர் முன்னேற்றம் என என் அலுவலக வாழ்க்கை வெற்றிகரமாக அமைய என் வீட்டார் என்னோடு ஒத்துழைத்தனர். ஆரம்ப காலத்தில் திருமணம் ஆன புதிதில்  வீட்டு நிர்வாகம் அலுவலக நிர்வாகம் இரண்டையும் சரிவர செய்ய பல சவால்களை சந்திக்க நேர்ந்த போதும் ஒரு போதும் நான் சோர்ந்ததில்லை. பிள்ளை வளர்ப்பு பெற்றோர்கள் துணையோடு ஒரு புறம் நடக்க வெளி வேலைகள் கணவர் பார்த்துக் கொள்ள என் அலுவலகப் பணியில் பல வெற்றிகளைக் குவித்தேன். நீண்ட நாள் பணி புரிந்தமைக்காக தங்க மெடல் பரிசும் வாங்கினேன் . ஓவ்வொரு ஆண்டும் சிறந்த கிளைக்கான பரிசும் பெற்று வந்தேன்.

 

இதற்கிடையில் வெளியில் சென்று பேச முடியாத அளவுக்கு நேரமின்மை வேலைப் பளு. எனது கவிதைகளில் சிலவற்றை தொகுத்து புத்தகமாகவும்  வெளியிட்டோம்.   பாரதிய வித்யா பவனில் பெரிய பெரிய மனிதர்கள் மத்தியில் அந்த நூல் வெளியிடப் பட்டது. என் உறவு மொத்தமும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தியது மிகுந்த மன நிறைவை தந்தது.

 

கொரோனா வருமுன் நான் 32ஆண்டுகள் உயிராக நினைத்த அலுவலகத்தை விட்டு நானே பணி விலகல் கடிதம் கொடுத்து விட்டு வந்த நிகழ்வும் நடந்தது. ஆனால் அதற்கு அடுத்த நாளே வேறு ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். புது துறை என்ற போதும் மீண்டும் மனம் தளராமல் எல்லாவற்றையும் முதலில் இருந்து கற்றுக் கொண்டேன். எனக்கும் கொரோனா தொற்று உறுதியாக என்னை வீட்டில் வைத்து என் கணவர் பார்த்துக் கொண்டார். உயிர் பிழைத்து மீண்டு வந்தேன். மருத்துவர் முத்தையாவுக்கு நன்றி.

 

32 ஆண்டு பணி புரிந்த நிறுவனத்தை விட்டு அதுவும் செங்கல் செங்கலாகஆசைப்பட்டு கஷ்டப்பட்டு உருவாக்கிய என் அலுவலகத்தை விட்டு நான் விலக என்ன காரணம் என்று கேட்காதவர் இல்லை எனலாம். அவர்களுக்கு நான் சொன்னது ஒன்றுதான் . ஒரு கோயிலை பார்த்து பார்த்து உருவாக்கித் தந்த சிற்பியின் நிலைதான் எனக்கு. கோயில் உருவானதும் கருவறைக்குள் வேறு சிலர் புகுந்து கொண்டு அதிகாரம் செய்வதும் சிற்பி வெளியில் நின்று  வணங்குவது போலத் தான். என் மனம் விரும்பாத செயல்களை செய்ய விரும்பாத நான் என் உளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேறு இடத்துக்கு சென்று விட்டேன் என்று சொன்னேன். எங்கு இருந்தால் என்ன சிலை செதுக்குவதுதான் சிற்பியின் வேலை .

 

என் மகனும் வளர்ந்து நன்கு கல்வி கற்று சுய முயற்சியில் பொறியாளர் ஆகி வேலைக்கு சென்றான். இரண்டு ஆண்டுகள் கழித்து மேற்படிப்புக்கு அமெரிக்கா செல்ல விரும்ப நானும் என் கணவரும் முழு சேமிப்பையும் அவனுக்காக கொடுத்து அவன் ஆசையை நிறைவேற்ற அவனும் நன்கு படித்து இப்போது நல்ல வேலையில் சேர்ந்து அவனுக்கு திருமணமும் முடிந்து விட்டது.

 

என் கணவர் பணி  ஓய்வு  பெற்ற பிறகு என் அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டி காரைக்குடி மாறி வந்த போது எல்லோரும் எப்படி இப்படி ஒரு முடிவு எடுத்தீர்கள் எனக் கேட்க எல்லாமே ஒரு அனுபவம் என்று சொன்ன என்னைப் பார்த்து எல்லோரும் வியந்து கொண்டு இருக்கிறார்கள்.எந்த மாற்றம் வரினும் வாழ்க்கை வாழ்வற்கே என்பது மட்டுமே என் கொள்கை. எந்த நேரத்திலும் நேர்மை தவறக் கூடாது . கொள்கையில் மாறுபாடு இருப்பின் அங்கிருந்து அகன்று விட வேண்டும் . விடா முயற்சி எந்த வயதிலும் கற்றுக் கொண்டு இருக்க வேண்டும் இவையே என் வாழ்வில் நான் கடைப் பிடிக்கும் வெற்றிக்கான வழிகள்.”

 

அருமை மணிமேகலை. நீங்கள் அட்சய பாத்திரம் ஏந்தாத மணிமேகலை என்பதை உங்கள் எழுத்துக்கள் உணர்த்துகின்றன. எந்த மாற்றம் வரினும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். இன்னும் உயர்வுகள் பெற்று வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)