செவ்வாய், 14 நவம்பர், 2023

கதை கேளு.. கதை கேளு…

கதை கேளு.. கதை கேளு…

தை கேளு கதை கேளு சுகமான கதை கேளு..மைக்கேல் மதன காம ராஜன் கதையை நல்லா கேளு “ என்று பாடிக் கொண்டிருந்தது காரின் 106.4. எஃப் எம்.

 

சவுண்டைக் குறைத்த ஸாம் இன்னிசைத்த ஃபோனை டாஷ்போர்டிலிருந்து எடுத்தான். அவரது பிஸினஸ் பார்ட்னரும் நண்பருமான குமாரிடமிருந்துதான் ஃபோன் .

 

பயணத்தின்போது சைலண்டில் போட்டு டாஷ்போர்டில் போடவேண்டுமென்பது தேவியின் கட்டளை. ப்ளூ டூத்தும் உபயோகிக்கக் கூடாது. அன்று சைலண்ட் மோடில் போட மறந்துவிட்டான். காரின் வைப்பர்கள் சர் சர் என அசைந்து கொண்டிருந்தன.

 

”என்ன விஷயம் குமார் ?” ஸ்பீக்கரில் போட்டு விட்டு வெளியே பார்த்தபடி ட்ரைவ் செய்துகொண்டிருந்தான். 

 

”எங்க இருக்கடா.. ?”

 

“ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்கேன்பா.. என்ன விஷயம் ?”

 

”நம்ம புது பிஸினஸ் பத்திப் பேசத்தான் ஒரு விளம்பர கம்பெனி செலக்ட் செய்திருக்கேன். சரி எப்ப வருவ ஆஃஃபீசுக்கு. ?”

 

”லஞ்சுக்கு அப்புறம்.. வேணா ஈவினிங் ஒயிட்ஸ் ரோட் டெல்மா வந்திடு. அங்கே மீட் பண்ணுவோம் “

 

“ஏன் அங்கே.. கௌதம் மேனர் போலாம்டா. ரிலாக்ஸ்டா இருக்கும். “

 

“இல்ல டெல்மாவுல ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. அப்புறம் ட்ரிங்க்ஸ் அலவ்ட் இல்ல. இன்னிக்கு நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும் வேற. “

 

டாக்டர் ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்தபடி புருவத்தைச் சுருக்கிக் கொண்டிருந்தார்.

 

ஏதேனும் ப்ராப்ளமோ. ?

 

கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்த ஸாமின் முன்னால் அமர்ந்தார் டாக்டர் ரூபாவதி.

 

“உங்ககிட்ட முன்னயே சொன்னதுதான் மிஸ்டர் ஸாம். ஐ வி எஃப் ல  டபிள் எம்ப்ரியோ ட்ரை பண்ணதுல ரண்டுமே ஹாட்ச் ஆயிடுச்சு. இப்போ உங்களுக்கு ரட்டைப் புள்ளைங்க. ஒன்னு மேல் இன்னொன்னு ஃபீமேல்.. “

 

இதெல்லாம் முன்பே தெரிந்ததுதானே. அவனுக்கும் ராணிக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். தேவியிடம் கூட சொல்லவில்லை. சர்ப்ரைஸாக இருக்கட்டுமே என்று.  வியர்த்து வழிந்தது ஸாமுக்கு. வேறு ஏதும் விபரீதமா..

 

’ப்ரீமெச்சூர் பர்த், அண்டர் வெயிட், சிசேரியன், இதெல்லாம் இருந்தா பரவாயில்லையே.. செரிப்ரல் பால்ஸி, கண் காது கேளாமை இல்ல வேறு ஏதாவது பிரச்சனையா..’

 

”மிஸ்டர் சாம் ஓவர் வெயிட் ஆயிட்டு இருக்கு பேபீஸ். ஹெட் டர்ன் ஆகலை. வெயிட் பண்ணிப் பார்ப்போம் இல்லாட்டி சிசேரியந்தான் ஒரே சாய்ஸ். அதே சமயம் ராணியோட ப்ளட் ப்ரஷர் வேற அதிகமாயிட்டு இருக்கு. கொடுத்த டயட் சார்ட்படிதானே சாப்பிடுது.. “என்று கேட்டார் டாக்டர்.

 

“யெஸ் மேடம்.” என்றான்.

 

”இனி கீரை, காய்கறி அதிகம் எடுத்துக்க சொல்லுங்க. வாக்கிங் கட்டாயம். சில ப்ரக்னென்ஸி எக்ஸர்ஸைஸ் இருக்கு அதையும் கத்துக் கொடுத்திருக்கு. டெய்லி செய்யணும். லெட் அஸ் வெயிட் ஃபார் அ நார்மல் டெலிவரி “ என்றார் டாக்டர்.

 

அதற்கிடையில் ராணி தனது இடுப்பைப் பிடித்தபடி தாய்மையில் கனிந்திருந்த வயிற்றுடன் டாக்டரின் கன்சல்டிங் ரூமுக்கு வந்தாள். கூடவே ஒரு வயதான செவிலி பக்கத்துணையாக வந்தாள்.

 

”வயிறு சொலிஞ்சு இருக்கு. சீக்கிரம் டெலிவரி ஆயிடும்.” என்று சொல்லிச் சென்றாள்.

 

ராணியை லேசாக அணைத்தபடி அழைத்து வந்து காரில் ஏறினான் ஸாம் அந்த டாக்டரின் ரூமில் இருந்த வளைவில் இருந்து இரு கண்கள் அவர்களைக் கோபத்தோடு பின் தொடர்வதை அறியாமல்.

 

ங்கே எல்லாம் ஹலால். சோ நாக்கை சுழட்டும் ருசியில் இருக்கும்.” என்றபடி ரோகன் ஜோஷும், கீமா பராத்தாவும் மெயின் கோர்ஸுக்குக் குறித்துவிட்டு ஸ்டார்டர்ஸுக்கு பட்டன் மஷ்ரூம் ஃப்ரிட்டர்ஸும் ஷாஹி பாதாமி ஷோர்பாவும் ஆர்டர் செய்தான்.  

 

குமாரும் விளம்பர நிறுவன மேனேஜரும் எதிரே அமர்ந்திருந்தார்கள். சின்ன சின்ன கேபினட்களில் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது டெல்மா. பக்குவமாகச் சமைக்கப்பட்ட அசைவ உணவுகளின் வாசனை வெளியே இருந்த ஓபன் கிச்சனில் இருந்து மணமாக எழுந்து கொண்டிருந்தது.

 

தொப்பி, ஏப்ரன் அணிந்த மூன்று பணியாளர்கள் தந்தூரி, காண்டினெண்டல் பெர்சியன் அரேபிய ஆஃப்கானிஸ்தான உணவுகளைச் சமைத்துக் கொண்டிருந்தார்கள். பசியில் வயிறு விழித்தெழ சுட்ட கறியின் மணம் சுவை மொட்டுக்களைச் சுழட்டியது.

 

”என்ன ஸ்பெஷல் இங்கே. ” கேட்ட குமாரைப் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரித்தவாறு அங்கே வந்த பேரரை அழைத்தான் ஸாம்.

 

ஷோர்பாவையும், மஷ்ரூம் ஃப்ரிட்டர்ஸையும் கிண்ணங்களில் பரப்பியவாறு நின்ற அவரிடம் ”இந்த மஷ்ரூம் ரொம்ப டேஸ்ட்.. எப்பிடி பண்ணீங்க” என்று கேட்டான்.

 

”சார் நாங்க க்வாலிட்டிக்கு முக்கியத்துவம் கொடுப்போம். ஆயிஸ்டர் மஷ்ரூம், பட்டன் மஷ்ரூம் எல்லாமே எஸ் என் கே ப்ராண்ட்தான் வாங்குறோம். அதனோட ரியல் டேஸ்டே நல்ல அரோமாவையும் ருசியையும் குடுக்குது.”

 

கையில் சர்விங் ப்ளேட்டுடன் நின்றிருந்த அந்த பேரரை மூவருமே பெருமிதமாகப் பார்த்தார்கள். குமார் சந்தோஷத்தில் துள்ளி , “என்னது  எஸ் என் கே ப்ராண்டா ? “ என்றான்.

 

ஆம் என்று தலையசைத்த பேரரைப் போகச் சொல்லிவிட்டுத் திரும்பிய ஸாமும் குமாரும் ஹைபை செய்துகொண்டார்கள். ”ஹேய் நம்ம கம்பெனி ப்ராண்ட் சுவாமிநாதன் குமார் ப்ராண்ட் – எஸ் என் கே ப்ராண்ட். எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. ரியல் வாக்குமூலம் ரியல் விளம்பரம்” என்றான் குமார்.

 

“ஆமா இதத்தான் யூஸ் பண்ணப் போறோம்” என்ற ஸாமும் அவர்களும் சாப்பிட்டுப் புறப்பட்டார்கள்.

 

வீட்டிற்குள் வந்தவுடன் டையைத் தளர்த்தியபடி சோஃபாவில் சாய்ந்தான் ஸாம். ஷூவின் லேஸ்களை நகற்றிக் கழட்டிப் போட்டுவிட்டு சாக்ஸ் காலுடன் அமர்ந்தவன் சந்தோஷமாக தேவியிடம் சொல்லத் தொடங்கினான்.

 

“கண்ணு நம்ம மஷ்ரூம் பிஸினஸ் சூடு பிடிச்சிட்டு வருது. லார்ஜ் லெவல்ல ஏரியா கவரேஜ் ஆயிட்டு வருது. எண்டையர் சௌத் இந்தியால நாமதான் நம்பர் ஒன் ப்ராண்ட் ஆயிட்டு வர்றோம். ”

 

“ஆமா காளான்கள் பெருகிப் போச்சு. ஒட்டுண்ணிகள்”. என்றாள் சம்பந்தமில்லாமல் தேவி.

 

”ஏய் என்ன சொல்றே..”

 

”ஒண்ணு இருக்கவேண்டிய இடத்துல இரண்டு இருந்தா அது ஒட்டுண்ணிதானே.. ”

 

என்ன சொல்ல வருகிறாள் இவள்.. அவனுக்குப் பிடிபட சில நொடிகள் ஆயிற்று. அடிப்பாவி குழந்தைகளைச் சொல்கிறாளா.. தெரிந்துவிட்டதா.. அப்படியானாலும் குழந்தைகளையா சொன்னாள்..??

 

”ஹாஸ்பிட்டலுக்குப் போயிருந்தியா” என்றான்.

 

”ஆமாம்.. எனக்குச் சொல்லாம அந்த ஒட்டுண்ணிகூட நீங்க போனதப் பார்த்தேன் ”என்றாள்.

 

நல்லவேளை அதை மட்டும்தான் பார்த்தாள்.. இன்னும் இவளுக்கு இரட்டைக் குழந்தைகள் விபரம் தெரியல.. என்று நிம்மதியான ஸாம் எப்போதுமில்லாத  கடுங்கோபத்திலிருக்கும் இவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)