சனி, 18 நவம்பர், 2023

ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 10.

 ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 10.

  முழுப்பரிட்சை லீவ் விட்டாச்சு. லீவுக்கு எங்கேயெல்லாம் போகலாம்னு ஆராதனாவுக்கும் ஆதித்யாவுக்கும் ஏகப்பட்ட ஆலோசனை. தாத்தாவிடம் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். ”தாத்தா, இங்கே ஒரே ஹாட். நாம குளுகுளுன்னு எங்காவது போலாம். ஷிம்லா, டார்ஜிலிங் மாதிரி”.

  ”இல்ல கண்ணுங்களா, நாம இந்தவாட்டி என்னோட பால்யகால நண்பன் மகாதேவன் இருக்குற பெங்களூருக்குப் போகப்போறோம். பெங்களூர்ல லால்பாக், கப்பன்பார்க், விதான்சௌதா, மியூசியம் எல்லாம் பார்த்துட்டு மைசூர் போய் அரண்மனையும் பார்த்துட்டு வரப்போறோம் “

  “ஹையா” எனக் குதித்தார்கள் இருவரும் கைகோர்த்து. இதை அவர்கள் நண்பர்களிடம் கைபேசியில் தெரிவிக்க ஓடினார்கள். ” என்ன சத்தம் “ என்றபடி வந்த ரம்யா, “வீடியோ கேம்ஸெல்லாம் விளையாடக் கூடாது “ என செல்ஃபோனைப் பறித்தாள். ”இல்லம்மா ஃப்ரெண்டுக்கு ஃபோன் “ என்று கொஞ்சிவிட்டு இரண்டும் மாறி மாறி தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டன.

  ஒரு வழியாக மயிலாடுதுறை மைசூர் எக்ஸ்ப்ரஸில் பெங்களூருவில் வந்து இறங்கினார்கள் ஆராவமுதன் குடும்பத்தார். ப்ளாட்ஃபார்ம் எண் 5 இல் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார் மகாதேவன். இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டனர்.

  “என்னடா உனக்கு மீசை ஃபுல்லா நரைச்சிடுச்சு” “ உனக்குக் கூடத்தான் புருவம் கூட நரைச்சிட்டு வருது “ என இருவரும் மாற்றி மாற்றிக் கிண்டலடித்துக் கொண்டார்கள்.

  மகாதேவனின் மனைவி மங்களா அனைவருக்கும் விதம் விதமாக சமைத்துப் பரிமாறினார். லால் பாக், கப்பன் பார்க், விதான் சபா, மியூசியம் என எல்லா இடங்களும் சுற்றிப் பார்த்து அசந்திருந்தார்கள் குட்டீஸ் இருவரும்.

  விடியலில் எழுப்பினார் ஆராவமுதன். ”இன்னிக்கு மைசூர் போகணுமே . ராஜா சிம்மாசனம் செங்கோலெல்லாம் பார்க்கலாம். ஹரியப் குட்டீஸ்” என்றார். உடனே இருவரும் துள்ளிக்குதித்து எழுந்து ரெடியாகிப் புறப்பட்டார்கள்.

  மைசூர் அரண்மனை கண்கவர் தோற்றத்தில் பொலிந்து கொண்டிருந்தது. காமிராவெல்லாம் லாக்கரில் வைத்துப் பூட்டச் சொல்லிவிட்டார் செக்யூரிட்டி கார்ட். புகைப்படம் எடுக்க முடியவில்லையே என்று ராஜனுக்கு சிறிது கோபம்தான். அதனால் உம்மென்று வந்தான்.

  ”இந்த அரண்மனை பதினாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதன் பின் தீப்பிடித்து நாசமடைய 1897 இல் ஜெயசாம்ராஜேந்திர உடையார் இதைப் புதிப்பிச்சாரு. அப்பவே 41 லட்சம் செலவாச்சாம். சுதந்திரத்துக்குப் பின் இது அரசுடைமை ஆகி சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு விடப்பட்டிருக்கு” என சொல்லிக் கொண்டு வந்தார் மகாதேவன்.

  ”உரியவர்களுக்கே இப்ப இது உரிமை இல்லையாம். இதைப் புகைப்படம் எடுக்கமுடியலையேன்னு நாம் ஏன் கோபப்படணும்.” என நினைத்துச் சமாதானமானான் ராஜன். “ ஆமா இந்த அரண்மனைக்கு ஏதோ சாபம். அதுனால வாரிசு இல்லைன்னு சொன்னாங்களே “ என வினவினார் ஆராவமுதன்.

 “ஆமாம்பா. இங்கே 1610 இல் மைசூரை ராஜ உடையார்னு ஒருத்தர் ஆண்டு வந்தார். ஸ்ரீரங்கப்பட்டினத்து திருமலை ராஜாவுக்கு உடல் நலமில்லாததால தன் இரண்டாவது மனைவியான அலமேலம்மாகிட்ட அரசாட்சியை ஒப்புவிச்சிட்டு, வைத்தியம் செய்துக்க வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போனார். ஆனா நாடு பிடிக்கும் ஆசையில் ராஜ உடையார் ஸ்ரீரங்கப்பட்டிணம் மேல் படையெடுக்க அலமேலம்மா தன் நகைகளை எடுத்துக்கிட்டு காவிரிக்கு அக்கரைல மலாங்கி என்ற இடத்துல தஞ்சமடைஞ்சாங்க.

  அப்ப அந்த ராணியோட நகைகள் ரொம்ப ஃபேமஸ் இங்கே. அதுனால கருவூலத்துல ராஜ உடையார் போய்ப் பார்க்க நகைகள் இல்ல. அதுனால ராணிகிட்ட வாங்கிட்டு வரச்சொல்லி வீரர்களை அனுப்புனாரு. அவங்ககிட்டேருந்து தப்பிக்க ராணி காவிரில பாஞ்சுட்டாங்க. அப்ப இந்த தலக்காடு ( ஸ்ரீரங்கப்பட்டினம் அருகில் உள்ள ஊர் )  மண்ணோடு மண்ணாகப் போகட்டும். உடையார் வம்சம் வாரிசு இல்லாம அழியட்டும்னு சாபம் கொடுத்துட்டாங்க. ”

  ”அடடே அப்பிடியா “ என கேட்டு கொண்டிருந்த ஆராவமுதனோடு அனைவரும் அதிர்ச்சியானார்கள். ”அப்ப தஸராவின் போதெல்லாம் ராஜாக்கள் யானைல உலா வர்றாங்களே அது எப்பிடி?” என ஆராவமுதன் கேட்க, அவங்க சொந்தங்களுக்குள்ளேயே பிள்ளைகளைத் தத்தெடுத்துப் பட்டம் சூட்டுறாங்க.” என்றார் மகாதேவன்.

  “அப்புறம் இன்னொரு விஷயம். இப்ப புதுசா யதுவீர்னு ஒரு மைசூர் ராஜா வந்திருக்காரு. அவர் அலமேலம்மா இறந்த தலக்காட்டில் அதுக்குப் பரிகாரமா அவங்க சிலையை நிறுவி வழிபட்டுக்கிட்டு இருக்காரு. அதனால இப்ப அவருக்கு ராஜ வாரிசா ஆண்குழந்தை பிறந்திருக்கு “

இதையெல்லாம் கேட்டுப் பெருமூச்செறிந்தார் ஆராவமுதன். கேட்டுக்கொண்டே வந்த  சுட்டீஸும் “அப்பாடா குட்டி ராஜா பொறந்துட்டாரு “ என சந்தோஷப்பட்டார்கள். இப்போது அவர்கள் மகாதேவனின் காரில் பிருந்தாவன் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள்.

  எங்கெங்கும் ஃபவுண்டன் நீர்வீழ்ச்சிகளும் நீர் அருவிகளும் தடதடத்தன. ஜில்லென்று இருந்தது பூங்கா. ” இங்கே இன்னும் பத்து நிமிஷத்துல ம்யூசிக் ஃபவுண்டன் நிகழ்ச்சி இருக்கு. இந்தப் பாலத்துல வேகமா நடங்க.” என்று அவர்களை அழைத்துச் சென்றார் மகாதேவன்.

  “யே யப்பா எவ்ளோ பெரிய டேம் “ என்று கண்ணை விரித்தார்கள் ஆராதனாவும் ஆதித்யாவும். “ஒரே வாட்டர். யார் தாத்தா கட்டினா இந்த டேமை “எனக் கேட்டான் ஆராவமுதன். “ இதையும் கிருஷ்ண ராஜ உடையார்னு ஒரு மைசூர் மன்னர்தான் கட்டினார். ஒரு ராஜா பேராசைப்பட்டதால வாரிசு இல்லாம போச்சு. இன்னொரு ராஜா நல்ல மனசோட நாட்டு மக்களுக்கு அணை எல்லாம் கட்டிக் கொடுத்துருக்காரு. இன்னும் பல தொண்டுகள் செய்திருக்காரு. சொத்து, பதவி மேல பற்று இல்லாம மக்கள் தொண்டுல ஈடுபட்டதால  அவரைப் பாராட்டி காந்திஜியே “ ராஜரிஷி “ அப்பிடின்னு அழைச்சாராம்.

  ”எவ்ளோ நல்ல ராஜா. இந்த கிருஷ்ண ராஜா போல் நாமளும் எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணனும். ” என்ற எண்ணம் ஆராதனா, ஆதித்யாவின் மனதில் ஓட, ம்யூசிக் ஃபவுண்டனில் வண்ண வண்ண நீரூற்று இசையோடு பொங்கிப் பெருகியது.

       10.    ஒப்புரவு ஒழுகு
        உலகத்தோடு பொருந்த நடந்துகொள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)