வெள்ளி, 15 செப்டம்பர், 2023

முதல் மரியாதை வடிவுக்கரசி

 முதல் மரியாதை வடிவுக்கரசி



நான் ஒன்ன நினைச்சேன் நீ என்ன நினைச்சே ”அடி அம்மாடி ஒரு சின்னப் பொண்ணு அவ ஆசை வச்சா அவ நெஞ்சுக்குள்ளே..” “அவாரம்பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம் “அழகிய கண்ணே ”நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே ”மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட இந்தப் பாடல்களை 70ஸ் கிட்ஸ் மறந்திருக்க முடியாது. இதில் மெட்டி ஒலி பாடலில் விஜயகுமாரி, ராதிகா, வடிவுக்கரசி இந்த மூவர் இடையே இருக்கும் ஹார்மனி ரசிக்கத்தக்கது. சிலர் அறிமுகமாகும் போது மட்டும் கதாநாயகியாகவும் அதன் பின் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்டாகவுமே ஜொலிப்பார்கள். சில படங்களில் இந்த சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட்தான் அந்தப் படத்தின் க்ளைமாக்ஸையே அதிரடியாக்குவார்கள். அந்தத் துணைப் பாத்திர வரிசையில் வடிவுக்கரசிக்கு முக்கியமான இடமுண்டு.

வடிவுக்கரசி பிறந்தது 7 ஜூலை 1962. டைரக்டர் ஏபி நாகராஜனின் தம்பி மகள். அவர் வடிவுக்கு வளைகாப்பு திரைப்படம் இயக்கியபோது பிறந்ததால் வடிவுக்கரசி எனப் பெயரிட்டார்கள். தனது பதினாறாவது வயதில் நடிக்க வந்தார்.  கன்னிப்பருவத்திலே படத்தில் ராஜேஷுடன் நாயகியாக அறிமுகம். அதன் பின் பாரதிராஜா இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியான சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தில் நடித்தார்.

350 திரைப்படங்கள். 40 தொலைக்காட்சித் தொடர்கள். நான்கு மொழிகளில் நடித்திருக்கிறார். முதலில் கதாநாயகி, அதன் பின் சகோதரி, தாய், எதிர்நாயகியாகவும் நடித்துள்ளார். ,84 இல் தன் 22 ஆவது வயதிலேயே வைதேகி காத்திருந்தாளில் விஜய்காந்தின் அம்மாவாக நடித்துள்ளார் ! அதற்கு அடுத்த வருடமே 1985 இல் முதல் மரியாதை பொன்னாத்தாவாக பொல்லாத பெண்மணித் தோற்றம்.


பெண்மணி அவள் கண்மணி 1988 இல் மாதுரியின் தன்மையான மாமியாராக பாந்தமான தோற்றம். கணவன் கிஷ்மூ, மகன் ரமேஷ் அரவிந்த் குடிகாரர்கள். இவர்களை விசு திருத்துவது போல் கதை. அதில் இவர் மருமகளுக்கு சப்போர்ட்டிவாக நடித்திருப்பார். பெண்மணி அவள் கண்மணி, வேடிக்கை என் வாடிக்கை இரண்டும் விசு படங்கள். தங்கள் மகள் உமாவுக்குத் திருமணம் செய்து வைக்காத கணவர் விசுவை விட்டுப் பிரிந்து செல்வார்.

நேரில் தன்மையாகப் பேசும் இவர் சினிமாக்களில் அதிரடியாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். வருஷம்16  இல்மகேசுவரியாக, மகராசன் இல் வடிவாக, கருத்தம்மாவில் காளியம்மாளாக, அம்மனில் லீலாம்மாவாக, பூவெல்லாம் கேட்டுப் பார் கஸ்தூரியாக நடித்துள்ளார்.

ரஜனியுடன் நான்கு பிரபலமான படங்கள் சிவாஜி, அருணாசலம், படையப்பா, படிக்காதவன் ஆகியவை. அருணாச்சலம் படத்தில் கதாநாயகன் ரஜனியின் பாட்டியாக மிரட்டல் பார்வையுடன் தன் கைத்தடியைத் தட்டி முரட்டுக்குரலில் பேசி அதிரடியாகக் காட்சி அளிப்பார். ஆனால் படையப்பாவில் சௌந்தர்யாவின் தன்மையான அம்மாவாக மென்மையான ரோல்.

சிகப்பு ரோஜாக்கள், கன்னி பருவத்திலே, கண்ணில் தெரியும் கதைகள், பணம் பெண் பாசம், மெட்டி, வைதேகி காத்திருந்தாள், முதல் மரியாதை, படிக்காதவன், பெண்மணி அவள் கண்மணி, வருஷம் பதினாறு, வேடிக்கை என் வாடிக்கை, சின்ன பசங்க நாங்க, மகராசன், பொறந்த வீடா புகுந்த வீடா, ராவணன், வீரா, கருத்தம்மா, சுந்தர புருஷன், நீ வருவாய் என, படையப்பா, பூவெல்லாம் கேட்டுப்பர், பார்த்தாலே பரவசம், காசி, புன்னகை தேசம், சாமுராய், சொல்ல மறந்த கதை, சிவாஜி இவற்றுள் பார்த்தாலே பரவசம், சிவாஜி, முதல் மரியாதை, சிநேகிதியே, அருணாச்சலம், படையப்பா, சிகப்பு ரோஜாக்கள், பூவெல்லாம் கேட்டுப்பார், கண்ணே கலைமானே இவை இவரது சிறந்த படங்கள்.

மயில்வாகனமான சத்தியராஜிடம் ஒரு திருவிழாவில் ஏமாந்து ராசம்மாவைப் (அருணா) பெத்திருந்தாலும் புருஷனான மலைச்சாமியிடம் (சிவாஜி) தன் உரிமையை விட்டுக் கொடுக்காமல் மிரட்டி உருட்டும் பொன்னாத்தாவாக வித்யாசமான ரோல்.

துடைப்பத்தை எடுத்துக் கொண்டு குயிலியான ராதாவை விரட்டுமிடமும் உருட்டி விழிக்கும் முழிகளும் என அசத்தலான நடிப்பு. அதேபோல் தன் திருமண வாழ்வு பற்றிப் பிரலாபிக்கும் இடமும் அந்த நேரத்தில் சிவாஜியின் வசனமும் நடிப்பும் தூள். ”இந்த மனுஷனுக்கு வாக்கப்பட்டு முப்பது வருஷமா மோட்டு வளையப் பார்க்குறதும் மூக்கைச் சிந்திப் போடுறதுமா காலத்தக் கழிச்சுப்புட்டேன்.இல்லாட்டா துருப்புடிச்ச தொரட்டுக்கும் பத்து வெள்ளாட்டுக்கும் ஆசைப்பட்டு இந்த மனுஷனக் கட்டிக்கிட்டு இருப்பனா “


இப்படிப்பட்ட வடிவுக்கரசி மேடத்தை ஒரு பத்திரிக்கைப் பேட்டிக்காக அணுகினேன். மயிலின் சீற்றம் பார்த்திருக்கிறீர்களா.. தன் கொண்டையை அசைத்துக் கொண்டே அது அகவுவதைப் போல அழகாய் இருந்தது திரைப்படம் மற்றும்., சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும்., இன்றளவும் வடிவழகியான நடிகை வடிவுக்கரசியின் பேச்சு.. வேறொன்றுமில்லை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இருவரும் எதிர் எதிர் அணியில் அமர்ந்து பேச வேண்டியதாயிருந்தது. அப்போது நான் எடுத்து வைத்த கருத்துக்களுக்கு உண்டான கோபத்தில் இருந்தார் அவர். திரும்ப என் நிலைப்பாடை எடுத்துச் சொல்லி விடாது கருப்பு மாதிரி தொடந்து படையெடுத்து அவரிடம் இந்தப் பேட்டியை வாங்கினேன்.  உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.. நீங்கள் நடிக்க வந்தது எப்படி.?

எனக்கு சொந்த ஊர் வேலூர் இராணிப்பேட்டை. எட்டாவது வரை அங்கே படித்தேன். பின் ஒன்பதாவது படிக்கும்போது மெட்ராஸ் வந்தேன். வாலாஜா காலேஜில் பி யூ சி படித்தபின் அடையாரில் ஹோட்டல் மானேஜ்மெண்ட். அப்புறம் கன்னிமரா ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்தேன். எனக்கு அக்கா ஒருவர்., அண்ணன் ஒருவர். , தங்கை ஒருவர். மகள் ஒருத்தி எல்லாமே ஒன்றுதான்..மகள் பெயர் பத்மப்ரியா. தற்போது என் அப்பா இல்லை., நான்., என் தங்கை ., என் அம்மா., என் மகள் நால்வரும் சேர்ந்து ஒரு வீட்டில் வசிக்கிறோம்.”

அவரது கணவர் பற்றிக் கேட்டபோது, “என் கணவர் தற்போது என்னுடன் இல்லை. அவர் இன்னொரு திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார். எனக்கு என் கணவரை மிகவும் பிடிக்கும். அவ்வளவு நல்லவர் அவர். நாம் விரும்பும் ஒருவர் சந்தோஷமாக இருப்பதைத்தானே நாம் விரும்புவோம். எனவே அவர் சந்தோஷமாக இருக்கட்டும். என்னுடன் தற்போது அவர் இல்லை. எனவே அவரைப் பற்றி நான் சொல்ல ஏதும் இல்லை. அவரைப்பற்றி நான் ஏதும் பேட்டி கொடுத்து அது அவரின் தற்போதைய வாழ்வில் இடைஞ்சலை உண்டு பண்ணி விடக்கூடாது.”

நீங்கள் நடிக்க வந்தது பற்றிச் சொல்லுங்கள். “என் குடும்ப சூழ்நிலையில் வேலைக்குச் சென்றே ஆகவேண்டும் என்றே நான் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்து வேலைக்கு வந்தேன். அது ஒரு ப்ரொஃபஷன். அதைப்போலவேதான் நடிப்புத்துறைக்கும் வந்தேன்.. சென்னை தூர்தர்ஷனில் பணி புரிந்திருக்கிறேன். அதைப்போலவே இதுவும் ஒரு வேலை என நினைத்து செய்கிறேன். நான் எனக்கு சரி என்று பட்டதை பட்டென்று சொல்லி விடுவேன் .. அதுதான் என் பலமும்., பலவீனமும். இவர்கள் இப்படி என பலர் ஒதுங்கக் காரணமாக என் பேச்சு இருக்கும். அதே எனக்கு கிடைக்கவிருந்த பல நல்ல வாய்ப்புகளையும் தட்டிப் பறித்துவிடும். உதவியும் அதுதான். உபத்திரவமும் அதுதான். அட்ஜஸ்ட் செய்து செல்வது என்பது என் நேச்சரிலேயே கிடையாது. வெட்டு ஒண்ணு. துண்டு ரெண்டுதான்.

தற்போது தொலைக்காட்சித்தொடர்களிலும் அப்படித்தான். என்ன வென்றால் கால மாற்றம் நான் கொஞ்சம் பக்குவப்பட்டுவிட்டேன். வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழப் பழகி விட்டேன். கிட்டத்தட்ட 33 வருடமாக திரைப்படத்தில் நடித்து வருகிறேன். தொலைக்காட்சியில் கடந்த 91 இல் இருந்து நடித்து வருகிறேன். ரெண்டிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.

நெல்லை சிவா என்னிடம் சொன்னார்., ”முதல் மரியாதையில் சிவாஜி கூட நடித்துவிட்டீர்கள். பெரிய பாக்கியசாலி நீங்கள். அதுவே உங்கள் பிறவிப்பயன் என்று. என் முதல் படம் என்பதால் கன்னிப் பருவத்திலேதான் எனக்கு மிகவும் பிடித்தமான படம். எனக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது காயத்திரி தேவி என்ற காரெக்டர். சீரியலின் பெயர் சக்தி. அடுத்தது திருமதி செல்வம்."

"எனக்கு நிஜமா நீங்க., ராதிகா., விஜயகுமாரி மூவரும் நடித்த மெட்டி படத்தின் ., “மெட்டி ஒலி காற்றோடு பாடல் காட்சி பிடிக்கும் அவ்வளவு மென்மையான புன்னகைக்குச் சொந்தக்காரர் நீங்க. முதல் மரியாதை., அருணாசலம் போன்றவற்றில் நெகட்டிவ் காரெக்டர்.. கொஞ்சம் மிரட்சியாய் இருந்தது வடிவுக்கரசிதானா என்று.. அந்த கேரக்டரில் ஏன் நடித்தீர்கள்?"

"இப்போ நீங்கள் குறிப்பிட்டுச் சொல்வதுபோல அமைந்திருக்கிறது அல்லவா. அதுவே என் கேரக்டர் பொருத்தத்திற்கு வெகுமதி. நான் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். வில்லி என்பதும் இன்னொரு பரிமாணம்தானே. கடவுள் என் வாழ்க்கையை நடத்திச் செல்கிறார். அதன் வழியில் நான் செல்கிறேன். நான் வழியை தேர்ந்தெடுப்பதில்லை. கொடுக்கப்பட்டவைகளைச் சரியாகச் செய்கிறேன். அதுவே போதும் என நினைக்கிறேன்."

அது சரி பேட்டி தரமாட்டேன் என்று என்மேல் ஏன் கோபப்பட்டீர்கள் என்று கேட்டபோது ”ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. அதில் நீங்கள் எங்கள் எதிரணி. நாங்கள் வாழ்வாதாரமாக நடித்து வருகிறோம். ஒரு சீரியல் எடுக்க எவ்வளவு சிரமம் எடுக்கிறோம் என தெரியுமா உங்களுக்கு. என்னவோ வந்து உக்காந்துகிட்டு நாங்க டிவி சீரியலே பார்ப்பதில்லை. என சொல்கிறீர்களே. அது எவ்வளவு வலி ஏற்படுத்தும் என தெரியுமா உங்களுக்கு. நீங்கள் எழுதும் எதையும் நான் படிப்பதில்லை எனச் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்.”

தொலைக்காட்சித்தொடர்களில் மிகைப்படுத்துதல் அதிகம். அதுக்கு அடிக்ட் ஆனவங்களும் அதிகம். அதைத்தானே அங்கு சொன்னோம் என்று கூறியதற்கு “உங்க ரியல் லைஃபிலேயே மிகைப்படுத்தல் இருக்கும்மா. உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என சொல்லும் அனைத்தும் உண்மையா?. சொல்லுங்கள் மிகைப்படுத்தப்பட்ட யதார்த்தம்தானே சினிமா. ரியல் லைஃபை காண்பித்தால் நீங்கள் ஏன் சினிமாவையும் தொடரையும் பார்க்கப்போறீங்க.? மேலும் இன்றைய காலகட்டத்தில் எல்லாமே நடக்குது. அதைத்தான் நாங்க நடிக்கிறோம் எதுவுமே அப்பிடி நடக்கலைன்னு நீங்க உறுதியா சொல்ல முடியுமா. அது எங்க ப்ரொஃபஷன். எங்க வாழ்க்கை. அதை எப்படி நீங்க குற்றம் சாட்டலாம். அதுதான் என் கோபம்.”

எல்லாருக்கும் ஒரு அப்ரிஷியேஷன் தேவைப்படுது. 4 பேர் பாராட்டணும்னுதானே எல்லாமே செய்யிறோம். ஏங்குகிறோம். சமையல் கூட நல்லா இருக்குன்னு சொன்னாதான் மறுநாள் நல்லதாக சமைக்கிறோம். எதுவுமே உங்க சாய்ஸ்தான். நல்லா இருப்பவற்றை மட்டுமே நீங்க பார்த்தா அது மட்டுமே கொடுக்கப்படும். நல்லா இல்லாததை நீங்க அவாய்ட் பண்ணா அதுபோல திரும்ப கொடுக்க மாட்டாங்க யாரும்.”

உண்மைதான் வடிவுக்கரசி மேடம். இன்னும் பல்வேறு பாத்திரங்களில் நடித்துப் பெயரும் புகழும் விருதுகளும் பெற வாழ்த்துக்கள்.



டிஸ்கி :- மணி மடல்களில்  மனத்திரையில் மின்னல் என்ற என்னுடைய கட்டுரையைப் பற்றிப் பாராட்டி இருந்த திரு அண. சிதம்பரம் அவர்களுக்கு நன்றி

2 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான உரையாடல் தொகுப்பு.  ஓரிரண்டு படங்கள் சேர்த்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும்.  அவர் கோபப்படும் அந்த தொலைக்காட்சித் தொடர் பற்றிய உங்கள் பங்களிப்பு எந்த வருடம்?  அவர் அதை நினைவு வைத்திருப்பது ஆச்சர்யம்.  ஒருவகையில் அதுவும் உங்களுக்கு பெருமைதான்.

    பதிலளிநீக்கு
  2. 2010/11 என்று நினைக்கிறேன் ஸ்ரீராம்.

    நன்றியும் மகிழ்ச்சியும் ஸ்ரீராம்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)