திங்கள், 11 செப்டம்பர், 2023

அரிச்சல்முனை சிவன்கோவிலும், தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலும்.

 இராமேஸ்வரம் சென்றிருந்தபோது மாலை நேரத்தில் அரிச்சல்முனை சிவன் கோவிலையும் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலையும் தரிசித்தோம். 


கடல்கொண்ட தனுஷ்கோடியின் தென்முனைதான் அரிச்சல்முனை. இங்கே இராமர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமும் நந்தியும் அதன் பக்கவாட்டில் இராமலெக்ஷ்மண சீதா மற்றும் அனுமனும் காட்சி அளிக்கிறார்கள். பின்புறம் அழகான ஓவியக் காட்சியாக இது சித்தரிக்கப்பட்டுள்ளது. 


சிவனுக்கு வலப்புறம் தனி இடத்தில் பிள்ளையாரும் அவரின் வாகனமான மூஞ்சுறுவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 


இன்னுமொரு தனிச்சந்நிதியில் சிவன்மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இவரின் முன்னே நந்தி உண்டு. 
இன்னொரு சந்நிதியில் அம்பாள் பிரதிஷ்டை. இவரின் முன் சூலமும் தொங்கு விளக்கும் உள்ளது. எல்லாச் சந்நிதியும் டெரஸின் கீழ் உள்ளது. பக்கவாட்டில் கீற்றுத்தடுப்பு மறைப்பு. முன்பு கோவில் இருந்த இடமாக இருக்கலாம். கடல் கொண்டு எஞ்சிய சுவாமி சிற்பங்களை இவ்வாறு வைத்து வழிபட்டு வருகிறார்கள் என நினைக்கிறேன். 

சிவனின் இடப்புறம் பாலமுருகனும் வலப்புறம் விநாயகரும் அழகுக் காட்சி. 

ருத்ராக்ஷம் அணிவிக்கப்பெற்ற ரிஷபம். 

அங்கிருந்து தனுஷ்கோடி மற்றும் இராமேஸ்வரம் திரும்பும்போது சாலையின் ஓரத்தில் கடல் அழித்த எச்சங்கள். ஒரு ரயில்வே ஸ்டேஷனையும் ஊரையுமே விழுங்கி இருக்கிறது கடல். !
அங்கிருந்து தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலுக்கு வந்ததும் எதிரே தென்பட்டது வேண்டுதல் முடிச்சுகள் அடங்கிய விருட்சம். அரசமரம். 

என்னதான் அழித்தாலும் கடவுளே காப்பான் என்ற நம்பிக்கை மட்டும் போகிறதா என்ன... கடவுளிடம் திருமண பாக்கியத்துக்காகவும் குழந்தைப் பேறு வேண்டியும் கட்டப்பட்ட துணி முடிச்சுக்கள். கீழே நாகங்கள். 

மாலை நேரத்துத் தனுஷ்கோடி. தெற்கு முனையில் மேற்கின் அஸ்தமனச் சூரியன். 

மேற்கிலிருந்து கிழக்கே போகும் ரோட்டில் திரும்பினால் கோதண்டராமர் கோயில்.
இக்கோயிலைக் கடல் அழிக்காதது விசேஷம். ஏனெனில் இதுதான் இராமாயணக் காவியத்தில் இராமர் விபீஷணருக்கு அடுத்த இலங்கை வேந்தனாக முடி சூட்டிய இடம். கடல் அரிப்பிலிருந்து தடுக்கக் கோட்டைச் சுவர் போல் கோவிலைச் சுற்றியும் தாங்கும் தடுப்புச் சுவர்கள். 


இந்த போர்டிலேயே இது பற்றிக் குறிப்பிட்டு இருக்கின்றார்கள். இராமபிரான் இலங்கை மன்னர் இராவணனைப் போரில் வென்று இலங்கையைக் கைப்பற்றிய பிறகு இராவணனின் தம்பி விபீஷணருக்கு இலங்கை மன்னராக முடி சூட்டிய இடம் என்று. 
வில்லேந்திய ராமர் என்பதால் கோதண்ட ராமர் கோயில் என்றழைக்கப்படுகிறது. 

மிக அழகான இக்கோயில் மாலை ஆறு மணியுடன் மூடப்படுகின்றது. ஏனெனில் இங்கே சோலார் பேனல்கள் உதவியுடன்தான் கர்ப்பகிரக  மற்றும் கோயில் மின் விளக்குகள் எரிகின்றன. இன்னும் இங்கே கரண்ட் வசதி இல்லை. 

எனவே வரும் பக்தர்களை அர்ச்சகர் விரைவில் தரிசித்துத் திரும்பும்படி வேண்டுகோள் வைக்கிறார்.  

மிக எழிலான இவ்விரு கோவில்களுக்கும் ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள். 
முன்புறம் ஒரு பதினைந்து படிகள், மேலே கோதண்டராமர், லெக்ஷ்மணன், சீதை, அனுமன் சகிதம் காட்சி அளிக்கிறார். உள்ளே சந்நிதியிலும் அப்படித்தான். நடை தாண்டிக் கருவறை. பின்பு ஒரு சுற்றுப் பிரகாரம். அதோ தெரிவதுதான் பிரகாரம். 

 


கோயில் தனித்துக் காட்சி தருகிறது. சுற்றிலும் ஏதோ கட்டிடங்கள் சில உள்ளன.

கடவுட்காட்சி இங்கே எழிலாகப் பரவசமாக இருந்தது. ஜெயராமர் அல்லவா.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)