திங்கள், 28 ஆகஸ்ட், 2023

இருவாட்சி

இருவாட்சி

தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது. தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது” என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது அந்த பாரில். ஒரு ஓரத்து இருட்டில் அமர்ந்திருந்த சாமின் கோப்பையை நிரப்பிக் கொண்டிருந்தார் பாரின் ஊழியர்.

முட்டை, சிப்ஸ், வறுத்த முந்திரி, சிக்கன் மஞ்சூரியன் என்று பக்க பதார்த்தங்கள் டேபிளை நிரப்பி இருந்தன. அவ்வப்போது பிஸினஸ் ஆட்களுக்குப் பார்ட்டி கொடுப்பதற்கு அங்கே வந்து கொண்டிருந்த சாம் இப்போதெல்லாம் தினம் வருகிறான். ரெண்டு பியர், அதோடு வைன், விஸ்கி, ரம், பிராண்டி, வோட்கா ஏதாவது கலந்து குடிக்கிறான். முட்ட முழுக்கக் குடித்த பின் பதினோரு மணிக்குப் பார் மூடும் நேரம் கிளப்பி விடுகிறார்கள் ஊழியர்கள்.ட்ரைவர் இருப்பதால் பிரச்சனை இல்லாமல் வீடு வந்து சேரும் சாமைப் பார்த்துத் தேவிக்கு இப்போதெல்லாம் கண்ணில் ரத்தக் கண்ணீர்தான் வருகிறது.

“பார்த்த ஞாபகம் இல்லையோ. பருவ நாடகம் தொல்லையோ “ பாடி ஆடிக் கொண்டிருந்தார் சௌகார் ஜானகி. நிமிர்ந்து பார்த்த சாமின் மனக்கண்ணில் மஹாராணி நிழலாடினாள். ’அழகி. பேரழகி.. சமூக சேவகி ஆயிட்டாளோ.. ப்ளடி ஷிட்.. சேரை எட்டி உதைத்தான். அது ஆட்டமாக ஆடி நின்றது. ஊழியர் ஓடி வந்தார். நத்திங்.. நத்திங் என்று கையசைத்தான் சாம்.

காதலித்துத் திருமணம் செய்வதில் பெண்களுக்குப் பிரச்சனை இருக்கிறது. பயம் அதன் ஆணிவேர். தன் சமூகம் சார்ந்த ஒருவனை, அப்பா அம்மா சொல்பவனைத் திருமணம் செய்யாவிட்டால் தன் எதிர்காலப் பாதுகாப்பு என்னாகும் என்ற கவலை. எப்போதும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்ச்சிதான் பெண்கள் மனதில் காதல் என்பதே இல்லாமல் செய்கிறது.

ஆணோ பெண்ணோ இருபது வயது ஆனபின்னும் தனக்கான துணையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாவிட்டால் உங்கள் வளர்ப்பு முறையில் தப்பு இருக்கிறது என்று  ஒரு ஆங்கில மேகஸீனில் படித்தது அவன் ஞாபகத்துக்கு வந்தது. பிடிச்சவள எல்லாம் கட்டி இருந்தா தனக்கு நாலஞ்சு கல்யாணமாவது ஆயிருக்கும் என்பதை நினைத்துக் கோணலாகச் சிரித்துக் கொண்டான்.

’போறா விடு..’ என்றவன் வீட்டுக்குக் கிளம்பினான். அன்றைக்கு அது மிக சீக்கிரமான நேரம்தான். ஏனோ அவனுக்கு தேவியுடன் பேசவேண்டும் போலிருந்தது. மனைவி குடும்பம் என்னும் கூடு சிதைந்து விடக்கூடாது. வம்சம் தழைக்கவேண்டுமாம்.

‘ரப்பிஷ்.. நான் என்ன செய்தேன் . என் தாத்தா சொன்ன பொய்களைச் சொல்லி அப்பா வியாபாரத்தைப் பெருக்கினார். அதை விட லாவகமாகப் பொய்களைச் சொல்லி நான் வியாபாரத்தை விரிவு படுத்தி இருக்கிறேன். இதே பொய்களை இன்னும் டெக்னிக்கலாகச் சொல்லி விரிவுபடுத்தப் பேரன் வேண்டுமாமாம். பொய்யர்களை விளைவிக்கும் குடும்பம். அதன் பெயர் வியாபார தந்திரமாம். பணத்தைப் பணத்தால் அடுக்கிப் பணத்தின் மேல் படுத்துப் பணத்தைத் தின்று பணத்தைக் குடித்து… ’ கிளாஸைப் பார்த்தான். சடேர் எனத் தள்ளிவிட்டு எழுந்தான். சிலீர் என உடைந்தது கண்ணாடிக் கோப்பை.

இரு ஊழியர்கள் வேகமாக வந்து அவனைத் தோள்பக்கம் பிடித்துக் காரில் ஏற்றி விட்டார்கள். தொய்ந்துகொண்டே நடந்து சென்று ஏறினான். பின் பக்கம் மடங்கி அமர்ந்தான். ட்ரைவர் ஏதும் பேசாமல் காரைச் செலுத்தினார். சிக்னலில் வண்டி நின்றது. மயக்கத்தோடு கண்ணைத் திறந்து பார்த்தான் சாம்.

அழகழகான உடைகள் அணிந்து பெண் குழந்தை பொம்மைகள், ஆண் குழந்தை பொம்மைகள் மாபெரும் கடையின் வாசலில் அணிவகுத்து நின்றன. ஒவ்வொன்றும் கொஞ்சத் தூண்டும் அழகோடு., தூக்கிக் கொண்டு ஓடிவிடலாமா என்ற அழகோடு இருந்தன. வெறித்துப் பார்த்தவன் பார்வையைத் திருப்பிக் கொண்டான். பஞ்சு மிட்டாய் போன்ற மென் உடலோடு ஒரு குட்டிக் குழந்தை காரை உரசியபடி அம்மாவிடம் கொஞ்சிக் கொண்டே சென்றது.

பஞ்சு மிட்டாய்.. பஞ்சு மிட்டாய். அவள்தான் சரியான சாய்ஸ்.. கேட்டு விடுவோம். இன்றைக்குள். வீட்டை அடைந்தது கார். ஸ்டெடியாக நடப்பதாக படியின் கைப்பிடியைப் பிடிக்காமல் தள்ளாடியபடி நடந்தான். தேவி அச்சத்தோடு பின் தொடர்ந்தாள்.  படுக்கையில் அமர்ந்தவனின் டையைத் தளர்த்தினாள். தொடர்ந்து சில நாட்களாக அவள் வாழ்க்கையில் நடந்து வரும் சம்பவங்கள் அவளுக்கு நிம்மதியின்மையை ஊட்டிக் கொண்டிருந்தன.

படுக்கையறையின் ஒரு சுவரை நிறைத்து இருந்தது வனாந்திரத்தின் வால் போஸ்டர். நிறையப் பசுமையும் வானுயர்ந்த மரங்களும் நீல ஆகாயமுமாக இருந்தது. மெல்லிய ஓடை சலசலக்கும் இடத்தில் இருந்து புடைப்பும் பள்ளமுமாக வடிக்கப்பட்டு லேசாக மென்மையாக ஒரு பொய் அருவியும் சலசலத்துக் கொண்டிருந்தது. மணி பதினொன்று அடித்ததும் அதன் ஒரு மரத்தில் இருந்து இரு இருவாட்சிகள் வெளியே வந்து கிரீச் கிரீச் எனக் கத்திவிட்டுச் சென்றன.

கண்ணைத் திறந்து பார்த்த சாம் தேவியின் கையைப் பற்றித் தோளை அணைத்தான். ”தேவி என்ன மன்னிச்சிரு மன்னிச்சிரு இப்பல்லாம் அதிகம் குடிக்கிறேன். எல்லாம் ஒரே கவலைதான். ஒரே ஒரு கவலைதான்.” கண்கள் கலங்கியது தேவிக்கு.

”அதெல்லாம் ஒரு கவலையும் இல்ல. விடுங்க. இப்பத் தூங்குங்க” என்றாள் தேவி. 

”இல்ல தேவி சொல்லியே ஆகணும். எனக்கு உன் முகத்தைப் பார்க்க தைரியம் இல்ல. இப்ப விட்டா எப்பவுமே சொல்ல முடியாது.” என்றான். அவன் கைகளை ஆதுரமாகப் பற்றிக்கொண்டாள் தேவி. லேசாக வருடி நீவினாள். குழந்தை போலக் கேவிக் கேவி அழத் தொடங்கினான் சாம். தேவிக்கும் கண்ணீர் கசிந்தது. கருத்தொருமித்த தம்பதிகள் அல்லவா.

“விட்டுத் தள்ளு பிள்ளை இல்லாதவன் எல்லாம் நரகத்துக்குப் போவானாம். எனக்கு நீதான் பிள்ளை. உனக்கு நாந்தான் பிள்ளை “ அவள் கைபற்றி இழுத்து இறுக்க அணைத்தான். கன்னத்தில் அழுத்த முத்தமிட்டான். வாய் எல்லாம் அவள் கண்ணீர் பட்டு உப்புக் கரித்தது.

முகத்தை விலக்கி அவள் முகத்தைக் கைகளில் ஏந்தினான். இணைபிரியாமல் இருக்கும் இருவாட்சிகளைப் போலக் கலந்து கிடந்தார்கள். கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எத்தனை நாள் உழப்பிக் கொண்டே இருப்பது.. ?

“நம்ம பிள்ளையை இன்னொருவர் பெத்துக் கொடுத்தா நீ சம்மதிப்பியா தேவி” அணுகுண்டை வீசிவிட்டு உறங்கும் கணவனைப் பார்த்தாள் தேவி. அவள் முன்பே யூகித்ததுதான். தன்னால் ஒரு குழந்தையைத் தர இயலாதபோது அவர் வேறு மணம் புரிந்துகொண்டாலும் தப்பில்லை என்று சீரியல்தனமாக நினைத்தாளே தவிர வாடகைத் தாய் என்ற பதத்தை நினைத்தாளில்லை.

சாம் சொன்னதை நினைத்தபடி ஜன்னலோர சோஃபாவில் அமர்ந்திருந்தாள் தேவி. கன்னங்களில் கண்ணீர் காய்ந்து தடமாகி இருந்தது. தோட்டத்தில் அன்று பறிக்காமல் விட்ட இருவாட்சி மணம் வீசிக் கொண்டிருந்தது. எந்தச் சூழலிலும் யார் முன்னும் தன்னை விட்டுக் கொடுக்காத, தன்னை விட்டுப் பிரியாத கணவனை எண்ணிப் பலதும் அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது இணைபிரியாத இருவாட்சிகள் இரண்டும் வந்து மணி பன்னிரெண்டு ஆனதாகக் கத்திச் சென்றன. இருவாட்சிகள் போலத் தானும் அவரும் இருந்த கூட்டுக்குள் குழந்தையின் பொருட்டு இன்னொரு பேடையா .. ? விடியும்வரை தூங்கவில்லை தேவி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)