ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

துரியோதன் கேட்க நினைத்த மூன்று கேள்விகள்

 துரியோதன் கேட்க நினைத்த மூன்று கேள்விகள்

குருக்ஷேத்திர யுத்தத்தில் பீமனின் கதாயுதத்தால் தொடையில் கடுமையாகத் தாக்கப்பட்டு வீழ்ந்த நிலையிலும் துரியோதனன் மனதில் சில கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. அதை யாராலும் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் கிருஷ்ணர் அவற்றைப் புரிந்து கொண்டு அதற்குப் பதில் அளித்தார். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் கௌரவர் இருவர் பக்கமும் பலர் மறைந்தனர். பதினேழாம் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. போர் விதிகளுக்கு மாறாக பீமன் துரியோதனனின் தொடையில் தனது கதாயுதத்தால் ஓங்கி அடித்தான். அதனால் தொடை உடைபட்டுத் துரியோதனன் சாய்ந்தான். ஆனாலும் அவன் உயிர் போகவில்லை. ஆனால் அவனால் பேசவும் முடியவில்லை.

மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த துரியோதனன் மனதில் மூன்று எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதனால் அவன் தன் மூன்று விரல்களை நீட்டியபடியே கிடந்தான். அவனது பக்கம் உள்ள யாராலும் அவன் எதனால் அவ்வாறு மூன்று விரலை மட்டும் நீட்டியபடிக் கிடக்கிறான். அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை தன் ஞானதிருஷ்டியால் அறிந்த கிருஷ்ணர் அவன் அருகே வந்தார்.

”துரியோதனா.. நீ எதற்காக மூன்று விரல்களை மட்டும் நீட்டிக் கொண்டிருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். நீ என்னிடம் மூன்று கேள்விகளை முன்வைக்கிறாய். முதலாவது போரின்போது அஸ்தினாபுரத்தைச் சுற்றிக் கோட்டை மதில் கட்டாதது. அடுத்தது துரோணரின் மகன் அஸ்வத்தாமனை அவரின் மறைவுக்குப் பின் தளபதி ஆக்காதது, மூன்றாவது விதுரனைப் போரில் ஈடுபடச் செய்திருந்தால் வென்றிருக்கலாம் என நினைக்கிறாய். ஆனால் இது மூன்றுமே நடைபெற வாய்ப்பில்லை. அதையும் நான் முறியடித்திருப்பேன். சொல்கிறேன் கேள்”

“ முதலில் நீ அஸ்தினாபுரத்தைச் சுற்றிக் கோட்டை மதில் கட்டியிருந்தாலும் நான் நகுலனிடம் குதிரையைக் கொண்டு தகர்க்கக் கூறி இருப்பேன். ஏனெனில் நகுலன் குதிரைச்சவாரி செய்யும்போது மழைபெய்தால் கூட அதன் ஒரு துளிக்கும் மறுதுளிக்கும் நடுவில் நனையாமல் விரைவாகப் புகுந்து ஓட்டக்கூடியவன். அப்படி அவன் விரைவாக வந்து உன் கோட்டை மதிலைத் தகர்த்திருப்பான். அவனது இத்திறமையை உலகமே அறியும்”

”இரண்டாவது நீ அஸ்வதாமனைப் போரில் ஈடுபடச் செய்திருந்தால் நான் தருமரைக் கோபப்படச் செய்திருப்பேன். ஏனெனில் தர்மர் கோபவசப்பட்டால் அவரின் பார்வை எதையும் எரிக்கும் தன்மை கொண்டது. அவர் அனைத்தையும் எரித்துப் பொசுக்கி இருப்பார்.”

“ மூன்றாவதாக நீ விதுரனைப் போரில் ஈடுபடச் செய்திருந்தால் நானும் பாண்டவர் பக்கம் போரில் ஈடுபட்டிருப்பேன். “

“இம்மூன்று பதில்களையும் கேட்ட துரியோதனனின் உள்ளம் தான் கடைசிவரை முயற்சி செய்யாமல் இறக்கிறோமோ என்ற ஐயத்தைத் தகர்த்தது. தன்னால் முடிந்தவற்றைத்தான் தான் செய்ய முடியும். தன் சக்திக்கு அப்பாற்பட்டதைச் செய்யவே முடியாது. என்ற பேருண்மையை உணர்ந்தான். அவன் விரல்கள் தாழ்ந்தன. அவன் உயிரும் பிரிந்தது.

இவ்வாறு மண்ணாசையால் கடைசிவரை, தன் மரணம் வரை தன்னால் முடிந்த  அநியாயத்தைச் செய்துவிட்டு அது ஏதும் இயலாதபோதுதான் துரியோதனன் இறந்தான். அதைக் கிருஷ்ணர் அவனுக்கு உணர்த்தியதால் நாமும் அநியாயம் செய்தால் வெற்றிபெற முடியாது என்கின்ற அந்த உண்மையைத் தெரிந்துகொண்டோம்தானே குழந்தைகளே. 

5 கருத்துகள்:

  1. கதை கருத்து அருமை. இதுவரை அறியாதது இது

    கீதா

    பதிலளிநீக்கு
  2. நன்றி கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!!

    பதிலளிநீக்கு
  3. நான் போட்ட கமெண்ட் எங்கே? ஸ்பாமுக்கு போனதோ...

    பதிலளிநீக்கு
  4. கமெண்டைத் திரும்பவும் அனுப்ப முடியுமா ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)