செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

காதல் யானை ரெமோ

 காதல் யானை ரெமோ


காதல் யானை வருகிறான் ரெமோ  என்று பாடிக்கொண்டிருந்தது தொலைக்காட்சி. பார்த்தபடியே தூங்கி இருந்தான் சாம். எழுந்து ரிமோட்டை எடுத்து டிவியை ஆஃப் செய்துவிட்டுப் படுத்தான்.

 

நினைவுகள் குழம்பிக் குழம்பி முத்தழகியைச் சுற்றி ஓடின. மயக்கத்தில் இருக்கும் மனச்சிற்பம். எப்போது எழுவாள். என்ன என்ன எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும் அவள் மனதில். கூடுவிட்டுக் கூடு பாய முடியுமோ. முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

 

வேனில் காலம் ஆரம்பித்திருந்தது. தோட்டத்தில் முன் தினம் பறிக்காமல் விட்ட ஜாதி, முல்லை, மல்லிகைகளின் வாசம் கிளர்ந்தெழுந்து கொண்டிருந்தது. பூவைப்போன்ற முத்தழகியின் முகமும் அவளின் பிரியமும் மனமெங்கும் நிறைந்திருந்தது. முன்பொருநாள் முத்தழகி எழுதிய டைரிக்குறிப்பொன்று மனமெங்கும் இனிப்பாய் இறங்கிக் கிறங்கிக் கிடந்தது.

அன்பின் அநந்தனுக்கு,

கோதையின் குங்கும மடல். ஆம். குங்குமம் கொடுத்தென்னை ஆட்கொண்டாய். காலம் கடந்து காமம் கடந்து காதலும் கடந்தது நம் காதல். அதைப் பேரன்பு என்போமா. இதென்ன ஜுரவேகத்தில் பிதற்றுகிறேனா.

இல்லை சொல்ல நினைத்தவற்றை இன்றேனும் சொல்லி விடுகிறேன். இனி இப்படி மனநிலை வாய்க்குமோ என்னவோ. அதென்ன கோதை கண்ணன் என்கிறாயா.ராதை பாமா ருக்மணி எல்லாம் உன் கூடவே க்ரீடை செய்ய கோதை மட்டும் தனியாகக் காதலித்தாள் அல்லவா.

அவள் சூடிய மாலையை நீ சூடி.. அவள் பெரியாழ்வாரா கோதையா அறிகிலேன். ஆனால் நான் கோதை. நீ கண்ணன் யதுகுல திலகமே. அந்தக் கண்ணனாய்ப் பிறப்பெடுக்க நான் பிறவிகள் தோறும் கோதையாய்த் தேடி அலைகிறேன்.

அதென்னவோ ஜலம் கண்ட இடமெல்லாம் க்ரீடை உனக்கு. இதழ் கள்ளை அருந்தி தாகம் அதிகமாக்குவாய். காதல் அதிகமானால் தவிக்கிறது. காமம் அதீதமானால் தகிக்கிறது. இரண்டும் என்னை நெய்யாக்கி உருக்கி உன்மேல் ஊற்றுகிறது. ஊற்றுக்கண் திறந்த ரகசியச் சுனை போல மறைவாய் அலைகிறேன்.

 

கோதை உன்னுள் ஐக்கியமானாள் ஆனால் தனிச்சந்நிதி. ஸ்ரீதேவி பூதேவியுடன் நீ புவியாள அவள் மயங்கி நின்று திருத்துழாய் போல் உன்னுள் கரைந்து நின்று களித்திருக்கிறாள். கோதையா கோபிகைகளா என்று கூட மயக்கம் அவளுக்கு. ஒவ்வொரு கோபிகையுடனும் நீ களிக்கும்போது கோபர் போலவும் கோதை போலவும் கொதிக்கிறாள். பின் குளிர்கிறாள்.

சம்பவங்களை எழுத அவள் இன்று வரவில்லை. உனக்கும் அவளுக்குமான மனநிறைவை நேர் செய்ய வந்திருக்கிறாள். பலமுறை சந்தித்தாலும் உன் கோபம் தித்தித்தாலும் முடிவு இருக்கிறது அவளுக்கு. எல்லாப் பொருட்களும் உன்னில் இருக்கின்றன. எல்லாவற்றிலும்  நீயும் நிறைந்திருக்கிறாய்.

காதல் கோபம் ஊடல் எழுத நாம் மானிடர்தான். ஆனாலும் காமம் மட்டுமே களிக்கக் கூடிய பொருளா. உன் ஆன்மாவை நான் உய்த்துணர்ந்தேன். என்னுடையதை நீயும் உணர்ந்திருக்கலாம். நிறைவு தந்த நிறைவற்ற தத்துவம் நீ. 

உன்னை உயிர்மெய்யாய் உணர்ந்தேன். உப்பும் உண்டேன். தப்பாமல் கணக்குக்குக் கணக்கு நேர் செய்தேன். முத்தத்தைக் கொய்து முத்தத்தை எய்து யுத்தம் செய்து ரத்தத்தால் சிவந்திருக்கின்றன நமதான இதழ்கள். குருக்ஷேத்திரம் தவிர்க்க இயலாத நீ இன்னும் முத்த வேட்டையில். வேட்கையில்.

எத்தனை தேடல். எத்தனை ஆசை, எத்தனை காதல், எத்தனை காமம், எல்லாவற்றுக்கும் ஈடாக எத்தனை கோபம். உன் விசுவரூபம் மிரட்சி தரிசனம். தாயாய், தந்தையாய், தாதியாய், காதலனாய், குழந்தையாய், இடைவிடாது நீ என்னை அன்பு செய்து கொண்டிருக்கிறாய். அதை என்னால் நேர் செய்ய இயலவில்லை. காதலையும் கணக்கையும் ஒப்பு நோக்கிக் கொண்டிருக்கிறேன், தொடுத்த பூக்களைப் போல.

கண்ணாடியில் காணும்போதெல்லாம் நீ நானாக நான் நீயாக கனவுகளிலும் கூட காதருகே கிசுகிசுக்கிறாய். செல்லக் கோபம், செல்லக் காமம், செல்லக் காதல், செல்லக் கடி. பார் என்னாலும் காமம் தவிர்ந்து எழுத முடியவில்லை. சட்டென்று என்னை எங்கேயோ கொத்திச் செல்லும் கிருஷ்ணப் பருந்து நீ. உனக்கு உணவாக நானும் இசைந்திருக்கிறேன். தொட்டுச் சுவை பார்ப்பாய். கண்டும் கேட்டும் அருந்தியும் தொட்டும் முகர்ந்தும் நாம் நடத்திய கேளிக்கைகள் நீர் நிறை ஸ்தலங்கள் அறியும்.

குங்குமம் குழைக்காத கொங்கைகள் குழைந்து கிடக்கின்றன மென் தழுவல்களில். சமயத்தில் நீ காட்டாறு, கடும் புனல், நீர் மட்டம் உயர்த்தி என்னைச் சாகரமாக்கிவிடுவாய். பூரணமான காதலும் காமமும் அர்ப்பணிப்பும் உன்னை அல்லோருக்கும் நல்லவனாக்கிவிடுகிறது. அனைத்தும் உன் கைவசப்படுகிறது. நீ ஒருவருக்கானவன் அல்ல. உன்னைக் கட்டி அடக்க இயலாது. நீ பேரன்பு மிக்க பெருந்தகை.

ஏதோ பந்தம் தொடர்ந்து பயணிக்கிறோம். முழுமையாய் சுவைக்கும் ஆசையில் தேனீயாய்ப் பின் தொடர்கிறேன்.. ஆனாலும் சொல்லத்தூண்டுகிறது. காரமும் ஒரு ருசி , கோபமும் ஒரு அழகு,. உன் காமத்தை விட உன் கோபம் வெருட்டினாலும் இனிக்கிறது.

முடிக்க முடியவில்லை ஜன்ம ஜன்மமாய்த் தொடரும் இக்காதலையும் ஊடலையும் கூடலையும். காதலர் தினம் முடிந்துவிட்டது. தினத்துக்காகக் காதலிப்பவர் இல்லை நாம். உன் உள்ளும் புறமும் அறிவேன் என்னை நீ அறிந்ததுபோல். இனிதாய் நிறையட்டும். நிறைவடையட்டும்.

பேரன்புடனும் பெருந்தழுவல்களுடனும் பிச்சிமுத்தங்களுடனும்.

உன் கோதை.

பேரன்புப் பிச்சிக்காரி முத்தழகி. எவ்வளவு பிரியம். பிரபஞ்சத்தைவிடப் பெரிதானது. பொருள் புரியாதது. எப்பிறப்பிலும் நீங்காதது. அவளன்றி அணுவும் உண்டோ. அசையுமோ அவளின்றி அவன் உலகு. அவள் நினைவைப் பற்றிப் பற்றி மெல்லத் துயிலத் தொடங்கினான் அவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)