ஞாயிறு, 28 மே, 2023

ஃப்ளாரன்ஸ் கதீட்ரல்.

 பன்னிரெண்டாம் நூற்றாண்டில்  (கிபி 1296 ஆம் ஆண்டு ) இத்தாலியில் பியாஸ்ஸா டெல் டியாமாவில் ( ஃப்ளாரன்ஸில் ) அராபிய மேற்கத்திய ஐரோப்பியக் கட்டிடக் கலை அமைப்பில் கட்டப்பட்ட சர்ச் , கதீட்ரல் ஒன்றை எங்கள் யூரோப் டூரின்போது பார்த்தோம். 27.7.2023 அன்று ரோமைப் பொடிநடையாகச் சுற்றி வாடிகன் மற்றும் மைக்கேலேஞ்சலோவின் ஓவியங்கள் உஃபிஸி கேலரியும் வஸாரி கேரிடாரையும் மற்றும் ஃப்ளாரன்ஸ் கதீட்ரலையும் பார்த்தோம். இதில் யுனெஸ்கோவில் உலகப் பாரம்பரியத் தளத்தின் பகுதியாகிய  பாப்டிஸ்டிரி, ஜியோட்டோஸ் கேம்பைனல் ஆகிய கட்டிடங்களும் அடங்கும். 

1296 இல் தொடங்கப்பட்ட இது 1436 இல் ஃபிலிப்போ ப்ருனெல்லெச்சியால் வடிவமைக்கப்பட்ட குவி மாடத்துடன் பூர்த்தி அடைந்தது. கட்டிடத்தின் உள்ளும் வெளியும் இளம் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்திலான மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டது. இதன் முகப்பு 19 நூற்றாண்டில் கோதிக் கலைப் பாணியில் அழகுற செதுக்கப்பட்டது. இந்த பசிலிக்காவில் கட்டப்பட்ட இந்த டோம் செங்கற்களால் அமைக்கப்பட்டது. 

மிகப் பிரம்மாண்டமா கதீட்ரல் மற்றும் அதன் சுற்றிலும் பல்வேறு சரித்திரப் புராணக் கட்டிடங்கள்.
மேலே உள்ள ஒவ்வொரு சிற்பச் செதுக்கலின் பின்னும் ஒரு கதை இருக்கிறது.

கடைசி விருந்து, கடைசித் தீர்ப்பு ஆகிய ஓவியங்கள் கதீட்ரலின் வெளிப்பக்கங்களையும் உள்ளே உள்ள உயர டோம்களின் உட்புறத்தையும் அலங்கரிக்கின்றன.
இவற்றை வஸாரியும் சுச்சாரியும் வரைந்துள்ளார்கள். 
இவை 20 ஆம் நூற்றாண்டுக்கு வெகு முந்தைய கட்டிடங்கள். மாபெரும் உயரக்குவி மாடங்கள், கோதிக் கலைப்பாணி, ரோமன் கேதலிக் சர்ச் என்பதால் மரியன்னையுடன் இன்ஃபேண்ட் ஜீசஸ் மார்பிள் சிற்பம், சாண்டா ரிபேரிட்டா சிற்பம் ஆகியன இங்கே சிறப்பு. 
நம்மூருக் கோயில்கள் போல் தங்கக் கதவு கொண்ட ஒரு கட்டிடத்தின் முன் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம். 
எங்களுடன் ஸ்டார் டூர்ஸில் வந்தவர்கள் மேலே :) இந்தியாவிலிருந்தும், ( இந்தூர், ஆந்திரா), லண்டனிலிருந்தும், (படேல் ஃபேமிலீஸ்), அமெரிக்காவிலிருந்தும் இன்ன பிற யூரோப்பிய நாடுகளில் இருந்தும் இந்திய மக்கள் எங்களுடன் ப்ரயாணித்தார்கள் ! 
உலக ஜோதியில் ஐக்கியமாகி கதீட்ரலின் ஒவ்வொரு பக்கத்தையும் ஆவென்று அண்ணாந்து பார்த்தோம்.
எத்தனை புகைப்படம் எடுத்தாலும் ஃபேகேட்ஸ் எனப்படும் முகப்புத் தோற்றம் வெகு அழகு.


பல்வேறுமுகப்புகளையும் பல்வேறு சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. 

பல நூற்றாண்டுகளாக முதலில் சிறு தேவாலயமாக இருந்த இது பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்பத் தன்னையும் பெரிதாக்கித் தகவமைத்துக் கொண்டது.
பல்வேறு பொறியாளர்கள், பல்வேறு மேற்பார்வையாளர்கள்,பல்வேறு கட்டுமான நிறுவனங்கள், பல்வேறு கடன்கள், பலகோடி ரூபாய்கள் செலவில் பல்வேறு போட்டியாளர்களின் கீழ் இது செழுமை அடைந்தது. 
இக்கட்டிடங்களுக்கு மட்டுமல்ல. இதன் டோம்களின் வளர்ச்சிக்கும் தனி வரலாறு உண்டு. 

செங்கல் குவிமாடங்கள்..!!
மிகப் பிரம்மாண்டமான சதுக்கம் மற்றும் கதீட்ரல். 

இதன் எண்கோணக் குவி மாடம் ஒன்று பதிநான்காம் நூற்றாண்டில் இருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டதாம்.! சில குவி மாடங்கள் நூறாண்டுகள் வரை கட்டப்பட்டுள்ளன. 




இவ்வளவு அழகா ஜொலிக்குதேன்னு பார்க்குறீங்களா. எல்லாமே பளிங்குங்க. மார்பிள்ஸ். இத்தாலி முழுக்க எல்லாமே மார்பிள் சிற்பங்கள் மற்றும் புராதனக் கட்டிடங்கள். அதிலும் இது கர்ராரா, ப்ராடா, சியனா, லாவென்ஸா எனப்படும் வெள்ளை, பச்சை, சிவப்பு, மற்றும் பாலிக்ரோம் பளிங்குகளினால் கட்டப்பட்டிருக்கு. 

தெற்குப் பக்கம், வடக்கும் பக்கம் என இரு வாயில்கள், ஒளி ஊடுருவும் ஓவிய விதானங்கள் மற்றும் ஜன்னல்கள்,  அறுபக்க ஜன்னல்கள், பல்வேறு சிற்பங்கள் என மிக விசாலமும் அழகும் எழிலும் கொண்டது இந்த ஃப்ளாரன்ஸ் கதீட்ரல். யூரோப் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் ஒருமுறை பார்க்க வேண்டிய இடம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)