செவ்வாய், 23 மே, 2023

வீடென்று எதனைச் சொல்வீர்.

 வீடென்று எதனைச் சொல்வீர்.


வீடென்று எதனைச் சொல்வீர் என்ற மாலனின் கவிதையை நான் கல்லூரிப் பருவத்தில் படித்திருக்கிறேன். இதுவரை மெய்யாலுமே பணி நிமித்தம் மாற்றலால் 25 வீடுகளை வரை குடி இருந்திருப்போம். காரைக்குடியில் வீட்டிற்கெல்லாம் பெயருண்டு. நான் எங்கள் ஆயா வீடான வேகுப்பட்டியார் வீட்டில்தான் பிறந்தேன். எங்கள் அப்பத்தா வீட்டின் பெயர் ஆவுடையான் செட்டியார் வீடு. கானாடுகாத்தானில் எனக்குத் திருமணமான வீட்டின் பெயர் மல்லுப்பட்டியார் வீடு மேலும் கடியாபட்டி இராமன் செட்டியார் வீடு. வித்யாசமாய் இருக்கிறதல்லவா.

இந்த மூன்று வீடுகளுமே எனக்குப் பிடிக்கும். ஏனெனில் முகப்பு (முன் கோப்பு) முகப்புப் பத்தி, பட்டாலை, வளவு, வளவு அறைகள், ஆல்வீடு, இரண்டாங்கட்டு, மூன்றாங்கட்டு என்ற பலகட்டுக்கள் கொண்டது. மேலும் கட்டுத்துறையும் சில வீடுகளில் சாரட் அல்லது கார் நிறுத்தும் ஷெட்டுக்களும் உண்டு. வீட்டின் வடகிழக்கில் ஒரு கிணறும், தென்மேற்கில் ஒரு கிணறும் உண்டு. மேலும் மழைபொழியும் போதெல்லாம் தண்ணீர்க் கிடாரத்தில் வேடு கட்டிப் பிடித்து வைப்பதால் எந்த நாளும் தண்ணீர்த் தட்டுப்பாடே கிடையாது.

அப்பா மன்னார்குடியில் வேலைபார்த்ததால் அங்கே முதலில் மஹமூதாபி காலனியில் குடியிருந்தோம். அதன் பின் ப்ளஸ்டூ வரை சிங்காரவேலு உடையார் தெருவில் இருந்த லெக்ஷ்மி காலனியில் வாசம். அதன் பின் மதுரையில் கல்லூரி, அதன் பின் திருமணம் ஆகி விட்டது. முதன் முதலில் கோயம்புத்தூருக்குக் கூட்டுக் குடித்தனமாக ஹட்கோ காலனியில் குடியேறினேன். மாமியாரிடம் நிறைய நல்ல விஷயங்களையும் பொறுமையையும் கற்றுக் கொண்டேன். அதன் பின் ஆர் எஸ் புரத்திலும் பின்னர் பிள்ளைகள் பிறந்ததும் மாமியார் வீட்டின் பின்னே முன்னே உள்ள வீடுகளுக்கும் குடிபெயர்ந்தோம்.

சில ஆண்டுகளில் சென்னை ராயப்பேட்டைக்குச் சென்றோம். நாங்கள் இருந்ததிலேயே மிக டஞ்சன் ஆன பாதை உள்ள வீடு அதுதான். அதன் பின் டெல்லிக்கு மாறுதலானது. அங்கே கரோல்பாக் சப்ஜிமண்டிக்கருகில் வாசம். பஞ்சாபிலிருந்து புலம்பெயர்ந்திருந்த பஞ்சாபி ஒருவர் கட்டியிருந்த விசாலமான மாடிப்பகுதி வங்கிப் பணியாளர் என்பதால் எங்களுக்குக் கிடைத்தது. எந்தத் தொந்தரவும் தரமாட்டார்கள், அடிக்கடி மாறுதலாகிப் போய்விடுவார்கள், வாடகை சரியாக வந்துவிடும் என்பதால் எல்லா ஊரிலும் ராஜ வரவேற்புத்தான்.

மூன்றாண்டுகள் கட்பட் ஹிந்தியில் முக்குளித்து பனீர், ஆலு பரோட்டா, காலிதால் மாக்னி, சோளா பட்டுரா, ஜலேபி, சமோசா, பலூடா, குல்ஃபியில் நீந்திக் களித்தபின் சிதம்பரத்துக்கு மாற்றலாகி வந்தோம். அங்கே ஒரே நேரத்தில் மூன்று வீடுகளில் குடி இருந்தவர்கள் என்று எங்கள் மாமா பையன் கிண்டலடிக்கும் வண்ணம் ( கண்டெயினர் வரும் வரை) வாகீசன் நகர், மாரியப்பா நகர், செங்கழுநீர்ப்பிள்ளையார் கோவில் தெருவில் மூன்று வீடுகள் பார்த்திருந்தோம். மேலும் அடுத்தடுத்து மாறினோம்!

சிதம்பரத்திலிருந்து நெய்வேலி பாங்க் குவார்ட்டர்ஸ். அதன் பின் சேலம் ஹஸ்தம்பட்டி மணக்காட்டில் ஒரு வீட்டில் வாசம். பின்பு ஃபேர்லேண்ட்ஸில் சொந்த வீடு வாங்கினோம். சாண்ட்லியர்ஸ், ஃப்ரெஞ்ச்டோர், மொசைக் பாலிஷிங், காலப்ஸ் வைத்த திரைகள், திவான் என்று அலங்கரித்து அதன் பின் மாற்றல் ஏற்பட்டதால் அப்படியே விற்றுவிட்டுக் காரைக்குடியில் கட்டியிருந்த சொந்த வீட்டிற்கு வந்தோம். இங்கேதான் நான் தோட்டக்கலை வல்லுநர் ஆனது. 40 வகையான செடிகொடிகள் பூக்கள் அலங்கரித்தன எங்கள் வீடு பண்ணை வீடு போலானது.

பின்னர் கோவை சிங்காநல்லூர், ரேஸ்கோர்ஸ், மதுரை எஸ் எஸ் காலனி, சென்னை கே கே நகர் என்று பரவாசம். இங்கேதான் நான் முழு நேர வலைப்பதிவர், நிருபர், எழுத்தாளர் ஆனது. இந்த கே கே நகர் வீடு என்னை நான் எதிர்பார்த்திராத உயரங்களுக்குக் கொண்டு சென்றது. மிகப் பிரபலங்களும் நம்மையும் பிரபலமாக அங்கீகரித்த நேரம். போர்ட் ட்ரஸ்ட், சாஸ்திரி பவன் போன்ற இடங்களுக்கெல்லாம் கூட சிறப்பு விருந்தினராகச் சென்று வந்தேன்.

அதுவரை பொழுதுபோக்குப் பத்திரிக்கைகளையும் தொலைக்காட்சியையுமே பார்த்து வந்த நான் சென்னைக்கு வந்தபின் என் பிள்ளைகள் வளர்ந்ததும் ஏற்பட்ட வெறுமையைக் களையவே எனக்கென வலைப்பதிவு உருவாக்கி எழுத ஆரம்பித்தேன். நிறையப் படிக்கவும் தொடங்கினேன். அதனால் லேடீஸ் ஸ்பெஷல் பத்ரிக்கையில் அறிமுகமாகி இன்று வரை தொடர்கிறது என் எழுத்து. பத்திரிக்கைகளில் முதல் அங்கீகாரம் என்பதே லேடீஸ் ஸ்பெஷல் மூலமாகத்தான். திரும்பவும் மறு பிரவேசம் போலப் பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து இப்போதும் பேட்டிக் கட்டுரைகள் எழுதத் தொடங்கி உள்ளேன். படிக்கும் காலத்தில் மாணவப் பத்திரிக்கை நிருபராகப் பணியாற்ற வேண்டும் என்ற ஆவல் லேடீஸ் ஸ்பெஷல், நம் தோழி, குங்குமம் தோழி, இவள் புதியவள், சூரியக்கதிர் போன்றவற்றிலெல்லாம் எழுதுவதில் நிறைவு கொள்கிறது.

தமிழ்கூறும் நல்லுலகில் வெளியாகும் பத்திரிக்கைகள், சிறுபத்திரிக்கைகள், இணையங்கள் எல்லாம் என் எழுத்தை அங்கீகரித்தன.  பல்வேறு பிரபலங்களைச் சந்திக்கும் வாய்ப்போடு பத்திரிக்கை மூலமாக எழுத்துக்கான வருமானமும் கிடைத்தது. அதன்பின் அச்சு நூல்களாக 23 ம், அமேஸானிலும் தொடர்ந்து 50 க்கு மேற்பட்ட மின்னூல்களும் வெளியாகி உள்ளன. எழுத்துக்கும் கோலங்களுக்கும் சமையற்குறிப்புக்களுக்கும் சன்மானமாக இத்தனை ஆண்டுகளிலும் மாதாமாதம் ஒரு தொகை கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. யூ ட்யூபிலும் நான் வாசித்த புத்தகங்களை விமர்சனம் செய்து வருகிறேன். தினந்தோறும் என்னைப் புதுப்பிக்கிறேன்.  

சென்னையிலிருந்து கும்பகோணம், பெங்களுரு பி டி எம் லே அவுட், ஹைதை மாதாப்பூர், கொண்டாப்பூர் என்று நீண்ட பயணம். அதன்பின் திரும்பச் சென்னை வந்து காரைக்குடியில் செட்டிலானேன். கும்பகோணத்தில் கோவில்களுக்கு முடையில்லாமல் சென்று வந்தோம். பெங்களூருவில் ஹலீமும், ஹைதையில் கோங்குரா சட்னியும் சிக்கந்தர் தந்தூரி சிக்கனும், பாரடைஸ் பிரியாணியும் ஃபேமஸ்.

இதுவரை டெம்பரரி வீடுகளிலேயே இருந்ததால் ஒவ்வொருமுறை மாறும்போதும் வேண்டாத பொருட்களை எல்லாம் தேவைப்பட்டவர்களுக்குக் கொடுத்தோ விலைக்குப் போட்டுவிட்டோ அல்லது கழித்துக் கட்டி விட்டோ வருவோம். ஆனால் ஒரே வீட்டில் தங்கியபின் நிறையப் பொருட்கள் தங்கி விட்டன, தேங்கிய நம் எண்ணங்கள் போல். நம்மை ஆவலாய் எதிர்பார்க்கும் உறவுகளுக்கும் கூட நாம் சில சமயம் அருகில் இருப்பது உதவியாய் இருந்தாலும் சில விலகல்களும் மனஸ்தாபங்களும் ஏற்படத்தான் செய்கின்றன. நம் சொற்களும் உறவினர்கள்தானே என்ற சலுகையும் அணுகுமுறையும் தவறாகக் கொள்ளப்படுகின்றன.

எப்போதும் நாம் சென்றுவரும் வீடுகளுக்கு நாம் இப்போது செல்ல முடியாததும் காலத்தின் கோலமே. நான் முக்கியமாகக் கருதிய ஆயா வீடு அவர்களின் மறைவிற்குப் பின் இழுத்துச் சாத்தி பூட்டு மாட்டி இருண்டு கிடக்கிறது. கடக்கும்போதெல்லாம் அங்கே வாழ்ந்த மாபெரும் மனிதர்கள் நினைவில் வந்து போகிறார்கள். கானாடுகாத்தானில் நான் வாக்கப்பட்ட வீடோ சில சிதிலங்களுடன் மூச்சுக்குத் தவிக்கும் முதியோனாய் வீழ்ந்து கிடக்கும் வேழமாய்க் காட்சி அளிக்கிறது. என் தாய் வீடு புதிது ஆகிவிட்டது. ஆனால் மனிதர்களின் அணுகுமுறைதான் மாறிவிட்டது. சில சொற்பிரயோகங்களுக்காகப் புதிதான அவ்வீடு பழையதாய்ப் போன என்னைக் கழித்துக் கட்டி விட்டது. வீடு புதிதாகிறது. மனிதர்கள் மாறுகிறார்கள். மனங்களும் மாறுகின்றன. எத்தனையோ வசதியான மற்றும் வசதிக்குறைவான வீடுகளில் வசித்த நான் இன்று ஆசையுடன் இதே ஊரிலே வசதிகள் அனைத்தும் கொண்ட என் வீட்டிலேதான் வசிக்கிறேன், என் பூர்வீகங்கள் என்னை மறுதலித்ததைப் பார்த்துக் கொண்டும். இதுதான் காலத்தின் கோலம் வேறென்ன சொல்ல?!

டிஸ்கி:- அகம் என்னும் இத்தொகுப்பில் எனது இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது. 


பதிப்பகம்:- ஹெர் ஸ்டோரீஸ்

தொகுப்பாசிரியர் :- மதுமிதா

விலை ரூ. 300/-

2 கருத்துகள்:

  1. மாலனின் அந்தக் கவிதை ரொம்பவும் ரசிக்க வைக்கும் கவிதை. நானும் அதைச் சொல்லி ஆரம்பித்தே வீடு மாறிய அனுபவம் எழுதி இருந்தேன்!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா23 மே, 2023 அன்று 7:55 PM

    உங்களோடு எங்களையும் ஊர் மாற்றி மாற்றி அழைத்துச் சென்று வந்தீர்கள் .. ஆச்சி.. அருமை…ரொம்ப நாள் ஆச்சு…தளிர் நடையாம் தங்கள் தமிழ் நடை வாசித்து..

    தொடர்ந்து பயணிக்க மகிழ்ச்சி..

    அன்புடன் கவிக்கிறுக்கன் தேவகோட்டை முத்துமணி.. இந்தோனேசியாவில் இருந்து….

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)