புதன், 12 ஏப்ரல், 2023

நோபல் பரிசு பெற உழைக்கும் டாக்டர். தி. தெய்வசாந்தி (நானோடெக்னாலஜி ஆராய்ச்சியாளர்)

 நோபல் பரிசு பெற உழைக்கும் டாக்டர். தி. தெய்வசாந்தி (நானோடெக்னாலஜி ஆராய்ச்சியாளர்)



நானோ டைஜஸ்ட் என்ற உலகளாவிய விஞ்ஞான இதழின் முதல் பக்கத்தில் தனது நான்கு சிறந்த நானோ கண்டுபிடிப்புக்களுக்காகக் கொண்டாடப்பட்டிருக்கிறார் தெய்வசாந்தி. இந்தியாவின் குக்கிராமம் ஒன்றில் வாழ்ந்து கொண்டு பல்லாயிரம் ரூபாய்கள் பெறுமானமுள்ள காப்பர், சில்வர் நானோ துகள்கள், கிராஃபைன் ஆகியவற்றைத் தயாரித்து ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்டோர்களுக்கு இலவசமாகவே வழங்கி உள்ளார்.


தனது அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கான சோதனையில் நோபல் பரிசு பெற விழையும் பேராசிரியை தெய்வசாந்தி இராஜபாளையத்துக்கு அருகில் உள்ள சத்திரப்பட்டி என்ற கிராமத்தில் 1978 ஆம் வருடம் பிறந்தவர். எங்கே பிறந்தாலும் சாதனை புரியலாம் என்பதற்கு இவர் ஒரு வாழும் எடுத்துக்காட்டு. கணவர் திரு. சங்கர். இயற்பிலில் முனைவர் பட்டம் பெற்ற தெய்வசாந்தி முதலில் பாலிடெக்னிக்கிலும் பின்னர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். ஒரே நேரத்தில் நான்கு ப்ராஜெக்ட் கொடுத்துத்  தனது மாணவர்களையும் நானோ ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி வருகிறார். நிறையப் பொறியியல் கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் சிக்ரி போன்ற விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்துக்கும் கூட கெஸ்ட் லெக்சரராகச் சென்றுள்ளார். 200 க்கும் மேற்பட்ட கருத்தரங்கக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பல்வேறு சர்வதேச நாடுகளில் உரையாற்றிய பெருமையும் இவருக்குண்டு. 

டாக்டர் அழகர் அவர்களின் வழிகாட்டுதலுடன் நானோ டெக்னாலஜி துறையில் ஆராய்ச்சி செய்துள்ள இவரது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள்: 1) தாவரப் பொருட்களில் "சூப்பர் பாரா மேக்னடிஸம்".தாவரங்களில் உயிர் பற்றிய சர் ஜகதீஸ் சந்திர போஸ் கண்டுபிடிப்பிற்குப் பின்பு, தாவரப் பொருட்களில் காந்தத் தன்மை பற்றிய ஆராய்ச்சிகள் நடப்பது இதுவே முதன் முறை.  புற்று நோய்க்கான ஹைபர்தெர்மியா சிகிச்சை, மருத்துவத் துறையில் ஸ்கேன்மற்றும் படம் எடுப்பதற்கு சூப்பர் பாரா மேக்னடிக் (Superpara magnetic) பொருட்கள் பயன்படுகின்றன. 

2) வைரஸ்களுக்கு எதிரான உலகின் மிக சிறிய நிலவேம்பு (ஆன்ரோகிராபிஸ் பனிகுலேட்டா- Andrographis paniculata) தாவர நானோ துகள்கள். 

3) விவசாய நானோ உயிர் உரங்கள் (Nanobio fertilizers). 

4) குறைந்த விலை கிராஃபின் (graphene). 

5) கொரோனா வைரஸ்களுக்கு எதிரான குறைந்த விலை நெகடிவ் அயன் ஜெனரேட்டர் (Negative ion generator).

6) சர்க்கரை நோயைக் (நீரழிவு) கட்டுப்படுத்தும் காய்கறி நானோ துகள்கள். ..

7) அதிக வலிமை, குறைந்த எடை உள்ள புல்லட் புரூஃப் உடைகள், ஹெல்மெட் மற்றும் வாகன உபகரணங்கள். 

8) லித்தியம் சல்பர் (Lithium sulphur) / கிராஃபின் (graphene).பேட்டரி (battery) தொடர்பான ஆராய்ச்சி. எலக்ட்ரிக் வாகனம் மற்றும் அலைபேசி போன்ற உபகரணங்களுக்கு, இந்த லித்தியம் சல்பர் பேட்டரி ஆராய்ச்சிப் பணி உதவியாக இருக்கும். தற்போதைய  TOP 10 துறைகளில் Green Energy மற்றும் battery இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது இலட்சியம் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உரிய நோபல் பரிசினைப் பெறுவது.


பணியில் சாதனைகள் என்று சொல்ல வேண்டுமானால் கடந்த 8 வருடங்களில் 225 க்கும் மேற்பட்ட அறிவியல் கருத்தரங்குகளில் உரையாற்றிய சாதனை. அதில் குறிப்பிடத்தக்கது மலேஷியா சுகாதார அமைச்சகத்தில் உரை நிகழ்த்தியது.
  மலேஷியா மற்றும் இலங்கையில் நடந்த அறிவியல் கருத்தரங்குகளில் உரையாற்றியதைத் தனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறார்.  இவர் எழுதியது: 3 புத்தகங்கள், 20 க்கும் மேற்பட்ட புத்தக அத்தியாயங்கள் மற்றும் 25 க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்.

பெற்ற விருதுகள்: மதுரை மாவட்ட ஆட்சியர் அளித்த மகளிர் தினம் சாதனையாளர் விருது – 2013, 2015, 2016 & 2017 மூன்று வருடங்களில் 4 முறைகள் லிம்கா உலக சாதனை  (நானோ தொழில் நுட்பம் தொடர்பாக) உலகத் தர மதிப்பாய்வாளர் விருது 2018, லித்தியம் சல்பர் பேட்டரி தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளுக்காக இந்திய அரசு இவரைத் தேர்வு செய்து 15 லட்சம் ரூபாய் நிதயுதவி செய்கிறது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் பணிகளுக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது. சர்வதேச மகளிர் தினவிழா - 2023 கொண்டாட்டத்தில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்து, பணிபுரியும் பெண்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில், ஊரணி பவுண்டேசன் (சென்னை) சார்பாக "பல்துறை சாதனைப் பெண்மணிகள் விருது" இந்திய விஞ்ஞானி மயில்சாமி அவர்களின் தலைமையில் இவருக்கு வழங்கப்பட்டது.

இவர் தனது ஆராய்ச்சியின் மூலம் தாவரப் பொருட்களில் இருந்து கண்டுபிடித்த பாராமேக்னடிக் துகள்கள் “ சாந்தி துகள்கள்” என்று பெயரிடப்பட்டிருக்கின்றன. மேலும், சில ஆராய்ச்சிப் பணிகளுக்காக, இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலிருந்து நிதியுதவி பெறுவதற்கான திட்டங்களையும் சமர்ப்பித்துள்ளேன். என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு மதிப்பளித்து கலசலிங்கம் பல்கலைக்கழகம் முக்கியத்துவம் தருகிறது என்கிறார்.

பிறந்தவுடன் தந்தையை இழந்ததால் தாயின் விருப்பப்படி இளம் வயதிலேயே திருமணமானவர் தெய்வசாந்தி. கணவரின் அனுமதியுடன் பி ஹெச்டி முடித்துப் பேராசிரியை ஆனார். இராணுவப் பணியாற்றித் திரும்பித் தற்போது மருந்தாளுனராக இருக்கும் தனது கணவரின் ஒத்துழைப்புடன் வீட்டைக் கவனித்து, ஏழு எட்டு மணி நேரப் பேராசிரியைப் பணியையும் முடித்து அத்துடன் பகுதி நேர ஆராய்ச்சியாளராகவும் சாதித்து உள்ளார். சொல்லப் போனால் இவர் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு சரி. இவரது கணவர் சங்கர்தான் தனது மனைவியின் உழைப்பை டைப் செய்து அந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பத்திரிகளுக்கும் மேலும் சர்வதேச விஞ்ஞான இதழ்களுக்கும் அனுப்பி வைப்பாராம். இரு இனிமையான குழந்தைகள் கொண்ட தெய்வசாந்தி கொடுத்து வைத்த இல்லத்தரசியும் கூட!

தமிழ் மொழியிலேயே படித்த இவர் இளவயதுத் திருமணத்திற்குப் பின் சாதித்தது அதிர்ஷ்டம். ஆனால் வேறு ஒரு கொடுமை இவரைப் படுத்தி எடுத்தது. நடுவில் சோரியாஸிஸ் நோயால் ஒரு வருடம் கஷ்டப்பட்டிருக்கிறார். பணிக்குப் பஸ்ஸில் செல்லவும் யாரையும் பார்க்கவுமே மனச்சங்கடம். அது குணமாக ஒரு ஆண்டு பிடித்தது. கல்லூரியிலும் மாணவர்களையும் ஏன் எல்லா மனிதர்களையும் சந்திக்க இவர் மனதில் ஒரு அவஸ்தை அப்போது. நவீன மருந்துகளால் குணப்படுத்த முடியாத இந்நோயை உணவு முறைகளை மாற்றினால் பூரணமாகக் குணப்படுத்தலாம் என்பதைக் கண்டுகொண்டார். அது குணமாகி மீண்டு வந்து இன்னும் அதிகமாகத் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறார் தெய்வசாந்தி. இது எல்லாம் தன் ஃபேமிலி சப்போர்ட் இருந்ததாலேயே சாதிக்க முடிந்தது என்கிறார்.

மேலும் பெண்களால் முடியாதது என்று எதுவும் கிடையாது. தங்களது உயர்வான எண்ணங்கள் குறிக்கோள்களை எட்டத் தங்களைத் தாங்களே ஊக்குவித்துக் கொள்ள வேண்டும். நமது நோக்கம், சிந்தனை, செயல் இவற்றை ஒருங்கிணைக்க வேண்டும். எதையும் சாதிக்க வேண்டும் என நினைத்துவிட்டால் அப்போதே சாதிக்கமுடியும், அவர்கள் உயர்வுக்கு எல்லை இல்லை என்கிறார். இவ்வளவு மாபெரும் சாதனைகளுக்குப் பின்னேயும் இவரது எளிமையும் பணிவடக்கமும் ஒளிவிடுகின்றது. இவர் தனது கண்டுபிடிப்புக்கள் மனித குலத்துக்கு நன்மை பயப்பனவாக அமையவேண்டும் என்ற விருப்பம் கொண்டிருக்கிறார். நன்மனம் கொண்ட இவர் நிச்சயம் நோபல் பரிசைப் பெறுவார் என நம் வாசகியர் சார்பாக வாழ்த்துவோம்.

2 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் 💐💐💐

    பதிலளிநீக்கு
  2. நன்றி பெயரில்லா

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)