வியாழன், 16 மார்ச், 2023

மகாபாரதத் துணைக் கதைகள் - எனது இருபத்தி இரண்டாவது நூலின் முன்னுரை

 முன்னுரை




மகாபாரதமும் ராமாயணமும் இந்தியாவின் தொன்ம இதிகாசங்கள். மண்ணாசையால் வீழ்ச்சி ஏற்படும் எனக் கூறியது மகாபாரதம். பெண்ணாசையால் அழிவு ஏற்படும் எனக் கூறியது இராமாயணம். தாய் வழிச் சமூகத்தின் மூலம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர்கள் மகாபாரத அரசர்கள். அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் பிறந்த திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோரின் வாரிசுகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடந்த ஆட்சி உரிமைப் போரை விளக்கும் இதிகாசம் மகாபாரதம்.

மகாபாரதத்தைத் தொகுத்தவர் வேதவியாசர். அவர் சொல்லச் சொல்லத் தனது கொம்பை ஒடித்து ஓலைச்சுவடிகளில் எழுதியவர் விநாயகர். பகவத் கீதை இதன் முக்கிய அம்சம். பாரதம் பாடிய பெருந்தேவனார் இதை முதலில் தமிழ்ப்படுத்தினார். அதன் பிரதிகள் கிடைக்கவில்லை. நல்லாப்பிள்ளை என்பவர் இயற்றிய “ நல்லாப்பிள்ளை பாரதம்” மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளது.

”வில்லி பாரதம்” என்ற பெயரில் வில்லிபுத்தூராரும் கொடுத்துள்ளார். சமஸ்கிருத மூலத்திலிருந்து  ”வியாசர் விருந்து” என்ற தலைப்பில் ராஜாஜியும் எளிமையாகக் கொடுத்துள்ளார். இதன் ஒரு பகுதியைப் “ பாஞ்சாலி சபதம்” என்று இயற்றியுள்ளார் மகாகவி பாரதியார். ம.வீ. இராமானுஜாச்சாரியாரின் கும்பகோணம் பதிப்பு மகாபாரதம் சிறப்பான பதிப்பாகக் கருதப்படுகிறது. ”மஹாபாரதம் பேசுகிறது” என்ற தலைப்பில் சோவும் எழுதி இருக்கிறார். சுவாமி சித்பவானந்தரின் மகாபாரதம் பல்வேறு பதிப்புகள் கண்டுள்ளது. இணையத்தில் ”வெண்முரசு” என்ற தலைப்பில் மகாபாரதத்தை எழுத்தாளர் ஜெயமோகன் ஏழுவருடங்களாக (25,000 பக்கங்கள்) எழுதிப் பதிவேற்றியுள்ளார்.

குருக்ஷேத்திரப் போரை மையப்படுத்தி அறம், பொருள், இன்பம், வீடுபேறு மற்றும் ஊழ்வினைகள் பற்றிப் பேசுகிறது இந்நூல். வேதகாலத்தின் இறுதிப்பகுதியான கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இது இயற்றப்பட்டிருக்கலாம். மூல நூல் 8000 அடிகளைக் கொண்டதாக இருந்தது என மூலபர்வம் கூறுகிறது, இப்போது 90,000 அடிகளைக் கொண்டிருக்கிறது. வியாசபாரதம் ஆத்ய பஞ்சகம், யுத்த பஞ்சகம், சாந்தி த்ரையம், அந்த்ய பஞ்சகம் ஆகிய நான்கு பாகங்களை உடையது. அதில் 18 பர்வங்களில் இவை அடங்கி உள்ளன. அதனுள் பல்வேறு கிளைக்கதைகள் கொண்டது மகாபாரதம்.

இக்கதைகளைப் பல்வேறு முனிவர்களும் ஜனமேஜயன் என்னும் அரசனுக்கும் இன்னும் பல முனிவர் குழுக்களுக்கும் வாய்மொழியாகச் சொல்லி வந்திருக்கிறார்கள். அவற்றுள் சிறந்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்துச் சிறார்களும் அறியும்வண்ணம் இந்நூலில் எளிய முறையில் கதைகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

அன்புடன்

தேனம்மைலெக்ஷ்மணன்.

நூலின் பெயர் : மகாபாரதத் துணைக் கதைகள்.

பக்கம் - 154

விலை -  ரூ.150/- 

நூல் கிடைக்குமிடம்:- பாரதி பதிப்பகம்,

புதிய எண் 4, பழைய எண் 37,

சி.ஆர்.ஆர்.புரம், முதல் தெரு,

L&T காலனி, விருகம்பாக்கம்,

சென்னை - 600092.

செல்: 93839 82930,

போன்: 044 2434 0205,

E-mail ID: bharathipathippagam@gmail.com


3 கருத்துகள்:

  1. வெண்முரசு வாசிக்க ஆரம்பித்து நிறுத்திவிட்டேன். க்ருஷ்ணா ஜனனம் வரை படிச்சிருக்கேன். ஏனோ தொடர தோன்றவில்லை. நிறைய கதாபாத்திரங்களாலா அல்லது வேறு ஏதாலோ தெரியவில்லை.

    வைஷ்ணவி

    பதிலளிநீக்கு
  2. வெண்முரசில் நிறைய இடைச்செருகல்கள்.  எனவே அதை முழுமையான மகாபாரதமாக ஏற்க முடியாது.  கும்பகோணம் பாதிப்புதான் தரமானது என்று சொல்வார்கள்.  யாரியமாவது இருக்குமா, கடைகளில் கிடைக்குமா தெரியவில்லை.

    உங்கள் முயற்சிக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  3. கருத்துக்கு நன்றி வைஷ்ணவி.. இருக்கலாம்

    நன்றி ஸ்ரீராம். கேட்டுப் பாருங்கள் கிடைக்கலாம்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)